அனேகமாக 35 வருடங்களுக்குப் பின் இன்னூலை மீண்டும் வாசிக்கிறேன். சின்ன வித்தியாசம். முன்பு தமிழில்; இப்பொழுது ஆங்கிலத்தில். காரணம் முழுமையான தமிழ்ப்பதிப்பு என்னிடம் இல்லை.
ஏராளமாக கதைப் புத்தகங்கள், காமிக்ஸ்கள் வாசித்து வளர்ந்த எனக்கு “கிறிஸ்தியானின்” வாழ்க்கைப்பயணம் மிகவும் பிடித்துப் போனது. இது ஒரு கதைப்புத்தகம். ஆனால், இந்தக் கதையில் நாம் தான் நாயகர்கள். நாம் ஒவ்வொருவரும்தான் அந்தக் கிறிஸ்தியான். எனவே வாசிக்கத் துவங்கிய 15 நிமிடங்களில் நீங்களும் கிறிஸ்தியானாக மாறிவிடுவீர்கள்.
இதன் தலைப்பிலேயே புரொக்ரஸ் (progress) என்பதையும் நாமெல்லாம் இங்கு வெறும் பயணிகள் மட்டுமே என்றும் உணர்த்துகிறார் நூலாசிரியர். அதாவது வளர்ச்சி இன்றி, முன்னேற்றம் இன்றி கிறிஸ்தவவாழ்வென்பது கிடையாது என்பதே இதன் சாரம்.
நமக்கு எளிதில் கிடைக்கும் (CLS/ELSல் கிடைக்கும்) தமிழ் பதிப்பு மிகச் மிகச்சுருக்கமானது. ஆங்கிலத்தில் தற்போது நான் வாசிப்பது பென்குவின் பதிப்பகத்தாரின் பழைய மூலப்பதிப்பை ஒட்டியது. இதில் KJV கால ஆங்கிலம் கலந்திருந்தாலும், வாசிப்பு நடை மிகச்சிறப்பானது. தமிழிலும் இப்படி முழுமையான பதிப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. இதில் குறிப்பாகச் சம்பவங்களுக்கு அடிப்படையான வசனங்களையும், குறும் விளக்கங்களையும் இணைத்திருக்கிறார்கள் என்பது மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
இதை வாசிக்கும்போது வேதாகமத்தை உடன் வைத்திருந்து வாசிப்பது சரியானது. இது பழங்கால க்ளாசிக் அந்தஸ்து பெற்ற நூல. 1678 ஜான் பனியன் எழுதியது. அன்றிலிருந்து இன்றுவரை உலகிலேயே மிக அதிகமாக விற்பனையாகும் நூல். அனேகமாக வேதாகமத்திற்கு அடுத்தாற்போல் அதிகமாக 5 நூற்றாண்டுகள் கடந்து விற்கப்படும் ஒரு மகத்தான புத்தகம் இது.
தன்னைப் பாவ வாழ்க்கையில் சிக்குண்டவராக உணரும் கிறிஸ்தியான் என்பவர், வேத வார்த்தைகளால் உணர்த்தப்பட்டுத் தனது கிறிஸ்துவுக்குள்ளான புதுவாழ்வைத் துவங்குகிறார். வழியில் தான் சந்திக்கும் அனுபவங்கள், ஒரு கிறிஸ்தவன் எதிர்த்துப் போராடும் உலக குணங்கள் பல்வேறு மனிதர்களாக எதிர்ப்படுகின்றனர். அவ்வகை எழுத்துகளில் அதிக உருவகங்கள் இருக்கும். இதை ஆங்கலத்தில் அலிகோரி (allegory) என்பார்கள். அவற்றை (அவர்களை) எதிர்த்துப் போராடி எப்படி நித்திய வீட்டைக் அடைகிறார் கிறிஸ்தியான், என்பதை ஜான் பனியன் தான் கண்ட கனவாக மிகச் சுவாரசியமாக எழுதுகிறார். பாவமூட்டை சிலுவையண்டை விழுகிறது. அதன்பின் கிறிஸ்தியான் தன் சிலுவைபாதையில் நடக்கத்துவங்குகிறார். முடிவில் உன்னதமான தேவனின் தாபரத்தை அடைகிறார். அதற்குத் தடைகளைத் தகர்ப்பவரே தொடர்ச்சியாக உதவுகிறார். வழியில் பல நிந்தைகளைச் சந்தித்தாலும் முடிவில் வெற்றி பெருகிறார்.
இதுவரை வாசித்திருக்கவில்லையானால் உங்கள் பிரதியை வாங்கி வாசிக்கவேண்டிய மிகச் சிறந்த நூல் இது. தமிழில் வாசித்தபின்பு ஆங்கிலத்திலும் வாசிப்பீர்களானால், இன்னும் சிந்தனை தூண்டப்படுவது உறுதி. உங்கள் நூலகத்தில் அவசியம் இருக்கவேண்டிய நூல் இது.
கிறிஸ்துவையும், அவரது பாடு மரணத்தையும், நமக்கு நித்தியவீட்டை ஆயத்தம் செய்ய அவர் தெரிந்தெடுத்து அமைத்துக் கொடுத்த பாதையையும் இந்த நாட்களில் சிந்தித்துக் கொண்டிருப்பீர்களென்றால், இந்த புத்தகத்தை வாசியுங்கள். பத்து நாட்களில் வாசித்துவிடமுடியும். மறக்காமல் உங்கள் பிள்ளைகளை வாசிக்கச் செய்யுங்கள்.