ஜி.கே செஸ்டர்டன் – இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும்

இன்றைய குழப்பங்களும், ஒரு பழைய தீர்க்கதரிசியும்

2026-ம் ஆண்டு, முன்னெப்போதும் இல்லாத அளவு தொழில்நுட்பமும், அதன் வழியாகக் கிடைத்திருக்கும் இணைப்புகளும் தொடர்புகளுமாகத் துவங்கியிருக்கிறது. எவரையும் தொடர்பு கொள்ளலாம், எதிலும் இணைந்துகொள்ளலாம், கற்கலாம், அறியலாம்…!

இப்படி நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களும், நம்மைச் சுற்றியிருக்கும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த (AI) தொழில்நுட்பங்களும் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கலாம். ஆனால், மனித மனம் அமைதியாக இருக்கிறதா? என்றால், நிச்சயமாக முன்புபோல “இல்லை” என்பதே பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும்!

சரியாக 120 ஆண்டுகளுக்கு முன்பு (1905), லண்டன் நகரின் புகை மண்டலத்திற்கு நடுவே அமர்ந்து, ஜி.கே. செஸ்டர்டன் என்ற ஒரு மனிதர் அன்றைய நவீன உலகத்தைப் பார்த்துக் கேட்ட கேள்விகள், இன்று கோயம்புத்தூரிலோ அல்லது சென்னையிலோ இருந்து அமைதியைத் தேடும் மனிதனுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

செஸ்டர்டன் எழுதிய ‘ஹெரடிக்ஸ்’ (Heretics) புத்தகத்தை இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அவர் அன்றே நமது பிரச்சனைகளை முன்னறிந்து கூறியது புரியும்.

மனித மன மாற்றம்

செஸ்டர்டன் காலத்தில், பெர்னார்ட் ஷா போன்ற அறிஞர்கள், “மனிதன் என்பவன் இன்னும் பரிணாம வளர்ச்சி அடையாதவன்; அவனை மாற்ற வேண்டும், புதிய ‘சூப்பர் மேன்’களை உருவாக்க வேண்டும்” என்றார்கள். இன்று நாமும் அதையே வேறு வடிவத்தில் செய்கிறோம். செயற்கை நுண்ணறிவையும், சிப் (Chip) பொருத்திய மனிதர்களையும் எதிர்காலத்தின் தீர்வாகப் பார்க்கிறோம்.

ஆனால் செஸ்டர்டன் இதற்கு அன்றே ஒரு பதில் சொன்னார்: “நவீன உலகம் மனிதனை நேசிப்பதில்லை. அது மனிதனை மாற்றத் துடிக்கிறது. ஆனால் கிறிஸ்தவம் மனிதனை, அவனது பலவீனங்களோடு அப்படியே ஏற்றுக்கொண்டு நேசிக்கிறது.”

தொழில்நுட்பத்தை வைத்து நாம் இங்கேயே சொர்க்கத்தைப் படைக்க முயல்கிறோம். ஆனால் செஸ்டர்டன் எச்சரிப்பது போல, கடவுள் இல்லாத, ஆன்மா இல்லாத அந்தத் தொழில்நுட்ப சொர்க்கம், உண்மையில் ஒரு நரகமாகவே முடியும். “இன்று வாழ்க்கையே நரகமாகத்தான் இருக்கிறது” என்று சொல்பவர்கள் நம்மிடையே எத்தனையோ பேர் உண்டு!

வேலிகள் இல்லாத ஆபத்து

இன்றைய தலைமுறையின் மிகப்பெரிய முழக்கம்: “வரம்புகள் வேண்டாம், எல்லாமே என் விருப்பம்.” சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் “எது சரி, எது தவறு என்று எனக்கு யாரும் சொல்லக்கூடாது” என்ற மனநிலையை நாம் பரவலாகப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட மேற்கத்தியச் சிந்தனை, இன்றைய இளைய தலைமுறையினரிடம் ஆழமாக ஊடுருவிச் சென்று ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளின் பட்டியல் பெரிதாகிக் கொண்டே போகிறது. ஆனால், வேதம் நமக்குப் போதிப்பதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு பாதுகாப்பு வேலியை!

இதற்கு செஸ்டர்டன் ஒரு அழகான உதாரணம் சொல்வார்: “ஒரு செங்குத்தான மலையின் உச்சியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மலையைச் சுற்றி வேலி இருந்தால், குழந்தைகள் தைரியமாக, மகிழ்ச்சியாக விளிம்பு வரை சென்று விளையாடுவார்கள். அந்த வேலியை எடுத்துவிட்டால், கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில் நடுவில் மட்டுமே ஒடிக்கொண்டிருப்பார்கள்.”

கிறிஸ்தவக் கோட்பாடுகள் (Dogmas) மற்றும் வேதாகமக் கட்டளைகள் என்பவை நம்மைச் சிறைப்படுத்தும் சுவர்கள் அல்ல; அவை நாம் வாழ்க்கையை பயமின்றி, மகிழ்ச்சியாக வாழ்வதற்காகக் கடவுள் அமைத்த பாதுகாப்பு வேலிகள். இன்றைய குடும்பங்களில் சிதைவுகள் ஏற்படக் காரணம், சுதந்திரம் என்ற பெயரில் நாம் இந்த “வேலிகளை” இடித்துத் தள்ளியதுதான். கிறிஸ்துவுக்குள் மட்டுமே மெய்யான சுதந்திரம் உண்டு என்பதைச் சபைகள்தான் இன்று சரியாகப் போதிக்க வேண்டும்.

சிந்தனையின் தற்கொலை

“உனக்கு அது உண்மை, எனக்கு இது உண்மை” (My Truth vs Your Truth) என்ற வாதம் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. நிலையான சத்தியம் (Absolute Truth) என்று ஒன்று இல்லை என்று உலகம் போதிக்கிறது. இதில் நம் பிள்ளைகள் எளிதில் விழுந்துவிடுகிறார்கள்.

செஸ்டர்டன் இதைச் “சிந்தனையின் தற்கொலை” என்கிறார். சத்தியம் என்று ஒன்று இல்லாவிட்டால், விவாதம் என்ற ஒன்றுக்கே அர்த்தம் இல்லை. “ஒரு மனிதன் கடவுளை நம்புவதை நிறுத்தும்போது, அவன் எையுமே நம்பாதவன் ஆவதில்லை; மாறாக, அவன் எதை வேண்டுமானாலும் நம்புபவனாக மாறிவிடுகிறான்.”

இன்று மக்கள் ஜோதிடம், ஈர்ப்பு விதி (Law of Attraction), புதுயுகச் சிந்தனைகள் (New Age thoughts) போன்ற எத்தனையோ புதிய நம்பிக்கைகளுக்குள் விழுவதற்குக் காரணம், அவர்கள் உறுதியான விசுவாசத்தை இழந்துவிட்டதே.

மெய்யான புரட்சி

செஸ்டர்டன் நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்:

  • இன்றைய காலகட்டத்தில், ஒருவன் உண்மையான கிறிஸ்தவனாக இருப்பதுதான் மிகப்பெரிய புரட்சி (Rebellion).
  • எல்லோரும் சுயநலமாகத் திரியும்போது, பிறருக்காக வாழ்வது புரட்சி.
  • எல்லோரும் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகும்போது, ஆலயத்தில் அமைதியாக மண்டியிட்டு ஜெபிப்பது ஒரு மாபெரும் புரட்சி.

நாம் பழைய காலத்திற்குத் திரும்பத் தேவையில்லை. ஆனால், தொலைந்து போன பழைய சத்தியங்களை இந்த நவீன காலத்திற்குள் மீட்டெடுக்க வேண்டும். உலகம் தலைகீழாக நிற்கும்போது, நேராக நிற்பவன் வினோதமாகத்தான் தெரிவான். ஆனால், இன்று நாம் அப்படித் தெரிவதுதான் நமது வெற்றியே. இதை உணர்ந்து செயல்படுவது, கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவர் மேலும் விழுந்திருக்கும் பணி!

(பின்குறிப்பு: ஜி.கே. செஸ்டர்டன் (1874–1936) ஆங்கில இலக்கிய உலகின் ஒரு மாபெரும் ஆளுமை. நம்மில் பலருக்கு ‘நார்னியா’ (Narnia) புகழ் சி.எஸ். லூயிஸைத் தெரிந்திருக்கும். ஆனால், ஒரு தீவிர நாத்திகராக இருந்த லூயிஸை, கிறிஸ்துவை நோக்கித் திருப்பியதில் செஸ்டர்டனின் எழுத்துக்களுக்குத்தான் (குறிப்பாக ‘The Everlasting Man’) முக்கிய பங்குண்டு என்பது பலருக்குத் தெரியாது. ‘முரணுரைகளின இளவரசர்’ – Prince of Paradox என்று அழைக்கப்பட்ட இவர், ஆழமான இறையியல் உண்மைகளைச் சலிப்பூட்டாமல், நகைச்சுவை கலந்த தர்க்கத்தோடு (Logic) விளக்குவதில் வல்லவர். 100 வருடங்களுக்கு முன்பே இன்றைய நவீன உலகத்தின் சவால்களைக் கணித்து எழுதிய ஒரு தீர்க்கதரிசி இவர். Heretics என்கிற ஜி.கே செஸ்டர்டனின் புத்தகம் ஆங்கிலத்தில் மட்டும் அமேசான் தளத்தில் உண்டு. இறைச்சித்தமிருந்தால் இவரது கட்டுரைகளைத் தொடந்து இந்தத் தளத்தில் எழுதுகிறேன்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *