இவ்வுகவரலாற்றை மட்டுமல்ல, இரட்சிக்கப்படுகிற ஒவ்வொருவருடைய வரலாற்றையும் இரண்டாகப் பிரிக்கிறது சிலுவை.
கிறிஸ்துவின் சிலுவைக்கு முன் சிலுவைக்குப்பின் என்று ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்வும் பெரும் பிரிவாகப் பிரிக்கப்படுவது நிச்சயம். கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம். தேவகோபாக்கினைக்குத் தப்பிக்கொண்டோம்.
———————————————————————————————————
இவன் தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்கிறான், இது யூதர்களின் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமானது என்று வேதபாரகர் முதலில் இயேசுவின்மேல் குற்றம்சாட்டத்துவங்கினர்.
ரோமச் சட்டங்களின்படி இது ஒரு பெரியவிஷயமாகவும், இதெல்லாம் இயேசுவை மரணதண்டனைக்கு உரியவராகக் காட்டவில்லை என்று கருதிய பிலாத்து இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று உரத்துச் சொன்னான்.
இதனால், அதிர்ச்சியடைந்த யூத வேதபாரகர்களும் பரிசேயர்களும் குற்றச்சாட்டை மாற்றினர். தன்னை இராஜாவாவென்கிறான் என்றும் அப்படிச் சொல்கிறவன் ரோமத் தலைமையான இராயனுக்கே எதிரி என்றும் பிலாத்துவையே பயமுறுத்தினார்கள்.
இப்பொழுது ரோமச்சட்டத்தின்படி இது மரணதண்டனைக்கு உரியது ஆகையால் பிலாத்து மீண்டும் நான் இவரிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று முணுமுணுத்துக் கொண்டே சிலுவைக்குக் கிறிஸ்துவை ஒப்புக்கொடுத்தான்.
இப்படியாகக் கிறிஸ்து அநியாயமாகக் கொல்லப்பட்டார்; நம்முடைய அநியாயங்களுக்காகக் கொல்லப்பட்டார். அநியாயத்தீர்ப்பை ஏற்று நம்மை நியாயத்தீர்ப்புக்குத் தப்புவித்தார்.
(யோவான் 19:1-18)
———————————————————————————————————
சிவப்பான அந்த இரத்தநாளம் வேதத்தில் ஆதியாகமத்தில் இருந்து வெளிப்படுத்தினவிசேஷம் வரை பாய்ந்தோடுகிறது. – அல்பன் டக்ளஸ்
———————————————————————————————————
நம்முடைய பாவங்களைச் சுமந்ததால் கிறிஸ்து பாவியாகவில்லை, மாறாக அவர் ‘பாவமானார்’. பாவமாம்சத்தின் ‘சாயலாக’ வந்தாரே ஒழியப் பாவியாக அவர் வரவில்லை. அதாவது பாவம் செய்யக்கூடிய உடல் அவரிடம் இருந்தது, ஆனால் பாவமில்லை. இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளவேண்டியது அவசியம்.
அவர் நம் அனைவருடைய பாவங்களையும் சுமந்துதீர்த்தார். அங்கு தண்டனை மட்டுமே அவர்மேல் விழுந்ததே ஒழிய ‘தண்டனைக்குறிய காரணம்’ அவர்மேல் விழவேயில்லை. பொய்க்குற்றம் மட்டுமே சுமத்தப்பட்டது. அவரோ குற்றமற்றவராகவே மரித்தார்! சிந்தப்பட்ட அவரது இரத்தம் கடைசிச் சொட்டுவரை குற்றமில்லாத மாசற்ற இரத்தமாகவே இருந்தது.
பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். II கொரிந்தியர் 5:21
தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். ரோமர் 8:3
பிறப்பில் இருந்து மரிக்கும் வரை முழுவதும் பாவமில்லாமல் மனிதனாக இருந்தவர் கிறிஸ்து.