
குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். அது இயல்பானது. கிறிஸ்தவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே, இரட்சிக்கப்பட்ட அனுபவத்தில் வாழும் கிறிஸ்வர்களுக்கும் குற்ற உணர்வு என்பது சவாலாக சில சமயங்களில் அமைந்துவிடும் விஷயம் என்பதால், இதைக் கொஞ்சம் தியானித்துத் தெளிவாக விளங்கிக்கொள்வது அவசியம்.
தவறுகளை உணரும் எவரும் முதலில் தேவனிடம் கேட்பது மன்னிப்பைத்தான். ஆனால் கிறிஸ்துவுக்குள் மன்னிப்பை பெற்றுக்கொண்டவர்கள் தங்கள் தவறுகளை உணரும் அளவுக்கு தாங்கள் பெற்ற மன்னிப்பை உணர்வதில்லை என்பதுதான் குற்ற உணர்விலேயே அவர்கள் தொடரக்காரணம்.
குற்றம் செய்த உள்ளத்தில் குற்ற உணர்வு ஏற்படுவது தேவன் ஏற்படுத்தி இருக்கும் ஒரு முறை. இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்று பைபிள் அல்ல, நம் இருதயமே சொல்லிவிடும் முறை இது. தேவன் சட்டத்தை நம் இருதயத்தில் எழுதி இருக்கிறார் என்று ரோமர் முதலாம் அதிகாரத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். இது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, இந்த பூமியில் பிறந்த எவருக்கும் பொருந்தும். மேலும் ஒவ்வொருமுறை தவறைச் செய்யும்போதும் ஏற்படும் குற்ற உணர்வு, இன்னொருமுறை செய்வதைத் தடுக்க உதவும் ஒரு தற்காலிக முறை. ஆனால், தன் தவறை நியாயப்படுத்துவதன் மூலம் இந்தக் குற்ற உணர்வையும் தவிர்க்கும் வழிவகைகளைகளையும் மனிதர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இருந்தாலும் குற்ற உணர்வு என்பது வலிமை மிக்கது என்பதால் ஏதாவது சில நல்ல காரியங்கள் செய்து புண்ணியம் தேடி அதன்மூலம் அந்தக் குற்ற உணர்வில் இருந்து மனிதர்கள் விடுபட நினைக்கிறார்கள்.
ஆனால் கிறிஸ்தவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், மன்னிக்கும் தேவனே குற்ற உணர்வில் இருந்து விடுபடும் வழிவகைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.
குற்ற உணர்வில் இருந்து விடுபட நினைக்கும் எவரும் ஒருவருக்கு விரோதமாக ஒரு குற்றம் செய்திருந்தால் முதலில் நாம் மன்னிப்பைக் கேட்க வேண்டியது தேவனிடம். தேவன் நம்மை மன்னிப்பதற்காகவே சிலுவையில் பலியாகித் தீர்வை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். எனவே, மன்னிப்பை அவர் தான் செய்த சிலுவைத் தியாகத்தின் அடைப்படையில்தான் தருகிறார். எனவே, நாம் நம்முடைய பாவத்தின் அடைப்படையிலோ, அல்லது மன்னிப்புக் கேட்கும் அளவிலோ இருக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது. பலமுறை மன்னிப்புக் கேட்டும் குற்ற உணர்வில் பலர் தவிக்கக் காரணம், தேவன் நாம் முதல் தடவை மன்னிப்புக் கேட்கும் போதே பாவத்தை மன்னித்து விட்டார் என்கிற நம்பிக்கை கொள்ளாததுதான்.
இரண்டாவதாக, நம்முடைய மன்னிப்பை நாம் முழு மனதோடு கேட்க வேண்டும். நம்முடைய குற்ற உணர்வை யூதாசைப் போல் கையாளாமல், பேதுருவைப்போல் மனம்கசந்து மன்னிப்பாய்க் கேட்கிறவர்கள் என்கிற உண்மையை தேவன் அறிவார். ஆகவே, மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ (அதாவது அளவிட முடியாத தூரம்!) அவ்வளவு தூரமாய் நம் பாவங்களை மன்னித்து மறக்கிறவர் அவர். இதை மனதில் இருந்த வேண்டும். தம்மிடம் மன்னிப்பைக் கேட்டுப் பெற்றவர்களை தேவன் தன் பிள்ளைகளாகப் பார்க்கிறார் என்பதுதான் வேதம் நமக்குத்தரும் ஆறுதல். மன்னிப்பை மனராதக் கேட்டும் எவரும், அவர் பார்வையில் வீணாவர்கள் அல்ல, விசேஷித்தவர்கள்.!
மூன்றாவதாக, தேவனால் மன்னிக்க முடியாத பெரிய பாவம் என்று எதுவும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். உங்கள் பாவத்தின் ‘சைஸ்’ ஆண்டவருக்கு ஒரு பிரச்சனை இல்லை. இந்த மேலான உணர்வைப் பெறுவதும் குற்ற உணர்வில் இருந்து விடுபட அவசியம். ‘நான் செய்த இரகசிய பாவம் மிகக் கொடிது, தேவனால் மன்னிக்க இயலாதது, எனவேதான் இந்த நோயில் கிடந்து வாடுகிறேன்’, என்று சுய பரிதாப உணர்வில் வீழ்வோர் மிகுதி. ஆனால் நீங்கள் செய்த அந்த இமாலயத்தவறை தேவன் நீங்கள் மன்னிப்புக் கேட்ட அன்றே மறந்தும் விட்டார் என்பதுதான் உண்மை.
நான்காவதாக, பிறருக்கு எதிராக குற்றம் செய்திருந்தால் அவரிடம் மன்னிப்புக் கேட்பதும் குற்ற உணர்வில் இருந்து விடுபட அவசியம். நான் தேவனிடமே மன்னிப்புக் கேட்டுவிட்டேன் என்று இருக்க முடியாது. தேவனிடம் மன்னிப்பு கேட்டது உண்மையானால், அது நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்பது நடக்க வேண்டும். மன்னிப்பும் ஒப்புரவாகுதலும் தேவன் வைத்திருக்கும் முறை.
குற்ற உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் வேலைகளைச் செய்யாமல், அந்த உணர்வை கொஞ்சம் நிதானித்து தேவனுக்குள் மன்னிக்கப்பட்ட நீதிமான்கள், பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் என்கிற மேலான உணர்வுகளைத் தரிப்பிப்பதுதான் சரியான – சிறந்த வழி! மேலும் சங்கீதங்களைத் தொடர்ந்து தியானியுங்கள். தாவீதின் பல பாடல்கள் குற்றம், மன்னிப்பு, மனம் திரும்புதல், குற்ற உணர்வில் இருந்து பெரும் விடுதலை, கிருபை என்று அனைத்தையும் சரியாகப் பரிந்துகொள்ள உதவும்,
இதையெல்லாம் அறிந்துகொண்டால் குற்ற உணர்வு நீங்கிவிடுமா என்றால் அது உடனடியாக நடந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தச் சத்தியங்களை அறிந்து தியானித்துக்கொண்டே இருந்தால் தேவன் கிருபையாக நம்மை அழுத்தும் எல்லா குற்ற உணர்வுகளில் இருந்தும் வெளிவந்து, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை அருளிச்செய்வார்.