கொழுந்துவிட்டு எரிதல்

நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தபோது அவருக்கு வயது பூஜ்ஜியம் அல்ல. அநேக கிறிஸ்தவர்களின் வேதாகமப் புரிதல் மத்தேயு சுவிசேஷத்தில்தான் தொடங்குகிறது; அவர் 2000 ஆண்டுகளுக்கு முன்புதான் உதித்தார் என்பதுபோல. ஆனால், புதிய ஏற்பாடே எழுதப்படாத அந்தக் காலத்தில், இயேசு தம் சீஷர்களுக்குப் போதித்தது ‘தாம் இருந்த’ பழைய ஏற்பாட்டைத்தான்.

கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட (Incarnation) நிகழ்வே தவிர, அவருடைய தொடக்கம் அல்ல. அவர் அநாதி தேவன். மீகா தீர்க்கதரிசியின் வார்த்தைகளில்  “அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” (மீகா 5:2).

பழைய ஏற்பாடு முழுவதிலும் அவர் மறைமுகமாகவும், சில இடங்களில் நேரடியாகவும் வெளிப்பட்டிருக்கிறார். ஆபிரகாமுக்கு முன்பாகவே “நான் இருக்கிறேன்” (யோவான் 8:58) என்று சொன்னவர் அவர். எம்மாவு ஊருக்குச் சென்ற சீஷர்களிடம் அவர் செய்தது இதைத்தான். மோசே முதலான சகல தீர்க்கதரிசிகளும் எழுதிய வேதவாக்கியங்கள் எல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர் அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார் (லூக்கா 24:27). 

எனவே, பழைய ஏற்பாடு என்பது கிறிஸ்துவை நோக்கிய ஒரு சுட்டிக்காட்டி (Pointer) மட்டுமல்ல, அது அவருடைய செயல்களின் வரலாற்றுப் பதிவுமே ஆகும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் புதியதாக உருவாகவில்லை; மாறாக, நித்தியத்தில் இருந்த வார்த்தை (யானவர்) காலத்திற்குள் (30ச் சொச்ச வருட கால கட்டத்துக்குள்) பிரவேசித்தது (பிரவேசித்தார்). இந்த ஆழமான சத்தியத்தை அறியாததால்தான், பல கிறிஸ்தவர்கள் அவரை வெறும் வரலாற்று நாயகனாகவோ, புதிய ஏற்பாட்டிற்கு மட்டுமே சொந்தமானவராகவோ சுருக்கிவிடுகிறார்கள். பழைய ஏற்பாட்டின் தேவன் வேறு, புதிய ஏற்பாட்டின் தேவன் வேறு என்ற தவறான புரிதலுக்கும் இதுவே அடிப்படை காரணமாக அமைகிறது. ஒரு வேளை நீங்கள் இந்தச் சிக்கலுக்குள் இருப்பீர்களாலால், இருதயம் கொழுந்துவிடும் அளவுக்கு வேத வாக்கியங்கள் அதற்கான எரிபொருளாக இருப்பது கடினம்,

எம்மாவு ஊருக்குச் சென்று கொண்டிருந்த சீஷர்களுக்குப் பழைய ஏற்பாட்டின் சுருள்கள் மட்டுமே இருந்தன. அவற்றிலிருந்தே கிறிஸ்து தம்மைக்குறித்து எழுதியிருப்பவைகளை விளக்கியபோது, அவர்கள் இருதயம் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால், இன்று பழைய ஏற்பாடும், அதின் நிறைவாகிய புதிய ஏற்பாடும் அடங்கிய 66 புத்தகங்கள் கொண்ட முழு வேதாகமமும் கைகளில் இருக்கிறது. அப்படியிருந்தும், பலருடைய வேத வாசிப்பில் அந்தத் தணல் காணப்படுவதில்லை. அதற்குக் காரணம், ஒட்டுமொத்தமான தியானம் (Holistic Meditation) இல்லாததே. 

வேதாகமத்தை ஒரு ஷார்ட்ஸ்/ரீல்ஸ் போலவோ, அல்லது அன்றாடத் தலைவலிக்கு உடனடித் தீர்வு தரும் பாராசிட்டமால் போலவோ அணுகும் வழக்கம் இன்று மலிந்துவிட்டது. சங்கீதத்தில் ஒரு ஆறுதல் வசனம், புதிய ஏற்பாட்டில் ஒரு வாக்குத்தத்தம் என்று உதிரிகளாகப் பிரித்து வாசிக்கும்போது, அதில் உள்ள தேவனுடைய அநாதி தீர்மானத்தின் முழுப்படமும் தெரிவதில்லை. ஆதியாகமத்தில் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் வரை ஓடுகிற மீட்பின் வரலாற்றை (Redemptive History) அது மறைத்துவிடுகிறது.

முழு வேதாகமத்தையும் கிறிஸ்துவின் வெளிச்சத்தில் இணைத்து வாசிப்பதே மெய்யான தியானம். ஆதியாகமத்தின் பலியிலும், யாத்திராகமத்தின் பஸ்காவிலும், லேவியராகமத்தின் ஆசாரியத்துவத்திலும், தீர்க்கதரிசிகளின் தரிசனங்களிலும் கிறிஸ்துவையே தரிசிக்க வேண்டும். அதற்கு நேரம்பிடிக்கும். அதுவும் மணிக்கணக்கில். அப்போதுதான் பழைய ஏற்பாடு சுட்டிக்காட்டிய நிழல், புதிய ஏற்பாட்டில் மெய்ப்பொருளாக வந்ததை ஒன்றிணைத்துப் பார்க்கமுடியும்.

படைப்பு, வீழ்ச்சி, மீட்பு, மகிமை என்ற தேவனுடைய ஒட்டுமொத்தமான திட்டத்தை வேதத்தில் காணும்போதுதான், ஒரு சாதாரண வாசிப்பு ஆழமான தரிசனமாக மாறுகிறது. அந்தப் பேரொளியில் வேதத்தை அணுகும்போது மட்டுமே, ஆவிக்குரிய தணல் உண்டாகும்; இருதயம் கொழுந்துவிட்டு எரியும்.

Benny Alexander, Aug 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *