தேவனின் இறையாண்மை: அகிலத்தை ஆளும் ஏகாதிபத்தியம்!

“அவரின்றி ஓரணுவும் அசையாது” – இது நம் முன்னோர் இறைமொழி. இதிலிருக்கும் ஆழமான இறையியல் உண்மைதான் இறைவனுடைய இறையாண்மை (Sovereignty of God)! அதற்கு இன்னும் சிறப்பான பெயர்: ஏகாதிபத்தியம்!

இறையாண்மை என்கிற இந்த வார்த்தையை அடிக்கடி அரசியல்வாதிகள் பேசக் கேட்டிருப்பீர்கள். இந்த இறையாண்மை என்றால் என்ன?

எளிமையாகச் சொன்னால், இந்தப் பிரபஞ்சத்தின் மீது இறைவனுக்கு இருக்கும் முழுமையான அதிகாரம் மற்றும் கட்டுப்பாடு. தேவன் ஒரு அதிகாரம் மிக்க சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்; எனவே தற்செயலாக எதுவும் இங்கே நடப்பதில்லை. அவரது அதிகாரத்தை மீறி எதுவும் இங்கே சுயமாக நடந்துவிடாது!

ஆனால் இது ஒரு ‘ஏகாதிபத்தியம்’ அல்லவா?

ஆம்! ‘ஏகாதிபத்தியம்’ தான்! (Absolute Monarchy). அப்படி என்று சொல்லும்போது, அது ஒரு தனிச்சக்கரவர்த்தியின் ஆளுகையைக் குறிக்கிறது. ஆனாலும், மனித ஏகாதிபத்தியங்களுக்கும் இறைவனுடைய ஏகாதிபத்தியத்திற்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு:

மனித ஏகாதிபத்தியம்: இது பெரும்பாலும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவும், மற்றவர்களை ஒடுக்குவதாகவும் இருக்கும்.

இறை ஏகாதிபத்தியம்: இது படைத்தவருக்குத் தம்முடைய படைப்பின் மீது இயல்பாகவே உள்ள உரிமை. இது அன்பு, நீதி மற்றும் ஞானம் கலந்த ஆளுகை.

இந்த இடத்தில் தேவன் ஒரு ராஜா என்பதையும், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர் அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். அவரது ஆட்சி – அவர் மட்டுமே ஆளும் ஆட்சி; “மாடர்ன்” மக்களாட்சி அல்ல என்பதையும் மனதில் கொள்வது அவசியம்!

தன்னை மிஞ்சி தனக்கு மேல் யாரும் அதிகாரம் செலுத்துவதை மனிதன் விரும்புவதில்லை. ஆனால், அப்படிப்பட்ட அவருடைய அதிகாரத்தில் நிறைய உன்னதமான அம்சங்கள் அவருக்குக் கீழ் இருக்கும் நமக்கு உண்டு. இறைவனுடைய அதிகாரம் அவருடைய மற்ற குணாதிசயங்களிலிருந்து பிரிந்து நிற்பதில்லை என்பதால், அவருடைய ஏகாதிபத்தியம் என்பது:

நீதியான ஆளுகை: அவர் ஒருபோதும் அநீதி செய்வதில்லை.

ஞானமுள்ள திட்டம்: நம் வாழ்வில் நடக்கும் எதிரும் புதிரான காரியங்களுக்குப் பின்னாலும் ஒரு மேலான நோக்கம் உண்டு.

அன்புள்ள அதிகாரம்: அகிலத்தை ஆளும் அந்த ஏகாதிபதி, நம்மைத் தம்முடைய பிள்ளைகளாக நேசிக்கிறார்.

இது நமக்குத் தரும் நன்மைதான் என்ன?

உலகம் குழப்பமாகத் தெரியலாம்; அரசுகள் மாறலாம்; யுத்தங்கள் நடக்கலாம்; நம் வாழ்வில் போராட்டங்கள் வரலாம். ஆனால், நம்முடைய தேவன் இப்போதும் ஆளுகை செய்கிறார்! யோசேப்பின் வாழ்வில் தீமையாகத் தெரிந்த காரியங்களை நன்மையாக மாற்றிய அதே தேவன், இன்றும் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

“கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார், பூமி மகிழ்வதாக…” (சங்கீதம் 97:1)

தேவன் ஒரு ‘ஏகாதிபதி’ என்பதில் நாம் பயப்படத் தேவையில்லை; ஏனென்றால் அவர் ஒரு அன்புள்ள பிதா. அவருடைய இறையாண்மையே நம்முடைய மிகப்பெரிய நிம்மதி, நன்மை மற்றும் பாதுகாப்பு!

பின்குறிப்பு: கிருபை வெளியீடாக போதகர் A.W பிங்க் எழுதிய “சர்வ வல்லவரின் ஏகாதிபத்தியம்” என்கிற நூல் தமிழில் உண்டு. தமிழ் கிறிஸ்தவர் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று. 

Benny Alexander, March 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *