80’ களின் பின்பகுதி மற்றும் 90’ களின் ஆரம்பம் அது. மக்கள் ரிலாக்ஸ்டாக இருந்த கடைசி பத்து வருடங்கள். எல்லோருக்கும் 24 மணி நேரம் போதுமானதாக இருந்தது. பாலங்களிலும், கிரவுண்டுகளிலும் சைக்கிள் கேரியர்களிலும் வாலிபர்கள் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். பெரியவர்கள் மர்ஃபி ரிச்சர்ட்ஸில் இருந்து கறுப்பு-வெள்ளை சாலிடர், டயனராவுக்கு மாறிக்கொண்டும், பெண்கள் இன்னமும் தங்கள் வீட்டு முற்றங்களில், பக்கத்துவீட்டுப் பெண்களுடன் ‘முந்தாநாள்’ மேட்னிஷோ பேசிக்கொண்டும் மாலைகளை நிதானமாக ரசித்துக்கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக் கவனித் ரசித்துப் பேசிக்கொண்டிருந்த ‘போரடிக்காத’ காலங்கள் அவை.
மணியண்ணன்
அப்போதுதான் மணி அண்ணன் அறிமுகமானார். வயது 30-35 இருந்திருக்கும் அப்போது. மில் வேலை. ஒடிசலான தேகம் – என்று இப்படியெல்லாம் அவரை சம்பிரதாயமாக வருணிப்பதைவிட அவரை விளக்குவதற்கு அல்லது, அவரை உங்கள் கண்முன் கொண்டுவந்து நிறுத்த வேறு சில வாக்கியங்கள் தான் சரி. அதைச் சொன்னால், அவர் எப்படி இருப்பார் என்று அவரது தோற்றத்தை மட்டுமல்ல, அவர் மனதையும் உங்களுக்கு வெளிக்காட்டிவிட முடியும்.
மணியைப் பற்றி சுமார் முப்பது வருடங்கள் கழித்து இன்று விளக்கப்படம் காட்டுவதானால்- மிகவும் துறுதுறு என்று இருப்பார். நடக்கும்போதே காலில் ஸ்பிரிங் கட்டியவர் போன்று, கொஞ்சம் ஜெர்க்காகி ஜெர்க்காகி நடப்பார். ‘அண்ணே’ என்றால், அப்படி இடதுபுறம் 20 டிகிரி திரும்பி, சரேலென்று வலதுபுறம் 90 டிகிரி திரும்புவார். பேசும்போது ஒவ்வொரு எழுத்துக்களை விழுங்கிவிடுவார் அல்லது நீட்டி முழகுவார். “என்னப்பா பென்னி” என்பதற்கு “என்னேப்ப்பா பெனி” என்று உள்தொண்டையும், மேல் நாசியும் சேரும் இடத்தில் இருந்து ஒரு குரல் எழுப்பிப் பேசுவார். மணி தமிழர்; ஆனால், மார்வடிக்காரர் பேசுவதுபோல் பளிச்சென்று இருப்பது உறுதி. நல்ல ஆரோக்கியமானவர்தான்; ஆனால், கைகால் கொஞ்சம் வைபிரேஷனோடு ஆடியபடி இருக்கும், விரல்களைச் சுற்றாமல் பேசவே முடியாது. உயர்த்திக் கேசத்தை சீவி இருப்பார் எனபதைவிட, விரல்கள் சீப்பாக மாறிச் சீவிக்கொண்டே இருக்கும். எப்போது என்று சொல்ல முடியாது; ஆனால், திடீரன்று பேசிக்கொண்டிருக்கும்போதே முதுகை லைட்டாக வளைத்து, உடலைத் திருக்கி, வெடுக்கென்று கோதியபடியே தலையை உயர்த்துவார். இப்படி அவரைக்குறித்து சிலவரிகளில் விளக்கலாம்.
பெயர் மாற்றம்
அவரைச் சுருக்கமாகத்தான் சொல்லவேண்டும் என்றாலோ, இதுவரை புரியவில்லை என்றாலோ அதற்கும் எளிதான வழி ஒன்று இருக்கிறது. அவருக்கு நாங்கள் வைத்த பேர்தான் அந்த வழி. ஆம்! அவர் பெயர் வெறும் மணி அல்ல. அப்படி அழைப்பதை அவர் அவ்வளவாக இரசித்ததும் இல்லை. அந்த இன்னொரு பெயரைச் சொன்னால், அவர் உங்கள் கண்முன் வந்து போவது உறுதி – ’ரஜினி மணி’. !
கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அந்த இரசாயன மாற்றம் நடந்தது. சாதாரனமாக எல்லோரம் போலத்தான் இருந்தார். பிறகு அந்த மாற்றம் வேகம் எடுக்க ஆரம்பித்தது. முதலில் கொஞ்சம் கேலியாகத் தெரிந்தது எங்களுக்கெல்லாம். ஆனால், ஒருகாலத்தில் கிரிக்கெட் பேட்டை சுழற்றும் விதமே மாறும் வண்ணம் அவர் மாறியது எங்கள் கேலிகளை நிறுத்தி கொஞ்சம் அவரை சீரியஸாகக் கவனிக்கவைத்தது. மாலைகளில், ஒரு கட்டைச் சுவருக்குப் பின் 200ரூபாய் கொடுத்து வாங்கி விளையாட வசதியில்லாத பிள்ளைகள், கரிக்கோடுகளை வரைந்து மரத்தில் ‘செஞ்ச’ பேட்டில்(Bat) கிரிக்கெட் ஆடும் காலம் அது. அப்போது எல்லாருக்கும் வாய்த்ததுபோல் எங்களுக்கும் வாய்த்தது சுவரும், பேட்டும். தெருக்கள் கபில்தேவ், விவியன் ரிச்சர்ட்ஸ்களால் நீக்கமற நிறைந்திருந்தது. ஜெண்டில்மேன் கேம் எல்லாம் கிடையாது. மிகவும் சீரியஸாக, நடக்கும் கடுமையான ஆட்டங்கள் அவை. பந்து என்னவோ இரப்பர்பந்து என்றாலும். டீம் ஸ்பிரிட் மிகவும் பிரதானம். சொதப்பல் ஆட்டங்கள் சக வீரர்களால் மிகவும் பரிகசிக்கவும்படும். வெறுப்பெற்றல், மனதில் கறுவுதல், பேட்டை உடைப்பது, மற்றும் அடிதடிகூடச் சகஜம். கிரிக்கெட் சீரியஸான சமாச்சாரமாகியே இருந்தது.
இருந்தாலும், மணி அண்ணனுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை. பந்தை எப்படிப்போட்டாலும் சரி, ஸ்பின்னை ஆடுவதுபோல், அவர் வேறு ஒரு கோணலாக, ஸ்பின் ஆகிதான் அடிக்க முயற்சிப்பார். காரணம் ஸ்டைல்! அதனால், இரண்டு பந்துகளிலேயே ஸ்டம்ப் அவுட், அல்லது கேட்ச்தான். பேட்டைத் தவிர அவர் உடலில்தான் பெரும்பாலும் பந்து விழும். பவுலிங்போடச் சொன்னால் ஒரு விஷுவல் காமடிக் காட்சி உறுதி. விக்கெட் எடுப்பதெல்லாம் அவர் குறிக்கோளில் இல்லவே இல்லை. கோக்குமாக்கான அவர் ஸ்டைலே பிரதானம். ரஜினி சினிமாவில் செய்ததை இவர் கிரவுண்ட் வெர்ஷன் ஆக்கினால் விளையாட்டு உருப்படுமா?
ஆனால், அதெல்லாம், அவருக்கு முக்கியமில்லை. “ஒழுங்காக ஆடமாட்டீர்களா” என்றெல்லாம் கேட்டுவிடமுடியாது. ஏனென்றால், அப்படிக் கேட்பதில் ஒரு புண்ணியமும் இல்லை. ஸ்டைலே பிரதானம். விளையாட்டு, வெற்றி எல்லாம் ஐந்தாம், ஆறாம் ஏழாம் பட்சம்தான். முதல் சிலபல பட்சங்கள் ரஜினி மட்டுமே. அந்த, ஸ்டைலே பிரதானம்! எங்களுக்கு வேறு வழியில்லை. அவரை மனதளவில் உப்புக்குச் சப்பாணியாக ஏற்றிருந்தோம். எந்தக் கிண்டலும் அவர் மண்டைக்குள் ஏற அனுமதிக்க மாட்டார் எனபது ஒரு மகானுக்குறிய குணம். கறுப்புச் சட்டைகளில், கறுப்பு வேட்டி, கையில் கறுப்புக் கயிறு என்று சில நாட்களில் அதை வெளித்தோற்றத்திலும் கொண்டுவருமார். காரணம், அவரது ‘தலேவர்’!
உருமாற்றம்
அப்போதெல்லாம், படம் வீட்டில் பார்க்க மாதம் ஒரு மதியம் டிவி முன்பு இருக்கவேண்டும். கேபிள்டிவி, பின் சன் டிவி வரும்வரை தியேட்டரை விட்டால் வழியில்லை. ஆனால், வசதி இருந்தால் ‘டெக்’ வாடகைக்கு எடுத்து விடியோ கேசட்டையும் வாடகைக்கு எடுத்தப் பார்க்கலாம். நினைத்த நேரமெல்லாம் ரஜினியைப் பார்க்க முடியாது என்பதால், கிடைத்த வாய்ப்பையெல்லாம் மணி அண்ணன் பயன்படுத்தாமல் விடமாட்டார். வெள்ளி இரவு ஒருபாடலாவது போடமாட்டானா, என்று பதறி ஓடிவருவார் வேலை முடிந்தவுடன். ‘போனவாரம் ஒரு பாட்டுகூடப் போடலை, அதனால் இந்தவாரம் கட்டாயம் தலைவர் பாட்டு உண்டு’ என்று ரொம்ப லாஜிக்கலாகவெல்லாம் புள்ளிவிபரங்களோடு பேசுவார். ஒரு பாடலும் இல்லாமல், கறுப்புவெள்ளைப் பாடல்கள் தொடங்கிவிட்டால் கடுப்பாகிவிடுவார். மறுநாள் கேசட் சகிதமாக வாடகைக்குப் படம் பார்க்க மிகவும் பிரயத்தனப்படுவார். மறுநாள் காலையிலும் மீண்டும் அதே சினிமா ஓடும். 23 மணி நேரம்வரை சில காட்சிகள் ரீவைண்ட் செய்யப்படும். கைகால் ஆட்டப்படும், தலை கோதப்படும். நடை பழகப்படும். அதற்காக, இருபது தடவை, முப்பது தடவை எல்லாம் ஒரே படத்தைப் பார்ப்பது ஒரு தியானம்போல் நடந்தது.
சும்மா வரவில்லை மாற்றம்
அவர் மனைவி இம்மாற்றங்களை எப்படி ஏற்றுக் கொண்டு சகித்துக்கொண்டார் என்பது ஞாபகமில்லை. ஆனால், சில வருடங்களில் மணி, ரஜினி மணியாகவே இருந்திருந்தார். அப்போதெல்லாம், ஃபிளக்ஸ் பேனர்கள் கிடையாது. இருந்திருந்தால், தெருமுனையில் சிரித்தவாறு அவர் பிரமாண்டமாக இருப்பதை, அந்தப்பகுதியை நீங்கள் கடக்கும்போது பார்த்திருக்கலாம். அதுவும், வேண்டுமென்றே, மாற்றப்பட்டு, சற்று சொட்டை உண்டாக்கப்பட்ட, ஸ்டைலான ஏறு நெற்றியுடன். தன்னை ஒரு நபர் மிகவும் பாதிக்க, அந்தப் பாதிப்பை மணி மிகவும் விரும்பி வேண்டி ஏற்றுக்கொண்டு அதற்கான பிரத்தியேக மெனக்கிடல்களால், பலகால தொடர் முயற்சிகளாலும், சில இழப்புகள், கேலிகள் என்று சகித்தபின் சுகித்ததது அவருக்கு அந்த ‘ரஜினியாதல்’.
அரும் பிரயாசம் ஒன்றும் ஒருநாள் பலனளித்தது. அவரோடு குறுகியபடி நின்று எடுத்த போட்டோவை கொண்டாட்டத்தோடு காட்டினார். மெட்ராசுக்கு மெனக்கெட்டு சென்று எப்போதோ எடுத்திருக்கிறார். அவருடன் இன்னும் நான்கு பேரும் இருந்த குருப் ஃபோட்டோ அது. அவருக்குப் பொக்கிஷமாகிவிட்ட ஒன்று. வீட்டில் வைத்துப் பூஜித்திருப்பார் என்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
தனக்கு மிகவும் பிரியமான, ஆதர்ச மனிதனைப் போல் மாறுவது வெறும் வெளிப்புறத் தோற்றத்தோடு நின்றுவிடுவதில்லை. அது உள்ளார்ந்த மாற்றம் – அது ஒரு உருமாற்றம். சில வளர்சிதை மாற்றங்களையும் உள்ளடக்கியது. முயன்றால் அது ஒன்றும் முடியாததல்ல. அது நாம் அறியாத ஒன்றும் அல்ல. ஆனால், ஆசைப்படும் எல்லோரும் செய்துவிடக் கூடியதும் அல்ல என்பதுதான் முக்கியம். மணியின் அந்த உழைப்பை வெறும் வார்த்தைகளால் விஸ்தீரணப்படுத்திச் சொல்ல இயலாது. அதுவும் ஒரு தவம் போன்றதே!
மாற்றம் எல்லோருக்குமானதல்ல
இந்த இடத்தில் ரஜினி மணியின் பால்யகாலம் முதல் நண்பரான ‘கடைக்கார’ குமார் அண்ணனையும் பற்றிச் சொல்லவேண்டும். எங்களுடன் இன்றும் தொடர்பில் இருப்பவர்.( கோவில்பட்டியில் சிறு மளிகைக்கடை வைத்திருக்கிறார்). இருவருமே ஒரே நபரைத் தான் இரசித்தார்கள். ஆனால், குமார் இன்று வரை அப்படியேதான் இருக்கிறார். ரசிகர் மன்ற வேலைகளைக், கடைவேலைகளோடு சேர்த்தே செய்வார். ஆனாலும், அவர் ரஜினி குமாராக ஆனதில்லை. காரணம், அவர் அப்படி ஆக விரும்பியதில்லை! ஒருவேளை விரும்பியே இருந்தாலும், அதற்கான முயற்சிகள் எதையும் தனக்குள் கொண்டு சென்றதில்லை. விரட்டி விரட்டி சினிமா மற்றும் பாடல்களைப் பார்த்துக் கைதட்டிக்கொண்டதோடு நிறுத்திக் கொண்டார் குமார். ரஜினி பிடிக்கும். ரொம்பவே பிடிக்கும். உயிர் என்றுகூடச் சொல்லிக் கொள்வார். ஆனால், இரஜினி அதோடு அவருக்குள் நின்றுவிட்டார். வேறு அதிக வேலை கடையில் இருந்தால், ரஜினி பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கக்கூட அவரால் இயலாது. தான் ஒருவரை விரும்பினாலிம், இரசித்தாலும், அவராக மாறும் ஒரு மாற்றத்தை குமார் விரும்பியதில்லை. சுருக்கமாக, ஒரு அளவுடன் நிறுத்திக் கொண்டார்!
இப்போது புரிந்திருக்கும் இந்தக்கட்டுரை, ரஜினி பற்றியதல்ல; இது மாற்றம் பற்றியது என்று. உங்களிலும், என்னிலும் எது மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறது? என்ன மாற்றத்தை விரும்பி இருக்கிறோம்? யாரை விரும்பி இருக்கிறோம்? விரும்பியவராக, அல்லது விரும்பியதாக மாற விரும்பினோமா? வெறும் விருப்பத்தோடு நின்றுவிட்டோமா.. அல்லது அதற்கான கடும் முயற்சிகளை நம்மில் தொடங்கிவிட்டோமா?
இந்தக்கட்டுரை வாசிக்கும் நீங்கள், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவரானால் உங்கள் வாழ்வில் அவரை எதுவரை அனுமதித்திருக்கிறீர்கள். வெறுமனே இயேசுவே என் இருயத்தில் வாரும் என்று சொல்லிவிட்டு, அவரைப் புகழ்ந்துபாட, வாழ்த்த, வணங்க மட்டும் விரும்புகிறோமா? நம் ஜெபங்களும் வேத வாசிப்புகளிலும் அவரை விரும்பியதால் செய்கிறோமா? இல்லை அதையும் தாண்டி… அவரைப் போல மாறவேண்டும் என்கிற ஆவல் விஞ்சி நிற்கிறதா? கிறிஸ்தவ வாழ்வு, கிறிஸ்துவின் வாழ்வு. கிறிஸ்துவின் சீஷராக மாறும் வாழ்வு. சீஷன் குருவைப் போல மாறவிருப்பவன். எனவே, நம் விஷயத்தில் நம் குருவான கிறிஸ்துவைப் போல மாறித்தான் ஆகவேண்டும் என்பதை நினைவில் கொண்டிருக்கிறோமா? இந்தகட்டுரையின் நோக்கம் இந்தக் கேள்வியை விதைப்பதுதான்!
எது கிறிஸ்தவ வாழ்வு?
கிறிஸ்தவவாழ்வு கிறிஸ்துவைப் போல மாறும் வாழ்வு என்று சொன்னால், மற்ற எந்த வாழ்வு நிலையும் வீண் அல்லவா? இதை அறிவோமா? ஒருவரைச் சும்மா பார்த்துவிட்டுக் கைதட்டிவிட்டுப் போவதுபோல, கேட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய் விடுகிறோமா? நீங்கள் மேலே கண்ட ‘குமார்’களுக்கு இடமில்லையே! ஒரு பென்னி, பிரபாகர், விஜய் எல்லாம் இயேசு பென்னியாக, இயேசு பிரபாகராக, இயேசு விஜய் மாறித்தானே ஆகவேண்டும்? இயேசுவை அல்லவா ரசிக்க வந்திருக்கிறோம். அதே நேரம் வெறுமனே இரசித்துவிட்டுப் போவதும் கிறிஸ்தவம் இல்லை என்பதை அறிவோமா? இந்த இரசனை நம்மில் உருப்பெறுவதல்லவா மெய்கிறிஸ்தவ அனுபவம். அந்த அனுபவம், நம்மையும் உள்ளிருந்து வெளியாக கிறிஸ்துவைப் போல மாற்றித்தீரவே வேண்டும் என்பதை எப்போதும் உணர்ந்துதான் நம் கிறிஸ்தவ வாழ்வு இருக்கிறதா?
எது கிறிஸ்துவாகும் வாழ்வு?
கிறிஸ்துவைப் போல மாறவிரும்பும் வாழ்வே கிறிஸ்தவவாழ்வு என்பதில் ஒரு மறுபடியும் பிறந்தகிறிஸ்தவனுக்கு எந்தச் சந்தேகமும் வரலாகாது.
இதற்கு வெறுமனே பார்த்தல், பின் உற்று நோக்குதல், அதன்பின் ஆர்வத்துடன் இரசித்தல், இரசித்ததை முதலில் கொஞ்சம் காப்பி அடித்தல், அப்புறம் அப்பியாசித்தல், பிறகு சதா அதையே செய்தல்.! இப்படி மாற்றத்துள் படிநிலைகள் உண்டு என்பதை முதலில் உணரவேண்டும். அதற்கு முதலில் தேவை நாம் யாரை விரும்புகிறோம் என்பதை முடிவு செய்யவேண்டும். அவராக மாற மெய்யாகவே விரும்புகிறோமா, இல்லையே என்பதில் தெளிவு அவசியம். அவர்களே நம் மாற்றத்தின் நிலைகளை அறியமுடியும். அந்த நிலைகளை அறிய தொடர்ந்து வாசிக்கவும்.
மாற்றம் அல்லது நிலை 1:
மாற்றத்துக்கு முதல் அவசியம் இரட்சிப்பு. நான் பாவி. இயேசுவே என் பாவங்களுக்குப் பரிகாரி, அவர் என்னை மன்னித்து, விடுதலையாக்கி எனக்கு இரட்சிப்பை நல்குபவர் அவரே என்கிற உணர்வும், அனுபவமும்தான் கிறிஸ்துவைப் போல் ஆவதின் முதல்படி. இதுவே பிதாவின் குடும்பத்தில் பிறத்தல், அல்லது, கிறிஸ்துவின் இராஜ்ஜித்தின் பிரஜையாதல், அல்லது இயேசுவின் சரீரத்தில் அங்கமாதல். இந்த மூன்றும் ஒன்றே. இரட்சிப்பின் அனுபவத்துக்குள் வராத யாரும் இயேசுவை புகழலாம், போற்றலாம், கும்பிடலாம், ஆனால், அதனால் அவர்களால் இயேசுவை முற்றாக அறியவது என்பது இயலாது. அதனால், இயேசுவாக மாறுதல் என்பதெல்லாம், இங்கு எண்ணத்தில் கூடத் தோன்றுவது சாத்தியமல்ல. உலகில், கிறிஸ்தவர் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொண்டாலும் அவர்களுக்கும் இரட்சிப்பு இன்றி இயேசுவாக மாற்றம் அடைவது என்பது இருதயத்தில் தோன்றமுடியாத ஒன்று. பெற்ற இரட்சிப்பின் மகத்துவத்தைப் புரிந்துகொள்பவர்களுக்கு, இயேசுவின் சிந்தை புலப்படத்துவங்கும். இயேசுவைப் போல மாறவேண்டும் என்பதன் அர்த்தம் விளங்கும்.
இயேசுவைத் தெரிந்த எல்லோரும் அவரை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வந்துவிடுவதில்லை. இயேசுவை வெறும் மகான், நல்லவர் என்கிற அளவில் அவரை நிறுத்திவிடுகிறார்கள். மகாத்மா காந்தி கூட இயேசுவைத் தனக்குப் பிடிக்கும், அவர் போதனைகளைக் கைக்கொள்ளவது நல்லது என்கிற அளவில் சிலாகித்துவிட்டு நிறுத்திக் கொண்டாரே ஒழிய அதற்கு அடுத்தகட்டமாக, இயேசுவை தன் இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.
இதற்குக்காரணம், தங்கள் பழைய நிலையில் இருந்து மாற்றம் அடைந்து கிறிஸ்துவை ஏற்று இரட்சிப்பைக் கண்டு தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. மாறாக, தங்களது மாற்றம் தங்களுக்குள் இயேசு இல்லாமலேயே நன்றாக இருப்பதாக அவர்கள் முடிவு செய்துகொள்வதுதான். ஆனால், இயேசுவை விசுவாசித்து அவர் கிருபையால் பெறும் புதுவாழ்வே முதல் மாற்றம். அதுவே இயேசுவைப் போல மாறுவதன் முதன் நிலை.
அவர் தன் நீதியை நம்முள் வைப்பதனால், நாம் முதலில் நீதிமானாக மாறுகிறோம். பரித்த ஆவி நம்முள் அருளப்பட்டதால், பரிசுத்த எண்ணங்கள் கொண்டவர்களாக மாற்றுகிறார். இந்த மாற்றங்கள் எல்லாம், முன்பு நம்மல் இயலாத ஒன்று, இன்று அவரால் அவரைப்போல மாற்றம் பெருகிறோம்.
மாற்றம் அல்லது நிலை 2:
இரண்டாவதாக, அவருக்குள் பெற்ற இரட்சிப்பு என்பது வெறும் சர்ச்சுக்குச் சென்று வந்து, தேவைகளை ஜெபங்களாக, நேரம் கிடைக்கும்போது வேதம் வாசிக்கும் மேம்போக்கான வாழ்வு அல்ல; இது அவருடன் கொண்டுள்ள உறவு என்றும், வாழ்நாள் முழுவதும் அவரோடு இணைந்து இணக்கமாகச் செல்லும் அனுபவம் என்கிற புரிதல் வேண்டும். இதற்கு முன்பாக மனம்போனபடி வாழ்ந்தவர்கள், இன்று கிறிஸ்துவின் மனம் விரும்பும் வகையில் வாழத்துவங்குவதே அந்த உறவின் ஆரம்பம். பிதாவின் குடும்பத்தில் பிறந்த யாரும், அவரது குணங்களை கூர்ந்து கற்றல் அவசியம். பிதாவை அறிய குமாரனாகிய இயேசுவை அறிவதுதான் ஒரே வழி. அதற்கு எளிய மற்றும் ஒரே முறை, அவர் தன்னை தன் செயல்களிலும், வார்த்தைகளிலும் எப்படி வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதைக் கற்றுக் கொள்வதே. அவை வேறு எங்கும் இல்லை; நம் கைகளில் இருக்கும் வேதாகமத்தில்தான் இருக்கிறது. ஒருவர் தன்னைப் பற்றி எழுதிக்கொடுத்து, அதைக் வாசித்துக் கைக்கொள்ள விரும்பும் யாவர் வாழ்வில் அவற்றைச் செயலும்படுத்தினால், அவரைக் கற்றுக் கொள்வது கடினமான ஒன்று இல்லையே. இது எப்படி நம்மை அவரைப் போல மாறவைக்கிறது?
வேதாகமம் முழுவதுமே தேவ ஆவியால் அருளப்பட்டது. இந் வேதத்தின் மையப் பொருளானவர் இயேசுவே. இயேசுவின் வார்த்தையால் உருவான உலகங்கள், ஆதியாகமத்தில் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷத்தில் அவரது வெளிப்படையான சாம்ராஜ்ஜியத்தில் நிறைவுறுகிறது. இடைப்பட்ட நாட்களில், சிறிதுகாலம் அவரது வாயின் வார்த்தைகள் அவர் மனுஷகுமாரனாக, மனிதனாக இருந்தபோது அவரது வாயின் வார்த்தைகளாக சக மனிதர்களுடன் உறவாடினார். அவை ஒன்றுக்கு நான்கு புத்தகங்களாக, வெவ்வெறு கோணங்களில் எழுதப்பட்டுள்ளது. எனவே, நாம் அவற்றில் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) தொடங்கி அவரது வார்த்தைகளையும், இருதயத்தையும் புரிந்துகொள்ளல் எளிது. நீங்கள் இப்போதுதான் இரட்சிப்பைப் பெற்றிருப்பீர்களானால், இப்புத்தகங்கள் இயேசுவைப் போல மாற ஒரு எளிதான வழியை உங்களில் ஏற்படுத்தித் தரவல்லவை. இயேசு யார், அவர் குணங்கள் என்ன, அவர் தன்னைப் பற்றி என்ன சொல்கிறார், தன் பிதாவாக யாரைச் சொல்கிறார், யார் பாக்கியவான்கள் என்கிறார், யாரைச் சீஷர்கள் என்கிறார்? யாரிடம் இரக்கப்பட்டார், யாரைக் கடிந்துகொண்டார், யாரைத் தன் உறவினராகக் கொண்டிருந்தார்? தன்னைக் குறித்த தீர்க்கதரினங்களை எப்படி நிறைவேற்றுவதாகச் சொன்னார்.. செய்தார்? எவற்றை வெறுத்தார்? எவற்றை விரும்பினார்? தன்னை பலியாகத் தந்த சம்பவத்தில் அவர் தன்னை எப்படியெல்லாம் வெளிப்படுத்தினார் என்று வசனம் வசனமாக, வார்த்தை வார்த்தையாக அனுபவித்து, ருசித்து கற்பீர்களானால், ஒரு இனிமையான கிறிஸ்துவாக மாறும் அனுபவம் உறுதி.
இயேவின் வார்த்தைகளை வாசிக்கும்போதே அவர் தன்னைக்குறித்தும் வெளிப்படுத்தப்பட்டவைகளாகச் சொன்ன பழைய ஏற்பாட்டின் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டால், அவர் இஸ்ரயேல் ஜனங்களை நடத்திய வழியின் வழியே, அவரை இன்னும் ஆழமாகக் கற்பது உறுதி. இதன் பின்னர், புதிய ஏற்பாட்டில் அவரது சீஷர்களான, அப்போஸ்தலர்கள், தாங்கள் கண்டும், கேட்டும், உணர்ந்தும் , தொட்டும்கூடப் பார்த்து, அவரோடு இருந்து அவரது உறவில் திளைத்தவர்கள் எழுதக்கேட்ட ஆழமான உபதேசங்கள் அடுத்த படியாக இருக்கவேண்டும். இயேசுவை நமக்கெல்லாம் மிகச் சிறப்பாக நமக்கு விளக்கித் தருபர்களில் பவும் முதலாவதாக வருகிறார். எனவே, அப்போஸ்தலனாகிய பவுலின் கடிந்தங்களும், தன்னை கிறிஸ்துவின் சாயலாக மாற்றுக்கொள்ளும் அவரது வழிமுறைகளை நாம் கற்றோமானாலால் இயேசுவாக நாம் வெளிப்பட அவையே மிகப்பேருதவியாகத் திகழும்.
இயேசுவின் இராஜ்ஜியத்தில் வாழும் எவருக்கும் தான் இருப்பது தேவனது இராஜ்ஜியத்தில் என்ற எண்ணத்தை மறவாமல் வாழ்தலும் (இதை வேதம் தேவ இராஜ்ஜியத்தை தேடுதல் என்று அழைக்கிறது), அவரது பார்வையில் சரியானது என்ன (அதை நீதி என்று வேதம் அழைக்கிறது) என்பதை அறிந்து கீழ்படிதலும் இன்றியமையாததாகிறது. அப்படி நடப்பவர்களுக்குள் மட்டுமே அவரது எண்ணங்கள் புரிபடும். அவரது ஆசைகளைத் தங்களது ஆசைகளாக மாற்றமுடியும். இயேசுவின் சரீரமாகிய சபையில் இணைந்தவர்கள் மட்டுமே அவரது சரீரத்தின் மற்ற அவயவங்களைக் கரிசனையுடன் நோக்க முடியும். அவர்கள், வேறு யாரும் அல்லர், நம் சக கிறிஸ்தவர்கள் தான். உன்னைப்போல் பிறனையும் நேசி என்பது அவரது சரீரத்தில் இணைந்த உறுப்புக்களுக்கானது. கிறிஸ்துவின் குணாதியங்களை அணுஅணுவாகக் கற்பதும், அதன்படி நடக்க விளைவதும் கிறிஸ்தவனுக்குள் கிறிஸ்துவின் சாயலை நுழைக்கும், அதை மற்றவர் காணவும் உதவும்.
இன்று நாம் அவரது இராஜ்ஜியத்தின் புத்திரர்களாக, அவரைப்போல இராஜாக்கள்ளாம மாற்றம் பெருவது அவரால்தான். இது அவரது இராஜ்ஜியத்தையும் நீதியையும் தினமும் தேடும் எவருக்குள்ளும் கொண்டுவரப்படும் மாற்றம்.
மாற்றம் அல்லது நிலை 3:
வேதத்தில் 66 புத்தகங்களிலும் கிறிஸ்துவைக் காணலாம், படிக்கலாம் என்றாலும், அவராக மாறுவது என்பது நம்மால் மட்டும் இயலும் காரியம் அல்ல. அதாவது, வேத வசனங்கள் மூலம் கிறிஸ்துவுவை அறிந்து அவரைப்போல வாழ முயற்சித்தாலும் அது எளிதான காரியமாக இருக்கப்போவதில்லை. காந்தி அடிகள் முதல், பலரும் அவ்வாறு முயற்சித்துத் தோற்றவர்களே! ஏனென்றால், இயேசுவின் வழி உன்னத வழி, கறை, திரை குற்றம் இல்லாத மெய்வழி. பாவ உலகில் இருக்கும் கிறிஸ்தவன் தன் சுயமுயற்சியால் இயேசுவைக் கற்பதும் அவராக மாறுவதும் நடக்காத காரியம். ஆனால், அப்படி முடியாத ஒரு வேலையைச் செய்ய இயேசு ஏன் நம்மை நிர்பந்திக்கப்போகிறார் என்பது யோசித்தோமானால், அதற்கு வழியையும் தருகிறார்.
பெரும்பாலான கிறிஸ்தவர்களின் பிரச்சனை இதுதான். கிறிஸ்துவாக மாறுவதா? அதெல்லாம், நம்மால் இயலாத காரியம் என்று அவர்களாகவே முடிவெடுத்து ஒதுங்கிக்கொள்கின்றனர். இது, கிறிஸ்துவைப் போன்ற உருமாற்றம் சாத்தியமே அல்ல என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஆழமாக விதைத்துவிடுகிறது. விளைவு, கிறிஸ்துவின் பாதைக்கு நேர் எதிரான உலகத்தின் பாதை. அதில் சிக்கி துவள்பவர்களுக்குள், தங்கள் இரட்சிப்பே மிகவும் பாரமான உணர்வைத்தருகிறது. ஒரு பெரும் ஏக்கம் வருதும் இதனால். இல்லையென்றால், நானும் ஒரு கிறிஸ்தவன் என்று தன்னையும் பிறரையும் ஏமாற்றிகொண்டு போலிக்கிறிஸ்தவ வாழ்க்கையில் திருப்தி ஆகிவிடுகின்றனர். கிறிஸ்துவுக்காக எதையும் செய்யத் தயார் தான்; எவ்வளவு காணிக்கை வேண்டுமானாலும் கூடத் தருகிறோம்; ஆனால், அவராக மாறுவது என்கிற நினைப்பு இதுவரை வந்ததே இல்லை என்று ஒத்துக்கொள்ளவும் செய்யலாம்.
ஆனால், நம் தேவன் அப்படிப் பட்டவர் அல்ல. நாம் உலகத்தில் இருக்கிறோம் என்றும், இந்த உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது எனபதையும் தன் மனதில் கொண்டதால், நமக்காக உதவிசெய்ய தன் பரிசுத்த ஆவியானவரை நமக்குள்ளேயே வாசம் செய்ய அவர் அருளி இருக்கிறார். எனவே, நாம் இங்கே தனியே இல்லை. நம் ஓட்டம், போராட்டம் தனியே இல்லை. ‘நாம் ஒண்டி ஆள் அல்ல!’ நம்முள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் கிருபையப் பற்றிக் கொண்டு வாழவும், கற்ற சத்தியத்தில் நிலைத்திருக்கவும், விழாதவாறு தாங்கவும், நம் சுய இச்சையில் விழுந்தாலும், சிக்குண்டு அலைப்புறாதபடி எழுந்து தொடர்ந்த நல் ஓட்டம் ஓடி, முடிவு பரியந்தம் இயேசுவைபோலவே நின்று ஜெயம் பெற உதவுகிறார்.
அவரது நினைப்பூட்டல், கடிந்துகொள்ளல், மற்றும் உற்சாகப்படுத்துதல் மிகப் பெரிது. கிறிஸ்துவை நம் வாழ்வில் பிரதிபலிக்க உதவுபவர் அவரே. ஆனால், பரிசுத்த ஆவியானவரைக் குறித்த போதனைகளை நாம் சரிவர புரிந்துகொள்ளதால், அல்லது புறக்கணிப்பதால், அல்லது தப்பெண்ணம் கொள்வதால், கிறிஸ்தவ வாழ்வு அயற்சியானதாகி விடுகிறது. அல்லது சோம்பல் கொண்டு தத்தளிக்கிறது. இல்லையென்றால், எப்படி வாழ்ந்தாலும் அத கிறிஸ்துவின் வாழ்வு என்றும், நாம் எதை விரும்பிச் செய்தாலும் கிறிஸ்து அதில் அகமகிழ்கிறார் என்று தவறான எண்ணத்தை விதைத்துவிடுகிறது.
அப்படியல்லாமல், இயேசு பரிசுத்த ஆவியானவரைக் குறித்து என்ன சொன்னார், ஆதித் திருச்ச்பை எப்படி பரிசுத்த ஆவியானவருடன் புதுபெலன் அடைந்து உன்னதமான கிறிஸ்துவின் வாழ்வை வாழ்ந்து சகல ஜனங்களுக்கும் வெளிச்சமாக ஒரு பெரும் துவக்கமாக இருந்தது என்பதை கிறிஸ்துவாக வாழ நினைக்கும் ஒவ்வொரும்வரும் கற்றுக் கொள்ளல் வேண்டும்.
இப்படிக் கிறிஸ்துவாக வாழ்தல், நம்மில் ஒரு உருமாற்றத்தைக் கொண்டுவருகிறது. முன்னர், சரீரத்தை முன்னிலையாகக் கொண்ட மனிதன், மறுபடியும் பிறந்தவுடன் ஆவியில் பிறப்படைந்து, புது சிருஷ்டியாகி தன் ஆவியை முன்னிலைப்படுத்தி வாழ்கிறான். இந்த வாழ்வே கிறிஸ்துவாக வாழ்தல். இந்த வாழ்வை வாழவே அவர் உதவி செய்கிறார். அதுவும், தன்னுடன் இன்னொருவரான பரிசுத்த ஆவியனவராக.
ஏன் மாறவேண்டும் கிறிஸ்துவாக?
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலக்கணம் இருக்கிறது. அதாவது, குடும்பத்தில் இயல்புகள், வாழ்வுமுறைகள், குடும்பத்திற்கென ஒரு கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள். நாம் இந்த பூமியில் பிறந்த உடன், நம் குடும்பத்தின் பண்புகள் பெற்றோரால் நம்முள் விதைக்கப்படுகிறது. நாம் நம் பெற்றோரைப் போலவே, அதிலும் குறிப்பாக நம் தந்தையை வெளிப்படுத்துபவர்களாக வளர்கிறோம். தந்தையின் எண்ண ஓட்டம் குடும்பத்தின் எண்ண ஓட்டம். தந்தையின் சிந்தையே பெரும்பாலும் குடும்பத்தின் சிந்தை (விதிவிலக்குகள் இருக்கலாம்). பிதாவின் குடும்பத்தின் பிதாவே பிரதானம். இங்கு ஒரு சின்ன சிக்கல். பிதாவை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை. அப்படியானால், யாரைப்போல குடும்ப அங்கத்தினர் இருப்பார்கள்? இயேசுவைபோல!
இயேசு சொல்கிறார், என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று. நானே அவர் என்றும் தெளிவாகச் சொல்லிவிட்டார். எனவே, அவர் குடும்பத்தில் பிறந்தவர்கள், இனி அவரைப் போல மாறி, அந்தக்குடும்பத்தின் பண்புகளைத் தரித்துக் கொண்டால்போதும். அவராக வாழ, அவர் குடும்பத்தின் பேர் விளங்க வாழவேண்டும். இதை அவர் நாமம் மகிமைப்பட என்று வேத வார்த்தைகளில் சொல்லலாம். எனவே, கிறிஸ்துவின் குடும்பத்தில் பிறந்த அவரும் அவரைப்போல வாழ்ந்துதான் ஆகவேண்டும். அவரைப்போல வாழ எளிதான வழி அவராக மாறுவது. அவரது இருதயத்தைக் கைக்கொள்ள நினைக்கும் எவரும் அவரைபோல மாறுவது எளிது.
இக்கட்டுரையைப் பொறுமையாக வாசித்த அனைவருக்கும், இப்போது யாராக நாம் மாறவேண்டும்? அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும்? அதற்கு நமக்குக் கிடைக்கும் வழிகள், உதவிகள் என்ன என்பதில் ஒரு தெளிவுகிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கிறிஸ்தவனுக்குள் நடக்கும் மாற்றம் சும்மா, கெட்டவன் நல்லவனாக மாறும் மாற்றம் அல்ல. பாவி கிறிஸ்துவாக மாறும் மாற்றம். தானாக முயற்சிக்கும் கடும் போராட்டம் அல்ல. கிறிஸ்துவோடு இணைந்து மேற்கொள்ளும் உன்னத முயற்சி. இந்தச் சிந்தனைகளை உங்கள் இருதயத்தில் போடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
ஆவிக்குறிய மாற்றம்
உலகத்தில் யாரைப் பார்த்து யார் மாறினாலும் ஒரு நாளும் முழுமையாக அவர்கள் மற்றவராக மாற முடியாது. ஆளைப் பார்த்து, படத்தை பார்த்து, வீடியோ பார்த்தை சரீரத்தில், ஆத்துமாவில் (எண்ணங்களில்) சில மாற்றங்களை வெளிப்புறமாகக் கொண்டுவரலாம். கொஞ்சம் காப்பி அடித்து பிறரை சில நேரங்களில் வியக்கவோ வெறுக்கவோ வைக்கலாம். ஆனால், அவற்றால் மாற்றமடைதவருக்கு ஒரு உபயோகமும் இல்லை. அவை வீண்!
ஆனால், கிறிஸ்துவாக மாறுதல் வெறும் சரீர மாற்றம் அல்ல. அது ஆவிக்குறிய மாற்றம். கிறிஸ்தவன் ஆவிக்குறியன் ஆவதால், அவன் மாற்றம் அவன் ஆவியில் நடக்கிறது. அதைச் செய்பவர் ஆவியான தேவன். அவரது மாற்றங்கள் அவரது ஆத்துமாவில் முதலில் உருப்பெருகிறது. அதாவது, அவன் எண்ணங்கள் கிறிஸ்துவின் மனதில் இருப்பதை பெற்றுப் பிரதிபலிக்கிறது. பின்னர், அவர் நடை, உடை, பாவனைகள் கிறிஸ்துவை சரீரப்பிரகாரமாகக் கூற மாற்றுகின்றன. அவர்களுக்கு மற்றவர்கள் கேலிகள், பாராட்டுக்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல. கிறிஸ்த்ய்வாக மாறவேண்டும் எனபதே வாழ்வின் பிரதான எண்ணம். அவன் முற்றும் முடிய இரட்சிக்கப்பட்டு அவரை நோக்கும் நாளில், அவர் குடும்பத்தின் உறுப்பினனாக, அவரைப்போல் மாறிவிடுகிறான். தேவன் தாமே, அப்படிப்பட்ட வாஞ்சையை நம் அனைவருள்ளும் வைப்பாராக. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.