நீங்கள் வீணடித்த வாழ்க்கை

வீணடித்த வாழ்க்கை

குறிப்பு: பதிவு ஒரு எழுத்தாளரைப் பற்றியது அல்ல.

மால்கம் மஃகரிட்ஜ் ஒரு ஆங்கில எழுத்தாளர். கொஞ்சம் நம்ம ஊர் ஆர்.கே.நாராயணன் மாதிரி. மால்கம் ஜாலியாக ஆனால்  அதேசமயம் ஆழமாக எழுதுபவர். ஏகப்பட்ட அனுபவங்கள் அவருக்கு.  ஆங்கிலேயர். ஆனால், இரஷ்யாவில் கம்யூனிசத்தின் தொடக்க காலங்களில் பிரச்சனைகள் மிகுந்த பகுதிகளில் இருந்திருக்கிறார். உக்ரேனியப் பஞ்சத்தைக் குறித்து ஆராய்ந்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இந்தியாவிலும் சில காலம் வாழ்ந்தார். மதர் தெரசாவை சந்தித்திருக்கிறார். அவருடனும் நல்ல நட்பு இருந்தது. மஃகரிட்ஜ் சந்தித்த எக்கச்சக்கமான நபர்கள், பல வித்தியாசமான வேலைகள், பயணங்கள், பல தவறுகள் உட்பட பலவும்  அவர் நினைவில் தேங்கிக் கிடந்தது. இந்தியாவில் அவருக்கு ஏற்பட்ட மனமாற்றச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்து எழுதினார். அதைப் பற்றித் தனிக்கட்டுரையே இடலாம்.

இங்கு இதைப்போன்ற இன்னொருவரையும் குறிப்பிடலாம்.  கேரளாவின் எழுத்தர் வைக்கம் முகமது பஷீர்! ஏகப்பட்ட நினைவுகளை எழுத்துக்களில் வடித்தவர். அவர் செய்த வேலைகள், பயணங்கள், அனுபவங்கால் கொஞ்ச நஞ்சமல்ல. பஷீர் என்கிற அவரது வாழ்க்கை வரலாறு கிடைத்தால் வாசித்துவிடுங்கள். சுவாரசியமான வாழ்க்கை ஒன்றை அவரிடம் காணலாம்.

மால்கம் மஃகரிட்ஜ் கிறிஸ்துவைச் சந்தித்தபின் எல்லோரையும் போல  அவருக்கும் வாழ்வில் பல மாற்றங்கள். என்றாலும், இரட்சிப்புக்கு முந்தைய அனுபவங்களை அவர் தவறாமல் ஒரு புத்தகமாக எழுதிவிட்டார். “வீணடிக்கப்பட்ட காலங்களின் குறிப்பேடு! (Chronicles of Wasted Time)”  என்கிற தலைப்பில். அவரது மரணத்துக்குப் பின்னர் வெளிவந்த வாழ்க்கை வரலாறு அது. ! தலைப்பு என்னவோ வீணாய்ப் போன வாழ்க்கை என்பது போல இருந்தாலும், உண்மையில் தன் வாழ்க்கையில் எப்படி பல தருணங்களைக் கடந்துவந்தார் என்று அழகாக அதில் எழுதியிருக்கிறார்.

ஆனால், இந்தக் கட்டுரை மஃகரிட்ஜ் பற்றியதல்ல; வீணடிக்கப்பட்ட  நம் காலங்கள் குறித்ததானது. எனவே, இப்போது விஷயத்துக்குள் வருவோம். இரட்சிப்புக்குள் வந்த பலருக்கு நாம் இதுவரை காலத்தை எக்கச்சக்கமாக வீண்டித்துவிட்டோம் என்கிற வருத்தம் வந்தால் அதில் ஆச்சரியமில்லை. ( இதுவரை வரவில்லையென்றால் அது ஏன் என்று சுய ஆராய்ச்சி செய்யவேண்டிய தருணம் இது! ). ஆனால், அப்படி வரும் வருத்தம், அது இயல்பானதே. அதுவும் இறை அன்பை ருசிக்க ருசிக்க, முன்னான காலங்கள் இப்படி அநியாயமாகப் போய்விட்டதே – போக்கடித்து விட்டோமே –  என்பது முதல் “நம்மை தேவன் இன்னும் கொஞ்சம் முன்னரே சந்தித்திருக்கலாமோ’, ‘நாம் சில வருடங்களுக்கு முன்னரே கீழ்படிந்திருக்கலாமோ”, என்பது போன்ற ஆதங்கங்களும் வரத்தான் செய்யும். 

ஆனால், கிறிஸ்துவுக்குள் வந்த ஒரு அனுபவத்தை நாம் ‘முற்றும் புதிதான’ ஒர் மறுபிறப்புக்கு ஒப்பிட்டாலும், நம் கடந்த வாழ்க்கை உண்மையில் வீணானது அல்ல. பவுல் தன் கடந்த வாழ்க்கையில் பெற்றிருந்த ஆதாயங்களை நஷ்டமும் குப்பையுமாக விட்டுவிட்டேன் என்று சொன்னாலும், அவற்றை சில இடங்களில் குறிப்பிட்டு எழுதவும் செய்கிறார். முன்னானதை நாடி ஓடுகிற நாம் பின்னானதை விட்டுச் செல்வது அவசியம்தான் என்றாலும், பவுலுக்கு அவர் கற்ற அனுபவங்கள், கல்வி என்று எதுவும் வீணாகவில்லை என்பதையும் நினைவில் கொள்வது நல்லது. ஒரு சமயத்தில் அவரது ரோமக் குடியுரிமைகூட அவருக்கு உதவுகிறது. கற்ற பிரமாணமும் பரிசேய வாழ்வும் பின்னாட்களில் கிறிஸ்துவைக் குறித்த உபதேசங்களைச் சரியாகக் கொண்டு சேர்க்கவும் எழுதவும்  உதவியது. பழைய ஏற்பாட்டில் கண்ட இயேசுவை யூதருக்கும் யூதர் அல்லாதவருக்கும் தெளிவாக எழுத உதவியது, கிறிஸ்துவை அறியாத காலங்களில் அவர் பெற்ற அனுபவங்களும்தான் காரணம்.

எனவே, எல்லாம் மாயையாகப் போய்விட்டது என்று அவர் சொல்லவில்லை. வீணான காலங்களாகக் கருதவில்லை.

ஒரு மனிதனின் மனமாற்றத்திற்கு முந்தைய அனுபவங்கள்- அவை நல்லவையாக இருந்தாலும் சரி, கசப்பானதாகவும் சரி, அதை தேவனால் நன்மைக்கென்று பயன்படுத்தமுடியும். முதலில் ஏடாகூடமான வாழ்க்கையாகத்தான் இருந்தது என்றாலும், அந்த அனுபங்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்காமல் அவற்றை இன்று பெரும் அனுபங்களுடன் சரியாக இணைத்து தேவ இராஜ்ஜியத்துக்குப் பயன்படுத்த முடியுமானால், அதை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளலாம். 

உதாரணத்திற்கு முன்பு நான் கண்டதையும் எழுதிக்கொண்டிருந்தேன். அது தேவையற்றதாக இருந்தாலும், பயிற்சி அங்கேயே துவங்கிவிட்டது என்றுதான் நம்புகிறேன்.  மேலும், பழைய நம்பிக்கைகள் சில ஆழமாக இருக்கும் பட்சத்தில் அவைகள் எல்லாம் சரியானவை என்று ஏன் தோன்றின என்றும்,  இனி கிறிஸ்துவின் பார்வையில் அவை எவ்வாறு மாறுகின்றன என்கிற வெளிச்சம் கிடைக்கும். அவை மற்றவர்களுக்கு உதவவும் நமக்கு பயன்படும். நம்முடைய பழைய நிலையில் இன்று இருப்பவர்களுக்கு நம்மால் அவர்களைப் புரிந்துகொண்டு உதவவும் முடியும். நம் அனுபவம் அவர்களது கண்கொண்டு பிரச்சனைகளைப் பார்க்க உதவும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற அனுபவங்கள், பயிற்சிகள், கல்வி, தாலந்துகள், திறமைகள், பழக்கங்கள், முக்கியமாக நினைவில் இருக்கும் பல சம்பவங்கள் என்று பலவும் இன்று புதிதாக்கப்பட்டு தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட முடியும். அதிலும் மிகக் குறிப்பாக அனுபவங்கள். ஒட்டுமொத்தமாக எல்லாம் புதிதாகி இனி தான் எல்லாம் நம்முள் புதிது புதிதாக வரும் என்று நினைத்தால் அதுதான் ஏமாற்றத்துக்குள் தள்ளிவிடும். எனவே,  மேலே வாசித்ததுபோல “வீணடிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன், இத்தனை வயதில் இனிப் புதிதாக எதை அறிந்து கிறிஸ்துவுக்காக வாழப்போகிறேன்” என்று நினைப்பது அவசியமற்றது. எத்தனை வருடம் கழித்து இரட்சிப்புக்குள் வந்திருந்தாலும் சரி உங்கள் பழைய வாழ்க்கையின் சில சிறப்புக்களை நீங்கள் கண்டுகொள்ள தேவனே உதவி செய்வார். அவருடைய இராஜ்ஜிய மகிமைக்கென்று உங்கள் பழைய வாழ்க்கையின் பல பகுதிகள் பயன்பட முடியும்.  

மீன்பிடித்த காலங்கள் வீணாகப் போகவில்லை. சீஷர்கள் மனிதர்களைப் பிடித்தலை அதில் இருந்து எடுத்துக் கொண்டார்கள்.  மனிதர்களை மேய்க்கும் அனுபவம் ஆடுகளை மேய்த்தவர்களுக்கு இலகுவாக வந்தது இப்படித்தான். இல்லையென்றால் வீணாகக் காலண்டர்களை கிழித்துக்கொண்டிருந்தோம் என்று அவர்கள் பழைய வனாந்திரங்களை நினைத்து வருந்திக் கொண்டிருந்திருப்பார்கள். 

 “எப்படியெல்லாமோ இருந்த என்னை இப்படி மாற்றினார்” என்கிற நம் அனுபவ சாட்சி ஒரு துவக்கம் மட்டுமே. அதிலேயே நின்றுவிடல் கூடாது. நம்மை அவர் பயன்படுத்த அனுமதித்தால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் அவர் கையில்தான் இருந்தது என்கிற நம்பிக்கை பிறக்கும். பழைய வாழ்வின் அனுபவங்கள் புதிதாக அபிஷேகிக்கப்பட்டு அவருக்காக பயன்படுத்தப்படுவதும் நடக்கும். எனவே, இனிமேலாவது நம் வாழ்க்கை வீணாகக் கழித்துவிடக்கூடாது என்கிற வைராக்கிய வாஞ்சை வந்திருக்க வேண்டும். பழைய நிலை அல்ல, இனி எப்படி என்பதே முக்கியமாகக் கவனித்து செயல்படவேண்டிய ஒன்று. 

– Benny Alexander

(Image by AI, உள்படம்: மால்கம் மஃகரிட்ஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *