
பைபிள் ரொம்ப ‘வெயிட்’ட்டான புத்தகம். அதில் உள்ள காகிதங்கள் மட்டும் தடிமனாக இருந்திருந்தால் கையிலெல்லாம் கொண்டு செல்ல இயலாது. இன்னும் மிகப்பெரிதாக இருந்திருக்கும். இப்போதே கனம் அதிகம் என்பதற்காக சர்ச்சுக்குக் கூட எடுக்காமல் செல்பவர்கள் உண்டு.நம் கைகளில் வேதம் இப்படிக் கனமாக இருக்க அது ஒற்றைப் புத்தகம் அல்ல என்பதும் ஒரு காரணம்; 66 புத்தகங்களின் தொகுப்பு. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை. அதுவும் பலரால்!.
ஆனால் ஏன் 66 மட்டும்தான் நம் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் கையில் இருக்கும் வேதத்தில் இருக்கின்றன என்று யோசித்ததுண்டா? தள்ளுபடி ஆகமங்கள் ஏன் தள்ளுபடி செய்யப்பட்டன? நிச்சயம் இன்னும் எடை கூடிவிடும் என்பதற்காகவா? இல்லை! அதன்பின் ஏகப்பட்ட வரலாறு உண்டு. சுருக்கமாக இங்கே தெரிந்து மனதில் இருத்திக்கொள்ள:
பரிசுத்த வேதாகமத்தில் எந்தெந்த புத்தகங்கள் எல்லாம் தேவனுடைய வார்த்தை என்பதைத் திருச்சபை பல ஆழமான விவாதங்களுக்கும் ஆராய்ச்சிக்கும் உட்படுத்திதான் தீர்மானித்தது. அதுவும் பலமுறை கூடி!
தனித்தனிச் சுருள்களாக இருந்தவை எல்லாம் ஓரிடத்திற்குக் கொண்டுவரப்பட்டதால் அவற்றுள் சிலவற்றைத் தெரிந்துகொண்டு தற்செயலாக இணைத்துவிடவில்லை. சில எழுத்துக்கள் ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு’ இருந்தன, சில எழுத்தாளர்களுக்கு பெரிய fan base இல்லை; மக்கள் like பண்ண மாட்டார்கள் என்றெல்லாம் ஒதுக்கப்படவில்லை. நல்ல எழுத்தாளர்கள் என்று அவார்டு பெற்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களை மட்டும் இணைத்துவிட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது மாபெரும் பிழை. மிகக் கவனமாகச் செய்யப்பட்ட ஒன்று. இன்று ஒருங்கிணைக்கப்பட்ட புரோட்டஸ்டன்ட் வேதாகமம் நம் கைகளில் 66 புத்தகங்களுடன் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டு இணைக்கப்பட்டதன் பின்னால் வலுவான காரணங்கள் உண்டு. அவற்றை அறிந்துகொண்டீர்களானால், இதன் பின் இருப்பது வெறும் மனித முயற்சிகளோ ஆசைகளோ இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
முதலாவது கத்தோலிக்க வேதாகமத்தில் இருக்கும் கூடுதல் புத்தகங்களைப் பற்றிப் பார்த்துவிடலாம்.
கத்தோலிக்க வேதாகமத்தில் காணப்படும் கூடுதல் புத்தகங்களை அபோக்கிரஃபா (Apocrypha) ஆகமங்கள் என்பர். நமக்குப் புரியுமாறு சொன்னால் தள்ளுபடி ஆகமங்கள். பண்டைய திருச்சபை பிதாக்களும் சீர்திருத்தவாதிகளும் இவற்றை வேதாகமப் பட்டியலில் சேர்க்க மறுத்ததற்கு ஆழமான வரலாற்றுச் சான்றுகளும் இறையியல் காரணங்களும் உண்டு.
- அவைகள் எபிரெய வேதாகமப் பட்டியலில் இல்லை! சர்ச்சைக்குரிய இப்புத்தகங்களை யூதர்களின் எபிரெய வேதாகமம் (Tanakh) ஒருபோதும் தேவ வார்த்தையாக ஏற்றுக்கொண்டதில்லை. மெலித்தோ (Melito of Sardis), ஜெரோம் (Jerome) போன்ற திருச்சபை பிதாக்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூத அறிஞர்களிடம் பேசி இவற்றைக் குறித்து நேரடி ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது யூத மார்க்கம் 22 அல்லது 24 புத்தகங்களை மட்டுமே (இன்றைய புரோட்டஸ்டன்ட் பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்கள்) பரிசுத்த ஆகமங்களாகப் பாதுகாத்து வந்ததை அவர்கள் கண்டறிந்தார்கள். இந்தத் தள்ளுபடி ஆகமங்கள் எபிரெய மூலப் பட்டியலில் ஒருபோதும் இடம்பெறவில்லை. இதில் ஜெரோம் (கி.பி. 347–420) எபிரெய மற்றும் கிரேக்க மூலப்பிரதிகளிலிருந்து வேதாகமத்தை நேரடியாக லத்தீன் மொழியில் (இதை வல்கேட் vulgate என்பார்கள்) மொழிபெயர்த்த மிகச்சிறந்த வேத அறிஞரும் திருச்சபை பிதாவுமாவார். இவர் அபோக்கிரஃபா புத்தகங்களை பழைய ஏற்பாட்டு வேதாகமப் பட்டியலில் சேர்க்கக் கடுமையாக எதிர்த்து, மூல உரையின் தூய்மையைப் பாதுகாத்தார்.
- புதிய ஏற்பாட்டில் இவற்றைக் குறித்துக் குறிப்புகள் ஏதுமில்லை: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ அவருடைய அப்போஸ்தலர்களோ இந்த அபோக்கிரஃபா புத்தகங்களிலிருந்து ஒருமுறை கூட தேவ வார்த்தையாக மேற்கோள் காட்டவில்லை. புதிய ஏற்பாட்டின் ஆசிரியர்கள் பழைய ஏற்பாட்டின் 39 புத்தகங்களில் உள்ள வசனங்களை 250-க்கும் மேற்பட்ட இடங்களில் “வாசித்ததில்லையா”, “எழுதப்பட்டிருக்கிறது” என்று மேற்கோள் காட்டுகிறார்கள். ஆனால், இத்தள்ளுபடி ஆகமங்களை அவர்கள் தேவ ஏவுதலால் உண்டான வசனமாக ஒருபோதும் குறிப்பிடவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு பழைய ஏற்பாட்டுப் பண்டிதர். அவர் தன் எழுத்துக்கள் எவைகளிலும் இந்த தள்ளுபடிப் புத்தகங்களில் இருந்து ஒரு வரியைக்கூட மேற்கோள்காட்டவில்லை. அப்படியானால், அவற்றை கிறிஸ்துவும் அவரது சீடர்களும் யூத வேத நூல்களாகவே கருதவில்லை என்றுதானே அர்த்தமாகிறது?
- தீர்க்கதரிசனத்தின் முடிவு: காலம் மல்கியா தீர்க்கதரிசியின் காலத்திற்குப் பிறகு (கி.மு. 400) இஸ்ரவேலில் தீர்க்கதரிசன உரை என்பது நின்றுவிட்டது என்பதை யூத வரலாற்றாசிரியர் யோசிப்பஸும் (Josephus) ஒப்புக்கொள்கிறார். 1 மக்கபேயர் (1 Maccabees 4:46, 9:27, 14:41) புத்தகத்தின் ஆசிரியரே, தங்கள் காலத்தில் உண்மையான தீர்க்கதரிசிகள் யாரும் இல்லை என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். தீர்க்கதரிசன ஆவி இல்லாத ஒரு காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்களில் தேவ ஏவுதல் இருக்க முடியாது.
- திருச்சபை பிதாக்களின் தெளிவான வேறுபாடு அதேனேசியஸ் (Athanasius), எருசலேமின் சிரில் (Cyril of Jerusalem), ரூபினஸ் (Rufinus), ஜெரோம் ஆகிய பண்டைய திருச்சபை பிதாக்கள், பரிசுத்த ஆகமங்களுக்கும் திருச்சபையில் வாசிக்கப்பட்ட ஏனைய புத்தகங்களுக்கும் இடையே தெளிவான எல்லைக் கோட்டை வரைந்தார்கள். கி.பி. 367-இல் அதானாசியுஸ் எழுதிய 39-வது விழா நிருபத்தில் (Festal Letter) பழைய ஏற்பாட்டின் உண்மையான புத்தகங்களை மட்டுமே பட்டியலிட்டார். அபோக்கிரஃபா புத்தகங்களை தனிப்பட்ட வாசிப்புக்கு மட்டுமே பயன்படுத்தலாமே தவிர, திருச்சபையின் உபதேசங்களை நிறுவ அவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்று அவர் தெளிவுபடுத்தினார். அதாவது, வாசிக்க விரும்பினால் வாசித்துக்கொள்ளுங்கள். ஆனால் அவற்றில் சொல்லி இருக்கிறது என்று எதற்கும் சொல்லிக் கொண்டு வராதீர்கள் என்பதுதான் இதன் அர்த்தம்.
- வரலாற்றுத் தவறுகள் மற்றும் காலவரிசைப் பிழைகள் இப்புத்தகங்களில் பல வரலாற்றுத் தவறுகளும் புவியியல் பிழைகளும் நிறைந்துள்ளன. உதாரணமாக, யூதித் (Judith) புத்தகம் நேபுகாத்நேச்சாரை நினேவேயில் ஆட்சி செய்த அசீரிய ராஜாவாகக் குறிப்பிடுகிறது. ஆனால் அவர் பாபிலியோனின் ராஜா. தோபித் (Tobit) புத்தகம் யெரொபெயாமின் காலத்துப் பிரிவினையையும், அசீரியச் சிறையிருப்பையும் ஒரே நபர் கண்டதாகக் கூறுகிறது. இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட கால முரண்பாட்டைக் கொண்டிருக்கிறது.
- இறையியல் முரண்பாடுகள்: இது நமக்கு மிக முக்கியமானது. வேதாகமத்தின் அடிப்படை உபதேசங்களுக்கு மாறான பல கருத்துக்களை இப்புத்தகங்கள் போதிக்கின்றன. 2 மக்கபேயர் (2 Maccabees 12:43–45) மரித்தோருக்காக ஜெபம் செய்வதையும் பணப் பலி செலுத்துவதையும் ஆதரிக்கிறது. தோபித் (Tobit 4:10, 12:9) புத்தகம் தர்மகாரியம் செய்வதே பாவங்களைப் போக்கி மரணத்திலிருந்து விடுவிக்கும் என்று போதிக்கிறது. இது, கிருபையினாலும் விசுவாசத்தினாலும் மட்டுமே இரட்சிப்பு என்ற பரிசுத்த வேதாகமத்தின் மையச் சத்தியத்திற்கு முற்றிலும் முரணாக நிற்கிறது.
- எழுதியவர்களின் சுய வாக்குமூலம்: தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதிய பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் “கர்த்தர் உரைக்கிறார்” என்ற அதிகாரத்தோடு பேசினார்கள். ஆனால் அபோக்கிரஃபா ஆசிரியர்களோ தங்களது மனித பலவீனத்தை வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டார்கள். 2 மக்கபேயர் (15:37–38) புத்தகத்தின் ஆசிரியர், தனது எழுத்து குறைபாடுடையதாகவோ அல்லது சாதாரணமானதாகவோ இருந்தால், அது தன்னால் முடிந்த அளவுக்கு எழுதப்பட்ட ஒன்று மட்டுமே என்று கூறி முடிக்கிறார். தேவ ஏவுதலால் உண்டான பரிசுத்த வேதத்திற்கு இத்தகைய மனித பலவீன அறிக்கை பொருந்தாது.
- சில விபரீத ஆலோசனைகள்: கடவுளின் பரிசுத்தப் பிரமாணத்திற்கு எதிரான பல செயல்களை இப்புத்தகங்கள் உயர்த்திக் காட்டுகின்றன. தோபித் (Tobit 6:5–8) புத்தகம், மீனின் கல்லீரலையும் இருதயத்தையும் புகைத்து பொல்லாத ஆவிகளைத் துரத்தலாம் என்று போதிப்பதன் மூலம் விசுவாசத்திற்குப் பதிலாக மந்திரச் சடங்கை ஊக்குவிக்கிறது. மேலும், 2 மக்காபேயர் (14:41–46) ரசீஸ் (Razis) என்பவனின் தற்கொலையைப் புகழ்கிறது; யூதித் புத்தகம் ஏமாற்று வேலையையும் வஞ்சகக் கொலையையும் நியாயப்படுத்துகிறது. கூகுளில் தேடினீர்கள் என்றால் இந்த வசனங்களை வாசித்து நீங்களே வாசிக்கலாம். வெறுமனே நெருடல்கள் மட்டுமின்றி – இன்று நீங்களே இதை உணர்ந்து புறக்கணிக்க தேவனே உதவுகிறார். ஒரு கண்டிஷன் – நீங்கள் ஏற்கனவே சத்தியத்தை அறிந்தவர்களாக இருத்தல் அவசியம்.
- எபிரெய மக்களின் பொறுப்பு அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 3:2-இல், தேவனுடைய வார்த்தைகள் முதலில் யூதர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தன என்று கூறுகிறார். இது போக, ஃபிலோ (Philo), யோசிப்பஸ் போன்ற பண்டைய யூத அறிஞர்களும், யூதச் சமூகமும்கூட இந்த அபோக்கிரஃபா புத்தகங்களைப் பரிசுத்த ஆகமங்களாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. வேத வாக்கியங்களின் முதல் காவலாளிகளான யூதர்களே நிராகரித்த புத்தகங்களைத் திருச்சபையில் சேர்ப்பது வரலாற்றுத் தொடர்ச்சிக்கு எதிரானது என்பதை பிதாக்கள் உணர்ந்திருந்தார்கள்.
- ஜெரோமின் மொழிபெயர்ப்பும் லத்தீன் வல்கேட் சர்ச்சையும்: சபைப்பிதாவாகிய ஜெரோம் வேதாகமத்தை லத்தீன் மொழியில் (இதை Vulgate என்பார்கள்) மொழிபெயர்த்தபோது, கிரேக்க செப்டுவஜின்ட் (இதை Septuagint என்பார்கள்) பிரதியைத் தவிர்க்காமல் எபிரெய மூலப் பிரதியிலிருந்தே (Veritas Hebraica) நேரடியாக மொழிபெயர்த்தார். அவர் இந்த அபோக்கிரஃபா புத்தகங்களை வேதாகமப் பட்டியலில் சேர்க்கும் எண்ணத்தைக் கடுமையாக எதிர்த்தார். இவை உபதேசத்திற்குரியவை அல்ல, வரலாற்று வாசிப்புக்கு மட்டுமே உரியவை என்ற குறிப்புடனேயே லத்தீன் பிரதிகளில் இணைத்தார். ஆனால், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை 1546-இல் நடந்த டிரென்ட் சங்கத்தில் (Council of Trent) மட்டுமே இப்புத்தகங்களை அதிகாரப்பூர்வமாகத் தங்கள் வேதாகமத்தின் அங்கமாக அறிவித்தது.
இன்றைய காலத்தில் எந்தப் புத்தகத்தைச் சத்தியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற குழப்பம் எழும்போது, திருச்சபை பிதாக்களின் இந்த எச்சரிக்கை உணர்வு பெரிய வழிகாட்டி. தேவனுடைய ஆவியால் ஏவப்பட்ட பரிசுத்த வசனத்தை மனிதக் கற்பனைகளிலிருந்தும் பிழைகளிலிருந்தும் பிரித்து அறியும் ஆன்மீக விழிப்புணர்வு இன்று ஒவ்வொரு விசுவாசப் பிள்ளையிடமும் இருப்பது அவசியம்.
இவை போக வேறு பல புத்தகங்களும் வேதத்தில் சேர்க்கப்படவில்லை. அவை கத்தோலிக்க வேதாகமத்திலும் இல்லை. அவற்றுக்கான காரணங்களையும் பார்த்துவிடுவோம்:
ஏனோக்கின் புத்தகம் (Book of Enoch)
ஆதியாகமத்தில் வரும் ஏனோக்கின் பெயரைப் பயன்படுத்தி, கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிலர் இப்புத்தகத்தை எழுதினார்கள். தேவதூதர்களின் வீழ்ச்சி, ராட்சதர்களின் உருவாக்கம், விந்தையான விண்வெளிப் பயணங்கள் போன்ற கதைகளை இது விவரிக்கிறது. புதிய ஏற்பாட்டில் அப். யூதா தன் நிருபத்தில் இதிலிருந்து ஒரு பகுதியைக் குறிப்பிடுகிறார். ஆனால், அதற்காக அவர் அந்தப் புத்தகத்தை அங்கீகரிக்கிறார் என்று அர்த்தமில்லை. யூதர்களும் கத்தோலிக்கத் திருச்சபையும் இதை வேதாகமப் பட்டியலில் எப்போதுமே சேர்க்கவில்லை. வேதாகமத்தின் எளிய சத்தியங்களை விட்டுவிட்டு, தேவதூதர்களைப் பற்றிய அளவுக்கு மீறிய கதைகளுக்கும் ஜோதிடக் கருத்துக்களுக்கும் இது முக்கியத்துவம் கொடுத்ததால் திருச்சபை இதனைத் தள்ளுபடி செய்தது.
பர்னபாவின் சுவிசேஷம் (Gospel of Barnabas)
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை என்றும், அவருக்குப் பதிலாக யூதாஸ் காரியோத்தைச் சிலுவையில் அறைந்தார்கள் என்றும் இப்புத்தகம் கூறுகிறது. இயேசு தேவனுடைய குமாரன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி மட்டுமே என்றும் வாதிடுகிறது. கி.பி. 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வாழ்ந்த ஒருவரே பர்னபாவின் பெயரைப் பயன்படுத்தி இந்த பொய் ஆவணத்தை எழுதினார் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். முதல் நூற்றாண்டின் வரலாற்றுச் சூழலுக்குப் புறம்பான பல இடைக்கால ஐரோப்பிய பழக்கவழக்கங்கள் இதில் நிறைந்திருப்பதை கத்தோலிக்கத் திருச்சபை கண்டறிந்து, இதை முழுமையாக நிராகரித்தது. வேத விரோதிகள் இதை ஒரு புத்தகம் என்று ஆதாரமாகத் தூக்கிக் கொண்டு வந்து நிற்பார்கள். அவர்களுக்கு மற்ற புத்தகங்களுடன் இது எப்படி முரண்படுகிறது என்பது தெரியாது. நமக்குத் தெரியும் என்பதால்தான், நாமும் ஒதுக்கி வைத்திருக்கிறோம்.
தோமாவின் சுவிசேஷம் மற்றும் ஞானமார்க்க எழுத்துக்கள்
அப்போஸ்தலனாகிய தோமா, பேதுரு, யூதாஸ், மகதலேனா மரியாள் ஆகியோரின் பெயர்களில் இரண்டாம் நூற்றாண்டில் சிலர் பல சுவிசேஷங்களை எழுதினார்கள். நாக் ஹம்மடி (Nag Hammadi) சுவிசேஷங்கள் என்று அழைக்கப்படும் இவை, இயேசுவின் உயிர்த்தெழுதலையும் அவரது பாவநிவாரண பலியையும் மறுத்தன. இரகசிய ஞானம் (Gnosticism) மூலமே இரட்சிப்பு என்ற துர் உபதேசத்தை இவை பரப்பின. தோமாவின் சுவிசேஷத்தில், பெண்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமானால் ஆண்களாக மாற வேண்டும் போன்ற விபரீதமான வாக்கியங்களையும்கூட எழுதியிருக்கிறார்கள். இயேசுவின் நேரடிச் சீடர்கள் போதித்த சுவிசேஷ சத்தியத்திற்கு மாறான கருத்துக்களைக் கொண்டிருந்ததால், பண்டைய திருச்சபை பிதாக்களே இவற்றைச் சாத்தானின் தந்திரம் என்று கண்டித்துத் தள்ளுபடி செய்தார்கள்.
கத்தோலிக்கத் திருச்சபையும் நிராகரித்ததற்கான காரணங்கள்
இயேசுவின் நேரடிச் சீடர்களோ அல்லது அவர்களோடு வாழ்ந்த அப்போஸ்தல பிதாக்களோ இப்புத்தகங்களை எழுதவில்லை. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த நபர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களுக்குப் போலி அங்கீகாரம் பெற அப்போஸ்தலர்களின் பெயர்களைப் பயன்படுத்தினார்கள். இயேசுவின் முழுமையான மனிதத்தன்மையையோ அல்லது அவரது முழுமையான தெய்வத்துவத்தையோ மறுக்கும் தவறான போதனைகளை இப்புத்தகங்களில் திணித்திருந்தார்கள். முதல் நூற்றாண்டு யூதேயாவின் நிலவியல், கலாச்சாரம், ரோமானிய ஆட்சி குறித்து எந்த அறிவும் இல்லாத நபர்கள் இப்புத்தகங்களை எழுதியதால், இவற்றில் எண்ணற்ற வரலாற்றுப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. இந்த மூன்று பிரதான காரணங்களால் கத்தோலிக்கத் திருச்சபையும் இப்புத்தகங்களை முற்றிலுமாகப் புறக்கணித்தது. இயேசுவின் சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் மறுக்கும் எந்தவொரு புத்தகத்தையும் திருச்சபை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுவரை நிதானமாக வாசித்திருப்பீர்களானால், நம் வேதம் ஏன், எப்படி தொகுக்கப்பட்டு நம் கையில் தெய்வீக வார்த்தையாகத் தவழ்கிறது என்று அறிந்து சிலாகிப்பீர்கள். கனமான வேதாகமம் ‘லைட்டாக’ இருக்கும் உணர்வு வரும்!
Benny Alexander, Oct 2026
Great Annan, Today I got new information about the compilation of the Holy Bible Books.
Thank you Brother. What I have written is only a summary. There are books with detailed explanations including theological nuances and references.