அறிவியலை எதிர்த்ததா கிறிஸ்தவம்?

(முன்குறிப்பு: மேலே இருக்கும் படத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெறும் வில்லேஜ் விஞ்ஞானிகள் அல்லர்!)

கிறிஸ்தவம் அறிவியலுக்கு எதிரானது என்கிற துர்கருத்தைச் சிலர் திரும்பத் திரும்பப் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இதைப் பல புத்தகங்களாக வெளியிட்டுக் காசுபார்த்தவர்கள் உண்டு. தமிழிலும் மொழிபெயர்த்து வந்திருக்கின்றன. சமீபத்தில் என் கண்ணில் ஒரு புத்தகம் பட்டதால் இதைப் பற்றி சற்று விளக்கியாக வேண்டும்.

ரோமன் கத்தோலிக்க சபையின் வரலாற்றில் சிலர் சில அறிவியல் கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிப்பாளர்களையும் எதிர்த்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதற்காக ஒட்டுமொத்த கிறிஸ்தவமும் அறிவியலுக்கு எதிரி என்று சித்தரிப்பதும் அறியாமை; அல்லது துவேஷம்.

அறிவியல் வெற்றிவாகை சூடி மதங்களைத் துவம்சம் செய்திருக்கக் கூடுமானால், இந்நேரம் கிறிஸ்தவம் இல்லாமல் போயிருக்க வேண்டும். கிறிஸ்தவம் இன்றைக்கும் தழைத்து ஓங்கி நிற்பதற்குக் காரணம் அறிவியலை எதிர்த்தவர்கள் அல்ல; கிறிஸ்துவை அணைத்துக்கொண்டவர்கள்! இன்னும் சரியாகச் சொன்னால், கிறிஸ்துவால் மட்டுமே.

ஒருவேளை திருச்சபை மட்டும் அறிவியலை எதிர்த்து நிற்காமல் ஆதரித்திருந்தால், இவர்கள் கிறிஸ்து இயேசுவை உடனடியாகத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பார்களா என்றால் நிச்சயம் இல்லை. அவர்களுக்கு கிறிஸ்தவத்தைப் புறக்கணிக்கக் கிடைக்கும் பல சாக்குகளில் இதுவும் ஒன்று.

ஆனால், உண்மை இங்கு வேறாக இருக்கிறது!

இயற்கையையும் பிரபஞ்சத்தையும் ஆராயும் ஞானத்தைக் கிறிஸ்தவ அறிஞர்களுக்குத் தந்ததே கிறிஸ்துதான். 1500களுக்குக் பிறகு, குறிப்பாக புராட்டஸ்டண்டு மறுமலர்ச்சி காலத்திற்குப் பிறகு வந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளம்.

தன் சாயலில் மனிதனை தேவன் படைத்திருக்கிறார் என்றால் அவர் படைத்ததையெல்லாம் அறியும் ஞானத்தையும் வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. அதேபோல், மனிதன் விழுந்துபோனது உண்மையானால், படைத்தவரைப் புறக்கணித்துவிட்டுப் படைப்பை உயர்த்திப் பிடிப்பதிலும் ஆச்சரியமில்லை.

தேவன் படைத்த உலகை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், அவருடைய படைப்பின் நேர்த்தியைக் கொடையாக உலகிற்கு வெளிப்படுத்தவும் அந்த ஞானமே அவர்களுக்குச் சரியாக வழிகாட்டியது.

கிறிஸ்தவம் அறிவியலுக்கு எதிரானது என்று கூச்சலிடுபவர்களின் அறியாமையை வெளிப்படுத்தவும், நவீன அறிவியலின் அடித்தளமே கிறிஸ்தவ அறிஞர்களால் தான் அமைக்கப்பட்டது என்பதைச் சான்றுகளோடு நிறுவவும் சில வரலாற்றுச் சான்றுகள் இங்கே:

16 & 17-ஆம் நூற்றாண்டு

நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் (Nicolaus Copernicus, 1473–1543)

சூரியமையக் கோட்பாட்டை முன்மொழிந்து, பூமியல்ல மாறாகச் சூரியனே மையப் பகுதி என்ற வானியல் புரட்சியைத் தொடக்கிவைத்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் விசேஷ ஊழியராகவும் (Canon) பணியாற்றித் தன் விசுவாசத்தைக் காத்துக்கொண்டவர்.

ஜோஹன்னஸ் கெப்ளர் (Johannes Kepler, 1571–1630)

கோள்களின் இயக்கத்திற்கான மூன்று அடிப்படை விதிகளைக் கண்டறிந்து வானியலுக்குத் துல்லியமான கணித வடிவத்தைக் கொடுத்தார். “இயற்கையை ஆராய்வது என்பது தேவனுடைய சிந்தனைகளைப் பின்தொடர்வதே அல்லாமல் வேறல்ல” என்று நம்பிய தீவிர லூத்தரன் விசுவாசி.

கலிலியோ கலிலி (Galileo Galilei, 1564–1642)

தொலைநோக்கியை மேம்படுத்தி வியாழனின் நிலவுகளையும் நிலவின் மேடுபள்ளங்களையும் கண்டறிந்த நவீன வானியலின் தந்தை. வாழ்நாள் முழுவதும் கத்தோலிக்க விசுவாசியாகவே திகழ்ந்தார். இவரைக் கத்தோலிக்கம் எதிர்த்தபோதிலும் கூட!

ரேனே டேக்கார்ட் (René Descartes, 1596–1650)

வடிவியலையும் இயற்கணிதத்தையும் இணைத்து பகுப்பாய்வு வடிவியலை (Analytical Geometry) உருவாக்கினார். “நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்” என்ற புகழ்பெற்ற தத்துவக் கோட்பாட்டையும் தந்தார். அதாவது மனிதனைக் குரங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதே இந்தத் தனித்துவமான சிந்தனைத் திறன் தான். மனிதன் தேவ சாயலில் இருப்பவன்; மிருகமோ அதிலிருந்து வந்த பிறவியோ அல்ல; மனிதன் சிந்திக்கிறவனாக இருக்கிறான் என்பதில் இருந்தே இது புரிய வேண்டும்.

பிளேஸ் பாஸ்கல் (Blaise Pascal, 1623–1662)

நீரியல் அழுத்த விதியையும் (Pascal’s Law) முதல் இயந்திரக் கணிப்பானையும் கண்டறிந்த கணித மேதை. கிறிஸ்தவ நம்பிக்கையைப் பாதுகாக்கும் சிறந்த இறையியல் கட்டுரைகளையும் எழுதினார். இவர் பெயரில் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழி ஒன்று. நான் 90களின் துவக்கத்தில் கற்றுக்கொண்டேன்.

ராபர்ட் பாயில் (Robert Boyle, 1627–1691)

வாயுக்களின் அழுத்தம் மற்றும் கனஅளவிற்கான ‘பாயில் விதியைக்’ கண்டறிந்து நவீன வேதியியலுக்கு அடித்தளமிட்டவர். சுவிசேஷப் பணிகளுக்காகத் தன் சொந்தச் செலவில் வேதாகமங்களை மொழிபெயர்க்க நிதி அளித்தவர்.

சர் ஐசக் நியூட்டன் (Sir Isaac Newton, 1643–1727)

புவியீர்ப்பு விதி, இயக்க விதிகள் மற்றும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டறிந்து நவீன இயற்பியலைத் தோற்றுவித்தார். அறிவியல் ஆவணங்களை விட வேதாகம தீர்க்கதரிசன ஆராய்ச்சிகளையே அதிகம் எழுதினார்.

18 & 19-ஆம் நூற்றாண்டு காலகட்டம்:

கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus, 1707–1778): உயிரினங்களுக்கு இருசொற் பெயரிடும் முறையையும் வகைப்பாட்டியலையும் (Taxonomy) உருவாக்கித் தாவரவியல் உலகைச் சீரமைத்தார்.

மைக்கேல் ஃபாரடே (Michael Faraday, 1791–1867): மின்காந்தத் தூண்டல் மற்றும் மின்னாற்பகுப்பு விதிகளைக் கண்டறிந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வழியைத் திறந்தார். சந்தேமானியன் (Sandemanian) கிறிஸ்தவ சபையில் மூப்பராகச் சேவையாற்றினார். இவரைத் தெரியாத பள்ளி மாணவன் இருக்க இயலாது.

சார்லஸ் பாபேஜ் (Charles Babbage, 1791–1871: ‘டிஃப்பரன்ஸ் என்ஜின்’ மற்றும் ‘அனாலிட்டிக்கல் என்ஜின்’ வடிவமைப்பு மூலம் நவீன கணினியின் தந்தை என்று போற்றப்படுகிறவர்.

ஜேம்ஸ் ப்ரெஸ்காட் ஜூல் (James Prescott Joule, 1818–1889) ;வெப்பத்திற்கும் இயந்திர வேலைக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்து, ஆற்றல் மாறா விதியை நிலைநாட்டினார்.

கிரிகோர் மெண்டல் (Gregor Mendel, 1822–1884): பட்டாணிச் செடிகளில் சோதனை செய்து மரபியல் விதிகளைக் கண்டறிந்த நவீன மரபியலின் தந்தை. இவர் ஒரு அகஸ்டினியத் துறவியாக வாழ்ந்தவர்.

லூயிஸ் பாஸ்டர் (Louis Pasteur, 1822–1895): நோய்க்கிருமிக் கோட்பாட்டைக் கண்டறிந்து வெறிநாய் கடித் தடுப்பூசியையும், பாலைப் பதப்படுத்தும் (Pasteurization) முறையையும் உருவாக்கினார். மிகச் சிறந்த இறையியலாளர்.

வில்லியம் தாம்சன் / லார்ட் கெல்வின் (Lord Kelvin, 1824–1907)

வெப்ப இயக்கவியலின் நுட்பங்களை வகுத்து, தனிச்சுழி வெப்பநிலையைக் கணக்கிட உதவும் ‘கெல்வின்’ அளவீட்டை அறிமுகப்படுத்தினார்.

ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (James Clerk Maxwell, 1831–1879): மின்சாரம், காந்தம், ஒளி ஆகிய மூன்றையும் இணைத்து மின்காந்தக் கோட்பாட்டின் சமன்பாடுகளை உருவாக்கினார்.

20-ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை (கற்காலத்தில் அல்ல; இந்தப் பட்டியல் புரளியும் அல்ல)

ஜோசப் ஜான் தாம்சன் (J. J. Thomson, 1856–1940) :அணுவிற்குள் இருக்கும் எதிர்மின் சுமையுடைய ‘எலக்ட்ரான்’ துகளைக் கண்டறிந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

மேக்ஸ் பிளாங்க் (Max Planck, 1858–1947): ஆற்றல் குவாண்டம் வடிவில் உமிழப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, இன்று அதிகம் பேசப்படும் குவாண்டம் இயற்பியலுக்குத் தொடக்கப்புள்ளி வைத்தவரே இவர்தான்.

ஜார்ஜஸ் லேமைத்ரே (Georges Lemaître, 1894–1966): பிரபஞ்சம் விரிவடைகிறது என்பதையும் பெருவெடிப்புக் கோட்பாட்டையும் (Big Bang Theory) முதன்முதலில் கணிதப்பூர்வமாக முன்மொழிந்த வானியலாளர் மற்றும் கத்தோலிக்க குருவானவர். இவர் உடனே வேதத்தை மறுதலிக்கவெல்லாம் செய்யவில்லை!

வர்னர் ஹெய்சன்பெர்க் (Werner Heisenberg, 1901–1976): குவாண்டம் இயற்பியலில் ஒரு துகளின் இடத்தையும் வேகத்தையும் ஒரே நேரத்தில் துல்லியமாகக் கணக்கிட முடியாது என்ற நிச்சயமின்மைக் கொள்கையைத் (Uncertainty Principle) தந்தார்.

பிரான்சிஸ் காலின்ஸ் (Francis Collins, 1950–தற்போது) :மனிதனின் முழு DNA வரிசையையும் கண்டறியும் ‘மனித மரபணு திட்டத்திற்கு’ (Human Genome Project) தலைமை தாங்கி வெற்றிகரமாக முடித்த முன்னணி மரபியலாளர் இவரது பாட்காஸ்டுகளை இன்றும் நிறைய நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.

நன்றாகக் கவனியுங்கள்: இவர்கள் எல்லாம் ஏதோ கொஞ்சம் அறிவியலைக் கற்றவர்கள் அல்லர். வெறும் ‘வில்லேஜ் விஞ்ஞானிகள் அல்லர்” இவர்கள் எல்லாம் ‘அறிவியல் உயர்ந்தது, கடவுளெல்லாம் இல்லை’ என்று மறுப்பாளர்களாகிவிட்டவர்களும் இல்லை. மாறாக இறைவனின் படைப்பைக் கண்டு வியந்தவர்கள். போற்றி உயர்த்தியவர்கள்

இதெல்லாம் போக இவர்களில் பலரும் நோபல் பரிசும் பெற்றவர்கள். அதிலும், 1901 முதல் 2000 வரையிலான முதல் 100 ஆண்டுகளில் வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைத் தங்கள் வாழ்வியல் நம்பிக்கையாகக் கிறிஸ்தவத்தைக் கொண்டிருந்த அறிவியலாளர்களே பெற்றுள்ளனர் (வேதியியலில் 72.5%, இயற்பியலில் 65.3%, மருத்துவத்தில் 62%).

அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெற்ற முதன்மையான கிறிஸ்தவ அறிவியலாளர்களின் பட்டியல்:

இயற்பியல் (Physics)

வில்ஹெல்ம் ராண்ட்ஜன் (Wilhelm Röntgen, 1901 நோபல் பரிசு): X-கதிர்களைக் (X-rays) கண்டறிந்த இவர் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார்.

ஜோசப் ஜான் தாம்சன் (J. J. Thomson, 1906 நோபல் பரிசு): அணுவிற்குள் இருக்கும் ‘எலக்ட்ரான்’ துகளைக் கண்டறிந்த ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ விசுவாசி.

கூக்லியெல்மோ மார்கோனி (Guglielmo Marconi, 1909 நோபல் பரிசு): கம்பியில்லாத் தந்தி முறையைக் (Wireless Telegraphy/Radio) கண்டறிந்தவர்.

மேக்ஸ் பிளாங்க் (Max Planck, 1918 நோபல் பரிசு): குவாண்டம் இயற்பியலின் தந்தை; லுத்தரன் கிறிஸ்தவப் பின்னணி கொண்டவர்.

ராபர்ட் மில்லிகன் (Robert A. Millikan, 1923 நோபல் பரிசு): எலக்ட்ரானின் மின்னூட்டத்தைக் (Elementary Charge) கணக்கிட்டவர். அறிவியலும் விசுவாசமும் இணைந்து பயணிப்பதைப் பற்றிப் பல நூல்களை எழுதினார்.

ஆர்தர் காம்ப்டன் (Arthur H. Compton, 1927 நோபல் பரிசு): ‘காம்ப்டன் விளைவை’ (Compton Effect) கண்டறிந்தவர்; பாப்டிஸ்ட் மற்றும் பிரஸ்பிடீரியன் சபையின் மூப்பராகப் பணியாற்றினார்.

வர்னர் ஹெய்சன்பெர்க் (Werner Heisenberg, 1932 நோபல் பரிசு): குவாண்டம் இயற்பியலின் ‘நிச்சயமின்மைக் கொள்கையைக்’ கண்டறிந்த லூத்தரன் விசுவாசி.

அர்னஸ்ட் வால்டன் (Ernest Walton, 1951 நோபல் பரிசு): அணுக்கருவை முதன்முதலில் செயற்கையாகப் பிளந்தவர்; மெதடிஸ்ட் சபையைச் சேர்ந்தவர்.

சார்லஸ் டவுன்ஸ் (Charles H. Townes, 1964 நோபல் பரிசு): ‘லேசர்’ (Laser) மற்றும் ‘மேசர்’ (Maser) தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர்; அறிவியலும் மதமும் ஒரே உண்மையைத் தேடும் இரு வழிகள் என்று வலியுறுத்தினார்.

வில்லியம் டேனியல் பிலிப்ஸ் (William D. Phillips, 1997 நோபல் பரிசு): லேசர் ஒளியைப் பயன்படுத்தி அணுக்களைக் குளிரூட்டும் முறையைக் கண்டறிந்தவர்; மெதடிஸ்ட் சபையின் தீவிர உறுப்பினர்.

வேதியியல் (Chemistry)

எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford, 1908 நோபல் பரிசு): அணுக்கரு இயற்பியலின் தந்தை; அணுவின் மையத்தில் உள்கரு (Nucleus) இருப்பதை நிறுவியவர்.

வில்லியம் ராம்சே (Sir William Ramsay, 1904 நோபல் பரிசு): மந்த வாயுக்களைக் (Helium, Neon, Argon, Krypton, Xenon) கண்டறிந்து தனிம வரிசை அட்டவணையை நிறைவு செய்தவர்.

ஜெர்ஹார்ட் எர்ட்ல் (Gerhard Ertl, 2007 நோபல் பரிசு): திடப் பரப்புகளில் நிகழும் வேதியியல் மாற்றங்களை ஆராய்ந்த கிறிஸ்தவ விசுவாசி.

பிரையன் கோபில்கா (Brian Kobilka, 2012 நோபல் பரிசு): செல்கள் தகவல்களைப் பெறும் G-புரோட்டீன் இணைக்கப்பட்ட ஏற்பிகளை ஆராய்ந்த கத்தோலிக்க விசுவாசி.

மருத்துவம் & உடலியங்கியல் (Medicine or Physiology)

அலெக்சிஸ் கேரல் (Alexis Carrel, 1912 நோபல் பரிசு): இரத்தக் குழாய் தையல் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நுட்பங்களைக் கண்டறிந்த கத்தோலிக்க மருத்துவர்.

சர் ஃபிரடெரிக் பாண்டிங் (Sir Frederick Banting, 1923 நோபல் பரிசு): சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் ‘இன்சுலினைக்’ கண்டறிந்தவர். இந்த மருந்துதான் அனேகமாக இன்று உலகில் அதிகமாக விற்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜெரார்டு டோமாக் (Gerhard Domagk, 1939 நோபல் பரிசு): பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான முதல் வணிக ரீதியிலான ‘சல்ஃபா’ நுண்ணுயிர் எதிர்ப்பியைக் (Antibiotic) கண்டறிந்தவர். (புண்களுக்குப் போடும் சல்பானின் பொடி என்று விற்கப்படுகிறதே. அதுதான்.)

அலெக்சாண்டர் ஃபிளெமிங் (Alexander Fleming, 1945 நோபல் பரிசு): பென்சிலின் (Penicillin) மருந்தைக் கண்டறிந்து லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய கத்தோலிக்க விசுவாசி. சிறுவயதில் டாக்டர் ஜான் பான் (கோவில்பட்டி) சிலமுறை எனக்குப் போட்டிருக்கிறார்).

கெர்ட்டி கோரி (Gerty Cori, 1947 நோபல் பரிசு): கிளைகோஜன் சிதைவு மற்றும் ஆற்றல் மாற்றத்தைக் (Cori cycle) கண்டறிந்து மருத்துவத்தில் நோபல் பெற்ற முதல் பெண்மணி.

ஜான் குருடான் (John Gurdon, 2012 நோபல் பரிசு): முதிர்ந்த செல்களை மீண்டும் தொடக்கநிலைச் செல்லாக (Stem cells) மாற்ற முடியும் என்பதை நிறுவியவர்.

ஆக, சத்தியத்தை ஆராயும் மனமும், பிரபஞ்சத்தின் ஒழுங்கை அறிந்துகொள்ளும் தேடலுமே அறிவியலின் அடிப்படை. அந்தத் தேடலைத் தங்களின் விசுவாசத்தின் வெளிப்பாடாகவே உலகிற்கு அளித்த இந்த மேதைகள் அனைவரும் விசுவாசிகள். கிறிஸ்தவத்தால் அறிவியல் பெற்ற நன்மைகளை வெளிப்படுத்தியவர்கள். அதாவது, கிறிஸ்துவை வெளிப்படுத்தியவர்கள்.

Benny Alexander

(இது தொடர்பான இன்னொரு கட்டுரை: அறிவியல் வளர வளர இறைவன் தேவைப்பட மாட்டாரா?)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *