
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1: 27
தேவன் மனிதர்களைப் படைத்ததுபோல வேறெங்கேனும் படைத்திருப்பாரா? இங்கு வேறு யாரேனும் உள்ளனரா? பூமியைப் படைத்து அதன் மண்ணில் இருந்து மனிதனைப் படைத்தவருக்கு வேறு எங்கேனும் அங்கிருக்கும் மண்ணை/தனிமங்களைக் கொண்டு அங்கே உயிரினங்களைப் படைத்திருப்பாரா? அதாவது ஏலியன்களை?
1950 ஆண்டு ஒரு சிறுகூட்டம் இயற்பியலாளர்கள் கூடி UFO (Unidentified Flying Object) என்கிற வானத்தில் அவ்வப்போது தெரியும் மர்மமான – அடையாளம் தெரியாத பொருட்களைக் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தனர். பறக்கும் தட்டுக்கள் என்று கற்பனையில் உதிப்பவை எல்லாம் இந்த வகையில் வருபவை. அக்கூட்டத்தில இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளரான என்ரிகோ ஃபெர்மி, “But where is everybody?” ( “ஆனால் எல்லோரும் எங்கே?”) என்று சுவாரசியமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. நம்மைத்தவிர வேறு உயிரினங்கள் இருந்தால், அவர்கள் எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்கிற பொருளில் அவர் இப்படிக் கேட்டது அன்று பேசுபொருளானது.
நமது பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் உள்ளதா என்ற தேடலில் வானவியலாளர்கள் இதுவரை ஏராளமான கோள்களை ஆராய்ந்துள்ளனர். குறிப்பாக சுமார் 5500 கோள்களை கவனத்துடன்! குறிப்பாக நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள எக்ஸோப்ளானெட்டுகள் (Exoplanets) எனப்படும் கோள்கள் மீது கவனம் செலுத்தியுள்ளனர். அதாவது சூரியனைப் போன்ற மற்ற நட்சத்திரங்களின் கோள்களை. ஆனால், இதுவரை எந்தவொரு கோளிலும் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களான, செவ்வாய், வெள்ளி மற்றும் யூரோபா (வியாழனின் துணைக்கோள்) போன்றவையும் பிற சூரியக்குடும்பங்களில் உள்ள கோள்களிலும் இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில வருடங்கள் முன் செலுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) இதற்கு அதிகமாக பயன்படுகிறது. அதன்வழியாக, சூரியக் குடும்பத்தை விட்டு மற்ற சூரியக் குடும்பங்களில் உள்ள கோள்களையும் ஆராயிய்ந்திருக்கின்றனர். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைக் கொண்டு ப்ராக்ஸிமா சென்டாரி b மற்றும் TRAPPIST-1e போன்ற கோள்களையும் ஆராய்ந்திருக்கின்றனர்.
உயிரினங்களுக்கு வெறும், நீர் காற்று மட்டும் இருந்தால் போதாது. எனவே காற்று நீர் இருப்பதுபோலத் தெரிந்தாலும், அதை மட்டும் வைத்து அங்கே உயிர்கள் இருக்கும் என்று சொல்ல இயலாது. உயிர்வாழ பல நூறு சாத்தியக்கூறுகள் ஒன்றிணைய வேண்டும். அவை அனைத்தும் மிகச்சரியாக இருக்கவேண்டும். ஆனால், இப்படித் மிகத் தொலைதூரத்தில் இருந்து உயிர்களைக் கண்டறிவது மிகவும் சவாலானது. தொழில்நூட்பம் இன்னும் மேம்படும்போது இன்னும் அதிகக் கோள்களை ஆராய வாய்ப்புண்டு. அவர்கள் ஆராய்ந்துகொண்டே இருக்கட்டும்.
வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்… என்று அப்போஸ்தலராகிய பவுல் குறிப்பிடுவதில் இந்த வகை வேற்றுகிரகவாசிகள் வருவார்களா? இல்லை அவர்கள் எல்லாம் தூதர்களும் அல்லது விழுந்துபோன தூதர்களுமா?
தேவன் பிற கோள்களில் உயிரினங்களை – குறிப்பாக – அறிவார்ந்த மனிதர்களை தம் சாயலில் வேறு எங்காகிலும் படைத்திருப்பாரா என்றால் அதற்கு வேதத்தில் ஆதாரம் ஏதும் இல்லை (அல்லது இருப்பதாக எனக்குத் தெரியவில்லை). ஒருவேளை அப்படி அவர் படைத்திருந்தாலும் சுய சித்தம் அளித்திருப்பாரா? அளித்திருந்தால் அங்கேயும் மனிதர்கள் பாவத்தில் வீழ்ந்திருப்பார்களா? அதற்கான தீர்வை அவர்தானே வைத்தாகவேண்டும்?
தேவன் சபையை அவரது மணவாட்டியாகக் காண்கிறார். மனிதரை அவர் இந்த பூமியில் தன் சாயலில் படைத்து, மீட்டு, மீண்டும் தன்னுடன் தன் கலியாணத்தில் தன்னுடன் இணைப்பார் என்றால் வேறெங்கும் மனிதர்களைப் படைத்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் எண்ணுகிறேன்.
ஆனால், இப்படியெல்லாம் சிந்திக்கத் துவங்குகையில்,
உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்…
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை…
மறைவானவைகள் கர்த்தருக்கே உரியவைகள் போன்ற பிரமாதமான வசனங்கள் நினைவுக்கு வந்து போனது. அவற்றை நினைத்துக்கொண்டே இந்தச் சிறுகட்டுரையை முடித்துக்கொள்கிறேன்.