
தேவன் ஏன் எல்லா மனிதர்களையும் தங்கள் போக்குக்கு விடவேண்டும்? ஏன் ‘ஒரு ஆட்டு ஆட்டி’ அனைவரையும் தனக்கு இணக்கமாக்கிவிடக்கூடாது? இது பிசாசுகளே அடிக்கடி வியந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஷயம் போலத்தான் தெரிகிறது.
“ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ்” (The Screwtape Letters) என்கிற ஒரு புத்தகம். சி.எஸ். லூயிஸ் 1942-ல் எழுதியது. நார்னியா கதைகளை எழுதிய இவரது இந்தப் புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட விநோதமானது. காரணம் இதில் உள்ள இரண்டு ஆசாமிகள். இந்த இருவருமே மனிதரல்லர் என்பதுதான். இதில் இருக்கும் 31 கடிதங்கள், ஸ்க்ரூடேப் (மூத்த பிசாசு) தன் மருமகன் வார்ம்வுட் என்பவனுக்கு எழுதும் கடிதங்களின் தொகுப்பு இது. லூயிஸ் ஒரு மூத்த பிசாசின் சிந்தனையில் நின்று சின்னப்பிசாசுக்கும் சேர்த்துச் சிந்தித்து எழுதியிருப்பார்.
பிசாசு உலகின் அதிகாரப் படிநிலையில் மேலே இருக்கும் ஒரு மூத்த பிசாசு, தன் ஜூனியருக்குப் போதிக்கும்போது தேவனுடைய குணாதிசயங்களைக் கண்டு மிரண்டு போய் பேசுகிறான். குறிப்பாக, தேவன் மனிதனுக்குக் கொடுத்திருக்கிற அந்த ‘சுதந்திரம்’ தான் பிசாசுக்கு எட்டிக்காயாய் கசக்கிறது. ஆதாமைத் தன் சாயலாய் படைத்த தேவன், அவனுக்குள் வைத்த அந்தச் சிந்திக்கும் திறனும், சுயமாக முடிவெடுக்கும் வல்லமையும் பிசாசின் ஆதிக்கத்திற்குப் பெரிய தடையாக இருக்கிறது.
உங்களால் முடிந்தால் ஆங்கிலத்தில் வாசிக்க முயற்சியுங்கள். இப்போதைக்கு இதோ, பிசாசின் அந்தப் புலம்பல்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் மட்டும் இங்கே:
பொம்மைகளை அல்ல, புத்திரர்களையே அவர் தேடுகிறார்: தேவன் நினைத்தால் மனிதனை எப்போதும் ஒருவிதப் பரவச உணர்விலேயே வைத்திருக்க முடியும். ஆனால் அவர் ஏன் சில நேரங்களில் மனிதனை ஆவிக்குரிய வறட்சியிலும், போராட்டத்திலும் விடுகிறார்? இது குறித்து அந்தப் பிசாசு ஆச்சரியத்தோடு சொல்கிறான்:
“மனிதன் நடக்கப் பழக வேண்டும் என்று அவர் விரும்புகிறார்; அதற்காகவே சில நேரங்களில் தன் கரங்களை விலக்கிக் கொள்கிறார். அவன் நடக்க வேண்டும் என்கிற வாஞ்சையோடு இருந்தால் போதும், அவன் தட்டுத் தடுமாறி விழுவதைக் கண்டு கூட அவர் பிரியப்படுகிறார்.”
இங்கேதான் தேவனுடைய அந்தச் சமநிலை தெரிகிறது. ஒரு சிறு பிள்ளை தன் தகப்பனின் கையை உதறிவிட்டு நடக்க முயற்சிக்கும்போது, அந்தத் தகப்பனுக்கு ஏற்படும் அதே மகிழ்ச்சி தேவனுக்கும் உண்டு. அவர் நம்மை நூலில் கட்டப்பட்ட பொம்மைகளாக நடத்தாமல், சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் மகன்களாகவே பார்க்க விரும்புகிறார்.
கட்டுப்பாடும் அடிமைத்தனமும் நரகத்தின் வழி; அன்பும் சுதந்திரமும் பரலோகத்தின் வழி: பிசாசின் ஒட்டுமொத்த நோக்கமே ஒருவரைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதுதான். மிரட்டியோ, பயமுறுத்தியோ அல்லது ஆசை காட்டியோ ஒருவனை அடிமையாக்குவதுதான் பிசாசின் தந்திரம். ஆனால் தேவனோ, மனிதன் தன்னைச் சுதந்திரமாய் நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். பெரிய பிசாசு ஸ்க்ரூடேப் சொல்கிறான்:
“இந்த உலகம் முழுவதையும் தன்னைப்போலவே சிந்திக்கிற, செயல்படுகிற சின்னச் சின்ன மனிதர்களால் நிரப்ப அவர் ஆசைப்படுகிறார். ஊழியக்காரர்களாக இருப்பவர்கள் ஒருநாள் தன் மகன்களாக மாற வேண்டும் என்பதே அவருடைய திட்டம்.”
அதிகாரத்தைச் செலுத்தி யாரையும் பணிய வைப்பது அவருக்குப் பெரிய காரியமல்ல. ஆனால், கிருபையினால் ஒருவன் மனமாற்றம் அடைந்து மகனாக மாற வேண்டும் என்று அவர் பொறுமையோடு காத்திருக்கிறார்.
தேவன் மனிதனுக்குக் கொடுத்திருக்கிற இந்தச் சுதந்திரம் பிசாசை ஆத்திரப்படுத்துகிறது; ஏனெனில் இது அவனுடைய ஆதிக்கத்தைச் சிதைக்கிறது
நிராகரிப்பையும் ஏற்பவர்: தேவன் தன் வல்லமையை நேரடியாகக் காட்டி மனிதனை மிரட்டிப் பணிய வைக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்வதில்லை. இங்கு ஸ்க்ரூடேப் என்கிற அந்தப் பெரிய பிசாசு தன் கடிதத்தில் ஒரு வரியைச் சொல்கிறான்:
“எவரும் எதிர்க்க முடியாத தன் வல்லமை மற்றும் எதிர்பேசி விவாதிக்க முடியாத உண்மை என்கிற இவ்விரண்டு ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.”
இதன் பொருள் என்ன? தேவன் விசுவாசத்தைக் கட்டாயப்படுத்துவதில்லை. மனிதன் அவரை நிராகரிக்கவும், சந்தேகப்படவும் கூட அவர் இடம் கொடுக்கிறார். ஏனென்றால், கட்டாயப்படுத்தப்படும் அன்பு ஒருபோதும் மெய்யான அன்பாக இருக்க முடியாது. ஒரு மனிதன் எல்லாத் தடைகளையும் தாண்டி, தன் சிந்தனைத் திறனால் அவரைப் பற்றிக்கொள்வதையே அவர் மேன்மையாகக் கருதுகிறார்.
வறட்சியான காலங்களில்தான் விளைகிறது முதிர்ச்சி: ஒருவன் ஆவிக்குரிய ரீதியில் உற்சாகமாக இருக்கும்போது தேவனைத் தேடுவது எளிது. ஆனால், எந்த உணர்ச்சியுமற்ற, வறட்சியான நேரங்களிலும், தன் சித்தத்தினால் தேவனைப் பற்றிக்கொள்கிறானே… அதுதான் பிசாசுக்குக் கிடைக்கும் பலத்த அடி.
தன் சொந்தக் கால்களில் நின்று, கர்த்தருடைய வார்த்தையையே ஆதாரமாகக் கொண்டு தொடர்ந்து நடக்கப் பழகும்போதுதான், தேவன் விரும்புகிற அந்த உன்னத மனிதனாக அவன் உருமாறுகிறான். இது உணர்ச்சிகளால் வரும் பக்தியல்ல, மாறாகச் சத்தியத்தினால் வரும் முதிர்ச்சி.
தேவன் மனிதனுக்குக் கொடுத்திருக்கிற இந்தச் சுதந்திரம் பிசாசை ஆத்திரப்படுத்துகிறது; ஏனெனில் இது அவனுடைய ஆதிக்கத்தைச் சிதைக்கிறது. இந்தப் புத்தகத்தில், பிசாசு பார்ப்பதுபோலத் தேவன் நம்மை ஒரு ‘நோயாளியாகப்’ (Patient) பார்க்காமல், தன் சாயலாகவே பார்க்கிறார்.
இந்தப் புத்தகத்தின் நிறைவில் நாம் உணர்ந்துகொள்வது ‘நாம் எப்போது ஒரு பக்கமாகச் சாய்கிறோமோ, அப்போதுதான் பிசாசு அங்கே புகுந்து விளையாடுகிறான்’ என்பதைத்தான். வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாமல், தேவன் நமக்குத் தந்த அந்தச் சிந்தனைத் திறனைக் கொண்டு, அவர் அருளிய சுதந்திரத்தைப் பொறுப்போடு கையாளுவோம். அதுவே மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை.
Benny Alexander