
இந்திய வேதாகமச் சங்கத்தால் வெளியிடப்படும் வேதாகமங்களில் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் நாம் பார்க்க இயலும் வாசகம் ‘பழைய ஏற்பாடு முற்றிற்று’ மற்றும் ‘புதிய ஏற்பாடு முற்றிற்று’. முற்றிற்று என்பதன் முழு நோக்கம், இனி வேறு இல்லை என்றும், எழுதிக்கொடுக்கப்பட்ட தேவவார்த்தைகளால், வேதாகமம் முற்றுப்பெற்றாயிற்று; இனி பிற சேர்மானங்களுக்கு இடமில்லை என்பதுதான்!. ஆனால், நம் கையில் இருக்கும் வேதாகமம் போதாது என்று சொல்வதில் இருந்து வேதாகமம் முழுமையானது அல்ல என்று சொல்வதுவரை பலவிதமான போதனைகள் உபதேசிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அதை நம்பும் கிறிஸ்தவக் கூட்டமும் உண்டு. மார்மான் என்கிற ஒரு கூட்டம் அவர்களுக்கென பிரத்தியேக வெளிப்படுத்தலாக ஒரு வேதாகமத்தை வைத்துக்கொண்டு மக்களை வழிவிலகிப் போகச் செய்வதும் உண்டு. நம் ஊர்களிலும் அவர்கள் பரவலாக இருக்கிறார்கள்.
ரோமன் கத்தோலிக்க வேதாகமத்தில் உள்ள 73 நூல்கள், புராட்டஸ்டண்டு சபையினரின் வேதாகமத்தில் 66 என அனைத்தும், முதலாம் நூற்றாண்டுக்கு (கி.பி 100) முன்னர் எழுதப்பட்டவையே. புதிய ஏற்பாட்டின் கடைசி நூலாக வெளிப்படுத்தின விசேஷம் கிறிஸ்துவின் சீடரான அப்போஸ்தலர் யோவானால் கிபி 68ல் அல்லது 96ல் எழுதப்பட்டது. (68 என்றால் யோவான் எழுதிய சுவிசேஷம் கடைசி நூலாக இருக்கக்கூடும்).
புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்துமே அனேகமாக கிறிஸ்துவுடன் இருந்தவர்களால் எழுதப்பட்டது. அல்லது சமகாலத்தில் அவர் இருந்த பூமியில் வாழ்ந்தவர்களால் எழுதப்பட்டது. இதில் மாற்கு பேதுருவின் சீடர், லூக்கா பவுலின் நண்பர். பவுல் கிறிஸ்துவால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மத்தேயு கிறிஸ்யுவின் சீஷர். யாக்கோபு, யூதா, பேதுரு, யோவான் என்ற ஆசிரியர்கள் எல்லாம் கிறிஸ்துடன் இருந்தவர்கள். இவர்கள் எழுதிய நூல்களைத் தவிர பலரும் சுவிசேஷங்கள் எழுதியிருந்தாலும், பல்வேறு காரணங்களால் அவை நிராகரிக்கப்பட்டன. அதற்கு முக்கியக்காரணம் அவற்றின் நம்பத்தன்மை கேள்விக்குறியாக இருந்ததும், கிறிஸ்துவின் உபதேசங்களுக்கு மாறுபாடாக இருந்ததும்தான். அதாவது கிறிஸ்துவைத் தலையாகவும், அவரை ஏற்றுக் கொண்டவர்களைச் சரீரமாகவும் வெளிப்படுத்தாத போதனைகள் வேதத்தில் இடம்பெறத் தகுதி இழக்கிறது.
கிறிஸ்துவைக் கண்ணாரக் கண்டவர்கள், அவரது அருகாமையை அனுபவித்தவர்கள், நேரில் சென்று விசாரித்து அறிந்தவர்கள் மற்றும் அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் என சிலர் மட்டுமே அவரைக் குறித்த மற்றும் அவரது போதனைகளை உள்ளடக்கிய புத்தகங்களை எழுதத் தகுதி படைத்தவர்கள். ஒருவேளை தொடர்ந்து பலநூற்றாண்டுகளாக (இன்றுவரை) அவருடன் இருந்திராத பலரும் எழுதத் துவங்கியிருந்தால், அவரைக் காணாத, அல்லது சமகாலத்தல்லாதவர் பலர் எழுதும்போது நிச்சயம் போதனைகள் மாற்றப்பட்டிருக்கும். எனவே, செவிவழிச் செய்திகள் கட்டுக்கதைகளாக மாறும்முன்பே வேதாகமம் முத்திரையிடப்பட்டது. இதனால்தான் ஒன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் எழுதப்பட்ட புத்தகங்கள் எவையும் வேதத்தில் இல்லை. இருக்கும் புத்தகங்களும், பலவித சோதனைகளுக்கும், கேள்விகளுக்கும் பல்வேறுபட்ட காலத்தில் உட்படுத்தப்பட்டு பின்னர்தான் அனுமதிக்கப்பட்டன. மிகக்குறிப்பாக, இயேசுக்கிறிஸ்துவின் இறைத்தன்மையை குறைத்துக் காட்டும் பல நூல்களும், பழைய ஏற்பாட்டுப் போதனைகளுக்குச் சற்றும் தொடர்பற்றவையும் கவனமாகக் கண்டறியப்பட்டு தவிற்கப்பட்டன. கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைச் சத்தியங்களுக்கு முரணான சில டஜன் புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் எளிதாக அடையாளம் காணப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டன.
வேதாகமம் இன்று நம்கையில் முழுமையாகக் கிடைத்திருப்பதற்கும், மாற்றப்படாமல் இருப்பதற்கும் காரணம், யார் எழுதிய வார்த்தைகள் வேதத்தில் இடம் பெறவேண்டும் என்று ஆவியானவர் தெளிவாகத் தன் தாசர்களுக்கு வெளிப்படுத்தியதால் தான்!.
வேதாகமம் இன்று நம்கையில் முழுமையாகக் கிடைத்திருப்பதற்கும், மாற்றப்படாமல் இருப்பதற்கும் காரணம், யார் எழுதிய வார்த்தைகள் வேதத்தில் இடம் பெறவேண்டும் என்று ஆவியானவர் தெளிவாகத் தன் தாசர்களுக்கு வெளிப்படுத்தியதால் தான்!. இறைவார்த்தை மாற்றப்படுவதை அவர் ஒருக்காலும் அனுமதிக்கவேயில்லை. இடைப்பட்ட காலத்தில் பலமுறை பலரைக் கொண்டு வேதாமத்தைப் புரட்ட எதிராளி முயன்று கொண்டே இருந்தாலும், ஒரு மனிதன் இறைவனை அடையச் சரியான வழி இதுவே என்ற வார்த்தையை அவனால் மாற்றவே முடியவில்லை. ஆவியானவர், அவற்றை எழுதியவர்களுக்கெல்லாம் ஒருமனப்பட்ட ஆவியைத் தந்ததால், அதாவது, அவர்களுக்குள் இருந்த ஆவியானவர் ஒருவராக இருந்ததால், எழுத்துக்கள் அனைத்துமே ஆவியானவரின் வல்லமையால் ஒத்திசைவு கொண்டவையாக இருக்கின்றன என்பதை வேதத்தை நேசித்து வாசிக்கும் எவருக்கும் புலப்படுவது நாம் அறிந்தததே!
யார் எழுதிய வார்த்தைகள் வேதத்தில் இடம் பெறவேண்டும் என்று ஆவியானவர் தெளிவாகத் தன் தாசர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
நானும் இயேசுவைப் பார்த்தேன் என்று யாரும் கூறிக்கொண்டு பலரும் வரலாம்; அவர்கள், பிற்காலங்களில் முன்பே எழுதப்பட்ட வேதவார்த்தைகளைக் கொண்டே வேத பகுதிகளை நுட்பமாக மாற்றி எழுதத துவங்கலாம்; அப்படி எழுதி, அதனுடன் தங்கள் சொந்தச் சரக்குகளை வேதத்தில் புகுத்தவும் முயற்சிக்கலாம். ஆனால், அதற்கு இடம் கொடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள, தேவகிருபையும் ஞானமும் நம் முன்னோருக்கு அருளப்பட்டது. அவரை விசுவாசிக்கும் எவருக்குள்ளும், இன்றும் அவ்வார்த்தைகள் உள்ளத்தில் கிரியை செய்வது வழிநடத்துவதே இதற்குச் சரியான சான்று. இதுபோக, பல மொழிபெயர்ப்புகள் கடந்தும் தம் மக்களை இரட்சிப்புக்குள் வழிநடத்த எழுதிக்கொடுக்கப்பட்ட வேதாகம வார்த்தைகளே போதுமானதாக இருக்கிறது. அதுவும் பல நூறு ஆண்டுகளாக! வேதாகமம் கலாச்சாரம், மொழி, இனம் என்று அனைத்தையும் கடந்ததாக அதை ஏற்றுக் கொண்ட மனிதர்களால் காலகாலமாக உணரப்பட்டிருக்கிறது.
இன்றுவரை வேதாகமத்தில் உள்ளவற்றைக் கூட்டவும் குறைக்கவும் பலரும் முயற்சித்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் சொல்வது வேதத்திற்குப் புறம்பானதா என்று தெளிந்தறியச் சொல்வதும் தேவகிருபையும் ஞானமும் தான். ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.’ (2 தீமோத்தேயு 3:16,17) என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்.
ஆவியானவரால் ஏவப்பட்டு கிறிஸ்துவின் நேரடி தாசர்களால் எழுதப்பட்டு, மீண்டும் பல்வேறு தேவமனிதர்களால் பகுத்துணரப்பட்டு, ஆவியானவரால் கடைசியில் முத்திரையிடப்பட்ட இந்த வேதாகமம் இன்று உங்களுடனும் என்னுடனும் பேசக் காரணம் நமக்குள் இருக்கும் அதே ஆவியானவர்தான். சுருக்கமாகச் சொன்னால், வார்த்தையாகிய தேவன் மனிதரிடத்தில் வெளிப்பட்டார். அவர் வந்து சென்றபின் அவரது வார்த்தை முத்திரையிடப்பட்டு மனிதகுலத்திற்கு அருளப்பட்டது. அதை அவரே தம் பிள்ளைகளைக் கொண்டு செய்தார்.
‘வேதத்துள் அது இல்லை, இதற்குத் தீர்வில்லை, பலவற்றிற்கு விளக்கம் இல்லை’ என்று சொல்பவர்கள் அனைவருக்குமே பொருத்தமான ஞானமான பதில்களை அதே வேதாகம வசனங்களைக் கொண்டே தெளிவிக்கலாம். தெளிவிக்கவும்படுகிறார்கள். திறந்த மனதுடன் வேதாகமத்தில் தேடி வாசிக்கும் எவருக்கும், கண்டடையத்தக்கதான விசேஷங்கள் ஏராளமாக உண்டு. அதுவும், எல்லாக்காலத்திலும் வாழ்ந்தவர்களுக்கு, இனியும் வாழப்போகிற எதிர்காலத்தவருக்கும் எல்லாமே வேதத்தில் உண்டு. அப்படி வாசிக்கிறவர்கள், வேதாகமத்தை நேசிக்காமல் செல்லவே இயலாது.
கடந்த ஐநூறு வருடங்களில் சுமார் 698 மொழிகளில் முழு வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1,548 மொழிகளில் புதிய ஏற்பாடு இருக்கிறது. 3,385 மொழிகளில் வேதத்தின் ஏதாவது ஒரு பகுதி மொழிபெயக்கப்பட்டிருக்கிறது. இப்படி மொழிபெயர்ப்புகள் செய்யப்படுவது வெறும் பிஸினஸ் அல்ல. காரணம், பெரும்பாலும் வேதாகமம் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. அப்படியானால், இதற்குக் காரணம்? வேதாகமம் அதை வாசிப்பவர்களின் இருதயத்துள் தேவ அன்பை உற்றுவதும் அதை அவர்கள் மற்றவருக்கும் பகிர முயல்வதும்தான்.
இன்று, இரண்டாயிரம் ஆண்டுகளாக, வேதத்தை வாசிக்கும் எவருக்குள்ளும் அந்த வார்த்தைகளின் வல்லமை வெளிப்படுவதால், வேதாகமத்தின் முழுமைக்கு நாமே சாட்சிகள்.