ஒரு பாத்திரத்தைச் சுத்தமாக்க வேண்டுமானால் நீர் வேண்டும் அல்லது ஒரு சிறு துண்டு துணியாவது வேண்டும். அதாவது, எதைச் சுத்தமாகக வேண்டுமானாலும் வேறு ஏதாவது ஒன்று வேண்டும்; நீர், நெருப்பு இப்படி ஏதாவது ஒன்று.
இப்படி ஒரு பாத்திரத்தைக் கூட வெளிப்புறப்பொருள் ஒன்றைக் கொண்டுதான் சுத்தமாக்க இயலும் என்கிறபோது மனிதன் மட்டும் தன் அகத்தைச் சுத்தமாக்கிக் கொள்ளத்தன்னால் இயலும் என்று நினைப்பது விந்தை.
இதை அறிந்தவர் கிறிஸ்து.
எனவே, தன் இரத்தம் கொண்டு நம் இரத்தம் சுத்திகரிக்க கொண்டுவந்தார் தம் உன்னதமான தூய்மையாக்கலை.
இதை அறிந்தவன் கிறிஸ்தவன்.
——————————————————————————————-
Yasha’ (யெஷா) என்கிற எபிரேயப் பெயர்ச்சொல் 200 முறைக்கும் அதிகமாக பழைய ஏற்பாட்டில் வருகிறது. இந்தப் பெயர் வரும் வண்ணமாக ‘இவருக்கு யெஷுவா என்று பெயரிடுவாயாக’ என்று தேவன் கிறிஸ்து பிறப்பின்போதே மரியாளுக்குக் கட்டளையிட்டார்.
இதற்கு ஆங்கிலத்தில் Save என்கிற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. யெஷா என்ற இந்தச் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் எபிரேயத்தில் உண்டு: விடுதலை அளித்தல் மற்றும் அகலமாகக் (கதவை) திறத்தல். இவை இரண்டையுமே இயேசுவாகிய யெஷுவா செய்தார்.
பாவச் சிறையிருப்பின் கதவைத் திறந்தார். விடுதலையும் அளித்தார்.
——————————————————————————————-
ஒருவர் நமக்காக அதைத் தந்தார், இதைச்செய்தார் என்னும்போது எப்படி அகமகிழ்கிறோம்? எப்படி நெகிழ்ச்சி அடைகிறோம்?
ஒருவர் நமக்காவே…. நமக்காகவே மரித்தார் என்றால் அது நம்முள் எப்படிப்பட்ட தாக்கத்தை, அதிர்ச்சியை, பெரும் பாரத்தை உண்டுபண்ண வேண்டும். அப்படி இருக்கிறதா நம் உணர்வுகள்?
அப்படி ஒரு உணர்வு இருந்தால் எப்படி இருக்கும் நம்முள் வரும் மாற்றம்?
——————————————————————————————-
ஒரு நெருக்கடி. வேறு வழியில்லாமல் ஒரு பொருள் அடைமானத்தில் செல்கிறது. நகையோ, பானையோ ஏதோ ஒன்று. அது மீட்கப்படாவிட்டால் அடகுக்காரனிடம் மூழ்கிவிடும். பொருளோ விலையேறப்பெற்றது. ஒருவர் வருகிறார். இந்தப் பொருளை உரியவரிடம் கொடுத்துவிடுங்கள். இவருக்குப் பதிலாக நான் அடிமையாகி வேலை செய்கிறேன் என்கிறார். மீட்டும் தருகிறார்.
மீட்கும் பொருள் என்ற வார்த்தைக்கு லுட்ரான் என்கிற கிரெக்கப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு அடிமையை விலைக்கு வாங்கப் பயன்படுத்தப்படும் விலையைக் குறிக்கும். அதாவது அடிமையான நம்மை மீட்க நமக்குப் பதிலாக அவர் அடிமையாக மாறி நம்மையெல்லாம் விடுவித்தார்.
அடகுவைத்தவர் நாம். பொருள் நம் ஆத்துமா. அடகுக்காரன் கடவுளின் தண்டனை. அடிமையாகி மீட்கும் பொருளாக மாறியவர் இயேசுக்கிறிஸ்து. இதுபோன்ற ஒரு தெய்வம் ஏது? இவர் போன்ற அன்பு யாருக்குண்டு?
அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார். மத்தேயு 20:28, மாற்கு 10:45. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. I தீமோத்தேயு 2:6.
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பிலிப்பியர் 2:7
——————————————————————————————-
சீஷர்களின் விசுவாசம் உண்மை. ஆனால், கடினமான சூழல் என்று ஒன்று வரும்போது அவர்களால் அதைச் செயல்படுத்த முடியாமல் தோற்று ஓடவேண்டிய நிலைமை உருவானது. கிறிஸ்துவே அந்த மேசியா என்று அறிந்த விசுவாசம் இருந்தாலும் அதைச் செயல்படுத்த பரிசுத்த ஆவியானவர் வரவேண்டியிருந்தது என்கிறார் ஆஸ்வால்ட் சேம்பர்ஸ். இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தவுடன் அவர்கள் சிதறிய ஓடிவிட்டாலும், உயிர்த்தழுந்த கிறிஸ்து மீண்டும் அவர்களை ஏற்றுக் கொண்டார். அதாவது கிறிஸ்துவே மீண்டும் தன் தெரிந்துகொள்ளுதலை உறுதிப்படுத்துகிறார். அதன்பின், பரிசுத்தஆவியானவர் இறங்கியவுடன் அவர்களது விசுவாசம் செயல்படும் விசுவாசமாக மாறியது. அனேகமாக அனைவருமே இரத்தசாட்சியாக மரிக்கும் அளவு அவர்களது விசுவாசம் துணியச்செய்தது.
நம் வாழ்விலும் கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசம் இவ்வுலகப் பாடுகளின் வழியே கடந்துசெல்லும்போது அவை செயல்பட பரிசுத்தஆவியானவரை நம்மோடு இணைந்து செயல்பட அனுமதிக்கவேண்டும். அவரோடு இணைந்து பயிற்சி செய்யப்படவேண்டும்.
தொடக்கத்தில் உணர்வுகளாலும், ஆசிர்வாதங்களாலும் கட்டமைக்கப்படும் நம் விசுவாசம் ஒரு காலகட்டத்தில் ஆவியானவரோடு பயிற்சிசெய்யப்படும் விசுவாசமாக மாற வாழ்வின் கடினமான சூழல்களை தேவனே அனுமதிக்கிறார். இந்த உண்மையைப் புரிந்துகொள்வோமானால், விசுவாசம் செயல்படும் விசுவாசமாக மாறும். சூழல்களைக் கண்டு கலங்குவது மாறும்.