
நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். மற்றவர் மதிக்கும் வண்ணம் பேசவேண்டும். எல்லாம் சரிதான். ஆனால், தேவ வார்த்தைகளைப் பேசமுடியுமா? அதுவும் தேவனே பேசுவதுபோல்? அப்படி ஒரு மனிதன் பேசும் வார்த்தையை, தேவன் அப்படியே தன் வார்த்தையாக ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவது சாத்தியமா?
1 இராஜாக்கள் 17-ல் எலியா ஆகாபுக்கு முன்பாக நின்று, “கர்த்தர் சொல்லுகிறார்” என்று ஒரு செய்தியாளராக மட்டும் பேசவில்லை. மாறாக, “என் வாக்கின்படியே அன்றி…” என்று ஒரு அதிகாரத் தொனியில் முழங்குகிறார்.
வானத்தை அடைக்கும் சாவியைத் தான் படைத்த ஒரு மனிதனின் நாவிற்கு தேவன் கொடுத்தது எப்படி? நிச்சயமாக இது எலியாவின் தனிப்பட்ட திறமை அல்ல. எலியாவும் நம்மைப் போலப் பாடுள்ள மனிதராகத்தான் இருந்தார். வாழ்க்கை அவருக்கு நிச்சயம் மலர்ப்படுக்கையாக இல்லை. ஆனால், அவர் “தேவனுக்கு முன்பாக நிற்கிறவர்”என்பதுதான் எலியாவின் இந்த அதிகாரம் மிக்க கட்டளைக்குப் பின் இருந்த மகத்துவம்!
தேவ சமூகத்தில் நிற்பது எமன்பது ஆலயத்தில் நிற்பதல்ல, வாழ்வில் சிக்கலான சூழலிலும் இறைவனோடு நிற்பது!
தேவனுக்கு முன்பாக நிற்பது!
“நான் அவருக்கு முன்பாக நிற்கிறவர்” என்று எலியா சொல்லும்போது, அது சும்மா ஆலயத்துக்குப் போய் ஆல்டர்முன் நிற்பதல்ல. எலியா அப்படி எல்லாம் செய்யவில்லை; அவர் துரத்தப்பட்டு ஓடிக்கொண்டிருந்தவர். தேவனுக்கு முன்பாக நிற்பது என்பது ஒரு ஆவிக்குரிய தகுதியைக் குறிக்கிறது. பரலோகத்தின் ஆலோசனையில் (Divine Council) காத்திருந்து, கர்த்தருடைய இருதயத் துடிப்பை அறிந்துகொள்பவர்களுக்கே பூமியில் எதைப் பேச வேண்டும் என்கிற தெளிவு கிடைக்கிறது. இறைவனோடு தனிமையில் நெருக்கமாக இருப்பவர்களுக்கே, மனிதர்களுக்கு முன்பாகத் துணிச்சலோடு நிற்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கிறது. இங்கே எலியா தேவ உறவில் தொடர்ச்சியாக இருந்தார் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது!
வார்த்தையை இருதயத்தில் சுமப்பவர்!
தேவன் பேச வேண்டியவற்றைத் தன் வார்த்தைகளாகப் பேசும் உரிமை யாருக்கு உண்டு? எவர் அவருடைய வார்த்தையைத் தன் இருதயத்தில் சுமக்கிறார்களோ அவர்களுக்கே!
கொஞ்சம் தேடி வாசித்தால், உண்மையில் எலியா அங்கே புதிதாக எதையும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. உபாகமம் 11:16,17-ல், இஸ்ரவேலர் அந்நிய தேவர்களைச் சேவித்தால் வானம் அடைக்கப்படும் என்று தேவன் ஏற்கனவே சொல்லியிருந்தார். அந்த நியாயப்பிரமாண வார்த்தையை எலியா தன் இருதயத்தில் சுமந்து, அதைத் தன் சொந்த வார்த்தையாக மாற்றிப் பேசினார். தேவன் எதைச் செய்ய நினைத்தாரோ, அதை எலியாவின் நாவிற்கு மாற்றிக் கொடுத்திருந்தார். எலியா தன்னிச்சையாகப் பேசியதுகூட ஆண்டவரால் அங்கீகரிக்கப்பட்டது என்பது, தேவன் தன் வார்த்தையில் வாழும் பிள்ளைகளின் வார்த்தையை விரும்புவதன் அடையாளம். நம் பேச்சுகள் தேவப்பேச்சுகளாவது இப்படித்தான்!
அங்கீகரிக்கப்படும் அந்த உறவு (Relationship) 1 இராஜாக்கள் 17-ஐ கொஞ்சம் வார்த்தைகளுக்கு இடையில் புகுந்து தியானியுங்கள். மழை பெய்யாது என்று சொன்னது முதல், மரித்த சிறுபிள்ளையின் ஆத்துமா திரும்ப வேண்டும் என்று எலியா போராடியது வரை… அவர் பேசிய வார்த்தைகளைத் தேவன் அப்படியே அங்கீகரித்தார் என்பது புலப்படும். தேவன் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்த சத்தியங்களை எலியா தன் சொந்த உரிமையாக (Privilege) மாற்றிக்கொண்டார்.
சுருக்கமாக,
- நிற்பது: கீழ்ப்படிதலையும் (Submission), காத்திருத்தலையும் (Waiting) குறிக்கிறது.
- சுமப்பது: தேவனுடைய பாரத்தைப் (Burden) பகிர்ந்துகொள்வதைக் குறிக்கிறது.
- பேசுவது: பரலோகத்தின் தீர்மானத்தைப் பூமியில் செயல்படுத்துவதைக் குறிக்கிறது.
“கர்த்தருடைய ஆலோசனையிலே நின்றவன் யார்?” (எரேமியா 23:18) என்ற கேள்விக்கு, “நான் அவருக்கு முன்பாக நிற்கிறவன்” என்று எலியா கொடுத்த பதில்தான் இந்த ‘வல்லமையுள்ள வார்த்தைகளின்’ இரகசியம்.
எப்போது தேவனுடைய வார்த்தை நம்முடைய வார்த்தையின் அடிப்படையாக மாறுகிறதோ, அப்போது நாம் பேசுவதைப் பரலோகம் தன் சொந்த வார்த்தையாக ஏற்றுக்கொள்கிறது. இறைவார்த்தையை இருதயத்தில் சுமப்பவர்களுக்கு மட்டுமே, தேவன் பேச வேண்டியதை நாமும் பேசும் இந்த உன்னத அதிகாரம் கிடைக்கிறது!