பயன்படுவதே பாக்கியம்

Samuel Morse

“சார் தந்தி!” என்று வாசலில் குரல்கேட்டால் வீட்டுக்குள் அனைவருக்கும் பெரும்பதற்றம் தொற்றும். எழுபது எண்பதுகளின் இறுதிவரை அதிவேகத் தகவல்களுக்குத் தந்திதான் எளிய வழி. உங்களில் எத்தனை பேருக்கு இதில் அனுபவம் உண்டு என்று தெரியாது. பத்து வரி அனுப்ப 30-40 ரூபாய் ஆகும் என்பதால், மிகக் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தித்தான் தகவல்களை அனுப்பிக்கொண்டிருந்தோம். டெலிஃபோன் பயன்பாடு அதிகரிக்கும் வரை தந்திதான் சாமனியருக்குக் கிடைத்த வழி. பொல்லது மட்டுமல்லாமல், நல்லதும் தந்திவழியாகத் தான் சென்றது. “YOU ARE APPOINTED. JOIN IMMEDIATELY” என்பது வேலையில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்த அந்தக் காலங்களில் வரும் ஆகச் சிறந்த தந்தியாக இருந்திருக்கவேண்டும். 

இந்தத் தந்திக்குப் பின் இருந்து செயல்பட்ட டெக்னாலஜிதான் மோர்ஸ் கோடு! இதைக் கண்டறிந்தவர் சாமுவேல் மோர்ஸ்!

சாமுவேல் ஃபின்லி ப்ரீஸ் மோர்ஸ் (Samuel Finley Breese Morse) ஓர் அமெரிக்க ஓவியர் மற்றும் கண்டுபிடிப்பாளர். 1791ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி பிறந்த இவர், ஓவியம் தீட்டுவதில் சிறந்து விளங்கியவர். ஆனாலும், அவரது பெரும்புகழுக்குக் காரணம், அவரால் கண்டுபிடிக்கப்பட்ட தந்தி முறை(telegraph)!. நாம் இன்று மொபைல், SMS எல்லாம் பயன்படுத்தும் முன்னர் உலகே தந்திமுறையைத்தான் விரைவான தகவல்களை அனுப்பப் பயன்படுத்தியது. பழைய ஆட்களைக் கேளுங்கள் தந்தியைப் பற்றி தகவல் தகவல்களாகச் சொல்வார்கள். இன்றும் நாம் தகலல்களை அனுப்பும் டெக்னாலஜிக்கெல்லாம் இந்தத் தந்தி முறைதான் அடிப்படை எனலாம்.

1830களில் மின்சாரத்தைப் பயன்படுத்தி நீண்ட தூரங்களுக்குத் தகவல்களை அனுப்பும் முறையைக் கண்டுபிடித்து, செய்தித் தொடர்புத் துறையில் மோர்ஸ் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். ஆக, இவர் ஒரு திறமையான ஓவியராக இருந்தாலும், அவரது இந்த டெலிகிராஃப் எனும் தந்திமுறைதான் அவரை உலகப்பிரபலமாக்கியது. அதற்குக் காரணம், அவரது கண்டுபிடிப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகம் தனக்குள் தகவல்களைப் பறிமாறிக்கொண்ட விதத்தையே மாற்றியமைத்ததுதான்.

தனது வேலைகளில் தான் தேவஉதவியை எதிர்பார்ப்பதை அவர் ஒருபோதும் மற்றவர்களிடம் மறைக்கவில்லை.

பல அறிவியலாளர்கள் அப்போது மிகுந்த தெய்வபக்தி உடையவர்களாக இருந்தனர். சாமுவேல் மோர்ஸும் அப்படியே தேவ மனிதராக இருந்தார்; பயபக்தியானவர். தனது வேலைகளில் தான் தேவஉதவியை எதிர்பார்ப்பதை அவர் ஒருபோதும் மற்றவர்களிடம் மறைக்கவில்லை. வேலையில் எப்போதாவது தனது திட்டத்தில் முன்னேற முடியாமல் தவித்தபோது என்ன செய்தீர்கள் என்று அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டார்கள். அதற்கு மோர்ஸ், “பலதடவைகளில் எனக்கு வழி தெளிவாகத் தெரியாத போதெல்லாம், நான் மண்டியிட்டு தேவனிடம் வெளிச்சத்திற்கும் அவர் மட்டுமே தரும் புரிதலுக்கும் வேண்டி நின்றேன்” என்று பதிலளித்தார். 

தந்தியைக் கண்டுபிடித்ததன் மூலம், நீண்ட தூரங்களுக்குச் செய்திகளை அனுப்புவதில் மோர்ஸ் புரட்சியை ஏற்படுத்தினார். இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால், அவரது காப்புரிமையும் வரலாற்றில் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக மாறியது. ஆனால், மோர்ஸ் “இப்படிப்பட்ட கண்டுபிடிப்பை நான் கண்டறிந்ததால், என்னை ஒரு பெரிய ஆளாக நான் நினைக்கவில்லை. நான் மற்றவர்களை விடச் சிறந்தவனாக இருந்ததால் அல்ல, மாறாக மனித குலத்திற்கு இந்த வசதியைத் தர விரும்பிய தேவன், இதை யாரோ ஒருவர் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்று என்றோ நினைத்துள்ளார். அதை எனக்கு வெளிப்படுத்துவதில் அவருக்கும் சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும். அதனால் மட்டுமே, நான் மின்சாரத்தின் மதிப்புமிக்க ஒரு பயன்பாட்டை உருவாக்கியிருக்கிறேன்” என்றார் தாழ்மையாக.

தேவன் நமக்கு ஏதாவது செய்யும் திறனை அளிக்கும் போதெல்லாம், அது நமது சொந்தப் புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் மகிமைக்கும் அல்ல, மாறாக அது என்றும் அவருடையது மட்டுமே. நம்மை அவர் பயன்படுத்துவதுதான் நமக்கு மகிழ்ச்சி. அவர் நம்மைப் பயன்படுத்துவதில் மகிழ்கிறார் என்று நாம் உணர்ந்தால், அதில் நமக்குக் கிடைப்பது பேரானந்தம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *