
கோடிக்கணக்கான மனிதர்கள் கடவுளைத் தேடிக்கொண்டிருப்பது உண்மையிலேயே இயல்பான விஷயம் தானா? இல்லை விவரமற்ற, முதிர்ச்சியற்ற, அறியாமையால் செய்யப்படும், பகுத்தறிவற்ற செயலா?
மனிதன் ஏன் தன் கண்களால் பார்க்க இயலாத ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறான்? இது வெறும் பொழுதுபோகாமல் செய்யப்படும் காரியமா அல்லது கஷ்ட காலங்களில் மன சமாதானத்திற்காகத் தேடிக்கொள்ளும் ஒரு ‘உளவியல் சமாளிப்பா’ (Psychological Coping Mechanism)?
அருள்நாதர் இயேசு கிறிஸ்து சொன்னார்: “தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்.” பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாசகத்தைச் சுவர்களிலும் பாறைகளிலும் சுண்ணாம்பால் சுவிசேஷகர்கள் எழுதியிருப்பார்கள். இன்று அதையெல்லாம் காண்பது அரிது!
ஆனால், இது ஏதோ ஒரு தத்துவார்த்தமான அறிவுரை அல்ல; மனித இனத்தின் ஆழமான தாகத்திற்கு அவர் கொடுத்த மிக நேரடியான பதில். தேடுதல் என்பது மனிதனுக்குப் புதிய விஷயம் அல்ல. ஆதியில் மனிதன் தன் படைப்பாளரோடு ஒரு மிக நெருக்கமான உறவில் இருந்தான். அந்த உறவின் தடம், நம்முடைய ‘டிஎன்ஏ’ (DNA) போலவே தலைமுறை தலைமுறையாக நமக்குள் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. நாகரிகம் மாறினாலும், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் ஆத்துமாவின் ஆழத்தில் இருக்கும் அந்தத் தேடல் மட்டும் ஒருபோதும் நிற்பதில்லை.
இது ஒரு பலவீனமா?
கடவுளைத் தேடுவது என்பது மனிதன் தன் பயத்தின் காரணமாக, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்து தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் ஒரு ‘உளவியல் வடிகால்’ என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், இதில் இருக்கும் தர்க்கப் பிழையை ஒரு எளிய உதாரணம் விளக்கும். இதற்கு நமக்கு சி.எஸ். லூயிஸ் உதவுகிறார்.
அவர் வைக்கும் மிக வலுவான தர்க்கம் இது:
“ஒரு மனிதனுக்குப் பசி எடுக்கிறது என்றால், அந்தப் பசியைத் தீர்க்க ‘உணவு’ என்கிற ஒன்று உலகில் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு மனிதனுக்குத் தாகம் எடுக்கிறது என்றால், அந்தத் தாகத்தைத் தீர்க்க ‘தண்ணீர்’ என்கிற ஒன்று நிஜமாகவே இருக்கிறது என்று அர்த்தம்.”
அதேபோல, இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஒரு தற்காலிக அனுபவத்தாலும் தீர்க்க முடியாத ஒரு வாஞ்சை மனிதனுக்குள் இருக்கிறது என்றால், அவன் வேறொரு உலகத்திற்காகப் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதே அதற்கான மிகச் சரியான விளக்கம். பசி என்பது எப்படி ஒரு பலவீனம் இல்லையோ, அதுபோலவே கடவுளைத் தேடுவதும் ஒரு கற்பனை அல்ல; அது ஆத்துமாவின் அடிப்படைத் தேவை.
ஓய்வற்ற இருதயம்!
கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலேயே ஹிப்போவின் புனித அகஸ்டின் (St. Augustine of Hippo) இதை மிகத் தெளிவாகச் சொன்னார்:
“ஆண்டவரே, நீர் எங்களை உமக்காகவே படைத்தீர்; எங்கள் இருதயம் உம்மில் ஓய்வுபெறும் வரை அது அமைதியற்றே இருக்கும்.“
மனிதன் ஏன் ஓடிக்கொண்டே இருக்கிறான்? ஏன் எதிலும் அவனுக்குப் பூரண திருப்தி கிடைப்பதில்லை? ஏனெனில், அவன் ஒரு ‘நித்தியமான இலக்கிற்காக’ வடிவமைக்கப்பட்டவன். இதையே, இறையியலாளர் ஜான் கால்வின் (John Calvin) இன்னும் நுணுக்கமாக விளக்குகிறார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவன் ஒரு ‘தெய்வீக உணர்வை’ (Sensus Divinitatis) விதைத்திருக்கிறார். கால்வின் இதை ‘சமயத்தின் வித்து’ (Seed of religion) என்று அழைக்கிறார். அதாவது, ஒருவன் எவ்வளவுதான் நாத்திகம் பேசினாலும், விதண்டாவாதம் செய்தாலும், அவனது ஆழ்மனதில் கடவுளைப் பற்றிய அறிவு ஒரு அழிக்க முடியாத தழும்பாகப் பதிந்திருக்கிறது என்பதே இதன் பொருள்.
எனக்குப் பிடித்த இன்னும் இரு இறையியலாளர்களின் கூற்றுகளையும் இங்கே நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஒன்று, சி.எஸ். லூயிஸின் அபிமான எழுத்தாளரான ஜி.கே. செஸ்டர்டன் (G.K. Chesterton). இவர் மனிதனின் தேடலை ஒரு வினோதமான கோணத்தில் அணுகுகிறார். மனிதன் தவறான வழிகளில் இன்பத்தைத் தேடுவதற்குக் காரணமே, அவனது ஆத்துமா அறியாமையில் தன் படைப்பாளரைத் தேடுவதுதான் என்கிறார்:
“ஒரு விபச்சார விடுதியின் கதவைத் தட்டுகிறவன் கூட, உண்மையில் அங்கே இறைவனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறான்.“
கொஞ்சம் அதிரடியாக இருக்கும் இதன் விளக்கம் இதுதான்: மனிதன் பாவமான காரியங்களில் ஈடுபடும்போது கூட, உண்மையில் அவன் தேடுவது ஒரு மேலான இன்பத்தையும் திருப்தியையும்தான். அந்தப் பூரண திருப்தி இறைவனிடம் மட்டுமே இருக்கிறது என்பதை அறியாமல், அவன் தவறான கதவுகளைத் தட்டுகிறான் என்பது செஸ்டர்டனின் வாதம்.
இன்னொருவர், கணித அறிவியல் வல்லுநரும் மிகச் சிறந்த இறையியலாளருமான பிளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal). மனித இதயத்தில் இருக்கும் அந்த ‘வெற்றிடத்தைப்’ பற்றி அவர் சொன்னது மிகவும் பிரபலமான ஒரு கூற்று:
“ஒவ்வொரு மனிதனின் இருதயத்திலும் இறைவனால் மட்டுமே நிரப்பப்படக்கூடிய ஒரு தெய்வீக வெற்றிடம் (God-shaped vacuum) இருக்கிறது. படைக்கப்பட்ட எந்த ஒரு பொருளினாலும் அந்த இடத்தைப் பூர்த்தி செய்ய முடியாது; நம்மைப் படைத்த தேவன் ஒருவரால் மட்டுமே அந்த இடத்தை முழுமையாக்க முடியும்.“
அதேல்லாம் சரி, பைபிள் என்ன சொல்கிறது?
இதை வாசிக்கும் நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்றால், இதயம் தேடும் ‘நித்தியம்’ பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதையும் பார்த்துவிடுங்கள். இந்தத் தேடலைப் பற்றி வேதாகமம் மிகத் தெளிவான பல வசனங்களைச் சான்றுகளாக முன்வைக்கிறது:
- உள்ளத்தில் வைக்கப்பட்ட நித்தியம்: தேவன் மனித இதயத்தில் ஒரு ‘நித்திய வெற்றிடத்தை’ வைத்திருக்கிறார். நித்தியமான ஒருவரால் மட்டும்தான் அந்த இடம் நிரப்பப்பட முடியும் என்பதால், அதுவரை மனித இதயம் அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கும்.”அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; நித்தியத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்…” (பிரசங்கி 3:11)(குறிப்பு: ‘உலகத்தையும்’ என்று பழைய வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது – அது தவறானது).
- உள்ளுக்குள் இருக்கும் வெளிச்சம்: தேவன் தம்மைப் பற்றிய அறிவை ஏதோ ரகசியமாக வைக்கவில்லை; ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியிலும் அதைத் தெளிவாக எழுதியிருக்கிறார்.”தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே பிரத்தியட்சமாயிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்குப் பிரத்தியட்சப்படுத்தியிருக்கிறார்.” (ரோமர் 1:19)
- தடவித் தேடும் ஆன்மா: நாம் எங்கே பிறக்க வேண்டும், எந்த எல்லையில் வாழ வேண்டும் என்பதைத் தேவன் தற்செயலாகத் தீர்மானிக்கவில்லை. இருட்டில் இருப்பவன் சுவரைத் தடவித் தேடுவது போல, மனித ஆத்துமா தாகத்தோடு தன் மூலத்தைத் தேடுகிறது.”…தேவனைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாக அவர்கள் அவரைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.” (அப்போஸ்தலர் 17:27)
- மனசாட்சி என்னும் அகச் சாட்சி: தவறு செய்யும்போது உள்ளுக்குள் எழும் அந்த உறுத்தல், நாம் நமக்கு மேலான ஒரு உயர்ந்த நீதிபதிக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை ஒவ்வொரு கணமும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.”…அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும்… நியாயப்பிரமாணத்தின் கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.” (ரோமர் 2:15)
- கர்த்தர் தந்த விளக்கு: மனுஷனுடைய ஆவி என்பது வெறும் உயிர் அல்ல; அது அவனுடைய உள்ளத்தின் ஆழங்களைச் சோதிக்கும் ஒரு தெய்வீகக் கருவி. அவன் அதை மழுப்ப நினைத்தாலும் முடியாது.”மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த விளக்காயிருக்கிறது; அது உள்ளத்தின் ஆழங்களைச் சோதித்துப்பார்க்கும்.” (நீதிமொழிகள் 20:27)
ஆக, கடவுளைத் தேடுவது என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல; அது நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதற்கான அடையாளம். படைத்தவரை நோக்கித் திரும்பாத வரை, மனித ஆத்துமா ஒரு அலைபாயும் அகதிதான்.
அருள்நாதர் சொன்னது போல, உண்மையாகத் தேடுகிற எவனும் அவரைத் தப்பாமல் கண்டடைவான். ஏனெனில், நீங்கள் அவரைத் தேடுவதை விட, உங்கள் ஆத்துமாவின் கதவருகே அவர் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்.