
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 .
ஆனால், காலந்தோறும் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருக்கின்றன விதவிதமான வகைவகையாய் வேதப் புறக்கணிப்புகள் இவை. “வேதமே வெளிச்சம்”! ஆனால் அறிந்தோ அறியாமலோ அந்த வெளிச்சத்தை விரும்பாதவர்கள், அல்லது வெளிச்சத்தை மறைப்பவர்கள் எல்லோரும் இருளை விரும்புபவர்கள்தான்.
இங்கு எழுதப்பட்டிருப்பவை எல்லாம் சில உதாரணங்களே.
1. பழைய ஏற்பாட்டைப் புறக்கணிப்பது, அதில் தீர்க்கதரிசனப் புத்தகங்களைப் புறக்கணிப்பது. சிறு தீர்க்கர்களின் புத்தகங்கள் எதையும் திறந்துகூடப் பார்த்திராதது.
2. புதிய ஏற்பாட்டை மட்டுமே (சைஸ் சிறியதல்லவா) வாங்கி வாசித்தல். அதிலும். பவுலின் கடிதங்களைப் புறக்கணித்தல்.
3. இயேசு பேசிய வார்த்தைகள் மட்டுமே தேவனுடைய வார்த்தைகள்; மற்றவைகளெல்லாம் மனிதர்கள் எழுதியவை என்று போதிப்பது
4. வேதம் திருத்தப்பட்டுவிட்டது என்று கூறுவது.
5. நம் கையில் இருக்கும் வேதம் முழுமையானதல்ல என்பது; இதுதான் வேதம் என்பதற்கு என்ன ஆதாரம் என்று பெருமிதத்தோடு கேட்பது
6. வேண்டுமென்றே சில புத்தகங்களைத் தள்ளுபடி செய்துவிட்டார்கள், அவையும் முக்கியம் என்று பிரசங்கிப்பது
7. நான்கு சுவிசேஷங்களும் ஒன்றுகொன்று முரண்பாடு கொண்டவை என்று சொல்வது.
8. இயேசுக்கிறிஸ்துவின் மகிமையை எப்படியாவது கெடுக்க/மறைக்க முயற்சிசெய்து பிசாசின் வேலையை எளிதாக்குவது.
9. யூதா எழுதின நிருபத்துடன் வேதாகமத்தை முடித்துக் கொள்வது, அதாவது வெளிப்படுத்தின சுவிசேஷம் என்ற புத்தகத்தை மனதளவில் தள்ளுபடி செய்துவிடுவது
10. சங்கீதம் நீதிமொழிகளை மட்டும் 60 தரம் 60 வயதுவரை வாசித்துக் கொண்டு காலத்தை ஓட்டுவது
11. ஆவியானரே வேதாகமத்தின் அதிகாரி என்பதை அறியாமல் இருப்பதும்; அவர் துணையின்றி வாசிப்பதோ, போதிப்பதோ இயலாது என்பதை உணராதது.
12. வேதத்தை எழுதிய மனிதர்களின் சுயவெளிப்பாடுகள் அதில் கலந்திருக்கின்றன என்று மேதாவியாகக் கூறி விலகுவது
13. வேத அடிப்படையில் வாழ்வது, அதாவது கிறிஸ்துவைப் போல் மாறுவது என்பதெல்லாம் நடக்காத காரியம் என்று முடிவுசெய்து முடிந்தவரை “நல்லவனாக” வாழ்ந்தால் போதும் வேதாகமத்தின் படி வாழ்வது அவசியமல்ல என்பது.
14. செழிப்பை மட்டும் போதித்துவிட்டு சிலுவையைப் புறக்கணிப்பது
15. வேதத்தில் இன்னும் நிறைவடையவில்லை என்பதும் இன்னும் வேத வசனங்களை தேவன் வெளிப்பாடுகளாக எனக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று வேதத்துக்குப் புறம்பான கட்டுக்கதைகளை சொல்லிக் கொண்டே இருப்பது
16. பிற மத நூல்களிலில் இருந்து கிறிஸ்து வெளிப்படுகிறார் என்று வேதத்தை விட்டு வெளியே இயேசுவைத் தேடுவது. அதற்கு, “அப்ப, மற்ற மதத்தினரை எப்படி இரட்சிப்புக்குள் வழிநடத்த?” என்று அறிவுஜீவியாய் கேள்வி கேட்பது.
17. சித்தர்கள் பாடினார்கள். எத்தர்கள் பாடினார்கள் என்று எதையெல்லாமோ பிரசங்கித்து வேதத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டுவதையே வேலையாகக் கொண்டிருப்பது
18. வேதத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை “ரொம்பக் கஷ்டம்”, என்று மொத்தமாக முடிவு செய்துவிடுவது
19. முடிந்தவரை வேதத்தையே திறக்காமல் வாழ்க்கையை ஒப்பேற்றுவது.
20. வேதம் “வெயிட்”ட்டாக இருக்கிறது என்று கையில் தூக்காமல், எங்கும் எடுத்துச் செல்லாமல் இருப்பது.
21. தமிழே முக்கி முனகும் போது, சின்னதாக ஸ்டிலாக பாக்கட் இலவச ஆங்கில வேதாகமத்தை(உபயம்: கிதியோனியர்) பின்பாக்கட்டில் வைத்துக் கொண்டு செல்வது
22. எங்க பாஸ்டர் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று வேத வார்த்தைகளை ஆராய எந்த ஆர்வமும் இல்லாமல் இருப்பது. (ஆராய்ச்சி வேதாகமங்கள் என்று உண்டு தெரியுமா?)
23. ஜெபக்கூட்டம் (இரவில் முடிந்தவுடன் புரோட்டா வழங்கப்படும்), ஆசிர்வாதக்கூட்டம் என்றெல்லாம் வாரவாரம் அலைந்தாலும் “வேத பாட ஆராய்ச்சிக் கூட்டம், வாருங்கள்” என்று யாராவது அழைத்தால் எப்படியாவது கழன்றுகொள்ளக் பிரயத்தனப்படுவது
24. வேதவசனம் ஒன்றை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்தவுடன் நிறைவு ஏற்பட்டுவிடுவது
25. மணிக்கணக்கில் ஜெபம் கூடச் செய்யலாம், ஆனால் வேதம்? ஒரு நிமிடம் காலண்டரில் வசனம் வாசித்துவிட்டு திருப்தியாக நாளைத் துவங்கச் சென்றுவிடுவது
26. ஒரு வசனத்தைக் கூடக் காட்ட இயலாமல், சொந்தச் சரக்கில் மணிக்கணக்கில் புல்பிட்டில் பொழிந்துவிட்டு வருவது
27. “வேதப் புரட்டை அறிய வேதத்தை அறிய வேண்டும்” என்ற அறிவே இல்லாமல், டீவி வொர்ஷிப் நடனங்களிலேயே “ஆவிக்குறிய வளர்ச்சி” அடைந்துவிடலாம் என்று மகிழ்ந்திருப்பது
28. காய்ச்சல் வந்தால், கனவு வந்தால் சளிபிடித்தால் வேதத்தைத் தேடுவது. தலைமாட்டில் வைத்து பிசாசைத் துரத்துவது (!)
29. பொருத்தமில்லாத வசனங்களை சம்பந்தமில்லாத இடத்தில் சொல்வது
30. ஒரே வசனத்தை உலுக்கி, அதனுடன் தொடர்பான காரியங்கள் எதையும் அறியாமல், தன் வசதிக்கு மாற்றுவது
31. ஜெபி…ஜெபி, முழங்காலில் யுத்தம் செய் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு, வேதத்தின் பக்கமே சபையினைரை வெகு ஜாக்கிரதையாக திருப்பாமல் இருப்பது. ( வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. நீதிமொழிகள் 28:9)
32. எல்லோரும் வேதம் வாசித்துவிட்டால், எல்லாவற்றையும் அறிந்து வேத பண்டிதர்களாகிவிட்டால நாம் எதைப் பிரசங்கம் பண்ணுவது என்று அரண்டுவிடுவது.
33. வேதத்தை அறிந்து தேர்ந்திருந்தாலும், அதன் மேல் நம்பிக்கை கொள்ளாமல் (இப்படியேல்லாம் நடந்திருக்குமா?, வாய்ப்பேயில்லை என்று) இருப்பது.
34. வேதம் தெரிந்துவிட்டால் கேள்விகேட்பானே என்று அதை முடிந்தவரை மற்றவரிடம் மறைப்பது
35. நம்மைவிடத் வேதத்தை தெரிந்தவன் அவன் என்று ஒதுங்குவது, புறக்கணிப்பது இல்லையென்றா; விரட்டியடிப்பது
36. நம்மை விட வேதத்தை ஆழமாகப் பேசுபவரை மீண்டும் பேச அனுமதிக்காமல் சபையைக் “காத்துக்” கொள்வது.
37. புதிராககக் குழப்பமாகப் போதித்து வேத பண்டிதராகக் காட்டிக் கொள்வது; இல்லையென்றால், கிரேக்க, எபிரேய பண்டிதராக வித்தாந்தம் பேசி அரளவைப்பது
38. வேதத்தைப் போதிக்கவேண்டிய மேடையை கேலிமேடையாக்கி ஸ்டேண்டப் காமடி செய்து வசனத்தையே மறந்துவிடுவது
39. பொருந்தாத வசனங்களைக் காட்டி மிரட்டுவது. தேவன் சபிப்பார்.. உன் பிள்ளைகள் சாபக்கேடாவார்கள் என்று வேத-தாதாவாகத் தன்னைச் சித்தரிப்பது.
40. வேதபாடக்கூட்டம் என்றால் நமக்குத் தெரியாத வேதமா, வசனமா என்று மனப்பாடம் செய்த வசனங்களை எண்ணி நிறைவாகிக் கொள்வது.
41. வேதத்தை ஒரு மந்திரப் புத்தகம்போல நினைத்து வசன உச்சாடனம் செய்வது.
42. ஆசிர்வாத வசனங்கள் ஒரு ஐந்தைத் தவிர மற்றவையெல்லாம் வேதத்தில் இருப்பதயே சட்டை செய்யாமல் வாழ்வது
43. உள்ளத்தை குத்துவதுபோல் வசனம் வந்தால் அது யாருக்கோ என்று நழுவுவது
44. முழுவேதத்தையும் பத்துமுறை வாசித்துவிட்டேன், பதினைந்து முறைவாசித்துவிட்டேன் என்ற பெருமையே போதும் என்று இருந்துவிடுவது
45. இதெல்லாமா வேதத்தில் போட்டிருக்கு, இதற்கெல்லாமா வேதத்தை இழுப்பது என்று ஆச்சரியத்துடனும் அலர்ஜியாக கேள்விகேட்டு அசத்துவது.
46. நான் வேதத்தைத் தவிர எதையும் வாசிக்கமாட்டேனாக்கும், அதெல்லாம் வீண் என்று வாசிக்கும் பழக்கமே இல்லாதவர் வேதத்தைக் கூட வாசிக்காமல் புழுகுவது.
47. வேத வரலாறே அறியாமல் இருப்பது, பின்ணணியை அறிய முயற்சியே எடுக்காமல் இருப்பது. கையிலிருக்கும் வேதம் யாரால், எப்போது எதற்காக எழுதப்பட்டது என்ற அடிப்படையே தெரியாமல் வேதத்தை விளங்கிக் கொள்ள நினைப்பது
48. ஒற்றை வசனத்தைக் கொண்டு விளையாடுவது, அதைவைத்துக் கொண்டு பொருத்தமில்லாமல் கேள்விகேட்பது; பதில் அளிப்பது
49. வேதம் பரிசுத்தமானது என்று மொத்தமாகத் திறப்பதையே விரும்பாமல் பயந்து ஒதுங்குவது
50. வேதத்தில் உள்ள கதைகளை மட்டும் அறிந்துகொண்டு எனக்குவேதம் தெரியும் என்ற திருப்திதியில் கதையை ஓட்டிவிடுவது
51. வேதம் இஸ்ரவேலருக்குத் தரப்பட்டது, இது நம் கலாச்சாரத்துக்கு உரியதல்ல என்பது
52. மொழிபெயர்ப்புகளால் வேதத்தைக் கெடுத்துவிட்டனர் என்பது
53. நம் கையில் இருப்பது ஒரிஜினல் வேதம் அல்ல என்று அதிரவிடுவது
54. கடிந்துகொள்ளும் வசனங்கள் இருப்பது வேறு யாருக்கோ என்று இருப்பது
55. மற்றவருக்காக மட்டும் வேதத்தை வாசிப்பது
56. குற்றம் கண்டுபிடிக்கவே வேதத்தைத் திறந்து கண்டுபிடித்துவிட்டேன் என்று புளகாங்கிதம் அடைவது
57. வேதம் பாஸ்டர்களுக்கும் பண்டிதருக்கும் உரியது, நமக்குப் புரியாது என்று முடிவுகட்டி ஒதுங்கிக்கொள்வது.
58. பைபிளைக் குறிசொல்ல (!)பயன்படுத்துவது
59. வசனங்களைப் போலவே பேசி இதுவும் பைபிளில் இருக்கிறது என்று நம்பச் செய்வது (உதாரணம்: நான் அங்கே கேருபின்கள் இறக்கைகொண்ட நான்கு குதிரைகளைக் காண்கிறேன்)
60. பாடுவது, ஆடுவது, ஸ்தோத்திரபலி 10000 சொல்வது, ஆவிக்குறிய (!) சேனல் பார்ப்பது, ஜெபக்கூட்டங்களுக்குச் செல்வது என்பவற்றை வேதத்திற்கு மாற்றாக மற்ற எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு பெரும் திருப்தியில் திளைப்பது…
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். (ஓசியா 8:12 )
Benny Alexander