
கேள்வி: அறிவு, புத்தி(சாலித்தனம்), ஞானம் போன்றவைகள் எல்லாம் ஒன்றுதானா?
பதில்: ஒன்றோடொன்று தொடர்புடையவை, ஆனால் அனைத்தும் ஒன்றல்ல. வேதாகமத்திலும் இவை அந்தந்த இடங்களுக்கேற்ற பொருள்படத்தான் வருகின்றன. அவற்றிற்கிடையில் இருக்கும் சிறு வேறுபாடுகளை அறிந்துகொள்வது நல்லது.
அறிவும் (Knowledge), புத்திசாலித்தனமும் (Intelligence), புரிதலும் (Understanding), ஞானமும் (Wisdom) வேதாகமத்தின் பார்வையில் மனித சிந்தனையின் வெறும் தர்க்க நிலைகள் மட்டுமல்ல, அவை தேவனுடனான உறவிலும் அவருடைய வார்த்தையிலும் வேரூன்றிய ஆன்மீகப் பரிமாணங்கள் என்று சொல்லலாம். இவற்றை ஒரு எளிய உதாரணத்துடன் விளக்க முயற்சிக்கிறேன்.
ஒரு தகவலையோ (information), உண்மையையோ (fact) சேகரித்து நம் நினைவில் வைத்திருப்பது அறிவு – அதாவது அறிந்திருப்பது. உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட காலத்தில் தக்காளி விளைச்சல் குறையும், அதனால் சந்தையில் பற்றாக்குறை ஏற்படும் என்ற தரவுகளையும் தகவல்களையும் அவ்வப்போது கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில் தெரிந்து வைத்திருப்பது அறிவு.
கற்றுக்கொண்ட அறிவை வைத்து எதிர்காலத் தேவையை சரியாகக் கணிப்பது புத்தி அல்லது புத்திசாலித்தனம். தக்காளி கிடைக்காத காலத்திற்காக, அதன் விலை உயரும் என்று முன்கூட்டியே கணித்து, குளிர்பதனக் கிடங்கில் அதைச் சேமித்து வைப்பது புத்திசாலித்தனமான திட்டமிடல். ஆதியாகமத்தில் யோசேப்பு, ஏழு வருட பஞ்சத்திற்காக தானியங்களைச் சேமித்து வைத்தது தேவனால் அருளப்பட்ட விவேகம் நிறைந்த புத்திசாலித்தனத்திற்கு நல்ல உதாரணம். இது மூளையின் பகுப்பாய்வு ஆற்றலையும் (Analytical ability), சூழலுக்கு ஏற்பத் தீர்வுகளைக் கண்டறியும் திறனையும் குறிக்கிறது.
அந்தப் புத்திசாலித்தனத்திற்கு உயிர்கொடுப்பது புரிதல். தக்காளி பற்றாக்குறை ஏற்படும் போது, அது எளிய மக்களின் அன்றாட உணவையும் குடும்பப் பொருளாதாரத்தையும் எப்படிப் பாதிக்கும் என்ற சூழலின் ஆழத்தையும், மனிதர்களின் உண்மையான தேவைகளையும் உணர்வது புரிதல். கிறிஸ்துவின் உணர்வுகளை நமக்குள் கொண்டிருந்து, பிறருடைய கஷ்டங்களையும் பலவீனங்களையும் உணர்ந்து கிரகிப்பதே வேதப்பூர்வமான புரிதல் அல்லது தெளிவு. வெறும் எண்களையும் வணிகத்தையும் தாண்டி, பின்னணியில் இருக்கும் மனித தேவைகளையும் ஆத்துமாக்களையும் நோக்கி நம் பார்வையைத் திருப்ப இந்த ஆன்மீகப் புரிதல் அவசியமாகிறது. புரிதல் இல்லாத வெறும் புத்திசாலித்தனம் எந்திரத்தனமானது.
அடுத்தது ஞானம். மேற்சொன்ன அனைத்தையும் தாண்டி, நாம் பெற்ற அறிவையும் புத்திசாலித்தனத்தையும் எங்கு, எப்படி, எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முதிர்ச்சியே ஞானம். சேமித்து வைத்த தக்காளியைக் கொண்டு செயற்கைப் பற்றாக்குறையை உருவாக்கி அதிக லாபம் பார்க்காமல், மக்களின் சிரமத்தைப் புரிந்து கொண்டு நியாயமான விலைக்கு அதை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும், தேவனுடைய நீதியின் அடிப்படையில் செயல்படுவதிலும் தான் ஞானம் இருக்கிறது.
வேதாகமம், “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்கிறது (நீதிமொழிகள் 1:7). பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமும் இரக்கமும் நற்கனிகளும் நிறைந்ததாயும் இருக்கும் (யாக்கோபு 3:17). புரிதல் இல்லாத ஞானம் வெறும் தத்துவமாக மட்டும் பெருமையாக எஞ்சிவிடும். சூழ்நிலையில் நல்ல புரிதல் இருக்கிறது என்பதற்காக மனதிலேயே கணக்குப்போட்டு லாபத்தை மட்டும் நோக்கமாக்காமல், அன்பையும் நீதியையும் சேர்த்துச் சிந்திக்கும் மனப்பக்குவமே கர்த்தர் அருளும் மெய்யான ஞானத்தின் அடையாளம்.
சுருக்கமாக ஒரு ‘பஞ்ச்’சுடன் சொன்னால், அறிவு கையில் இருக்கும் வரைபடம்; புத்திசாலித்தனம் பயணிக்கும் வாகனம்; புரிதல் அந்தப் பாதையின் தன்மை; ஞானம் சேரும் இலக்கு.
Benny Alexander, ஆகஸ்டு 2026