நன்மைகளைப் பகிருங்கள்

நன்மைகளைப் பகிருங்கள்

சில வசனங்களை நாம் அதிகமாகப் போதிக்கப்பட்டுக் கேட்டிருக்க முடியாது. அதில் ஒன்று கலாத்தியர் 6:6!

“அன்றியும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மையானவைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன்”. இந்த வசனத்தை நீங்கள் இதுவரை போதிக்கக் கேட்டதில்லை என்றால் அதற்குக் காரணம், நீங்களாகத்தான் இருக்க வேண்டும் அல்லது உங்கள் சபையாகத் தான் இருக்க வேண்டும்!

அப்போஸ்தலனாகிய பவுல் தனது நிருபத்தில் இந்த விஷயத்தைக் குறித்து எழுதும்போது அவருக்குள் ஒரு சிறிய தயக்கம் இருந்திருக்கக்கூடும் என்று நாம் தாராளமாக நம்பலாம். ஏனென்றால், நல்ல விஷயத்தைச் சந்தேகப்படுவதும், கெட்டதை உடனே நம்புவதும் மனித சுபாவம். அது அன்றைய முதல் நூற்றாண்டுச் சபைக்கும் பொருந்தும், இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டுச் சபைக்கும் பொருந்தும். ஆனால், அங்கே அப்போஸ்தலர் ஒரு ஆசிர்வாத வழியைத்தான் திறந்துகொடுக்கிறார்!

இந்த வசனத்தை எழுதுபவருக்கும் போதிப்பவர்களுக்கும் ஒரு தர்மசங்கடமான சூழ்நிலை இருக்கும் என்று கற்பனை செய்யலாம்.

பவுல்கூட இதை எழுதும்போது, “இதோ பாருங்கள், பவுல் தனக்காகத்தான் மறைமுகமாகப் பணம் கேட்கிறார்” என்று மக்கள் தவறாக எடைபோட்டுவிடக் கூடாது என்று அவர் யோசித்திருக்கலாம். ஆனால், அவர் இங்குத் தன் சொந்தப் பையை நிரப்பக் கேட்கவில்லை; மாறாக, சபைக்கான ஒரு பொதுவான ஒழுங்கையும், விசுவாசிகளின் கடமையையுமே பேசுகிறார். ஆவிக்குரிய காரியங்களைப் பகிர்வதும், போதிக்கிறவர்களைத் தாங்குவதும் ஏதோ சுயநல நோக்கத்திற்காகவோ அல்லது பொருள் ஆதாயத்திற்காகவோ செய்யப்படுகிறது என்ற தவறான புரிதல் அன்றைக்கும் இருந்திருக்கிறது. அதனால்தான், கொடுப்பதைக் குறித்து வேதத்தில் பல இடங்களில் பரிசுத்த ஆவியானவர் பவுலைக் கொண்டும் மற்றவர்களைக் கொண்டும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

இன்று ஒரு மருத்துவர் ஆலோசனைக் கட்டணம் (Consultation Fee) கேட்பதையோ, ஒரு வழக்கறிஞர் தன் சேவைக்கு ஊதியம் பெறுவதையோ இந்த உலகம் தார்மீகமாகச் சந்தேகப்படுவதில்லை. ஆனால், ஆவிக்குரிய காரியங்களை இரவும் பகலும் ஆராய்ந்து, ஜெபித்து, நம் ஆத்துமாவைக் காக்கப் போதிக்கும் தேவ ஊழியர்களுக்குக் கொடுக்கும்போது மட்டும் பலருக்குக் கண்கள் ஏன் சுருங்குகின்றன? நன்மை உங்களுக்குக் கிடைப்பது மட்டும்தான் ஆசீர்வாதம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் சுயநலப் போக்கிற்கு மத்தியில், “நீங்கள் பெற்ற நன்மையைப் பகிர்ந்துகொடுப்பதுதான் உண்மையான ஆசீர்வாதம்” என்று போதிப்பது எவ்வளவு சிரமமான காரியம்! ஒருவேளை இப்படி ஒரு சிந்தனைப் போராட்டம் உங்களுக்கு இருக்குமானால் — அதாவது தேவனுடைய வார்த்தையைப் போதிக்கிறவர்களைச் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பீர்களானால் — ஆவிக்குரிய வாழ்க்கையில் நீங்கள் இன்னும் வளராமல் அப்படியே நிற்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ‘தசமபாகம் தப்புங்க பிரதர்…அது ஓல்ட் டெஸ்ட்டமெண்ட் லா..” என்று பேசி எந்தப் பாகத்தையும் கொடுக்காதவர்கள் உண்டு!

இந்த இடத்தில் ஒரு சுயபரிசோதனை நமக்கு மிக அவசியம். 

உங்களுக்குப் போதிப்பவர்களுக்கு, நீங்கள் பெற்ற நன்மைகளைப் பகிர்வது உங்கள் கடமை. அது வெறும் பணமாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை; அது ஒரு நல்ல பாராட்டாக இருக்கலாம், இருதயத்திலிருந்து எழும் ஜெபமாக இருக்கலாம், அவர்களுடைய சோர்வில் கொடுக்கும் நேரமாக இருக்கலாம், அல்லது அவர்களுடைய குடும்பத் தேவை என்ன என்று அறிந்து அதை ஓடிச்சென்று சந்திப்பதாக இருக்கலாம். எலியா தீர்க்கதரிசிக்கு அந்தச் சாரிபாத் விதவை தன் கையில் இருந்த சிறு மாவையும் எண்ணெயையும் கொண்டு முதலாவது உணவைச் சமைத்துக் கொடுத்தாளே, அது போன்ற ஒரு மனநிலை இது. உங்கள் போதகர்களுக்கும், உங்களுக்கு ஆவிக்குரிய ஆகாரத்தை ஊட்டுபவர்களுக்கும் இந்த உன்னதப் பகிர்வு நிச்சயம் பெரிய பலனாக இருக்கும்.

(பின்குறிப்பு: இந்தக் கட்டுரை சத்தியத்தை சத்தியமாகப் போதிப்பவர்களை மனதில் கொண்டு எழுதியது)

Benny Alexander, July 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *