மத உணர்வுகளைப் புண்படுத்தாதீர்

கிறிஸ்தவ மத உணர்வு

ஒரு கிறிஸ்தவனாக மத உணர்வு புண்படுத்தப்பட்டால், அதை எப்படி எதிர்கொள்வது? கிறிஸ்தவ மத உணர்வு என்பதுதான் என்ன? 

இந்தக் கேள்விக்கு பதில் தெரியுமுன் மத உணர்வு என்பதை வேதம் எப்படிப் பார்க்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். பொதுவாக மத உணர்வு என்பது ஒரு மதத்தைப் பின்பற்றுவோரின் இறைநம்பிக்கை, பின்பற்றும் வழிமுறைகள், மதக் கோட்பாடுகள் மற்றும் கடவுளைப் பற்றிய எண்ணங்கள்.  இந்த எண்ணக்களைப் பரிகசிப்பதை, அல்லது தவறாகத் திரித்துப் பேசுவது அந்த மதத்தைப் பின்பற்றுவோரின் மனதைக் காயப்படுத்தினால் அதுவே மத உணர்வுகளைப் புண்படுத்துவது. அதாவது மதம் சார்ந்த உணர்வுகளைப் புண்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டுவது. 

இந்தக் கட்டுரை அப்படி உணர்ச்சியைத் தூண்டும் அளவுக்கு ஒரு சூழல் வந்தாலும் அங்கு நம் நிலை என்ன என்பதை ஆராய்வதுதான். கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை இங்கு கிறிஸ்துதான் மையம். கிறிஸ்து என்னிடத்தில் இருந்தால் இதை எப்படி எடுத்துக்கொண்டிருப்பார் என்கிற எண்ணம்தான் நாம் புண்படுவதையும் புறக்கணிப்பதையும் தீர்மானிக்கிறது. இன்று நாம் பளிச்சென்று புரிந்துகொள்ளும் விதத்தில் மத உணர்வுகளின் பிரச்சினையை பைபிள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், வேதாகமத்தில் நம்முடைய கேள்விக்கு பதில்தரும் வகையில் சில இடங்கள் பளிச்சென்று உதாரணங்களாக உள்ளன. அந்தப் பகுதிகளை ஒழுங்காக வாசித்தாலே, நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதை உடனடியாக அறிந்துகொள்ளலாம். காரணம், நம் அருள்நாதரே அதை எளிதாகச் சொல்லிவிட்டார். 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.(மத்தேயு 5:43-48).

உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள் என்றால், நம் மேல்வரும் எந்த இகழ்ச்சிக்கும் பரிகசிப்புக்கும் நாம் உடனடியாக “என் மத உணர்வைப் புண்படுத்திவிட்டாய்” என்று வெகுண்டு எழாமல் நம் முதல் வேலையே ஜெபிப்பதாகத்தான் இருக்கமுடியும். வேறு வழி இல்லாமல் ஜெபிக்கிற ஜெபம் அல்ல இது. பரிகாசத்தை மேற்கொள்ளும் முறையான ஒரே வழி இதுதான். இதுதான் நம்மை எதிர்க்கிறவர்களை சிநேகிக்கவும், ஆசிர்வதிக்கவும், நன்மை செய்யவும் அடிப்படை. சபை இதை எப்போதும் செய்து வந்திருக்கிறது. வரலாற்றில் கிறிஸ்துவின் வழியைச் சரியாகப் புரிந்துகொண்ட அவரது சரீரம் இதைத்தான் செய்துவந்திருக்கிறது. 

அநீதி இழைக்கப்படும்போது மறு கன்னத்தைத் திருப்புவதையும் வலியுறுத்தினார் (மத்தேயு 5:39) என்றால் நம் மத நம்பிக்கையின் மீதான விமர்சனங்கள் அல்லது தாக்குதலுக்கு முகங்கொடுக்கும் போது, ​​கோபத்திற்கு பதிலாக அன்பான மற்றும் அமைதியான பதிலை அளிப்பதுதான் அவர் விருப்பம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 13, புகழ்பெற்ற “அன்பின் அத்தியாய”த்தில், எளிதில் புண்படுத்தாமல் இருப்பதைப் பற்றியும் எழுதுகிறார். இந்த அதிகாரம், பொறுமை, இரக்கம் மற்றும் எளிதில் கோபப்படாமல் இருப்பதை வலியுறுத்துகிறது. நாம் விரும்பும் ஒன்று தாக்கப்படும்போது அல்லது அவமதிக்கப்படும்போது உடனடியாகப் புண்படுவது இயற்கையானது என்றாலும், புதிய ஏற்பாடு மிகவும் அளவிடப்பட்ட, அன்பான பதிலைப் பரிந்துரைக்கிறது.

கிறிஸ்துவைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல் வெறுமனே ‘மதம்’ மாறியவர்கள் செய்த சிலுவைப் போர்கள் எல்லாம் வரலாற்றுக் கறைகள். இன்றும் அதற்காகக் கிறிஸ்தவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. நமக்குச் சம்பந்தமில்லாவிட்டாலும். எனவே, எந்த நிமிடமும் உணர்வு புண்படுகிறது என்று அன்பற்ற செயல்களில் இறங்கிவிடக்கூடாது.

இருப்பினும், கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைகள் அல்லது மதிப்புகளில் சமரசம் செய்து கொள்வார்கள் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஒருவருடைய விசுவாசத்தில் உறுதியாக நிற்பதைப் பற்றியும், உள்ளுக்குள் இருக்கும் நம்பிக்கைக்கு பதில் அளிக்கத் தயாராக இருப்பதைப் பற்றியும் பைபிள் பேசுகிறது (1 பேதுரு 3:15), ஆனால் அதையும் “மென்மையுடனும் மரியாதையுடனும்” செய்ய அறிவுறுத்துகிறது.

சுருக்கமாக, பைபிள் நேரடியாக “மத உணர்வுகள்” பற்றி பேசவில்லை என்றாலும், அதன் போதனைகள் ஒரு சமநிலையான அணுகுமுறையை பரிந்துரைக்கின்றன: உங்கள் நம்பிக்கைகளில் உறுதியாக இருங்கள், ஆனால் அன்பான, மரியாதைக்குரிய மற்றும் எளிதில் புண்படுத்தாத வகையில் நம் செயல்பாடுகள் இருக்கட்டும். 2000 வருடம் முன்பு சிலகாலம் பூமில் இருந்த கிறிஸ்துவை இன்று உலகிற்குக் காட்டவேண்டியவர்கள் நாம். அதை காட்ட வேண்டிய வேண்டிய விதமாகக் காட்டவேண்டும். சில நேரங்களில் புண்பட்டாலும் பண்பட்ட விதத்தில் அது இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *