
இரண்டாம் உலகப் போரின் முடிவில் பல கதைகள் வெளிவந்துகொண்டே இருந்தன. சில அதிர்ச்சி இரகம். பலவும் மிகவும் அதிர்ச்சி இரகம். ஏராளமான வினோத நிகழ்வுகளை இரண்டாம் உலகப்போரின் பின்னர் பத்திரிக்கைகள் எழுதித்தள்ளின. அதில், ஒன்று விட்டோல்ட் பிலெக்கியின் (Witold Pilecki) தீரக் கதை. அமெரிக்காவின் தலைமையில் ஹிட்லரை எதிர்த்து நின்ற கூட்டுப் படைகள் ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள் நடப்பதை எப்படியாவது தெரிந்துகொள்ள விரும்பினர். இந்த ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள்தான் சுமார் 40 இலட்சம் யூதர்களாவது ஹிட்லரின் ஆட்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அதுவும் சில வருட இடைவெளியில்.
சிலுவை என்று முடிவு செய்துவிட்ட பிறகு அதில் எந்தப் பின் வாங்கலும் இல்லை.
விட்டோல்ட் பிலெக்கி, போலந்து நாட்டின் இராணுவ அதிகாரி. ஆஷ்விட்ஸ் வதை முகாமின் பலவிஷயங்கள் நம்ப முடியாத கொடூரங்களாக இருந்ததால், பலர் ஆஷ்விட்ஸுக்குள் எப்படியாவது நுழைந்து இரகசியங்களை அறிந்துகொள்ளத் துடித்தனர். அதற்கு ஒரு வழியாக பிலெக்கி ஆஷ்விட்ஸ் வதை முகாமுக்குள் இரகசியமாக நுழைய தானாகவே முன்வந்தார். எனவே ஒரு குறிப்பிட்ட செப்டம்பர் 1940 இல், பிலேக்கி தன்னைக் கைது செய்ய நாஜிப்படைகளுக்குச் சரணடைந்து ஒப்புக்கொடுத்தார். தன்னை ஒரு போலந்து இராணுவ கேப்டன் என்பதாகப் போலி அடையாளம் ஒன்றை உருவாக்கி போர்குற்றவாளி என்பதுபோல் ஆஷ்விட்ஸுக்குள்ளும் நுழைந்துவிட்டார். அங்கு நுழைந்ததும், அவர் வேலை ஒரு இரகசிய இயக்கத்தைத் துவங்கியதுதான். அது அவ்வளவு எளிதானதல்ல என்றாலும் மெதுவாக அவர் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை இரகசியமாக உண்டாக்கியும்விட்டார். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக அந்த முகாமைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தார். பின்னர் பெருமுயற்சி செய்து அவர் போலந்தின் நட்பு நாடுகளுக்கு அத்தகவல்களை இரகசியமாக கடத்தியும் விட்டார்.
தியாகிகள் மற்றவர்களின் கருத்துக்காக் காத்திருப்பதில்லை.
ஆஷ்விட்ஸில் இருந்து பிலேக்கியின் அறிக்கைகள் அங்கு நடக்கும் பயங்கரங்களைப் பற்றி முதன்முதலாக விளக்கிய தெளிவான தகவல்களாக இருந்தன. ஹோலோகாஸ்ட் (Holocaust) எனப்படும் கொலைக்களத்தைப் பற்றிய நேச நாடுகளின் புரிதலை வடிவமைக்க அத்தகவல்கள்தான் உதவின. (ஹோலோகாஸ்ட் பற்றித் தெரியாவிட்டால் தேடிப்படியுங்கள். அல்லது யூடியுபில் தேடுங்கள்) . அத்துடன் நில்லாமல் பிலேக்கி தான் மட்டுமல்லாமல் முகாமுக்குள் ஒரு எதிர்ப்பு இயக்கத்தையும் ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இது நாஜிக்களின் திட்டங்களைப் பற்றிய உளவு வேலைகளைச் செய்வதிலும், நாசவேலைகளைகளையும் அம்பலப்படுத்தத் தேவையான தகவல் சேகரிப்பதிலும் தைரியமாக ஈடுபட்டது.
அதன்பின் ஏப்ரல் 1943இன பிலெக்கி இறுதியில் ஆஷ்விட்சிலிருந்து தப்பினார். வெளியே வந்தும் போரின் இறுதி வரை போலந்து எதிர்ப்பிற்காக தொடர்ந்து போராடினார். போருக்குப் பிறகு சூழல் அவருக்குச் சாதகமாக இல்லை என்றபோதிலும் அவர் போலந்துக்குத் திரும்பினார். ஆனால் அப்போது அமைந்திருந்த புதிய கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு 1948 இல் தூக்கிலிடப்பட்டார்.
கற்பனை செய்ய முடியாத பயங்கரங்களை எதிர்கொண்ட பிலேக்கியின் நம்பமுடியாத துணிச்சல் மற்றும் தன்னலமற்ற தன்மை உண்மையிலேயே நாம் கூர்ந்து நோக்கவேண்டியது. தியாகம், தைரியம், அடுத்தவர் நலன், போராட்டம், எடுத்த நிலைப்பாட்டில் உறுதி இதெல்லாம் மனிதர்கள் சிலருக்கு இரத்தத்தில் ஊறியவை. இது எப்படிச் சாத்தியம் என்றால் மனுக்குலம் விழுந்துபோன ஒன்று என்றாலும் ஆதியில் ஆதாமுக்குள் தேவன் வைத்த குணங்கள் எல்லாம் மொத்தமாக அடித்துச் சென்றுவிடப்படவில்லை. தேவன் அப்படி மனிதன் ஒட்டுமொத்தமாக அவர் வைத்த நன்மைகளை இழந்துபோக அனுமதிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
விட்டோல்ட் பிலெக்கி இங்கு நமக்கு கிறிஸ்துவை நினைவுபடுத்த வேண்டும். தியாகம் செய்து மற்றவரைக் காக்கவேண்டும் என்பது தேவனிடம் இருந்து வந்து இன்னமும் மனிதனுக்குள் ஒட்டி இருக்கும் குணம். அடிமைகளை விடுதலை செய்ய காலமெல்லாம் பலர் பாடுபட்டதற்குக் காரணம் இதுதான். நம் நாட்டில் மகாத்மா காந்தி இதற்காகத்தான் இன்றும் நினைவு கூறப்படுகிறார். கிறிஸ்து தனக்கும் பாவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாவிட்டாலும் அவர் மனிதனாக நுழைந்தார். பாவிகளில் ஒருவராக எண்ணப்பட்டார். அன்பு கூர்ந்தார். தன் நேசப்பிள்ளைகளின் விடுதலைக்காக தன்னைக் கொடுக்கவும் செய்தார். சிலுவை என்று முடிவு செய்துவிட்ட பிறகு அதில் எந்தப் பின் வாங்கலும் இல்லை. அதில் என்னவெல்லாம் செய்து முடிக்கவேண்டுமோ அதையெல்லாம் செய்துமுடித்தார். தியாகம் தேவனுக்கே உரியது. அவர் நமக்காக மரித்தது என்பது அவருடைய இயல்பான வெளிப்பாடு. அதை ஏற்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான். தியாகிகள் மற்றவர்களின் கருத்துக்காக் காத்திருப்பதில்லை.
Benny Alexander