வெறும் மூலக்கூறுகளா நாம்?

குறைப்பியல் என்று அறிவியலிலும் தத்துவத்திலும் ஒரு கோட்பாடு உண்டு. ஆங்கிலத்தில் Reductionism. இது ஒரு சிக்கலான விஷயத்தை அதன் மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து, அந்தப் பகுதிகளின் தொகுப்புதான் அந்த முழுமை என்று வாதிடும் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்தக் குறைப்பியலுக்கு நல்ல உதாரணம் மனிதனை வெறும் ‘உயிரணுக்களின் தொகுப்பு’ (Biological Machine) என்று பார்ப்பது. நவீன அறிவியலாளர்கள் முன்வைக்கும் இந்த விஷயம் விசுவாசிகளுக்குச் சவாலாக அமையலாம். இதை நீங்கள் கேள்விப்பட்டிருக்காவிட்டாலும், இறைவனின் படைப்பாக நாம் எவ்வளவு மேலானவர்கள் என்று அறிய இச்சிறு கட்டுரை உதவும். யாராவது உங்களிடம் ‘நாமெல்லாம் வெறும் அணுக்கள்தான் ப்ரோ!’ என்று வருவார்களானால், அவர்களுக்கு பதிலளிக்க உங்களுக்கு உதவும்.  இதற்கு, கிறிஸ்தவ தற்காப்பு வாதத்தின் (Apologetics) அடிப்படையில் சில பதில்களை நாம முன்வைக்கலாம்:

துகள்களின் தொகுப்பை விட நாம் மேலானவர்கள்
இந்தக் குறைப்பியவாதிகள், “நீங்கள் உங்கள் நியூரான்களின் தொகுப்புதான்” அல்லது “நீங்கள் வெறும் வேதிவினைகளின் வெளிப்பாடு” என்பார்கள். ஆனால், ஒரு அழகான ஓவியத்தை வெறும் காகிதம் மற்றும் வர்ணம் என்று பிரித்துப் பார்ப்பது அந்த ஓவியத்தின் அழகையும், ஓவியனின் நோக்கத்தையும் விளக்காது. சொல்லப்போனால் அது வரைந்தவரைச் சிறுமைப்படுத்தும் செயல்.
மனித உடல் வேதியியல் கூறுகளால் ஆனதுதான் என்றாலும், அவன் வெறும் மூலக்கூறுகளின் தொகுப்பல்ல. மனிதன் அதற்கு மேலான ‘தன்னிலை’ (Self) மற்றும் ‘மனசாட்சி’ (Conscience) கொண்டவன்.

தேவ சாயலும் – தனித்துவ அடையாளமும்
மனிதன் தேவ சாயலில் (Imago Dei) படைக்கப்பட்டவன் (ஆதியாகமம் 1:27). அறிவியல் மனிதனை விலங்குகளோடு ஒப்பிட்டு, மரபணு ரீதியாக நாம் குரங்குகளுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறலாம். ஆனால், அறநெறி (Morality), நம்முடைய படைப்பாற்றல் (Creativity), மற்றும் நித்திய வாழ்வைப் பற்றிய தேடல் ஆகியவை எந்த ஒரு வேதியியல் மாற்றத்தினாலும் விளக்க முடியாதவை. காரணம், நாம் வெறும் தற்செயலான அணுக்களின் சேர்க்கை அல்ல, திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டவர்கள்.

‘ஏன்?’ மற்றும் ‘எப்படி?’
அறிவியல் ‘எப்படி’ (How) மனித உடல் இயங்குகிறது என்பதை விளக்குகிறது. ஆனால், ‘ஏன்’ (Why) நாம் படைக்கப்பட்டோம் என்ற நோக்கத்தை அது கூறுவதில்லை. குறைப்பியல் முறையானது ‘எப்படி’ என்பதைக் கொண்டு ‘ஏன்’ என்ற நோக்கத்தையே அழித்துவிடப் பார்க்கிறது. உதாரணமாக ஒரு கடிகாரம் இயங்கும் முறையை நாம் ஆராய்ந்து விளங்கிக்கொண்டோம் என்று வைத்துக்கொள்வோம். அதுவே, அந்தக் கடிகாரத்தை உருவாக்கியவர் என்று எவரும் இல்லை என்று ஆக்கிவிடாது.

தன்னையே மறுக்கும் தர்க்கம் (The Self-Defeating Logic)
Reductionism என்கிற குறைப்பியல் மட்டும் உண்மையானால், நமது சிந்தனைகள் அனைத்தும் மூளையில் நடக்கும் தற்செயலான மின்வேதியியல் மாற்றங்கள் என்றாகிவிடுகிறது. அப்படியென்றால், ஒரு அறிவியலாளர் முன்வைக்கும் ‘குறைப்பியல் தத்துவமும்’ கூட ஒரு தற்செயலான வேதிவினைதான். ஒரு தற்செயலான வேதிவினையை நாம் எப்படி ‘உண்மை’ என்று நம்ப முடியும்? எதற்காக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கலாம்!
எனவே, பகுத்தறிவு என்பது ஒரு படைப்பாளரால் நமக்குக் கொடுக்கப்பட்ட கொடையே தவிர, வெறும் பருப்பொருள் (Matter) சார்ந்தது அல்ல.

ஆன்மீக யதார்த்தம்
அன்பு, நீதி, தியாகம் போன்ற உணர்வுகளை அறிவியலால் அளவிட முடியாது. கடவுளை மறுக்கும் அறிவியலாளர்கள் (எல்லா விஞ்ஞானிகளும் அல்ல!) செய்யும் ஒரு தந்திரம்தான் இது; உன்னத உணர்வுகளையெல்லாம் வெறும் ‘survival instinct’ என்று சுருக்கிவிடுகிறார்கள்.

ஆனால், கிறிஸ்து சிலுவையில் காட்டிய அன்பு எந்த உயிரியல் விதியிலும் அடங்காதது. மனிதன் வெறும் மண்ணால் ஆனவன் மட்டுமல்ல, அவனுக்குள் தேவன் ஜீவசுவாசத்தை ஊதியிருக்கிறார் (ஆதியாகமம் 2:7).

நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித உடலின் நுணுக்கங்களை விளக்கலாம், ஆனால் அவை மனிதனின் மகத்துவத்தைக் குறைக்க முடியாது. மாறாக, இவ்வளவு சிக்கலான கட்டமைப்புக்கு பின்னால் ஒரு மகா பெரிய வடிவமைப்பாளர் இருப்பதைத்தான் அவை உறுதிப்படுத்துகின்றன.

Benny Alexander, May 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *