
தோல்வி மற்றும் தோல்வியில் ஏற்பட்ட மனச்சோர்வில், தங்கள் வாழ்க்கை இனி முடிந்துவிட்டது என்று நினைப்பவர்கள் ஏராளம். இனி வாழ்க்கையை அழகாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. இப்போதே என் வாழ்வில் எல்லாம் தாமதமாகிவிட்டது என்று நினைப்பதால் இனி புதிய வாய்ப்புகளைக் குறித்து சிந்திப்பதே கடினமாக ஆகிவிடுகிறது. சில விஷயங்கள் விரும்பத்தாக சூழலில் சென்று விட்டதால், இனி சரியான நிலைக்கு நான் வருவதே இயலாது என்ற நினைவுகளின் அழுத்தம் அதிகமாகி விடுகிறது. அது தலைக்கு மிஞ்சிய சூழலாகவே ஆகிவிடுகிறது. ஆனால் நாம் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும்: கிறிஸ்துவுக்குள் மரித்த புது சிருஷ்டிகளுக்கு இது ஒருபோதும் பொருந்தாது.!
போதகர் ஜே. ஆர் மில்லர் இதைப் பற்றிக் குறிப்பிடும் போது தான் வாசித்த ஒரு கவிதையை நினைவு கூறுகிறார். அவரது தோட்டத்தில் கண்ட ஒரு சம்பவம் இது. தாம் தரையில் கிடக்கும் பறவைக் கூடு ஒன்றைப் பார்க்கிறார்; முந்தைய நாள் அடித்த புயல் மரத்தை அடித்துச் சென்று அந்தக் கூட்டையும் நாசமாக்கி விட்டிருக்கிறது. இப்படி இந்தப் பறவையினது வீட்டின் இடிபாடுகளைப் பற்றி அவர் சோகமாக யோசித்துக்கொண்டிருந்தபோதே, அவர் மேலே பார்த்தார். அங்கு அவர்கள் கிளைகளுக்கு மத்தியில் புதிய கூடு ஒன்று கட்டப்பட்டு வருவதைப் பார்த்தார். நம் அருள்நாதர் சொன்னது போல அந்த ஆகாயத்துப் பறவையை அந்தக் கவிஞர் கவனித்து பார்த்திருக்கிறார்.
இந்தப் பறவை ஒரு அழியாத நமக்கு பாடம் கற்பிக்கிறது. எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகத் தோன்றினாலும், விரக்தியில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருப்பது முறையல்ல. நாம் எழுந்து மீண்டும் கட்டத் தொடங்குவோம். தவறான கடந்த காலத்தை யாராலும் மாற்ற முடியாது என்பது உண்மைதான். அது தந்த பாடங்களும் தடங்களும் மிகவும் வலி மிக்கவைதான். அவற்றை நம்மால் மாற்ற முடியாது. கடந்து சென்ற காலத்தின் அழிவை யாராலும் சரி செய்ய முடியாது. நம் வாழ்க்கையை திரும்பச் சென்று மீண்டும் வாழவும் முடியாது. ஆனால் நம் தந்தையின் காலடியில் நாம் புதிதாக ஆரம்பித்து, நம் வாழ்க்கையைப் புதியதாக ஆக்க முடியும். இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போலக் காண்கிறவர் அவர். இல்லாதவைகள் அல்லது இழந்தவைகள் ஏற்படுத்திய இரணத்தைக் குணமாக்கி, மீண்டும் கட்ட அவரால் முடியும்.
“சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்”. வெளி 21:5
சகலத்தையும் ஒரு நாள் அவர் புதிதாகப்போகிறார் என்று அவரே சொல்கிறார். அப்படி அவர் சொல்வது சத்தியம் என்றால் அதற்கான சிறு வெளிச்சமும் சில உதாரணங்களும் நம் வாழ்க்கையில் முன்னரே நடக்கத்தான் செய்யும். ஒரு பெரும் நம்பிக்கைக்கு உரிய விஷயத்தின் முன் ருசியை நம் வாழ்வில் நடத்திச், சில விஷயங்களைப் புதிதாக்கி, நம் முன் காண்பித்து, நம்மை மரு உருவாக்கம் செய்வதொன்றும் அவருக்குப் பெரிய விஷயமே இல்லை. உங்கள் வாழ்விலும் அவரால் புதிதாக்க வேண்டியதைப் புதிதாக்கி, சீராக்கி, மீண்டும் பயனுள்ள வாழ்வாக்கித் தரமுடியும். அவர் செய்வார்.
(ஜே ஆர் மில்லரின் ஒரு சிந்தனையைத் தழுவி)