
Apologetics என்கிற காப்புவாதம் தமிழ் கிறிஸ்தவத்தில் குறைவு. காரணம் இங்கு கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்கள் வேதத்தைக் கற்று அதில் குற்றம் கண்டறிந்தபின் அதைபற்றிக் கேள்வி கேட்பவர் அல்லர். வெறுமனே “என் மத உணர்வைப் புண்படுத்திவிட்டாய்” என்று கிறிஸதவத்தை எதிர்ப்பவர்கள்தான் அதிகம். உண்மையில், வேதத்தைக் கற்று அதன்பின் நம்மைக் கேள்விகேட்டால் அதற்குப் பதில் அளிக்க நிச்சயம் நமக்குப் பயிற்சி தேவை. இதில் நம் இறைஞானமும் வளரும்.
இது வரை கடினமான கேள்விகளைக் கேட்கும் ஒரு சூழல் இங்கு இல்லை. (இஸ்லாமியர் மத்தியில் Apologitics செய்யும் வெகு சிலர் மட்டும் உண்டு). என்றாலும், எதிர் பேசுபவர்களுக்கு சாந்தத்துடனும், வணக்கத்துடனும் பதில் தர கிறிஸ்தவர்கள் பழகி இருக்க வேண்டும். உடனடியாக, தர்க்கங்களுக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், நம் விசுவாச அஸ்திபாரத்தை உறுதிப்படுத்திக்கொண்டே செல்ல, Apologetics உதவும். அதன்விளைவாக, நமக்கே தெரியாமல் உள்ளத்தில் உறைந்துகிடக்கும் பல கேள்விகள், சந்தேகங்களுக்கு விடைகளைப் பெற்று தீர்வுகளால் நம்மை அலங்கரித்துக்கொண்டே செல்வோம்.
காப்புரை என்பது தத்துவஞானிகளுக்கும் , வேத பண்டிதர்களுக்கும் உரித்தானது என்று நினைக்கக் தேவையில்லை. இறை அறிவின் ஒரு முக்கியப் பகுதிதான் தன்விளக்கம். விசுவாசப்பயிற்சி இது. காரணம் நம் விசுவாசத்தைப் பற்றிய சந்தேகங்கள் நம்மிடையே இருப்பதுதான் பல பல புரட்டான உபதேசங்களைக்கூட ஆராயாமல் ஏற்றுக்கொள்ளச் செய்கிறது. பொத்தாம்பொதுவான கிறிஸ்தவ வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டு செல்லக்காரணமும், கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைச் சத்தியத்தில்கூட ஆயிரம் கேட்கப்படாத கேள்விகள்தான். அவற்றைக் கேட்கவோ, பதில்களைத் தேடவோ இருக்கும் தயக்கம் Apologetics-ல் மாற்றப்படும்.
மேற்கத்திய நாடுகளில் தான் Apologetics அதிகம். காரணம் அவர்கள் கல்விமுறை எதையும் கேள்வி கேட்க ஊக்கப்படுத்தவும் ஆராய்ந்து அறியவும் ஊக்குவிக்கும் ஒன்று. இங்கு இதுவரை குறைவு என்றாகும் ஒருநாள் மூடருக்கு மறு உத்தரவு கொடுப்பதற்கும், கொடாமல் இருப்பதற்கும் Apologetics என்கிற காப்புவாதம் அவசியம் தேவை.
நம்மைச் சுற்றி இருப்பவர்களில் இறைநம்பிக்கையைக் குறைத்து மதிப்பிடாமால் சரியாக வேதத்தின் வழியாக நிதானிப்பது சுவிசேஷத்தின் முக்கிய பகுதி. வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்கள் எல்லாரும் நாம் தரும் வார்த்தைகளால் இளைப்பாறுதல் பெற வேதமே வழிகளை நமக்கு வைத்திருக்கிறது.
Apologetics தமிழ் திருச்சபைகளில் அதிகம் உக்குவிக்கப்படட்டும். குறிப்பாக வாலிப சகோதர சகோதரிகளிடம். அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் இக்காலத்தில் அக்காலத்தில் இருந்ததைப் போன்றதல்ல.
குறிப்பு: Apologetics என்றால் கிறிஸ்தவ நம்பிக்கைகளை பகுத்தறிவுக்கு உட்படுத்திய ஒன்றாக விவரித்துக் காண்பிப்பது. நம்பிக்கைகளுக்கு எதிரான கடுமையான கேள்விகளுக்கு பதில்களைத் தெளிவாக உரைப்பது.
Apologeticsற்கு – காப்புரை என்கிற வார்த்தை மொழிபெயர்ப்பாக வருகிறது. எனக்குக் காப்புவாதம் என்கிற வார்த்தையே இன்னும் பொருத்தமானதாகத் தெரிகிறது.