கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும்…!

God as Child in Earth

இயேசு நினைத்தால் “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்று ஒற்றை வாக்கியத்திலோ, “எல்லோர பாவங்களையும் நான் மன்னித்துவிட்டேன்  வாங்க என்னோடு பரலோகத்துக்கு” என்றோ  சொல்லி நம் எல்லோரையுமே மன்னித்திருக்கலாமே? அதை அவர் இறைவனாக இருந்துகொண்டே செய்திருக்கலாமே? இதற்காக இந்த பூமியில் அவதரித்ததெல்லாம் அவசியமா? இப்படியெல்லாம் சிந்தித்தது உண்டா?  இல்லையென்றால் இப்போது சிந்தித்துவிடலாம்.

அப்படிச் செய்ய அவருக்கு வல்லமை உண்டு தான். ஆனாலும், அப்படிச் செய்யாமல், இன்னும் சிறப்பான, நியாமான முறையில் செய்வதுதான் அவருக்கு அது அவசியமாகத் தோன்றியது! காரணம் அவர் சர்வ வல்லமை உடையவர் மட்டுமல்ல, அவருக்கு இருக்கும் பல பண்புகளில் ஒன்று அவர் நீதிபரர் என்பதும்!. அதாவது சரியானதைச் சரியாக மட்டும் சரியான நேரத்தில் செய்கிறவர்.

தனக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு என்பதாலேயே சும்மா எதையாவது அவர் செய்துவிடுவதில்லை. அவரது நீதி அதைச் செய்யவிடாது.! மேலும், பாவம் நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதான விஷயமில்லை. அவர் பாவமில்லாதவர் என்பதாலும், பாவத்தைப் பாராத சுத்தக் கண்ணர் என்பதாலும் “உங்களை நானே என் சவுகரியம்போல் மன்னித்துவிட்டேன், வாருங்கள் என்னுடன்” என்று சொல்வது அவருடைய இயல்புக்கு ஏற்றதல்ல. பாவம் மிகவும் சீரியஸானது. அதைச் செய்யும் மனிதர்களாகிய நாம் ஒருவேளை அதை அவ்வாறு கருதாவிட்டாலும்!

இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பில்லை. இரத்தம் சிந்த மனிதனாக இருக்கவேண்டும். பிசாசுக்கோ, மற்ற தேவதூதர்களுக்கோ இரத்தம் கிடையாது. அவர்கள் ஆவிகள். அவர்களுக்கு இரத்தம் ஓடும் உடல் கிடையாது. அவர்கள் உயிர் அவர்கள் இரத்தத்திலும் இல்லை. எனவே தேவன் மனிதனாக வரவேண்டிய அவசியம் உண்டாயிற்று. இரத்தம் ஓடும் மனித உடலில்!.  இதுபோக பாவத்தின் சம்பளமான மரணம் தரும் பயத்தில் இருந்து விடுவிக்க அந்த மரணத்தையும் அவர் அனுபவிக்க வேண்டி இருந்ததால் அவர் மனிதனாகப் பிறந்தார். தன்னுடைய படைப்புகளில் ஒன்றைப்போல் தன்னையும் ஆக்கிக்கொள்ளும் அளவுக்கு அவர் தாழ்மைப்பட வேண்டி இருந்ததற்குக் காரணமும் பாவத்தின் கொடூரமும், அவரது நீதியும்தான். 

மேலும், நம்மைபோல பாடு அனுபவிக்கிறவராக – அதாவது பாடுகளை உணர்பவராக இருக்கவும் அவர் மனிதனாக வரவேண்டிய அவசியம் இருக்கிறது. மனிதர் படும் உபத்திரவங்களை அனுபவிக்க மனித சரீரத்தில்தான் அவர் வந்தாக வேண்டும். எப்போதும் அவர் இருக்கிறவர் என்றாலும் மனிதனாகப் பிறந்தவரை மனிதர் அனுபவிக்கும் உபத்திரவங்களை அவர் அனுபவிக்க அவர் மனிதராக ‘ஒரு சரீரத்தில்’ அதுவரை இருந்திருக்கவில்லை. அவரால், நம் உபத்திரவங்களை மனிதனாக வராமலேயே உணரமுடியும் என்றாலும், அதையும் அவர் நியாயமாகச் செய்தார். இதைத்தான் அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது என்று வாசிக்கிறோம் (எபிரேயர் 2:10). 

அவர் தன் பூரணத்தை உபத்திரவத்தை மனிதனாக வந்து உபத்திரவங்களை அனுபவிப்பதில் வைத்திருந்தார். மனிதனாக வந்து நிந்தை சுமந்து மரித்த அன்று,உபத்திரம் என்கிற ஒன்றையும் அவர் முழுமையாக அனுபவித்து, தன்னைத்தான் நியாமான வழியில் பூரணப்படுத்திக்கொண்டார். அவர் உண்டாகிய வழியை அவரே ஒருநாளும் மீறவில்லை. அழிக்கவும் இல்லை!  மனிதனாகப் பிறப்பதில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. அதை அவர் விரும்பிச் செய்தார். 

பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். என்று இதைத்தான் எபிரேயர் ஆக்கியோன் விளக்குகிறார். (எபி 2:14,15).  எனவே, “எங்க பிரச்சனை உங்களுக்கென்ன தெரியும்?” என்றெல்லாம் அவரை எவரும் கேட்கவே முடியாது. 

அவர் மனிதனாக வந்தற்குக் காரணம் நம்மையெல்லாம் அவர் காதலித்ததால்தான். சரியான பதத்தில் சொன்னால் அன்புகூர்ந்ததால்தான். அவர் நம்மேல் அன்புகூர்ந்து வேதனையில் வாடினார்தான்! கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும் என்கிற அந்தப் பழைய சினிமாப் பாடல்தான் எத்தனை அபத்தமானது?  இப்படி அவரது பிறப்பே அவரது நீதியைப் பறைசாற்றுக்கிறது. நம்மேல் வைத்த அன்பை உரக்கச் சொல்கிறது. 

இதைப் புரிந்தவர்களாக, கிறிஸ்து பிறப்பினை எந்த மனமாச்சரியங்களும் இன்றி நினைவுகூறும் அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *