
இந்த பூமியில் இயேசுக்கிறிஸ்துவின் வாழ்க்கை நான்கு சுவிசேஷங்களில் நமக்குத் தெரிய வேண்டிய அளவுக்கு தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. அதுவும் நான் வெவ்வேறு நபர்களால் நான்கு சுவிசேஷங்களாக – மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்று! . ஆனால், வேதாகமத்தில் இடம்பெறாத ஒரு மனிதர், இயேசு வாழ்ந்த காலத்தையும், அப்போஸ்தலர் காலத்தையும் பற்றி எழுதியிருக்கிறார். அவரைக் குறித்துக் கொஞ்சம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அவர் ஃபிளேவியஸ் ஜோசிபஸ் (Flavius Josephus).
பெரும்பாலான தமிழ்க் கிறிஸ்தவர்கள் இவரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. பொதுவாகவே திருச்சபை வரலாறு என்பது வேதாகமக் கல்லூரிகளோடு நின்று விடும் ஒன்று. எனவே, சபையில் யாரும் இவரைக் குறித்து பேசி நான் கேட்டதில்லை. ஆனால், புதிய ஏற்பாட்டு வரலாற்றைப் புரிந்துகொள்ள இவர் நிச்சயம் ஒரு திறவுகோல்.
ஜோசிபஸ், இயேசுக்கிறிஸ்து பரமேறியபின் சில வருடங்களில் (கி.பி. 37-ல்) எருசலேமில் பிறந்த ஒரு யூதர். ஆசாரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். முதலில் பரிசேயனாகவும், பின்னர் ரோமருக்கு எதிராகப் போரிட்ட ஒரு யூதப் படைத்தலைவனாகவும் இருந்தார். யுத்தத்தில் ரோமர்களிடம் பிடிபட்ட இவர், தந்திரமாக ரோமப் பேரரசர்களின் (வெஸ்பாசியன், தீத்து) நன்மதிப்பைப் பெற்று, ரோமக் குடிமகனாக மாறினார். எருசலேம் அழிக்கப்பட்டபோது (கி.பி. 70), அதை நேரில் பார்த்த சாட்சி இவர்!
இவர் ஏன் நமக்கு முக்கியம்? எதற்கும் வரலாற்று ஆதாரம் காட்டு என்று சொல்பவர்கள் எத்தனைபேர் உண்மையிலேயே ஆதாரங்களைத் தேடுகிறார்கள், அல்லது தேடிக்கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். இருந்தாலும் கிறிஸ்தவர்கள், நாம் அறிந்துகொள்ளத்தான் வேண்டும். வேதாகமம் என்பது “கட்டுக்கதை” என்று சொல்லுகிறவர்களுக்கு, ஜோசிபஸ் ஒரு சரித்திரச் சவுக்கடி கொடுக்கிறார்.
- இயேசுவைக் குறித்த குறிப்பு: வேதாகமத்தை சாராத ஒரு யூதரான இவர், தன் சரித்திர நூலில் (Antiquities of the Jews) இயேசுவைக் குறித்து எழுதியிருக்கிறார். “இக்காலத்தில் இயேசு என்றொரு ஞானமுள்ள மனிதர் வாழ்ந்தார்… அவர் அற்புதமான கிரியைகளைச் செய்தார்… பிலாத்து அவரைச் சிலுவையில் அறைந்தான்… கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் கூட்டம் இன்றும் இருக்கிறது” என்று பதிவு செய்திருக்கிறார். (ஜோசிபஸ் இயேசுவைக் கடவுளாக ஏற்காவிட்டாலும், இயேசு வாழ்ந்தார் என்பதற்கு இது மிகப்பெரிய சரித்திர ஆதாரம்தான்).
- யோவான் ஸ்நானகன் & யாக்கோபு: அப்போதைய ஆட்சியாளர் ஏரோது, யோவான் ஸ்நானகனைக் கொன்றதையும், இயேசுவின் சகோதரனான யாக்கோபு கல்லெறிந்து கொல்லப்பட்டதையும் ஜோசிபஸ் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.
- கி.பி. 70 – எருசலேமின் அழிவு: இதுதான் மிக முக்கியம். “இந்தத் தேவாலயத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போம்” என்று அருள்நாதர் சொன்னார் (மத்தேயு 24:2). அந்தத் தீர்க்கதரிசனம் எப்படி ஒரு எழுத்துகூட மாறாமல் நிறைவேறியது என்பதை ஜோசிபஸ் தன் ‘யூதர்களின்யுத்தம்‘ (The Jewish War) என்ற நூலில் பயங்கரமான விவரங்களோடு எழுதியிருக்கிறார். எருசலேமின் வீதிகளில் இரத்தம் ஆறாக ஓடியதையும், பஞ்சம் தலைவிரித்தாடியதையும், தேவாலயம் தீக்கிரையானதையும் வாசிக்கும்போது, இயேசுவின் வார்த்தைகளின் உக்கிரம் நமக்கு புரியும்.
வேதாகமக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமா? இன்று அநேக விசுவாசிகள், “இதெல்லாம் பாஸ்டர்களுக்குத் தான் அவசியம்; நமக்கு எதுக்கு சரித்திரம்?” என்று நினைக்கிறார்கள். இது தவறு.
- வேதாகம அறிவு என்பது வெறும் வசனங்களை மனப்பாடம் செய்வது மட்டுமல்ல; அந்த வசனங்கள் எந்தச் சூழலில் சொல்லப்பட்டன என்பதை அறிவதே முதிர்ச்சி.
- நாத்திகர்களும், மாற்று மதத்தினரும் “இயேசு வாழ்ந்தாரா? ஆதாரம் எங்கே?” என்று கேட்கும்போது, “வேதத்தில் போட்டிருக்கிறது” என்று சொல்வதை விட, “ஜோசிபஸ் போன்ற சமகால வரலாற்றாசிரியர்களே அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்” என்று சொல்வது உங்கள் விசுவாசத்திற்கு எவ்வளவு பலம் சேர்க்கும்!
ஏகப்பட்ட வேதப் பின்ணனியை வரலாறாக எழுதிய ஜோசிபஸ் ஒரு கிறிஸ்தவர் அல்ல; அவர் கடைசிவரை ஒரு யூதராகவே வாழ்ந்தார். ஆனால், தேவன் தம்முடைய வார்த்தையின் சத்தியத்தை நிரூபிக்க, ஒரு யூதனையும் ரோமப் பேனாவையும் பயன்படுத்தினார் என்பதுதான் சரித்திர விந்தை!
வேதத்தைப் படிக்கும் அதே வேளையில், அதைச் சுற்றியுள்ள வரலாற்றையும் கற்போம். அது நம் விசுவாசத்தை இன்னும் ஆழமாக வேரூன்றச் செய்யும்.
(குறிப்பு: ஜோசபிஸின் புத்தகங்கள் அமெசான் கிண்டலில் குறைந்த விலையில் உண்டு)