
பரிசுத்தம், தூய்மை என்றால் கொஞ்சம் ஒரு பயம், ஏக்கம் என்று கலவையான உணர்வு முதலில் வருவது தவிர்க்கமுடியாதது. ஆனால், பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்த ஒரு கூட்டத்தார் உண்டு. அவர்களை பரிசுத்தத்தை முன்னிறுத்தி வாழ்ந்தார்கள் என்று சொவதைவிட பரிசுத்தரை முன்னிறுத்தி வாழ்ந்தவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானது. ஆங்கிலத்தில் இவர்கள் Puritans – ப்யூரிட்டன்கள்.
பியூரிட்டன்களைத் தூய்மையாளர்கள் என்றோ பரிசுத்தவாதிகள் என்றோ அழைக்கலாம் என்றாலும், அவர்களைக் குறித்த அறிமுகக் கட்டுரை என்பதால் பியூரிட்டன் (Puritans) என்றே இங்கே குறிப்பிட்டுவிடுகிறேன். பின்னர், கர்த்தருக்குச் சித்தமானால், சில பியூரிட்டன் போதகர்களைக் குறித்து எழுதும்போது நல்ல தமிழ்ப் பதத்தைப் பயன்படுத்தலாம். அவர்களது பிரசங்கங்களில் இருந்து சில பகுதிகளைத் தமிழ்ப்படுத்தி எழுத முயற்சிக்கிறேன். சிறு கட்டுரைகள் சிந்தனைகள் என!
பியூரிட்டன் போதகர்களைப் பற்றி தமிழ் சபைகளில் யாரும் போதித்துக் கேட்டதில்லை. ஒருசிலர் கொஞ்சம் கோடிட்டதை மட்டும் கேட்டிருக்கிறேன். மற்றப்படி பெரும்பாலும், அவர்களைக் குறித்துப் போதித்ததில்லை. ஆனால், தமிழ்க் கிறிஸ்தவர்கள் அவர்களைக் குறித்து அவசியம் அறிந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். (நியூசிலாந்து போதகர் பாலா முன்பு ஒரு கட்டுரை இவர்களைக் குறித்து எழுதி இருந்தார்). பாப்திஸ்து சபைகளில் போதிப்பார்கள் எண்ணுகிறேன். அல்லது குறிப்பிடவாவது செய்வார்களாக இருக்கும்.
பியூரிட்டன்கள் என்பவர்கள் 16 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் ஆவர். சபை மறுமலர்ச்சிக் காலத்திற்குச்(Reformation) சற்று பின்னால் வந்தவர்கள். அவர்கள் சபையை எளிமைப்படுத்தி, அதை வேதாகமத்தை மட்டும் மையமாகக் கொண்டதாக மாற்ற விரும்பினர். இங்கிலாந்து சபை, கத்தோலிக்க சபையின் பல பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து விடாமல் தக்க வைத்துக் கொண்டதாக அவர்கள் கருதினர். எனவே அதை “சுத்திகரிக்க” அவர்கள் விரும்பினர். இதனால்தான் அவர்கள் பியூரிட்டன்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பியூரிட்டன்களின் நம்பிக்கைகள்
- வேதாகமம் மட்டுமே நம் வாழ்க்கை மற்றும் தேவனை அறிந்து தொழுதுகொள்ள உண்மையான வழிகாட்டி என்று பியூரிட்டன்கள் விசுவாசித்தனர். அவர்கள் வேதத்தைக் கவனமாகத் தியானித்து, அதை மிகச் சரியாகப் பின்பற்ற முயன்றவர்கள்.
- தேவன் தாம் தேர்தெடுத்தவர்களை இரட்சிக்கிறார் என்றும், மக்கள் தங்கள் நற்கிரியைகள் மூலம் இரட்சிப்பைப் பெற முடியாது என்கிற போதனையை சிறப்பாக முன்னெடுத்தனர்.
- ஜெபம், வேத வாசிப்பு மற்றும் ஆழமான தியானத்தின் மூலம் மட்டுமே தேவனுடன் ஒரு வலுவான, தனிப்பட்ட உறவை கொண்டிருக்க முடியும் என்பதைப் பியூரிட்டன்கள் வலியுறுத்தினர்.
- பிரசங்கம் மற்றும் ஜெபத்தை மையமாகக் கொண்ட எளிய தேவாலயச் சேவைகளை அவர்கள் விரும்பினர். சபைக்குள் ஆடம்பரமான அலங்காரங்கள் அல்லது சடங்குகளைத் தவிர்க்க வலியுறுத்தினர். இன்றைய ஆட்டம் பாட்டங்களையெல்லாம் பார்த்தால் நிச்சயம் கொதித்துவிட்டிருப்பார்கள்.
- பியூரிட்டன்களுக்குத் தனிப்பட்ட ஒழுக்கம் அதிமுக்கியமான ஒன்றாக இருந்தது. கடின உழைப்பு,நேர்மை மற்றும் சுய கட்டுப்பாட்டை அவர்கள் மதித்தனர். அக்கால இங்கிலாந்து மன்னர்களுக்கும் ஒழுக்க ஆலோசனை கொடுக்கும் அளவு இந்த ஒழுக்கம் அவர்களுக்கு மதிப்பைப் பெற்றுத் தந்திருந்தது.
சீர்திருத்தக் கிறிஸ்தவத்திற்கு சிறந்த பங்களிப்புகள்
- புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தில், குறிப்பாக சீர்திருத்த இறையியலின் வளர்ச்சியில் பியூரிட்டன்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
- பியூரிட்டன் பிரசங்கிகள் வேதத்தை அடிப்படையாகக் கொண்டு நீண்ட, விரிவான பிரசங்கங்களை வழங்கினர். இது கிறிஸ்தவர்களுக்கு வேதத்தின் பல அடிப்படைப் போதனைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவியது.
- பியூரிட்டன்கள் தங்கள் நம்பிக்கைகள் பற்றி பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதி, சீர்திருத்த இறையியலை வடிவமைக்க உதவினார்கள். இன்று தமிழில் இவர்கள் புத்தகங்கள் பல வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஏகப்பட்ட புத்தகங்கள் ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்திருக்கிறார்கள். அல்லது, அவர்களது பல தொடர்போதனைகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. 17 மற்றும் பதினெட்டம் நூற்றாண்டின் ஆங்கிலக் கிறிஸ்தவர்களுக்கு பியூரிட்டன்களை வாசிப்பது மிகவும் முக்கியமான வேலையாக இருந்தது. (பொழுதுபோக்குக்காகப் படித்தவர்களும் உண்டு என்பார் போதகர் டேவிட் பாஸன்).
- பியூரிட்டன்கள் காலத்தில் ஐரோப்பாவில் கல்வி சிறக்கத் துவங்கியது. படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர்கள் கல்வியை மதித்து பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் நிறுவினர். இது அவர்களின் போதனைகளையும் மட்டுமல்லாமல் நன்மதிப்பையும் செல்வாக்கையும்கூடப் பெற பரப்ப உதவியது. (ஐரோப்பா உலகமெங்கும் ஆட்சி செய்ததற்கு அவர்கள் பெற்ற இக்கல்வி வளர்ச்சியும் காரணம்).
- ஒரு காலத்தில் இவர்களுக்கு வலுவான எதிர்ப்பும் வரத்துவங்கிய போது, பல பியூரிட்டன்கள் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்ததும் நிகழ்ந்தது. இதன் விளைவாக, அவர்களது போதனைகளும் இறைநம்பிக்கையும் ஆரம்பகால அமெரிக்காவின் கலாச்சாரத்தையும் அரசாங்கத்தையும் கூட வடிவமைக்க உதவியது. In God We trust என்று அமெரிக்க நிர்மாணத்தின்போது அறிவிக்கப்பட்டதே பியூரிட்டன்களின் தாக்கத்தால்தான். பியூரிட்டன்களது எழுத்து அதற்கு உதவும்!
நீங்கள் சில பிரபலமான பியூரிட்டன் போதகர்கள்
சில நன்கு அறியப்பட்ட பியூரிட்டன் பிரமுகர்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
- ஜான் பன்யன்: “தி பில்கிரிம்ஸ் ப்ரோக்ரஸ்” – மோட்சப் பிரயாணம் என்ற நாமறிந்த புத்தகத்தின் ஆசிரியர். இது ஒரு கிறிஸ்தவரின் பரலோகப் பயணத்தைப் பற்றிய உருவகக் கதை. முன்பு இதுகுறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். இதுவரை வாசிக்கவில்லையென்றால் வாசியுங்கள்.
- ஜொனாதன் எட்வர்ட்ஸ்: இவர்தான் நமக்கு அதிகம் பரிச்சயமான ப்யூரிட்டன். “Sinners in the Hands of an Angry God” என்ற பிரசங்கத்திற்குப் பெயர் பெற்ற சக்திவாய்ந்த பிரசங்கி மற்றும் இறையியலாளர். எட்வர்ட்ஸின் சில புத்தகங்கள் தமிழில் உண்டென்று நினைக்கிறேன்.
- ஜான் ஓவன்: சீர்திருத்த இறையியல் குறித்து பல முக்கியமான படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளர் மற்றும் இறையியலாளர். கிருபை வெளியீடுகளில் தமிழில் கிடைக்கின்றன. அவசியம் வாங்கி வாசியுங்கள்.
- ரிச்சர்ட் பாக்ஸ்டர்: ” The reformed pastor -தி ரெஃபார்ம்டு பாஸ்டர்” என்ற புத்தகத்திற்கு பெயர் பெற்ற பிரபலமான போதகர் மற்றும் எழுத்தாளர். இது அரசாங்க அமைச்சர்களுக்கும் கூட அப்போது வழிகாட்டுதலை வழங்கியது என்பார்கள்.
இதுபோக இன்னும் ஒரு நூறு போதகர்கள் இருந்திருப்பார்கள். அவர்களது போதனைகள் விளைவாக ஆயிரக்கணக்கானோர் அர்பணித்து பியூரிட்டன்களாக வாழ்ந்தார்கள். அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர்களே ஒரு இருபதினாயிரம் பேர் இருப்பார்கள் என்று கணித்திருக்கிறார்கள்.
பியூரிட்டன் பெரியவர்களைப்பற்றி நினைக்கும்போது அவர்களுடைய வரலாறு தெரிந்தவர்களுக்கு உடலில் புல்லரிப்பு ஏற்படாமல் இருக்காது என்று எழுதியிருந்தார் போதகர் பாலா. அவர்களது எழுத்தையும் வாழ்க்கையையும் வாசித்தவர்கள் வேதத்தின்படி வாழ்வது எக்காலத்திலும் சாத்தியம்தான் என்கிற உணர்வைப் பெறுவது உறுதி. நம்முடைய தூய்மையான கிறிஸ்தவ வாழ்க்கை சமுதாய மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதற்கு நமக்கே ஊக்கம் தேவை! வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட போதனைகள் மட்டுமே அதற்கான வெளிச்சத்தைக் காட்டும்.
பியூரிட்டன்களை அவர்கள் போதகங்கள் வாயிலாக அறிவது ஆவிக்குரிய வாழ்விற்கு நிச்சயம் பெரும் பலனைப் பெற்றுத்தரும். நீங்கள் போதகர்களாக இருந்தால், நேரமெடுத்து வாசியுங்கள், உங்கள் போதனைகள் வளம் பெறும்.
நான் பரிந்துரைக்கும் மிக முக்கியமான புத்தகங்கள்:
The Sinfulness of Sin by Ralph Venning – இது திருமறைத் தீபம் வெளியீடாகத் தமிழில் வந்திருக்கிறது.
The Mystery of Providence by John Flavel
The Heart of Christ by Thomas Goodwin
The Bruised Reed by Richard Sibbes
All Things For Good by Thomas Watson
The Rare Jewel of Christian Contentment by Jeremiah Burroughs
The Mortification of Sin by John Owen
Letters of Samuel Rutherford by Samuel Rutherford
The Death of Death in the Death of Christ by John Owen
விலை குறைந்த பதிப்புகள் Amazon-ல் உண்டு. இவற்றில் பெரும்பாலானவை monergism.com தளத்தில் இலவசமாக, pdf, kindle ஃபார்மட்டுகளில் உண்டு. சில புத்தகங்கள் திருத்தப்பட்ட இக்கால ஆங்கிலத்திலும் உண்டு. வாசியுங்கள். வளருங்கள்.