கிறிஸ்தவக் கஞ்சன்

வால் ஸ்ட்ரீட்டின் ஆகப் பெரிய பிசினஸ் ராஜாக்களெல்லாம் பணத்தை எப்படிப் பெருக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் பழைய, அழுக்கடைந்த ஒரே ஒரு கருப்பு நிற கவுனை அணிந்துகொண்டு நியூயார்க் வீதிகளில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர், ஹெட்டி க்ரீன்.

மின்னும் வைரங்களோ, கம்பீரமான அலுவலகங்களோ, பளபளக்கும் ஆட்களோ இவரிடம் இல்லை. கெமிக்கல் நேஷனல் என்கிற ஒரு வங்கியின் ஏதோ ஒரு மூலையில், பழைய ஆவணங்கள் நிறைந்த சில மரப்பெட்டிகளுக்கு நடுவேதான் இவரது சாம்ராஜ்யம் இயங்கியது. பசித்தால் உணவகங்களுக்குப் போகமாட்டார். வீட்டிலிருந்து ஒரு டப்பாவில் ஓட்ஸ் எடுத்துவந்து, வங்கியின் ரேடியேட்டர் மீது வைத்துச் சூடாக்கிச் சாப்பிட்டுவிடுவார். துணி அழுக்கடைந்தால் முழு ஆடையையும் துவைக்க மாட்டார்; தரையில் பட்டு அழுக்காகும் அந்தச் கீழ் விளிம்பை மட்டும் துவைத்து மிச்சப்படுத்துவார்.

ஆளையே மிரட்டும் இந்த அதி தீவிர கஞ்சத்தனம்தான் பின்னாளில் இவருக்கு ஒரு பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது—”வால் ஸ்ட்ரீட்டின் சூனியக்காரி”.

ஆனால், இந்த கஞ்சத்தனத்திற்குப் பின்னால் அசாத்தியமான ஒரு நிதி மூளை இருந்தது. 1907-இல் அமெரிக்கப் பங்குச்சந்தை நிலைகுலைந்து, பெரும் வங்கிகளெல்லாம் கையை விரித்தபோது, அமெரிக்க அரசுக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு ரொக்கப் பணத்தைக் கையில் வைத்திருந்த ஒரே நபர் ஹெட்டி மட்டும்தான். “குறைந்த விலைக்கு வாங்கு, சந்தை உச்சத்தில் இருக்கும்போது விற்றுவிட்டு வெளியேறு”—இன்றைக்குப் பெரிய முதலீட்டு வல்லுநர்கள் வகுப்பெடுக்கும் பல விதியை, 19-ஆம் நூற்றாண்டிலேயே மிக இயல்பாகச் செய்து முடித்தவர்.

திருமணத்தின் போதே, “என் கணவருக்கு என் ஒரு பைசாவில் கூட உரிமையில்லை” என்று சட்டப்பூர்வமாக எழுதி வாங்கிவிட்டுத்தான் தாலியையே கட்டிக்கொண்டார். வரி செலுத்தக் கூடாது என்பதற்காகவே மலிவான விடுதிகளில் போலிப் பெயர்களில் மாறி மாறித் தங்கிக்கொண்டிருந்தார்.

இவரது கஞ்சத்தனத்தின் உச்சமாக ஒரு சம்பவத்தைச் சொல்வார்கள். மகன் நெட் காலில் காயமடைந்தபோது, மருத்துவருக்குப் பணம் கொடுக்க மனமில்லாமல் இலவச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இவரை அடையாளம் கண்டு கட்டணம் கேட்டதும், மகனை அப்படியே தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார். சரியான சிகிச்சை கிடைக்காமல், இறுதியில் மகனின் காலையே வெட்ட வேண்டியதாகிவிட்டது.

1916-இல் இவர் இறக்கும்போது விட்டுச் சென்ற சொத்து மதிப்பு, இன்றைய கணக்கில் பல பில்லியன் டாலர்கள்.

ஆண்களின் ஆதிக்கக் கோட்டையாக இருந்த வால் ஸ்ட்ரீட்டை, தனது கிழிந்த கருப்புச் பாவாடையாலும் அசாத்தியமான கணிப்புகளாலும் ஒரு பெண் ஆட்டிப்படைத்தார் என்பதுதான் ஹெட்டி க்ரீனின் விசித்திர வரலாறு. இருந்தாலும், வரலாற்றில் இவர் நினைவுகூரப்படுவது இவரது கஞ்சத்தனமான வாழ்க்கைக்காகத்தான்.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஹெட்டி க்ரீனைப் போலவே வாழ்கிறவர்கள்தான்—சரியாகச் சொன்னால் அவரைவிட மோசமாகவே வாழ்கிறார்கள்.

மறைந்த போதகர் வாரன் வியஸ்பி கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தையும் கிறிஸ்தவர்கள் அனுபவிக்கத் தவறுகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பார்.

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்: நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். — எபேசியர் 1:3

இன்று அநேக கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் இப்படித்தான் வாழ்கிறார்கள். கிறிஸ்து என்னும் அளவிட முடியாத பொக்கிஷப் பெட்டகத்தைக் கையில் வைத்திருந்தும், அதிலிருக்கும் மகிமையையும் ஐசுவரியத்தையும் அனுபவித்து அதில் வளராமல், வெளியே பிச்சைக்காரர்களைப் போலவும் ஓட்டாண்டிகளாகவும் வேஷமிட்டுத் திரிகிறார்கள். அவரே நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமானார் என்றால், இவை இல்லாத வாழ்க்கை ஓட்டாண்டி வாழ்க்கைதானே?

ஹெட்டி க்ரீன் தன்னிடம் பணப்பை இருந்தும் கஞ்சியாகச் செத்துப்போனார். கிறிஸ்தவர்களோ தங்களுக்குள் கிறிஸ்து என்னும் எல்லையற்ற ஆசீர்வாதம் நிறைந்திருந்தும், ஆவிக்குரிய கஞ்சத்தனத்துடனும் வறுமையுடனும் வலம் வருகிறார்கள்.

Benny Alexander, ஆகஸ்டு 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *