இரத்தக் கையெழுத்து

‘நடிகை ராதாவுக்கு இரசிகர் இரத்தத்தால் கடிதம்!’ என்பது போன்ற செய்திகள் எல்லாம் முன்பு தினத்தந்தி சினிமா செய்திகளில் அடிக்கடி வரும். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகருக்கு இப்படி இரத்தத்தால் கடிதம் எழுதி அனுப்புவார்கள் இன்று கடிதங்கள் யாரும் எழுதுவதில்லை என்பதான் இன்று இவைகள் வழக்கொழிந்துவிட்டன. ஆனால், நிரத்தரமாக இரத்தத்தால் எழுதப்பட்ட நிகழ்வு ஒன்று வரலாற்றில் உண்டு.

புதிய ஏற்பாடுதான் அது.

இந்தப் புதிய ஏற்பாட்டுக்கு புது உடன்படிக்கையின் நூல் என்கிற பெயரை இறையியளார் பயன்படுத்துவார்கள். பெயர்தான் ‘புதிய’ என்றாலும், இதில் உடன்படிக்கை என்பது திடீரென்று புதிதாக உதித்த ஒரு புதிய விஷயம் அல்ல. பழைய ஏற்பாட்டுக் காலத்திலேயே முன்னுரைக்கப்பட்டதுதான். கல்லான இருதயத்தை மாற்றிச் சதையான இருதயத்தைத் தருவேன் என்றும், நியாயப்பிரமாணத்தைக் கற்பலகையில் அல்லாமல் இருதயத்தில் எழுதுவேன் என்றும் தீர்க்கர்கள் எரேமியாவும் எசேக்கியேலும் முன் சொன்ன விஷயம்தான் இது.

பழைய ஏற்பாடு அந்தப் புது உடன்படிக்கையின் நிழலை நமக்குக் காட்டியிருக்கிறது; கிறிஸ்துவோ சிலுவையில் தம்முடைய சொந்த இரத்தத்தைச் சிந்தி, அதை நிறைவேற்றித் தம் கையெழுத்திட்டு அந்த உடன்படிக்கையைச் செல்லுபடியாக்குகினார். இங்கு உடன்படிக்கை என்பது ஒரு உயில்!

இந்த இரத்த உடன்படிக்கைக்கு நாமும் பாத்திரர்கள் அல்லர்.

ஒரு உயில் அதை எழுதியவர் இறந்த பிறகே சட்டபூர்வமாக அமலுக்கு வரும் என்று சட்டம் சொல்கிறது. எபிரேயர் ஆக்கியோனும் அதைத்தான் அன்றே சொல்லியிருக்கிறார். கிறிஸ்து இஸ்ரவேலருடன் துவக்கத்திலேயே செய்த அந்தப் பழைய உடன்படிக்கையைச் சும்மா புதுப்பிக்க வரவில்லை. மாறாக, மிருகங்களின் இரத்தத்தால் செலுத்தப்பட்ட தற்காலிக பலிகளை முடிவுக்குக் கொண்டுவந்து, தம்மையே ஒரேமுறை நித்திய பலியாக ஒப்புக்கொடுத்தார். அந்தச் சிலுவை மரணத்தின் மூலம் புதிய உடன்படிக்கை முழுமையாக நடைமுறைக்கு வந்தது. அந்த உயிலில் இருப்பது அவருடைய இரத்தக் கையெழுத்து.

இதில் ஒரு ஒற்றுமை: சினிமா நடிகர் அந்த இரத்தக் கடிதத்திற்கு நிச்சயம் பாத்திரர் அல்ல. அதுபோல இந்த இரத்த உடன்படிக்கைக்கு நாமும் பாத்திரர்கள் அல்லர்.

அதேபோல் ஒரு வேற்றுமை: நாம் அந்த உடன்படிக்கையில் பிள்ளைகள் ஆகி விசேஷித்த அந்தஸ்தைப் பெறுகிறோம். ரசிகருக்கு அதெல்லாம் ஒன்றும் வாய்க்காது.

இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு அவர்கள் வழியாகக் கிறிஸ்துவாகிய இரட்சிப்பு வந்தது. அப்படி வந்ததால், யூதர்களுக்கும் புறஜாதியாருக்கும் இடையே இருந்த பிரிவின் சுவரைத் தகர்த்து, நம் அனைவரையுமே ஒரே சரீரமாகத் தேவனுடனே ஒப்புரவாக்கினார்.

புது உடன்படிக்கை அமலுக்கு வரப்போகிறது என்று பல தீர்க்கதரிசிகள் மூலமாக அறிந்திருந்தும், அதைச் கிறிஸ்துவில் காணாமல் யூதர்கள் தவறவிட்டது ஒரு பெரிய பரிதாபம்தான். மிருகங்களின் இரத்தம் பாவங்களை முழுமையாகப் போக்க முடியாது என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால் ரோம ஆட்சியில் இருந்து தங்களை விடுவிக்கும் ஒரு அரசியல் தலைவரை மட்டுமே அவர்கள் எதிர்பார்த்தார்கள். தங்களை நசுக்கியிருந்த பாவத்திலிருந்து விடுவித்து, அவர்களது கீழ்ப்படியாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த இரட்சகரை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் அடிமைத்தனம் என்று பாவத்தை நினைக்காததே காரணம். பாரம்பரிய சடங்குகள், நியாயப்பிரமாணக் கிரியைகள், சொந்த நீதி ஆகியவற்றில் மூழ்கியிருந்ததால், பாவத்தைப் போக்க வந்த தேவ ஆட்டுக்குட்டியை அவர்களால் அடையாளம் காண முடியாமல் போனது.

கி.பி. 70-இல் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டு, பலி செலுத்தும் முறையே முற்றிலுமாக நின்றுபோன பிறகாவது அவர்கள் யோசித்திருக்க வேண்டும். இரத்தச்சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை எனும் சூழலில், பலிபீடமே இல்லாமற்போனது ஒரு பெரிய எச்சரிக்கை மணி. சில ஆயிரம் யூதர்களைத் தவிர பிறர் காதில் அது ஒலிக்கவில்லை.

தேவாலயத்தை விடப் பெரியவராக வந்த இயேசு கிறிஸ்து, ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது போலத் தம்மையே பாவநிவாரண பலியாகக் கொடுத்து, நிழலாக இருந்த பழைய பலிமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதை ஏற்றுக்கொண்டு அவர் ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கும் எவரையும் தம் மகிமையான நாட்டின் பிரஜையாக அங்கீகரித்து, உன்னதமான இராஜாவாக ஆளுகை செய்ய அவர் எப்போதும் ஆயத்தமாகத்தான் இருக்கிறார்.

ஆனால், வருத்தம் தரும் வகையில், இன்றும் பலர் தேவனைப் பிரியப்படுத்தத் தங்களுடைய சொந்தக் கிரியைகளையும் சடங்குகளையுமே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கிறிஸ்து சிலுவையில் ஏற்கனவே சகலத்தையும் நிறைவேற்றி முடித்துவிட்டார். கல்லான இருதயங்களை மாற்றி, பரிசுத்த ஆவியானவரால் மனசாட்சியைச் சுத்திகரிக்கும் கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே நம்மைத் தேவனிடம் சேர்க்கும் ஒரே வழி!

Benny Alexander, September 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *