எண்ணாகமம் – என்ன ஆகமம்?

அதிகம் பேரால் வாசிக்கப்படாத ஒரு புத்தம் வேதாகமத்தில் இருக்கிறது என்றால் அது அநேகமாக இந்தப் புத்தகம்தான். வேதாகமத்தை வருடத்திற்கு இத்தனை முறை படித்தாகவேண்டும் என்கிற கட்டாயத்துள் தங்களை வைத்திருப்பவர்கள் இந்தப் புத்தகத்தைக் கடந்தது எப்படி என்பதை அவர்கள்தான் விளக்கவேண்டும். 🙂 

முதல் பத்து அதிகாரங்கள் சற்று விளக்கமாக சில முறைமைகளைக் கொண்டிருப்பது உண்மைதான். வெகு விளக்கமாக வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, பாளையம் இறங்கவேண்டிய இடங்கள், மோசே மற்றும் ஆரோனின் வம்ச வரலாறு, ஆசரிப்புக்கூடாரத் திட்டங்கள், அவர்களது பணிகள், ஆசரிப்புகள், விரதங்கள், சட்டங்கள், பலி விவரங்கள், லேவியரின் உரிமைகள் மற்றும் பண்டிகை முறைகள் முதல் 10 அதிகாரங்களில் உள்ளன. 

இவற்றை வாசிக்கத் துவங்குபவர்கள் அயர்ச்சி அடைந்து அவற்றைத் தாண்டமுடியாமல் அவசர அவசரமாக உபாகமத்துக்குள் சென்று விடுவார்கள். ஆனால், இப்புத்தகத்தை வகையறுத்துப் படிக்க இயன்றால், அப்படி விடவேண்டிய அவசியமில்லை.  இப்புத்தகத்தில் இருந்து, நம் தேவன் எந்த ஒரு காரியத்தையும் சும்மா சொல்லிவிட்டுச் செல்பவர் அல்ல; கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக்கொடுப்பதுபோலச் சொல்லிக்கொடுத்து ஸ்பூன் ஃபீடிங் எனப்படும் அளவில் நன்றாகப் புரியும் வண்ணம் கற்றுத் தருபவர் என்பதை உணரலாம். மேலும், தான் செய்யச் சொல்லும் எதற்கும் அவர் முக்கியத்துவம் கொடுப்பவர்; தன் ஜனங்களும் காரியங்கள் எதையும் அலட்சியமாக எனோதானோவென்று செய்யவிடுவதில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம். இதுவரை இதை உணரவில்லையென்றால், சிரத்தை எடுத்து வாசிப்பது அதை உணர்த்துவது உறுதி.

மேலும், இப்புத்தகத்தில் மூன்று வகையாகப் பிரிக்க முடிகின்ற ஏழு சோதனைகளை வேத அறிஞர்கள் அடையாளம் காட்டுகின்றனர். அவற்றை அறிந்துகொள்ளவாவது ஒருமுறை கஷ்டப்பட்டு படித்துவிடுவது நல்லது. அதன்பின் அதுவே பலமுறை வாசிக்க நிச்சயம் ஏதுவாகிவிடும்.

முதல் மற்றும் ஏழாவது சோதனைகளில் இஸ்ரேல் தங்களது இக்கட்டான நிலையைப் பற்றி முணுமுணுக்கிறார்கள் (11:1-3; 21:4-9). அவர்களுக்கு வெங்காயம், வெள்ளைபூண்டின் வாசனை நினைவுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. முன்பு நன்றாக இருந்ததாக அவர்களாகவே நினைத்துப் புலம்புகிறார்கள்.

இரண்டாவது மற்றும் ஆறாவதில் தேவன் உணவு (11:4-34) மற்றும் தண்ணீர் (20:2-13) வழங்குவார் என்பதில் வந்த விசுவாசப் பற்றாக்குறையை உள்ளடக்கியது. 

மூன்றாவது மற்றும் ஐந்தாவது சோதனைகள் மோசேயின் தலைமைக்கு மிரியம் மற்றும் ஆரோன் (12:1-16) மற்றும் கோரா, தாத்தான் மற்றும் அபிராம் (16:1-17:13) ஆகியோரிடமிருந்து வரும் சவால்கள்! ஏன் மோசே மட்டும்தானா என்கிற நாற்காலி ஆசை!

மையமாக வரும் நான்காவது சோதனை, அது நம்பிக்கையின்மையின் காரணமாக இஸ்ரவேலர் தேவன் தர வைத்திருக்கும் தேசத்துக்குள் நுழையத் தவறியது (13:1–14:38).

இவற்றையெல்லாம் நமக்கு இன்றும் சபைக்குள்  வரும் இரண்டு ஆபத்தான விஷயங்களாகப்  பார்க்க வேண்டியது அவசியம்.

இரண்டாவது, நான்காவது மற்றும் ஆறாவது சோதனைகளில் உள்ள பிரச்சனை நம்பிக்கையின்மை. இதற்கு அடிப்படையானவை சந்தேகம், நம்பிக்கையின்மை, தைரியமின்மை மற்றும் பயம். 

மூன்றாவது மற்றும் ஐந்தில் உள்ள பிரச்சனை அதீத நம்பிக்கை. இதற்கு அடைப்படையானவை எதிர்ப்புணர்வு, பெருமை, ஆணவம் மற்றும் அதிகாரத்திற்கான ஆசை. 

இப்படி எண்ணாகமத்தில் நாம் அறிபவை எல்லாம் இந்த இரண்டு ஆபத்துகளும் இஸ்ரேல் மற்றும் சபையில் எதிர்காலத்திலும் இருக்கும் என்பதை நினைவுபடுத்த திருஷ்டாந்தங்களாக இருக்கின்றன.

கடைசியாக வரும் பல வகையான சட்டங்கள் என்று இஸ்ரவேலரை வழிநடத்தியவை. அவை இக்கால கட்டத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதே ஒரு சுவாரசியமான வேத ஆராய்ச்சி அனுபவத்துக்குள் கொண்டு செல்லும். 

சற்று சமயம் எடுத்து தியானித்தால், இப்புத்தகத்தில் இருந்து வெறுமனே இரண்டு மூன்று வசனங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சத்தை விட்டுவிட்டுச் சென்றுவிடமாட்டோம். அல்லது ஒப்புக்குப்புரட்டிய குற்ற உணர்ச்சி இல்லாமல் எண்ணாகமத்தையும் ஆர்வத்துடன் வாசிக்கத் துவங்கிவிடுவோம்.

(குறிப்பு: இந்தக் கட்டுரை எண்ணாகம புத்தகத்தின் விளக்க உரை இல்லை. அதையும் விட்டுவிடாமல் வாசிக்க ஒரு சிறு உதவி மட்டுமே)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *