
“நோவாவின் ஜலப்பிரளயமா? அதெல்லாம் சும்மா! எபிரெயர்கள் தங்களுக்கு முன்னிருந்த பாபிலோனியர்களின் புராணங்களை உருவி, பைபிளில் சேர்த்துவிட்டார்கள். மோசே கூட ஹமுராபியின் சட்டங்களைப் பார்த்து காப்பியடித்துதான் பத்துக்கட்டளைகளை எழுதினார்.”
— அவ்வப்போது சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் இறைமறுப்பாளர்களும், கிறிஸ்தவத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களும் போகிற போக்கில் வீசும் வார்த்தைகள் இவை.
பெரும்பாலும் இதைச் சொல்பவர்கள் கில்காமேஷ் காவியத்தையோ, ஹமுராபியின் சட்டத்தையோ அல்லது பாபிலோனிய படைப்பு காவியமான ‘எனுமா எலிஷ்’ பற்றியோ முழுமையாகப் படித்திருப்பார்கள் என்று நம்ப முகாந்தரமில்லை. ஏன், பைபிளைக் கூட அவர்கள் புரட்டிப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எங்கேயோ கேட்ட அரைகுறைச் செய்தியை வைத்துக்கொண்டு, “வேதாகமம் தனித்துவமானதல்ல; அது சுற்றியிருந்த தேசங்களின் புராணக்கதைகளைத் தழுவி எழுதப்பட்ட ஒரு சாதாரண புத்தகம்” என்று சொல்லிவிட்டு, அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.
அவர்களுக்கான பதில் என்று இந்தக் கட்டுரையைப் பார்ப்பதைவிட, ஒருவேளை உங்களிடம் யாரேனும் இப்படி அள்ளித்தெளித்தால் அதற்கு மறுப்புச் சொல்லவோ – அல்லது யாரும் கேட்காவிட்டாலும் உங்களுக்கே இந்தக் கேள்வி எழுந்தால் அதற்கான பதிலாகவோ இதை வைத்துக்கொள்ளுங்கள்!
மேலோட்டமாகப் பார்த்தால் இவர்கள் சொல்வது ஏதோ அரிய பெரிய கண்டுபிடிப்பு போலத் தோன்றலாம். ஆனால், சற்று நிதானித்து, வரலாற்றின் பக்கங்களை ஊடுருவிப் பார்த்தால், இந்த விதமான குற்றச்சாட்டுகள் எல்லாம் குத்துமதிப்பாகச் சொல்லப்படுபவைதான் என்பது புரியும்.
முதலில் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும். பைபிளில் சொல்லப்பட்ட சம்பவங்கள் உண்மையான வரலாறாக இருந்தால், அந்தச் சம்பவங்களின் சுவடுகள் உலகம் முழுக்கச் சிதறிக் கிடக்கத்தானே வேண்டும்! சுற்றியிருந்த நாடுகள், கலாச்சாரங்கள், மக்கள் கூட்டங்கள் ஆகியவற்றின் நினைவுகளிலும் அது ஒரே தொனியில் ஒலித்தாக வேண்டுமல்லவா?
உலகம் உருவான விதம்
முதலில் சிருஷ்டிப்பை எடுத்துக்கொள்வோம். பாபிலோனியர்களின் படைப்பு காவியமான ‘எனுமா எலிஷ்’ (Enuma Elish) ஆதியாகமத்திற்கு முந்தையது என்பதால், ஆதியாகமம் அதைத் தழுவி எழுதப்பட்டது என்று ஒரு வாதம் உண்டு.
உண்மைதான், இரண்டிலும் ஆதித் தொடக்கத்தில் ‘தண்ணீர்’ இருந்தது போன்ற சில ஒற்றுமைகள் உண்டு. ஆனால், அதில் சொல்லப்படும் செய்தி என்ன?
‘எனுமா எலிஷ்’ கதையில், தேவர்களுக்குள் பயங்கரமான சண்டை நடக்கிறது. ‘மார்டுக்’ (Marduk) என்ற தேவன், ‘தியாமத்’ (Tiamat) என்ற பெண் டிராகனைக் கொன்று, அவள் உடலை இரண்டாகக் கிழித்து வானத்தையும் பூமியையும் படைக்கிறான். தோல்வியுற்ற ஒரு தேவனின் இரத்தத்திலிருந்து மனிதன் படைக்கப்படுகிறான். சுருக்கமாகச் சொன்னால், உலகம் ஒரு கொடூரமான போர்க்களத்தின் மிச்சம்; மனிதன் தேவர்களுக்கு அடிமை வேலை செய்யப் படைக்கப்பட்ட ஒரு அடிமை.
ஆனால் வேதாகமம் என்ன சொல்கிறது? அங்கே எந்த யுத்தமும் இல்லை. தேவன் யாரோடும் சண்டையிட்டு உலகத்தைப் படைக்கவில்லை. “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று சொன்னார், வெளிச்சம் உண்டாயிற்று. அங்கே அமைதி இருந்தது, ஒழுங்கு இருந்தது, கிரமம் இருந்தது – எல்லாம் “மிகவும் நன்றாக” இருந்தது! மனிதன் அடிமையாக அல்ல, தேவனுடைய சாயலாக, பூமியை ஆளுகை செய்பவனாகப் படைக்கப்பட்டான். மனிதன் ஒரு உயரிய, உன்னத அதிகாரம் மிக்க, மரியாதைக்குரிய படைப்பு. அவனுக்குக் கீழ் எல்லாம் என்கிற ஆளுகை மனிதனுக்கு தேவனால் ‘கிருபையாக’ அளிக்கப்பட்டது.
பழைய புராணங்கள் படைப்பை ஒரு விபத்தாகவோ, போரின் முடிவாகவோ காட்டும்போது, வேதாகமம் மட்டுமே அதை ஒரு நேர்த்தியான திட்டமாகவும், அன்பின் வெளிப்பாடாகவும் காட்டுகிறது.
வெள்ளப்பெருக்கு
அடுத்தது, நோவா காலத்து ஜலப்பிரளயம். இது யூதர்கள் மட்டும் கற்பனை செய்த கதையாக இருந்திருந்தால், அது இஸ்ரவேல் எல்லைக்குள்ளேயே நின்றிருக்கும். ஆனால் நிலைமை அப்படியில்லை. பைபிளோடு எந்தத் தொடர்பும் இல்லாத ஆஸ்திரேலியப் பழங்குடியினர், அமெரிக்காவின் ஆஸ்டெக்குகள் (Aztecs), ஏன் நம் பண்டைய இந்தியா வரைக்கும் நூற்றுக்கணக்கான வெள்ளப்பெருக்குக் கதைகள் இருப்பதை ஆய்வாளர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத கலாச்சாரங்களில், ஒரே மாதிரியான ஒரு பெருவெள்ளத்தின் நினைவு எப்படி வந்தது?
இதற்கான விடை தேடி எங்கும் அலைய வேண்டாம். ஆதியாகமம் 11-ம் அதிகாரத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்தாலே போதும். பாபேல் கோபுரச் சம்பவம் நடப்பதற்கு முன்பு வரை, மனித இனம் ஒரே மொழியைப் பேசும் ஒரே குடும்பமாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஜலப்பிரளயத்தின் கோரத்தாண்டவத்தைத் தப்பிப்பிழைத்த நோவா குடும்பத்தின் நேரடி வாரிசுகள். பாபேலில் அவர்கள் சிதறடிக்கப்பட்டபோது, தங்கள் முன்னோர்களின் வரலாற்றையும் சுமந்து சென்றார்கள். சென்று இருக்கத்தான் வேண்டும்!
காலம் செல்லச் செல்ல, வாய்மொழி மரபுகளில் சிற்சில மாற்றங்கள் நேர்ந்தன. சில கதைகளில் பேழை ஒரு படகானது; சிலவற்றில் ஒரு கனசதுர பெட்டியானது. தேவர்கள் தங்கள் தூக்கம் கலைந்ததால் கோபப்பட்டு உலகத்தை அழித்ததாகக் கதைகள் திரிந்தன. ஆனால், “உலகம் தண்ணீரால் அழிக்கப்பட்டது, அதில் சிலர் மட்டுமே தப்பனார்கள்” என்ற அந்த மூலக்கதை மட்டும் அழியவே இல்லை.
எனவே, கில்காமேஷ் காவியம் (Epic of Gilgamesh) போன்ற புராணங்கள் ஆதியாகமத்தைப் பொய்யாக்கவில்லை. மாறாக, ஆதியாகமம் சொல்லும் வரலாறு உண்மைதான் என்பதற்கு அவை சாட்சியாக நிற்கின்றன.
மனசாட்சியில் எழுதப்பட்ட சட்டம்
இறுதியாக, ஹமுராபியின் சட்டத்திற்கும் (Code of Hammurabi), மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டி, “இது காப்பியடிக்கப்பட்டது” என்று சொல்வதும் இப்படித்தான்.
கொலை செய்வது தவறு என்று தெரிய, ஒரு மனிதனுக்குப் பத்துக்கட்டளைகள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டுமா என்ன?
தேவன் மனிதனைத் தம்முடைய சாயலாகவே படைத்தார். அவன் பாவியாக இருக்கலாம், ஆனால் அவன் மிருகமாகிவிடவில்லை. ரோமர் 2:15-ல் பவுல் சொல்வது போல, நியாயப்பிரமாணம் இல்லாதவர்களுக்கும், “நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை அவர்கள் இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது.”
கொலையும் களவும் பாவம் என்பதை மனிதனைப் படைத்தபின் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், தேவன் சீனாய் மலையில் தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தவில்லை. அது ஏதேனிலேயே மனித மனசாட்சியில் பின்னப்பட்டுள்ளது. எனவே, ஹமுராபி எழுதிய சட்டங்கள், தேவன் மனிதனுக்குக் கொடுத்த மனசாட்சியின் வெளிப்பாடே தவிர, மோசே அதை பார்த்து ‘காப்பி’ அடிக்க வேண்டிய அவசியமில்லை.
இதுதவிர, அந்தச் சட்டங்கள் அனைத்தையும் வரிக்குவரி ஒப்பிட நினைப்பவர்கள் தனியாக ஆராய்ச்சியில் இறங்கித்தான் ஆக வேண்டும். இந்தக் கட்டுரையில் அதை அடக்க இயலாது. காரணம் அவற்றுக்கிடையில் பெருத்த வித்தியாசங்களும் உண்டு; சில ஒற்றுமைகளும் உண்டு.
மாற்றி யோசிப்போம்…
ஒருவேளை, பைபிள் மட்டுமே ஜலப்பிரளயத்தைப் பற்றிச் சொல்லி, மற்ற எல்லாப் பழைய வரலாறுகளும் “பெரும் வறட்சி” வந்ததாகச் சொல்லியிருந்தால்? அல்லது, பைபிள் மட்டுமே கொலையைத் தடுத்திருந்து, மற்ற கலாச்சாரங்கள் எல்லாம் கொலையைப் போற்றியிருந்தால்?
அப்போது வேண்டுமானால் நாம் சந்தேகப்படலாம், பைபிள் உலக எதார்த்தத்திற்கு ஒத்துவராத புத்தகம் என்று.
ஆனால், இன்று நாம் காணும் இந்த ஒற்றுமைகள் விவிலியத்தின் சத்தியத் தன்மையைத்தான் உரக்கச் சொல்கின்றன: நாம் அனைவரும் ஆதாம் மற்றும் நோவாவின் பிள்ளைகள்; ஜலப்பிரளயம் என்பது நம் பொதுவான வரலாற்றின் ஒரு பகுதி; நம் அனைவருக்கும் நன்மை தீமை உணர்த்தும் ஒரே சிருஷ்டிகர் இருக்கிறார்.
பழைய புராணங்களில் பைபிளைப் போன்ற சாயல்களைக் காணும்போது நாம் திகைக்கத் தேவையில்லை. அவை உண்மையை உறுதிப்படுத்தும் தடயங்கள். மற்றவை எல்லாம் மங்கிப்போன எதிரொலிகள் (Echoes); வேதாகமமே அந்த உண்மையான குரல் (The Voice).
எதிரொலிகள் கேட்பதே, அந்த உண்மையான குரல் ஒலித்ததற்கான ஆதாரம் தானே!
பின்குறிப்பு: என்னிடம் Clutural Background Study Bible – என்று ஒரு NKJV பைபிள் உண்டு. 3000 ஆண்டுகால அண்மை கிழக்கு , மத்தியக் கிழக்குப் பகுதிகளின் அக்கால வரலாற்று இணைப்புகளுடன் – ஏகப்பட்ட விளக்கங்களுடன் – படங்களுடன் வரும் பைபிள் இது. வேதாகமத்தின் வரலாற்றுக் கலாச்சாரப் பிண்ணனியை அறிய மிகவும் உதவும் ஒரு கமென்ட்ரி பைபிள் இது. ஆராய்ச்சியில் விருப்பம் கொண்டவர்கள் வைத்திருக்க வேண்டிய ஒன்று.