
தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தன் உழைப்பையும் அடையாளத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற ஏக்கம் ஒவ்வொரு மனித மனதின் ஆழத்திலும் இயல்பாகவே குடிகொண்டிருப்பதுதான். ஆனால், அசட்டை பண்ணப்பட்ட மனிதர்கள்தான் இந்த உலகில் பெரும்பான்மையினர்! ஆனால் நம் ஆண்டவர் அப்படியில்லை. விழுந்துபோன மனிதர்களிலும்கூடப் பலரைத் தெரிந்தெடுத்த் தேவன் தன் பிள்ளைகளாக அங்கீகரித்திருப்பதை வேதம் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறது.
தேவன் மனிதனைத் தன் கரத்தின் கிரியையாகப் படைத்திருந்தாலும், அவனுடைய விசுவாசத்தையும் உண்மையையும் கண்டு, அவனைப் பாராட்டிப் பெருமைப்படுத்துவதில் தயங்குவதில்லை. வேதாகம வரலாற்றில், ஒரு மனிதனைப் போல வேறொருவன் இல்லை என்று தேவனே முன்வந்து சாட்சி பகரும் பதிவுகள் பல உண்டு.
- விசுவாசத்தின் உறுதி (எசேக்கியா): “அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை” (II இராஜாக்கள் 18:5). எசேக்கியா கர்த்தர்மேல் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையே இதற்குப் பின்னால் இருக்கிறது.
- தாழ்மையின் உச்சம் (மோசே): “பூமியின்மேலுள்ள சகல மனிதரிலும் மோசே என்பவன் மிகவும் சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்” (எண்ணாகமம் 12:3). விளைவு, மோசே கர்த்தரை முகமுகமாய் அறிந்த தீர்க்கதரிசி என்ற அங்கீகாரத்தையும் பெற்றார்.
- ஞானத்தின் நிறைவு (சாலமோன்): “உனக்கு முன்னாவது உனக்குப்பின்னாவது உன்னைப்போல் ஒருவனும் இல்லாதபடிக்கு, ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்” (I இராஜாக்கள் 3:12) என்று தேவன் சாலமோன் ராஜாவின் விண்ணப்பத்திற்குப் பதிலளித்திருந்தார்.
- மனந்திரும்புதலின் மேன்மை (யோசியா): தன் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்திற்குத் திரும்பின யோசியாவைப் போல, அவனுக்கு முன்னும் பின்னும் ஒரு ராஜாவும் எழும்பவில்லை (II இராஜாக்கள் 23:25).
- உத்தமத்தின் அடையாளம் (யோபு): “பூமியில் அவனைப்போல் உத்தமனும் சன்மார்க்கனுமாகிய மனுஷன் ஒருவனுமில்லை” (யோபு 1:8) என்று தேவனே சாத்தானுக்கு முன்பாக யோபுவை அடையாளம் காட்டினார்.
- இருதயத்தின் இணக்கம் (தாவீது): “ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்” (அப்போஸ்தலர் 13:22). தேவனுடைய விருப்பங்களை நிறைவேற்றத் துடித்த தாவீதின் இருதயத்தை உயர்த்த தேவன் மறக்கவில்லை.
பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலும் இந்த அங்கீகாரத்தின் தொடர்ச்சியைக் காணலாம். இயேசு கிறிஸ்து பூமியில் மனிதராக வந்தபோதும் மற்ற மனிதர்களின் உள்ளத்தின் தன்மைகளைக் கண்டு பாராட்டத் தவறவில்லை:
- கபடற்ற இதயம் (நாத்தான்வேல்): இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” (யோவான் 1:47) என்று அவனுடைய தூய்மையான குணத்தைச் சான்றளித்தார்.
- ஊழியத்தின் மேன்மை (யோவான் ஸ்நானகன்): “ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை” (மத்தேயு 11:11) என இயேசு அவனுடைய தீர்க்கதரிசனப் பணியை மிக உயர்வாகப் பேசினார்.
வேதத்தில் சில குறிப்பிட்ட விசுவாச வீரர்களுக்கு மட்டுமன்றி, உண்மையோடு ஓட்டத்தை முடிக்கும் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு விசேஷித்த சாட்சியையும் வைத்திருக்கிறார்.
பிதாவின் உன்னதப் பாராட்டு
நாம் சிறப்பாகச் செய்யும் அனைத்துமே தேவனுடைய கிருபையின் விளைவுகள்தான். ஆனாலும், ஒரு தந்தை தன் குழந்தையின் சிறு முயற்சியைப் பாராட்டுவது போல, தேவன் நம் விசுவாசக் கிரியைகளை அங்கீகரிக்கிறார். அவர் நம்மை வெறும் படைப்புகளாகப் பார்க்காமல், சிநேகிதர் என்று அழைக்கிறார். “உங்கள் பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல” (எபிரெயர் 6:10) என்ற திருவசனம், நம்முடைய சிறிய ஊழியத்தையும் அவர் எவ்வளவு தூரம் கனப்படுத்துகிறார் என்பதற்கான உறுதி!
வேதத்தில் சில குறிப்பிட்ட விசுவாச வீரர்களுக்கு மட்டுமன்றி, உண்மையோடு ஓட்டத்தை முடிக்கும் ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவன் ஒரு விசேஷித்த சாட்சியையும் வைத்திருக்கிறார்.
“நல்லது, உண்மையும் உத்தமுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையுள்ளவனாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத்தேயு 25:21) என்பதுதான் அது.
உலகம் நம்மை எவ்விதம் மதிப்பிட்டாலும், பரலோகத்தின் தேவன் நம்முடைய அந்தரங்கமான உண்மைத்துவத்தைக் கண்டு நமக்கான பாராட்டைச் சேமித்து வைத்திருக்கிறார். படைத்தவரின் கரத்தால் ஒரு மனிதன் பெறும் அந்த அங்கீகாரமே வாழ்க்கையின் மிகப்பெரிய மேன்மை.
Benny Alexander, May 2026