மறந்துவிட்டீர்களா?

“டிரான்ஸ்ஃபர் வேணும்னு ஜெவ்ம் பண்ணினேம் பிரதர்..கர்த்தர் உதவி செய்தார்; டிரான்ஸ்ஃபர் கிடைச்சிருச்சி”


“சின்னவன் கல்யாணம் நல்லபடியா முடியணும்னு ஜெபிச்சோம்; கர்த்தர் கல்யாணத்தை நல்லா நடத்திக் கொடுத்தார்”


“பத்துவருஷம் மூட்டுவலி. சர்ஜரிக்குப் பிறகு நல்ல சொஹம் கெடச்சிருக்கு. எல்லாம் கர்த்தர் கிருபை!”

என்பதில் இருந்து, “இது எப்படி நடந்தது என்பதே புரியவில்லை சகோதரா, நெனச்சாலே புல்லரிக்குது; ஆண்டவர் அற்புதம் செய்யனேண்ணா நிலைமை சரியாக ஆகியிருக்க வாய்ப்பே இல்லை”, என்பது வரை… பெறும் நன்மைகள்தான் எத்தனை எத்தனை.

இப்படி எக்கச்சக்கமான நன்மைகளை அவர் செய்வதால் எல்லாமே நம் நினைவில் இருப்பதில்லை. நம்மைப் புரட்டி எடுத்த கோவிட் இன்று அனேகமாக இல்லை. அதேபோல், அந்த இரண்டு வருடப் பாடுகளும் அனேகமாக நினைவில் இல்லை. சில பிரமாண்டமானவைகள் நினைவில் இருக்கும். ஆனாலும் காலப்போக்கில் அவற்றின் வீரியம் நம் நினைவில் இருப்பதில்லை. அப்படி இருக்க வேண்டுமானால், மிக அடிக்கடி நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும். சிலர் முடிந்தவரை இதைச் செய்கிறார்கள். ஆனால், நம்மில் பலர் இதைச் செய்வதில்லை! மறதி மனித பலவீனம்! அடுத்த ஒரு பிரச்சனையில் பழைய அதிசயம் நினைவுக்கு வந்துவிட்டால் சிறப்பு; அப்படி வராததால் மீண்டும் பழைய பரிதவிப்பு.

இதெல்லாம் உணரத்தக்கது என்றாலும், அதன் அடிப்படையில் நாம் பெற்ற நன்மைகள் என்பது தேவன் நல்லவர் என்பதைத்தான் நமக்குக் கற்றுத் தந்திருக்க வேண்டும். அவர் செய்த அதிசயங்களைவிட அவர் அதிசயமானவர் என்பதும் சர்வ வல்லவர் என்பதும் நமக்குள் ஆழமாகப் பதிந்திருக்கவேண்டும். நாம் கற்ற இவற்றைத்தான் நாம் மறக்காமல் இருக்கமுடியும். அதுதான் நீச்சல் போல, வண்டி ஓட்டுவதுபோல … நமக்குள் மறக்காமல் நிலைக்கக்கூடியது.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு எத்தனைமுறை மோசே அவர் செய்த காரியங்களை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தாலும், அவர்கள் அவரை அறியவே இல்லை. சந்தேகங்களுக்கும், அவநம்பிக்கைகளுக்குள்ளும் அவர்கள் சென்றதற்குக் காரணம் , நம்மை அழைத்தவர் பாலைவனத்தில் பரிதவிக்க விடப்போவதில்லை, காரணம் அவர் உண்மையுள்ளவர் என்கிற அறிவை அவர்கள் அடையாமல் போனதுதான்.

எனவே, தேவன் செய்த நன்மைகளை மட்டுமே அடிப்படையாக வைத்து அவரை மகிமைப்படுத்துவதைவிட அவர் யாராக இருக்கிறார் என்பதை அறிந்து மகிமைப்படுத்துவது இன்னமும் சிறப்பானது. காரணம் அவர் எனக்கு செய்தவைகள் என் ஞாபகம்-மறதி என்பவைகளுக்கு உட்பட்டது. ஆனால், அவர் யாராக இருக்கிறார் என்பதை அறிதல் அவரைச் சார்ந்தது. நம்முடைய ஞாபகசக்தியை மையமாகக் கொள்ளாமல், அவர் யார் என்கிற அவருடைய தன்மைகளை – அதாவது அவரை மையப்படுத்துவதுதான் இன்னொரு சூழலிலும் நமக்கு உதவக்கூடியது.

நான் மறக்கலாம்; ஆனால் அவர் மாறுவதில்லை என்கிற அறிதலில்தான் அவரைச் சரியாக மகிமைப்படுத்துவது நடக்கிறது. நமக்கும் சூழ்நிலைகளை மேற்கொள்ள முடிகிறது!

Benny Alexander, ஆகஸ்டு 2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *