
சார்ல்ஸ் “சக்” (Chuck) கோல்சன் – தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சென்ற நூற்றாண்டு கிறிஸ்தவ வரலாற்றில் குறிப்பிடத்தக்க நபர். நாம் அறிந்துகொள்ளவேண்டியவர்.
அவரது வாழ்க்கை மீட்பின் சாட்சியாகவும், நம்பிக்கையின் செய்தியாகவும் அமைந்த ஒன்று. சுவாரசியமான அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகமே இக்கட்டுரை.
சென்ற நூற்றாண்டின் நடுவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் செயல்பாட்டாளராக இருந்தவர் சார்ல்ஸ் கோல்சன். பிற்காலங்களில் இரட்சிப்புக்குள்ளாக வந்தபின், சிறைக்கைதிகளுக்காகவும் அவர்கள் சார்ந்த விளிம்பு நிலை மனிதர்களுக்கெனவும் தன்னை அர்பணித்தவர் அதற்காக தாழ்மையான இறைஊழியராக மாறியதற்காக ன இன்றும் மேல்நாட்டவரால் நினைவுகூரப்படுபவர்.
சக் கோல்சன் யார்?
1931 இல் பிறந்த சக் கோல்சன் ஒரு வழக்கறிஞர்; அரசியல் அறிஞர். 1960 களின் பிற்பகுதியிலும் 1970 களின் முற்பகுதியிலும் கோல்சன் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனின் சிறப்பு ஆலோசகராக இருந்தவர். இதனால் நிர்வாகத்தின் அதிகாரமிக்க ஒருவர் என்று கருதப்பட்டவர். அதுபோக பல பொறுப்புகளை வகித்த அவர் ஜனாதிபதியின் அரசியல் நிலைப்பாடுகளை தீர்மானிக்கும் முழுவிலும் முக்கிய பங்கு வகித்தார். கொஞ்சமும் தயக்கமற்ற பல அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர் சக் கோல்சன். ஆனால், அந்த நற்பெயரெல்லாம் நீண்டநாள் நீடிக்கவில்லை.
நிக்சனுடனான தொடர்புகள் மற்றும் வாட்டர்கேட் ஊழல்
வாட்டர்கேட் ஊழலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவில் இன்றும் பேசப்படும் ஒரு ஊழல் வழக்கு. அதிபர் நிக்சனின் நிர்வாகத்தில் நடந்த அந்த ஊழலின் விளைவாக வந்த அவப்பெயர் கோல்சனின் பொதுவாவாழ்க்கையை திடீரென முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஊழலில் ஒரு முக்கிய நபராகக் குற்றம்சாட்டப்பட்ட கோல்சன், நீதிவிசாரணைக்குத் தடையாக இருப்பது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் சிக்கினார்.
மறுதேர்தல் நடக்கவிருக்கையில் ரிச்சர்ட் நிக்சன் அதிபரின் பிரச்சாரத்துடன் தொடர்புடைய நபர்களால் நடத்தப்பட்ட சட்டவிரோத ஊடுருவலை மையமாகக் கொண்டது இந்த வாட்டர்கேட் ஊழல். 1972 ஆம் ஆண்டு ஜனநாயக தேசியக் குழுவின் தலைமையகமான வாட்டர்கேட் வளாகத்தில் செயல்பட்டதால், அந்தப் பெயரிலேயே இந்த ஊழல் பிரபலமானது . இந்த விசாரணையில் நிக்சன் நிர்வாகம் அதன் பங்களிப்பை மறைக்க பரவலான முயற்சிகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் நீதியைத் தடுப்பது மற்றும் ஜனாதிபதி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும். பதவி நீக்க அபாயத்தை எதிர்கொண்ட அதிபர் நிக்சன் 1974 ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார்.
விசாரணை முடிவில் 1974 ஆம் ஆண்டில், சக் கோல்ஸன் தன்மீது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவும் செய்தார். அதன்விளைவாக சிறையில் ஏழு மாதங்கள் இருக்க நேரிட்டது.
வியத்தகு மாற்றம்
தேவன் ஒருவரைச் சந்தித்தால் அதன்பின் அவரது வாழ்வு முற்றிலும் ஒரு திருப்பதைச் சந்திப்பது நடந்தே தீரும். குற்றம் நிரூபிக்கப்பட்டௌ கோல்சன் தண்டனைக்குச் செல்லும்முன், ஆச்சரியமான வகையில் அவரது தனிப்பட்ட வாழ்வில் ஒரு ஆழமான மாற்றம் நடந்தது. கோர்டில் கேஸ் நடந்துகொண்டிருக்கும் ஒரு நாளில் நண்பர் ஒருவர் அவருக்கு சி.எஸ். லூயிஸின் Mere Christianity என்கிற பிரபலமான புத்தகத்தைக் கொடுத்தார் (அமேசான் தளத்தில் கிடைக்கிறது). சிறையில் கோல்ஸன் அதை முழுமையாக வாசித்தார். லூயிஸ் அதில் எழுதியிருக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றிய புத்தகத்தின் விவரமான, ஆழமான வாதங்கள் கோல்சனுக்குள் வேர்விட்டன. அதை வாசிக்க வாசிக்க கோல்சனுக்குள் ஏற்பட்ட மாற்றம், அவரைக் கிறிஸ்துவுக்கென தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க வழிவகுத்தது. ஒரு அதிரடி அரசியல் செயல்பாட்டாளர் என்று அவரை அறிந்திருந்த பலருக்கும்,அவரது இந்த இனிமையான மாற்றம் உண்மையில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். சிலர் இதைத் தண்டனையில் இருந்து வெளியேறக் கருணைக்கு மனுபோடும் கோல்ஸனின் தந்திரம் என்று கூட விமர்சித்தனர். ஆனால், அது உண்மை அல்ல என்பது கோல்சனின் அதன்பின்னரான செயல்பாடுகள்தான் நிரூபித்தன.
சிறைச்சாலை ஐக்கியத்தின் பிறப்பு
சிறையில் கோல்சனுக்குக் கிடைத்த நேரம் அவரது கண்களைத் திறந்தது என்று சொல்லலாம். கைதிகள் எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் விரக்திக்கும், நம்பிக்கையின்மைக்கும் ஒரு தீர்வைக் கொண்டுவர விரும்பினார். அதன்விளைவாக விடுதலையான பிறகு, கோல்ஸன் 1976 இல் சிறைச்சாலை ஐக்கியம் (Prison Fellowship) என்னும் ஊழியத்தை நிறுவினார். இது உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை ஊழியமாக மாறியது. இந்த அமைப்பின் மூலம், கைதிகள், முன்னாள் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நம்பிக்கை, மறுசீரமைப்பு மற்றும் மீட்பின் செய்தியைக் கொண்டுவருவதற்காக கோல்சன் அயராது உழைத்தார்.
குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக குற்றத்தால் ஏற்படும் தீங்கைச் சரிசெய்ய முற்படும் வகையில் அவர்களை மறுசீரமைப்பு செய்வதை சிறைச்சாலை ஐக்கியம் தங்கள் ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறது. கோல்சனின் தலைமையின் கீழ், இந்த ஊழியம் ஒரு உலகளாவிய இயக்கமாக வளர்ந்தது. எண்ணற்றவர்களின் வாழ்க்கையை மாற்றவும் செய்து. பல நாடுகளில் பல சிறைகளில் சிறைச்சாலை சீர்திருத்தக் கொள்கைகளை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்குவகித்தது. நூற்றுக்கணக்கான சிறைகளுக்கு சக் நேரில் சென்றிருக்கிறார். பல நாடுகளுக்கும் பயணப்பட்டு நேரடியாக பல சிறைகளில் சிறைச்சாலை ஐக்கிய ஊழியங்களைத் துவங்கிய சக் கோல்ஸன் தமிழ்நாட்டுச் சிறைகளுக்கும் வந்திருக்கிறார். தான் பாளையங்கோட்டை, வேலூர் சிறைகளுக்கும் வந்திருப்பதாக ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சக் ஒரு எழுத்தாளரும்கூட. பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். குறிப்பாக Apologetics என்படும் காப்புவாத நூல்கள், அவசியம் வாசிக்கப்படவேண்டியவை.
சக் கோல்சன் 2012 இல் காலமானார், ஆனால் அவர் தொடங்கிய நற்பணி சிறைச்சாலை ஐக்கியம் மூலம் இன்றும் நீடிக்கிறது. கடவுளது மீட்பிற்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் இல்லை. தேவன் தனது நோக்கங்களுக்காக உடைந்த பாத்திரங்களைக் கூடப் பயன்படுத்தலாம் என்பதை அவரது வாழ்க்கை நினைவூட்டுகிறது. சக் தன் வாழக்கையை Born Again என்கிற நூலில் முழுமையாக விவரித்திருக்கிறார். (எனக்கு ஒரு பழைய புத்தக விற்பனையில் கிடைத்தது)
அரசியல் அதிகாரத்தின் உச்சத்திலிருந்து சிறைச்சாலை அனுபவத்தின் ஆழம் வரை சென்றிருந்தாலும், கிறிஸ்து தரும் நம்பிக்கையால் மாற்றப்பட்ட ஒரு வாழ்க்கையால் இந்த உலகுக்கு எவ்வாறு மேலான வழிகளைக் காட்டமுடியும் என்பதையே கோல்சனின் வாழ்வு நமக்குக் கற்றுத்தருவது. கடைசியாக சக் அவர்கள் சொன்ன ஒரு கூற்றைச் சொல்லி முடிப்பது அவரது வாழ்க்கை மாற்றத்தையும் ஊழியத்தின் ஆழத்தையும் நமக்கௌப் புரியவைக்கும்.
உயிர்த்தெழுதல் ஒரு உண்மை என்று எனக்குத் தெரியும், வாட்டர்கேட்தான் அதை எனக்கு நிரூபித்தது. எப்படி? ஒரு 12 நபர்கள் இயேசுக்கிறிஸ்து மரித்த பின் உயிர்த்தெழுந்ததை பார்த்ததாகச் சாட்சியம் அளித்தனர், பின்னர் அவர்கள் அந்த உண்மையைத் தொடர்ச்சியாக சுமார் 40 வருடங்கள் அறிவித்தனர், ஒரு முறை கூட அவர்களில் எவரும் அதை மறுக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அடிக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், கல்லால் எறியப்பட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர், கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கிறிஸ்துவின் உயித்தெழுதல்மட்டும் உண்மையாக இல்லாவிட்டால் அவர்கள் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு இருந்திருக்க மாட்டார்கள்.
வாட்டர்கேட் ஊழல், அதில் சம்பந்தப்பட்ட உலகத்தின் மிகவும் சக்திவாய்ந்த 12 நபர்களைச் சிக்க வைத்தது- ஆனால் அவர்களால் ஒரு மூன்று வாரங்களுக்குக்கூட ஒரு பொய்யைக் காப்பாற்ற முடியவில்லை. பன்னிரெண்டு அப்போஸ்தலர்களால் 40 வருடங்கள் அப்படி ஒரு பொய்யைக் காப்பாற்றி இருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அது முற்றிலும் சாத்தியமற்றது.!