
“ஆமா, அப்படியே படிச்சுக் கிழிச்சிட்டாரு… எங்க…இந்தக் கேள்விக்கு பதில் சொல்பார்ப்போம்” என்று ஆசிரியர்கள், பெற்றோர் சொல்வது வழக்கம். ஆனால், உண்மையிலேயே, அப்படிப் படித்துக் கிழித்தவர் ஒருவர் வரலாற்றில் இருந்தார். அதுவும் பைபிளை!. அவர் பெயர் தாமஸ் ஜெஃபர்ஸன். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்; நன்றாகப் படித்தவர் என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். கிறிஸ்துவை விசுவாசிக்காமல் கிறிஸ்தவராக வாழ முயற்சிப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், அந்நாட்டின் சுதந்திரப் பிரகடனத்தை வரைந்தவருமான தாமஸ் ஜெஃபர்ஸனைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், அவர் பைபிளை (படித்துக்) கிழித்தவர் என்பது பலரும் அறியாத ஒரு செய்தி.
ஜெஃபர்ஸனின் ‘வித்தியாசமான’ வேதாகமம்
ஜெஃபர்ஸனைப் பொருத்தவரை இயேசு கிறிஸ்து ஒரு பெரிய தத்துவஞானி, நல்ல ஒழுக்க நெறிகளை போதித்தவர் என்பவை மட்டுமே. ஆனால், அவர் தேவகுமாரன், சிலுவையில் நமக்காக மரித்து தன் கிருபையால் இரட்சிப்பை அளிக்கிறவர் என்பதையெல்லாம் ஜெஃபர்ஸனுக்கு ஏற்புடையதாக இல்லை. கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அதன் விசுவாச அம்சங்களை நிராகரிப்பதே அவரது நோக்கமாக இருந்தது. ஒருவகையில், இது தனக்கு வசதியான ஒரு “கிறிஸ்தவத்தை” உருவாக்கும் முயற்சி. இதை ஒருமாதிரி, “கஸ்டமைஸ்டு கிறிஸ்தவம்” (customized Christianity) என்று சொல்லாம்.
இது ஒருவேளை ஆச்சரியமாக இருந்தால், இதையும் குறித்துக்கொள்ளுங்கள். உங்கள் சபைக்குள்ளேயே இப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு அருகில் வாரவாரம் அமர்ந்திருக்கக்கூடும்.
ஜெஃபர்ஸன் புதிய ஏற்பாட்டை எடுத்து, அதில் இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்கள், அவருடைய தெய்வீத்தன்மையை வெளிப்படுத்தும் சம்பவங்கள், மிக முக்கியமாக உயிர்த்தெழுதல் போன்ற பகுதிகளை வெட்டி எறிந்துவிட்டு, கிறிஸ்துவின் நல்ல போதனைகளை மட்டும் தொகுத்து ஒரு புத்தகத்தை உருவாக்கினார். இதுதான் “ஜெஃபர்ஸன் பைபிள்” அல்லது “இயேசுவின் வாழ்க்கையும் ஒழுக்கங்களும்” (The Life and Morals of Jesus of Nazareth) என்று அறியப்படுகிறது.
கிழித்தது பிரபலம் ஆகவில்லை
நல்ல வேளையாக, ஜெஃபர்ஸனின் இந்த “வெட்டப்பட்ட வேதாகமம்” கிறிஸ்தவர்கள் மத்தியிலோ அல்லது பொதுவாகவோ பெரிய வரவேற்பைப் பெறவில்லை. வேதாகமத்தின் முழுமையையும், கிறிஸ்துவின் தெய்வீகத்தையும் உண்மையாக விசுவாசிக்கிறவர்கள் மட்டுமல்ல, பொதுவாகவே இது நிராகரிப்பட்டுவிட்டது. தேவனின் வார்த்தையாகிய சத்தியவேதத்தை மனிதன் தன் பகுத்தறிவுக்கு ஏற்றாற்போல திருத்துவதோ, குறைப்பதோ கூடாது என்பதே நம் விசுவாசத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இன்றைய ஜெஃபர்ஸன்கள்!
ஜெஃபர்ஸனைப் போன்ற சிந்தனையோட்டம் கொண்டவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமாக, மார்க்கஸ் போர்க் (Marcus Borg) போன்ற சில இறையியலாளர்கள், இயேசுவை ஒரு சிறந்த வரலாற்று நாயகனாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் முன்னிறுத்துகிறார்களே அன்றி, அவரை தேவனாகவும், நம்முடைய பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்த இரட்சகராகவும் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. நம்நாட்டில் காந்தியடிகள்கூட இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருந்தவர். இயேசு ஒரு மகான், அவ்வளவே! இவர்கள் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் சரித்திர நிகழ்வுகளாகப் பார்க்காமல், வெறும் அடையாளங்களாகவும், உருவகங்களாகவும் விளக்க முற்படுகிறார்கள்.
இப்படி எல்லாக்காலங்களிலும் வேதாகமத்தின்மீதும், கிறிஸ்துவின் மீதும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இவை எவையும் சத்தியமார்க்கத்தை அழித்துவிடவில்லை. ஆனால், இதில் நாம் சிந்திக்கவேண்டிய விஷயம் இன்றும் ஏராளமானபேர் வேதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல், வசதிக்கேற்றபடி இன்றும் வளைக்கிறவர்கள், இருதயத்தில் ஏற்றிக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான். இந்தக் கூட்டல், கழித்தல் வேலைகள் காகிதத்தில் நடக்கவில்லை என்றாலும் இருதயங்களில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இதுபோக, வேதத்தைக் கொண்டு போதிக்காமல் சொந்தக்கதை பேசி அனுபங்களை மட்டும் பேசிக்கொண்டிருப்பவர்களும் ஒருவகை ஜெபர்ஸன்கள்தான்!
கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்தவம் சாத்தியமா?
கிறிஸ்துவின் தெய்வீகத்தையும், அவர் சிலுவையில் நமக்காகச் சிந்திய இரத்தத்தின் மூலமாகவும், உயிர்த்தெழுதலின் மூலமாகவும் கிடைக்கும் கிருபையையும் விசுவாசிக்காமல், கிறிஸ்தவ போதனைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக வாழ்வது என்பது, அஸ்திவாரமில்லாத ஒரு மாளிகையைக் கட்ட முயற்சிப்பதைப் போன்றதுதான். கிறிஸ்துவின் தெய்வீகம், சிலுவை, உயிர்த்தெழுதல் ஆகியவையே கிறிஸ்தவ விசுவாசத்தின் மையப் புள்ளிகள். இவற்றை நீக்கிவிட்டால், எஞ்சி நிற்பது ஒரு தத்துவமோ அல்லது சில ஒழுக்க நெறிகளோ மட்டும்தான். அது தேவன் அருளும் மெய்யான, ஜீவனுள்ள கிறிஸ்தவம் அல்ல.
இதுபோக இன்றைய காலம், கலாச்சாரம், சூழல் என்று ஒவ்வொரு காரணமாகச் சொல்லிக்கொண்டு வசனங்களுக்குத் தப்பர்த்தம் கற்பிப்பது, கூட்டுவது, குறைப்பது என்று வேதாகமத்தையே அப்டேட் செய்யும் எதையும் அடையாளம் கண்டுகொண்டு நிராகரிப்பது ஒவ்வொரு விசுவாசியின் கடமை. இவர்களை “அந்தப் பொய்யர்” என்கிறார் பவுல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முடிவாக…
தாமஸ் ஜெஃபர்ஸனின் இந்த முயற்சி, மனிதன் தன் சுயபுத்திக்கு எட்டாத தெய்வீகக் காரியங்களை தனக்கு ஏற்றபடி மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு போக்கையே காட்டுகிறது. ஆனால், தேவனின் வார்த்தையாகிய சத்தியவேதம் காலத்தால் அழியாதது, மனிதனின் குறுக்கீடுகளுக்கும், விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டது. கிறிஸ்துவை மையப்படுத்தாத எந்தவொரு கிறிஸ்தவமும், அந்த கிழிந்த பைபிளைப் போல முழுமையற்றதாகவும், ஜீவனற்றதாகவுமே இருக்கும். தேவன் தாமே தம்முடைய வார்த்தையையும், தம்முடைய ஒரேபேறான குமாரனையும் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். அதை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பதே மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை.