
கேள்வி: மனிதர்கள் சுதந்திரமாக இருக்கப் பிறந்தவர்களா?
பதில்: ஆம், மனிதன் சுதந்திரமாக வாழவே படைக்கப்பட்டான். ஆனால், இன்றைக்குப் பெரும்பாலானோர் ‘சுதந்திரம்’ என்பதற்கு வைத்துள்ள விளக்கம் முற்றிலும் எதிர்மறையானது. எவ்விதக் கட்டுப்பாடும், எல்லையும் இல்லாத ஒரு வாழ்க்கையைத்தான் உலகம் ‘சுதந்திரம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கிறது.
ஒருவரிடம் மிகப் பெரிய பரப்பளவில் நிலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலத்திற்குச் சுவரோ, வேலியோ இல்லையென்றால், உரிமையாளரால் அதை நிம்மதியாக அனுபவிக்க முடியாது. அந்நியர்களின் ஊடுருவலும் ஆபத்தும் தான் அதிகரிக்குமே தவிர, அமைதி இருக்காது. வேலி என்பது உரிமையாளரை அடைத்து வைப்பதற்காக அல்ல; அவரது சொத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக அமைக்கப்படுவது. சுதந்திரம் என்பதும் அப்படித்தான்; எல்லைக்குட்பட்ட பாதுகாப்பில் மட்டுமே அது சாத்தியம்.
எல்லைகள் சுருங்கச் சுருங்கத்தான் நம்முடைய பாதுகாப்பும் உரிமையும் அதிகமடைகிறது.
ஆரம்பத்தில் மனிதன் படைக்கப்பட்டபோதே, எந்த எல்லையுமற்ற ஒரு பெருவெளி நிலப்பரப்பில் ‘எப்படியும் இருந்துகொள்’ என்று அவன் அனுப்பப்படவில்லை. ஆதி மனிதர்களான ஆதாமும் ஏவாளும் ஏதேனும் ஒரு காட்டில் அலைந்து திரிவதற்காகப் படைக்கப்படவில்லை; அவர்கள் ‘ஏதேன்’ என்னும் குறிப்பிட்ட ஒரு தோட்டத்தில்தான் வைக்கப்பட்டார்கள். அந்தத் தோட்டத்திற்கு ஒரு எல்லை இருந்தது. அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளும், ‘நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்’ என்ற ஒழுக்க எல்லையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த எல்லைக்குள் வாழ்ந்தவரை மனிதருக்கு முழுமையான சுதந்திரமும், பாதுகாப்பும், இறைவனோடு உறவும் இருந்தது. அதை மீறியபோதுதான் அந்த மேன்மையான சுதந்திரத்தை இழந்து, பாவத்திற்கு அடிமையானார்கள். ஒரு மீன் தண்ணீருக்குள் இருக்கும் வரைதான் அதற்குச் சுதந்திரம்; ‘எனக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வேண்டும்’ என்று கரையேறினால் அது செத்துப்போகும்.
இந்தியா, தமிழ்நாடு, சொந்த ஊர், தெரு, இறுதியாக நம் வீடு என எல்லைகள் சுருங்கச் சுருங்கத்தான் நம்முடைய பாதுகாப்பும் உரிமையும் அதிகமடைகிறது. வீட்டின் எல்லைக்குள் தான் நாம் முழுச் சுதந்திரத்தோடும் உலவ முடிகிறது. தனி மனித சுதந்திரம், பெண் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என எதுவாக இருந்தாலும், எல்லைகள் அற்ற சுதந்திரம் பேரழிவிலேயே முடியும். தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறும்போது அது அடுத்தவரின் அமைதியைப் பறிக்கிறது; பெண் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடுகளை அகற்றும் போது அது அவளது பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடிகிறது; கட்டுப்பாடுகள் இல்லாத பொருளாதாரச் சுதந்திரம் பேராசைக்கும் அடுத்தவர் பொருளைப் பறிப்பதற்கும்தான் வழிவகுக்கும்.
வேதாகமம், ஜெபம், சபை, நாம் சார்ந்த கிறிஸ்தவக் குடும்பம் என்கிற ஒட்டுமொத்த அமைப்பையும் நம்மை ஒரு எல்லைக்குள் குறுக்கிவிடுவதாக நினைப்பவர்கள் நிறையப்பேர் உண்டு.
உலகம் ‘அடிமைத்தனம்’ என்று தவறாக நம்பும் பல விஷயங்கள், உண்மையில் மனிதனுக்கு மெய்யான சுதந்திரத்தைத்தான் தருகின்றன. ஒரு விசுவாசி மறுபடியும் பிறக்கும்போது, இந்தச் சுதந்திரம் இன்னும் விசேஷமானதாக மாறுகிறது. வருத்தம்தரும்வகையில், கிறிஸ்தவர்கள்கூட சுதந்திரம் என்பதைச் சரியாகப் புரிந்திருப்பதில்லை. வேதாகமம், ஜெபம், சபை, நாம் சார்ந்த கிறிஸ்தவக் குடும்பம் என்கிற ஒட்டுமொத்த அமைப்பையும் நம்மை ஒரு எல்லைக்குள் குறுக்கிவிடுவதாக நினைப்பவர்கள் நிறையப்பேர் உண்டு. ஆனால், வேதாகமம் நம் கையில் தரப்பட்டிருப்பதும் நம்மை மதக் கோட்பாடுகளுக்குள் முடக்குவதற்காக உருவாக்கப்படவில்லை. சரியாக அறிய அறியத்தான் புரியும்: இறைவார்த்தைகள்தாம் நாம் பெற்றிருக்கும் சுதந்திரத்தை அறியவும், காக்கவும் அதை அனுபவிக்கவும் உதவுகிறது.
தேவனின் இறையாண்மைக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் நம்மை முழுமையாக ஒப்படைக்கும்போது, உலகம் அதைத் தன்சுதந்திரத்தை இழக்கும் ‘அடிமைத்தனம்’ என்று பார்க்கிறது. ஆனால், பாவத்தின் கொடிய ஆளுகையிலிருந்தும் சுயநலத்திலிருந்தும் விடுபட்டு, ‘கிறிஸ்துவுக்குள்’ வகுக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்வதே மெய்யான விடுதலை. சுவர்களுக்கு வெளியே சுதந்திரம் இல்லை; கிறிஸ்து என்னும் கோட்டைக்குள் மட்டுமே மெய்யான விடுதலை இருக்கிறது.
Benny Alexander, Aug 2026