தீர்மானங்களின் திசைகள்

கிறிஸ்தவனின் தீர்மானங்கள்

ஒவ்வொரு நாளும் நாம் ஆயிரக்கணக்கான தீர்மானங்களை எடுக்கிறோம் என சில நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது அவைகளின் எண்ணிக்கை 35000 வரை கூட இருக்கலாம்! காலையில் எப்போது எழவேண்டும், டீயா காப்பியா என்பதில் இருந்து, இரவில் வாசிக்கும் புத்தகம் வரை கணக்கிலடங்காத் தெரிவுகளை நாம் ஒவ்வொரு கணமும் மேற்கொள்கிறோம்.

இவற்றில் பெரும்பாலான தீர்மானங்களைத் தெரிந்தே நம் மனம் மேற்கொள்வதில்லை என்பதே இதில் நாம் கவனிக்க வேண்டிய நுட்பமான உண்மை!. ஒரு பெருங்கப்பலின் கேப்டன் அதன் பயணத்தின் முக்கியத் திருப்புமுனைகளை மட்டுமே தீர்மானிக்கிறார்; ஆனால் பயணத்தின் பெரும்பகுதியை வழிநடத்துவது கப்பலின் தானியங்கி அமைப்பே (ஆங்கிலத்தில் autopilot – விமானங்களிலும் இவைதான்!) . நமது வாழ்வும் அவ்வாறே. நமது ஆழ்மனதில் பதிந்திருக்கும் வழக்கங்களும், உள்ளுணர்வுகளுமே நமது அன்றாடத்தின் போக்கை வடிவமைக்கின்றன. இப்படி கவனமாக யோசித்து எடுக்கும் தீர்மானங்களே நாளுக்கு 200ஐத் தாண்டும் என்கிறார்கள்!

அந்த உள்ளியங்கு அமைப்பு எதன் அடிப்படையில் இயங்குகிறது என்பதே இங்கு நாம் கவனிக்கவேண்டிய விஷயம். உலகத்தின் அல்லது சோஷியம் மீடியாவின் யோசனைகளின் படியா? அல்லது நமது பூர்வ சுபாவத்தின்படியா? அல்லது வேறு ஏதேனும் வகையிலா?

இங்குதான் ஒரு விசுவாசியின் வாழ்வில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அதன் முழு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இரட்சிப்பின் அனுபவம் என்பது கப்பல் கேப்டன் பயணத்தின் திசையைத் திருப்புவது போன்றது மாத்திரமல்ல; மாறாக, தேவன் அந்த உள்ளியங்கு அமைப்பையே படிப்படியாக மறுசீரமைப்பதாகும். இதுவே அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிடும் ‘மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுதல்’ (ரோமர் 12:2) ஆகும். இக்கிரியை, நமது சிந்தனைகளைச் சீரமைப்பதோடு நில்லாமல், அச்சிந்தனைகள் தோன்றும் நமது உள்ளத்தின் ஆழத்தையே பரிசுத்தப்படுத்துகிறது.

இந்த மறுரூபமாகுதலுக்கு தேவனுடைய வசனமே புதிய வரைபடமாக (Blueprint) அமைகிறது. ஜெபமானது, அந்தப் புதிய வரைபடத்தை நமது ஆழ்மனதில் பதிக்கும் செயலாகிறது. எனவே, நாம் மேற்கொள்ளும் தொடர்ச்சியான தீர்மானங்களைக் குறித்து நாம் பதற்றமடைந்து கொண்டே நாளைக் கடத்த வேண்டியதில்லை. அதற்காக விட்டேற்றியாகவும் இருக்கப்போவதில்லை.

நமது நோக்கம், வாழ்வாகிய கப்பலின் திசையைக் கிறிஸ்துவை நோக்கிச் செலுத்துவதே ஆகும். நாம் நமது பங்கைச் செய்யும்போது, பயணத்தின் ஒவ்வொரு நுட்பமான பகுதியையும், நாம் அறியாமலே நிகழும் நம் உள்ளியக்கத்தையும் அவரே தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறார். இதுவே ‘உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்’ (நீதிமொழிகள் 3:6) என்ற வாக்குத்தத்தத்தின் சாரம்!

ஆகவே, தீர்மானங்களின் பெருவெளியில் ஒரு கிறிஸ்தவன தொலைந்து போவதில்லை.! நமது வாழ்வின் திசையை தேவனிடம் ஒப்படைக்கும்போது, நம்மை அறியாமலே நம்மில் இயங்கும் ஆழங்களையும் பரிசுத்த ஆவியானவர் சீர்படுத்துகிறார். அந்த தெய்வீக அமைதியில், நமது பாதைகள் ஒவ்வொருநாளும் செம்மையாக்கப்படுகின்றன. கொஞ்ச காலம் கழித்துத் திரும்பிப்பார்த்தால், ஆச்சரியமாக வேண்டுமானானால் இருக்கலாம். “அடச்சே…” என்கிறதான மனமாச்சரியங்களுக்கு இடமிருக்காது.

Benny Alexander, Sep 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *