கிறிஸ்தவரின் உலகப்பார்வை

உலகம் எப்போதுமே இரு துருவங்களாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது. ஒன்று அந்தப் பக்கம் அல்லது இந்தப் பக்கம். திமுகவை ஆதரித்தால் நீ பாஜகவுக்கு எதிரி என்றும் பாஜகவை ஆதரித்தால் நீ திமுக எதிரி என்றும் சொல்வதை நாம் அறிவோம். நம் ஊரில் மட்டுமல்ல, உலகமெங்கும் இதே கதைதான். காரணம் கருத்தியல் ரீதியாக நாம் ஒரு புறம் எளிதாகச் சாய்ந்துவிடும் அளவுக்கு பக்குவம் இல்லாதவர்கள்.

இதை Trap of binary thinking என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

கம்யூனிசத்தை எடுத்துக்கொள்வோம். அது ஒரு அழகிய கனவு. சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அறவே இல்லாத,பணமே தேவைப்படாத ஒரு கச்சிதமான உலகத்தை அது கற்பனை செய்தது. மனிதர்கள் தங்கள் சுயநலத்தைத் தாண்டி, பொதுநலத்திற்காக மட்டுமே உழைப்பார்கள் என்று அது நம்பியது. கேட்கக் குளிர்ச்சியாகவும்,செயல்படுத்திய சில காலங்களுக்கு ‘நல்லாத்தான் போய்க்கிட்டுருந்தது!’. ஆனால், யதார்த்தம் முற்றிலும் வேறானது. தனிமனித உந்துதலோ, சுதந்திரச் சந்தையின் வழிகாட்டுதலோ இல்லாமல் ஒரு மிகப்பெரிய பொருளாதாரத்தை நிர்வகிப்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இது புரியும். இந்த சித்தாந்தத்தை கையில் எடுத்த நாடுகள் எந்த இலட்சியச் சமூகத்தையும் உருவாக்கவில்லை. மாறாக, கடுமையான அடக்குமுறையையும், சர்வாதிகார வர்க்கத்தையுமே நிலைநிறுத்தின. கார்ல் மார்க்ஸ் தன் கொள்கையை அறிவியல் பூர்வமானது என்றார். ஆனால், அது நிஜ உலகில் ஏற்படுத்திய சேதங்கள் ஏராளம். கண் முன் இந்த நூற்றாண்டில் இருக்கும் உதாரணங்கள் வெனிசுவேலா மற்றும் கியூபா. வலதுசாரிகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். இடதுசாரிச் சிந்தனைகள் இனிக்கக் காரணமே வலதுசாரி அட்டூழியங்கள்தான். நேர்மையாகச் சிந்திப்பவர்களால் மட்டுமே சொல்லமுடியும் கம்யூனிசம் அது நினைத்த எதையும் சாதிக்கவில்லை. அதற்கு நேர்மாறான வேலையைத்தான் செய்திருக்கிறது என்று.

இப்படிப் பெரும்பாலானவர்கள் தங்கள் சிந்தனைகளில் இன்று வலதுசாரி, இடதுசாரி என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். இடதுசாரிகள் வலதுசாரிகளின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறார்கள். வலதுசாரிகள் இடதுசாரிகளைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகிறார்கள். உண்மையில்,இரண்டு பக்கமுமே சில ஆழமான நியாயங்கள் இருக்கின்றன; அதே சமயம் இரண்டு பக்கமுமே ஆபத்தான தவறுகளும் இருக்கின்றன. இடதுசாரிகளின் சமூக அக்கறையையும், வலதுசாரிகளின் தனிமனிதப் பொறுப்புணர்வையும் நாம் சரியாக இணைக்க வேண்டும்.

தத்துவஞானி ஹெகல் இதையே ஒரு கோட்பாடாகச் சொன்னார். முரண்படும் இரண்டு கருத்துக்கள் மோதும்போது,ஒன்றையொன்று அழிப்பதற்குப் பதிலாக, இரண்டிலும் உள்ள நல்லவைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு உயர்ந்த நிலையை நாம் அடைய வேண்டும்.

ஆனால், இன்றைய அரசியல் களம் அப்படி ‘ஓப்பனாக’வெல்லாம் இல்லை. மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, எதிர் தரப்பை முழுமையான எதிரியாகச் சித்தரிப்பதே பலருக்கும் பிழைப்பாக இருக்கிறது.சமநிலையை உருவாக்குவது இன்று லேசான வேலை அல்ல. அது ஒருமுறை கட்டி முடித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் சாதாரண கட்டிடம் அல்ல. ஒரு கயிற்றின் மேல் நடப்பது போல, சூழ்நிலைக்கு ஏற்ப நம்மைத் தொடர்ந்து சரிசெய்துகொண்டே இருக்க வேண்டிய ஒரு நெடிய பயணம். மனிதர்கள் இதில்தான் ‘வீக்!’

குறைகளைத் தேடிப் பிடித்துக் குற்றஞ்சாட்டுவது மிகவும் சுலபம். ஆனால், மாற்றுச் சிந்தனைகளையும் மதித்து, ஒரு பொதுவான தீர்வை நோக்கி இணைந்து நடப்பதுதான் உண்மையான முதிர்ச்சி. நீங்கள் உங்கள் எதிரி என்று முழுமையாக நம்பும் ஒருவரிடம், நீங்கள் கற்றுக்கொள்ள எதுவுமே இல்லையா என்ன?

விஷயங்கள் இப்படி இருக்க, ஒரு கிறிஸ்தவனாக நீங்கள் இதை எப்படிப் பார்க்க வேண்டும்? இதுதான் இன்று உங்கள்முன் நீங்களே வைக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி. காரணம், பல கிறிஸ்தவர்களுக்கே இதில் பெரும் குழப்பம் உண்டு. உலகத்தின் இந்த இரு துருவ வலையில் சிக்கி, சிலர் வலதுசாரியாகவும், சிலர் இடதுசாரியாகவும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒரு கிறிஸ்தவனுடைய உலகப்பார்வை என்பது வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே ஒரு ‘சமரசத்தை’ (Compromise) உருவாக்குவது அல்ல. அது முற்றிலும் வேறுபட்ட ‘கிறிஸ்துவின் பார்வை’. வேதாகமம் கூறுகிறது, “சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32). இந்த விடுதலை என்பது மனிதர்கள் உருவாக்கிய அரசியல் சித்தாந்தங்களின் அடிமைத்தனத்தில் இருந்து கிடைக்கும் விடுதலை.

இடதுசாரிகள் சமூக நீதியைப் பேசுகிறார்கள், ஏழைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்கள், சமத்துவத்தை விரும்புகிறார்கள். ஆனால், மனிதனின் உள்ளே இருக்கும் ஆழமான ‘பாவ சுபாவத்தை’ (Sinful nature) அவர்கள் கண்டுகொள்வதில்லை. மனித இதயம் சீர்கெட்டது என்பதை ஏற்க மறுத்து, வெறும் புறச் சூழ்நிலைகளை மாற்றினால் உலகம் மாறிவிடும் என்று நம்புகிறார்கள். இதெல்லாம் போக வேதம் காட்டும் சுயநீதிக்காரர்களாக ஆகிவிடுவதுதான் இவர்களிடம் இருக்கும் பிரச்சனையே. நல்லவன் ஒருவனும் இல்லை என்கிற வேதபோதனை இவர்களுக்கு ஒவ்வாதது. இரட்சகர் தேவைப்படும் அளவுக்குத் தாங்கள் எதற்கும் அடிமையானவர்கள் அல்ல என்று நினைப்பவர்கள் இவர்கள்.

மறுபுறம் வலதுசாரிகள், தனிமனித ஒழுக்கத்தையும், உழைப்பிற்கும் ஏற்ற பலனையும், சட்டதிட்டங்களையும் பேசுகிறார்கள். ஆனால், சமூக அநீதிகளால் ஒடுக்கப்பட்டோர் மீதான இரக்கத்தையும், ஏழைகள் மீதான கரிசனையையும் பல நேரங்களில் இழந்துவிடுகிறார்கள். அதிகாரமும் பணமும் குவியும்போது அங்கும் பாவம் பெருக்கெடுக்கிறது என்பதை மறந்துவிடுகிறார்கள்.

ஆனால், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவோ “கிருபையும் சத்தியமும்” (Grace and Truth) நிறைந்தவராக இந்த உலகிற்கு வந்தார் (யோவான் 1:14). அவர் வலதுசாரியைப் போல சத்தியத்தையும், தனிமனித மனந்திரும்புதலையும் உறுதியாகப் போதித்தார்; அதே வேளையில் இடதுசாரியைப் போல சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களையும்,ஏழைகளையும், வியாதியஸ்தர்களையும் அரவணைத்தார்.

கிறிஸ்துவின் பார்வை என்பது, மனிதனை வெறும் பொருளாதாரக் கருவியாகப் (Economic tool) பார்க்கும் பார்வை அல்ல; அவனைத் தேவனுடைய சாயலாகப் (Image of God) பார்க்கும் பார்வை.

கிறிஸ்துவின் பார்வை என்பது, மனிதனை வெறும் பொருளாதாரக் கருவியாகப் (Economic tool) பார்க்கும் பார்வை அல்ல; அவனைத் தேவனுடைய சாயலாகப் (Image of God) பார்க்கும் பார்வை. அண்டசராசரங்களையும் படைத்த தேவாதிதேவன் தன் குமாரனுடைய சாயலாக நம்மைப் படைத்தார்; பார்க்கிறார்; மீட்கிறார் என்பது ஒரு மனிதன் கேட்கும் மேலான சுவிசேஷம் அல்லவா?

எந்த ஒரு மனித சித்தாந்தமும் முழுமையான நீதியைத் தர முடியாது என்பதை வேதாகமம் தெளிவாகச் சொல்கிறது.கம்யூனிசம் மனிதனின் நல்லெண்ணத்தை நம்பி ஏமாந்தது, அவர்கள் எதிர்க்கும் வலதுசாரி முதலாளித்துவமோ செல்வத்தை நம்பி சுயநலமானது. எனவே, ஒரு கிறிஸ்தவன் இந்த உலகத்தின் சித்தாந்தங்களில் தன் நம்பிக்கையை வைக்கக் கூடாது. நாம் தேட வேண்டியது மனிதர்கள் உருவாக்கும் தற்காலிகமான சமநிலையை அல்ல; தேவன் தரும் நித்திய நீதியை. நாம் பரலோக ராஜ்யத்தின் குடிமக்கள் (பிலிப்பியர் 3:20). முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டியவர்கள் நாம். அதைத் தேடும்போது நாம் எதையும் பார்க்க வேண்டிய விதமாகப் பார்ப்போம். அவருடைய ராஜ்யத்தின் குடிகளின் பார்வை அது! ராஜ பார்வை.!!

குறைகளைத் தேடிப் பிடித்துக் குற்றஞ்சாட்டுவது உலகத்தின் அரசியல். ஆனால், பாவிகளை நேசித்து, அவர்களுக்காகத் தன்னைத்தானே சிலுவையில் ஒப்புக்கொடுத்தது சுவிசேஷம் (Gospel). வலது பக்கமோ, இடது பக்கமோ சாய்வதை விட, தேவனுடைய சத்தியத்தில் வேரூன்றி நிற்பதே ஒரு கிறிஸ்தவனுக்கான உண்மையான முதிர்ச்சி. சத்தியத்தினால் அடைந்த இந்த விடுதலையின் பார்வையே, குழம்பிக் கிடக்கும் இந்த உலகிற்கு நாம் தர வேண்டிய வெளிச்சம்!

Benny Alexander, Oct 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *