பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினாரா? ஒரு வேத வரலாற்றுப் பார்வை

வேதாகமத்தை ஆழமாக வாசியாத சிலர் மத்தியில், “இயேசு ஒரு நல்ல போதகர், ஆனால் பவுல்தான் இன்று நாம் காணும் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கினார் (Paul invented Christianity)” என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு. இயேசு போதித்த எளிய அன்பின் மார்க்கத்தை, பவுல் தனது இறையியல் அறிவாலும் நியாயப்பிரமாணப் பின்னணியாலும் சிக்கலான ஒரு மதமாக மாற்றிவிட்டார் என்பதே இவர்களின் வாதம்.

இந்தக் கருத்து எவ்வளவு தூரம் வேதத்திற்கும் சரித்திரத்திற்கும் புறம்பானது என்பதை நாம் ஆராய்வது அவசியம். பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கவில்லை, மாறாக, ஏற்கனவே கிறிஸ்துவால் உருவாக்கப்பட்ட சபைக்கு ஆவியானவரின் ஏவுதலால் ஆழமான இறையியல் விளக்கங்களை அளித்தார் என்பதே உண்மை.

1. பவுலுக்கு முன்பே இருந்த கிறிஸ்தவம் (அப்போஸ்தருடைய நடபடிகள் 2)

இந்த வாதத்தின் மிகப்பெரிய பலவீனம் சரித்திரமே. பவுல் (அப்போதைய சவுல்) கிறிஸ்தவ மார்க்கத்திற்குள் வருவதற்கு முன்பே, கிறிஸ்தவம் ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்து கொண்டிருந்தது.

• பெந்தெகொஸ்தே அனுபவம்: கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்குக்குப் பிறகு, பரிசுத்த ஆவியானவர் எருசலேமில் ஊற்றப்பட்டபோது (அப் 2), பேதுரு பிரசங்கித்தார், அன்று மூவாயிரம் பேர் மனந்திரும்பினார்கள். சபை பிறந்தது. பவுல் அப்போது அங்கே இல்லை.

• பவுலின் பின்ணனி பவுல் ஒரு கிறிஸ்தவராக அறிமுகமாவதற்கு முன், அவர் “சபையை நாசம்பண்ணிக்கொண்டிருந்தான்” (அப் 8:3) என்று வாசிக்கிறோம். அவன் துன்புறுத்திய அந்த “சபை” (Church) ஏற்கனவே இருந்தது. இல்லாத ஒன்றை யாராலும் துன்புறுத்த முடியாது.

• மகா கட்டளை (Great commission): பவுல் மனந்திரும்புவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, இயேசுக்கிறிஸ்து தமது பதினொரு அப்போஸ்தலர்களுக்கும் “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” (மத் 28:19) என்ற மகா கட்டளையைக் கொடுத்திருந்தார். கிறிஸ்தவத்தின் “மிஷனரிப் பணிகள்” பவுலால் தொடங்கப்படவில்லை; இயேசுவின் நேரடி சீடர்களாலும் மற்ற சீடர்களாலும் பவுல் இயேசுவை அறியும் முன்னரே தொடங்கட்ட ஒன்று. பவுலைக் கொண்டு பிற்காலங்களில் விரிவாக்கப்பட்டது.

ஆகவே, பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கவில்லை; ஏற்கனவே வளர்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவத்தை அழிக்க முயன்று, அதில் தோற்று, பின்னர் அதன் மாபெரும் அப்போஸ்தலனாக மாறினார். 

2. அப்போஸ்தலர்களின் அங்கீகாரம் (Acts 15, Galatians 2)

பவுல் ஒரு புதிய மதத்தையோ அல்லது இயேசு போதிக்காத ஒரு புதிய சுவிசேஷத்தையோ கண்டுபிடித்திருந்தால், இயேசுவோடு மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்த பேதுரு, யோவான், யாக்கோபு போன்ற மூல அப்போஸ்தலர்கள் அதை ஏற்றுக்கொண்டிருப்பார்களா? நிச்சயம் இல்லை.

நடந்தது என்ன?

எருசலேம் சங்கத்தில் (அப் 15), புறவினத்தார் இரட்சிக்கப்பட விருத்தசேதனம் அவசியமா என்ற கேள்வி எழுந்தபோது, பவுலின் கருத்தை (கிருபையினாலேயே மீட்பு) பேதுருவும் யாக்கோபும் ஆமோதித்தார்கள். அவர்கள் பவுலைக் கடிந்துகொள்ளவில்லை, மாறாக, “அவர்கள் எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அறிந்து, எனக்கும் பர்னபாவுக்கும் அந்நியோந்நிய ஐக்கியத்திற்காக வலதுகை கொடுத்தார்கள்” (கலா 2:9) என்று பவுலே சாட்சி கூறுகிறார்.

பவுல் ஒரு புதிய மதத்தை “கண்டுபிடித்திருந்தால்”, மூல அப்போஸ்தலர்கள் அவரை ஒரு “துர்ப்போதகன்” என்று நிராகரித்திருப்பார்கள். அவர்களோ பவுலை அப்போஸ்தலனாக அங்கீகரித்தார்கள். இது, பவுலின் போதனையும் அப்போஸ்தலர்களின் போதனையும் ஒன்றே என்பதை நிரூபிக்கிறது.

3. பவுலின் இறையியல் பணி: உருவாக்குவதல்ல, விளக்குவது

பவுல் ஒரு கடினமான யூதப் பின்னணி கொண்டவர். கமாலியேலின் பாதத்தில் படித்த, நியாயப்பிரமாணத்தில் தேர்ந்த பரிசேயன் (அப் 22:3). இப்படிப்பட்ட ஒருவர், யூத மார்க்கத்திற்கு எதிரான ஒரு புதிய மதத்தை உருவாக்கத் துணிய மாட்டார். அதனால்தான், தேவனே நேரடியாகத் தலையிட்டு, தமஸ்கு வழியில் அவரைச் சந்தித்து, அவரது கண்களைத் திறக்க வேண்டியிருந்தது (அப் 9).

பவுலும் இயேசுவும் பழைய ஏற்பாட்டில்தான் சந்திக்கிறார்கள். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் ஆயிரக்கணக்காக ஆண்டுகள் சொன்னவற்றை இயேசு நிறைவேற்றினார்; பவுல் அதை விளக்கினார்.

பவுலின் பணி புதிய உண்மைகளை உருவாக்குவது அல்ல, மாறாக, பழைய ஏற்பாட்டில் மறைந்திருந்த கிறிஸ்துவின் மகிமையை விளக்குவது.

• பழைய ஏற்பாடே ஆதாரம்: பவுலின் நிருபங்கள் புதிய ஏற்பாட்டு சுவிசேஷங்களை (மத்தேயு, மாற்கு) மேற்கோள் காட்டுவதில்லை, காரணம் அவை பவுலின் ஊழிய காலத்தில் இன்னும் எழுதப்பட்டிருக்கவோ அல்லது பரவலாகப் புழக்கத்திற்கு வந்திருக்கவோ வாய்ப்பில்லை. பவுலின் இறையியலுக்கான முழு ஆதாரமும் பழைய ஏற்பாடுதான்.

• எம்மாவூர் சீஷர்கள்: இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, எம்மாவூர் வழியில் இரண்டு சீஷர்களுக்கு “மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (லூக் 24:27). அப்போது அவர்கள் இருதயம் கொழுந்துவிட்டு எரிந்தது. அதாவது பவுல் கண்டுகொண்ட கிறிஸ்துவை அவருக்கு முன்னரே சீடர்கள் கண்டுகொண்டார்கள். அதன்பின் ஸ்தேவான், பேதுரு போன்ற அப்போஸ்தலர்கள் இவற்றை மிக விரிவாக விளக்கிப் பேசி இருக்கிறார்கள். பவுல் அதன்பின் பிற்காலத்தில்தான் (சுமார் 6-7 வருடங்கள் கழித்து)  அவர்களுடன் இணைந்துகொண்டார்.

• பவுலின் பணி: இயேசு, அந்த இரண்டு சீஷர்களுக்குச் செய்ததையே, பவுல் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால், ரோமாபுரி சபைக்கும், கொரிந்து சபைக்கும், கலாத்திய சபைக்கும் செய்தார். கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் எப்படி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார், நியாயப்பிரமாணம் எப்படி நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிறது, சிலுவையின் மூலம் எப்படி நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் கிடைக்கிறது என்பதை அவர் ஆழமாக விளக்கினார்.

பவுலும் இயேசுவும் பழைய ஏற்பாட்டில்தான் சந்திக்கிறார்கள். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகள் ஆயிரக்கணக்காக ஆண்டுகள் சொன்னவற்றை இயேசு நிறைவேற்றினார்; பவுல் அதை விளக்கினார்.

எனவே, பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்று விளக்க முனைப்புக்காட்டும் எவரும், பவுலை பேசியவைகளையும் எழுதியவைகளையும் கொண்டு விளக்கமுடியாது. மாறாக பழைய ஏற்பாட்டுப் பண்டிதர்களாக இருந்தாக வேண்டும். 

பவுல் குறிப்பிடுபவைகள் தவறு என்றால், பழைய ஏற்பாட்டை அவர் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினார் என்பதை முறையாக விளக்கவேண்டும். அத்துடன் நின்றுவிட முடியாது. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரினங்கள் இயேசுவல்லாமல் வேறு யாரைக்கொண்டு நிறைவேறுகின்றன என்பதையும் அவர்கள் விளக்கியாக வேண்டும். யூதர்களிடத்திலேயே இதைக் கண்டுகொண்ட பலர் கிறிஸ்துவை ஏற்றுகொண்டு இன்றுவரை கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக மாறிக்கொண்டே இருப்பது வரலாறு.

4. பவுலின் நிருபங்கள் யாருக்கு?

இன்று நாம் சுவிசேஷம் அறிவிக்கும்போது, கிறிஸ்தவர் அல்லாத ஒருவரிடம் முதலில் கொடுப்பது பவுலின் நிருபங்களை அல்ல; மாறாக, யோவான் சுவிசேஷத்தையே கொடுக்கிறோம். அல்லது மற்ற சுவிசேஷங்களைக் கொடுக்கிறோம். ஏன்?

ஏனென்றால், சுவிசேஷப் புத்தகங்கள் (Gospels) இயேசுவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் ஆகிய சரித்திரத்தை (What happened) கூறுகின்றன. பவுலின் நிருபங்களோ, அந்தச் சரித்திரத்தின் இறையியல் தாக்கத்தை(What it means) விளக்குகின்றன.

பவுலின் நிருபங்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்காக அல்ல, மாறாக, ஏற்கனவே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, சபையாகக் கூடிவந்த விசுவாசிகளின் பக்திவிருத்திக்காகவும், அவர்கள் விசுவாசத்தில் உறுதியாக வளரவும், நடைமுறைப் பிரச்சனைகளைத் தீர்க்கவுமே எழுதப்பட்டன. நாம் பவுலின் நிருபங்களைப் படித்துக் கிறிஸ்தவர்கள் ஆகவில்லை; கிறிஸ்தவர்கள் ஆனபின், பவுலின் நிருபங்கள் மூலம் நமது விசுவாசத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்கிறோம். பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்று சொல்பவர்களுக்கு இந்த அடிப்படை அறிவு கிடையாது என்பதுதான் உண்மை. 

மேலும் பவுல் எழுதியவவைகள் மிகவும் முக்கியமானவை, அவை கடினமான சத்தியங்கள் என்று கிறிஸ்துவின் உடன் சீடரும் சபையின் முதல் அப்போஸ்தலருமான பேதுரு எழுதும் சபைகளுக்கு எழுதும்போது சொன்னதை கவனமாகப் பார்ப்பது அவசியம். 

“மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்” என்று சொல்லி முடிக்கிறார்.

இன்று பவுல் கிறிஸ்தவத்தை உண்டாக்கினார் என்கிற புரட்டர்களைக் குறித்து இன்றல்ல, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பேதுரு எச்சரிப்பாக எழுதிவிட்டார்.

அதாவது,  “பவுல் கிறிஸ்துவின் இரட்சிப்பைக் குறித்து தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே பல கடிதங்களில் பலருக்கும் எழுயியிருக்கிறார். தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இதைப் புரட்டுகிறவர்களை நீங்கள் அறிந்து அந்த அக்கிரமக்காரரின் இழுப்பில் விழுந்துபோகாதபடி எச்சரிகையாயிருங்கள். கிறிஸ்துவின் கிருபையில் அவரை அறிந்து வளருங்கள்” என்பதே பேதுருவின் எச்சரிக்கை. இன்று பவுல் கிறிஸ்தவத்தை உண்டாக்கினார் என்கிற புரட்டர்களைக் குறித்து இன்றல்ல, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பேதுரு எச்சரிப்பாக எழுதிவிட்டார். புரட்டர்கள் எல்லாக் காலத்திலும் பேசிக்கொண்டும், புத்தகம் எழுதிக்கொண்டும்தான் இருக்கிறார்கள்.

5. திருமுறையின் (Canon) சாட்சியம்: கிறிஸ்துவின் மையத்தன்மை

இன்னொரு முக்கியமான வரலாற்று உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று நாம் கையில் வைத்திருக்கும் வேதாகமம், விசேஷமாக புதிய ஏற்பாட்டுத் திருமுறை (New Testament Canon), ஒரே நாளில் நமக்குக் கிடைக்கவில்லை. பிற்காலங்களில், சபைப் பெரியவர்கள் பலர் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி கூடி, எவற்றைச் சேர்க்க வேண்டும், எவற்றை நீக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவான அளவுகோல்களை வைத்திருந்தார்கள்.

அவர்களுடைய அளவுகோல் என்ன? அது பவுலா? இல்லை. அது கிறிஸ்துவே.

இயேசுக்கிறிஸ்துவை மையப்படுத்தாத, அல்லது அவரைப் பின்னுக்குத் தள்ளும் எந்த எழுத்தும் நம்பத்தகுந்தது அல்ல என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். குறிப்பாக, அந்த எழுத்துக்கள் பழைய ஏற்பாடு முன்னறிவித்த கிறிஸ்துவைச் சரியாக அடையாளம் காட்ட வேண்டும்; சிலுவையில் பலியானவர் யார் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும்; அது வேறு ஒரு கிறிஸ்துவையோ (another Christ) அல்லது வேறு ஒரு சுவிசேஷத்தையோ (another Gospel) போதிக்கக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.

இந்த அடிப்படையில்தான், அவர்களுக்குக் கிடைத்த எல்லாப் புத்தகங்களையும், சுவிசேஷங்களையும், கடிதங்களையும் அவர்கள் அலசி ஆராய்ந்தார்கள். மூலப் பிரதிகளின் நம்பகத்தன்மையில் இருந்து, அப்போஸ்தலர்களோடு அவற்றுக்கு இருந்த தொடர்பு வரை பல ஆய்வுகளைச் செய்தார்கள். இந்தப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டவைகளில் பவுலின் கடிதங்களும் அடங்கும். அவர்கள் பவுலின் கடிதங்களைக் கொண்டு மற்ற சுவிசேஷங்கள் எழுதப்பட்டனவா என்றோ, அல்லது பவுலின் இறையியலை அடிப்படையாகக் கொண்டு மற்றவை ஏற்கப்பட வேண்டுமா என்றோ பார்க்கவில்லை. மாறாக, சுவிசேஷங்கள், அப்போஸ்தலர்களின் நடபடிகள், மற்றும் பவுலின் கடிதங்கள் அனைத்துமே கிறிஸ்துவை மையமாகக் கொண்டிருக்கின்றனவா என்றே ஆராய்ந்தார்கள். பவுலின் கடிதங்கள் அந்தச் சோதனையில் வெற்றி பெற்றன, காரணம் அவையும் கிறிஸ்துவையே மகிமைப்படுத்தின.

கிறிஸ்தவம் கிறிஸ்துவால்

பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்று கூறுவது, பேதுரு, யோவான், யாக்கோபு போன்ற மாபெரும் அப்போஸ்தலர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகும். கிறிஸ்துவின் நேரடி சீடர்களில் யோவான் தவிர அனைவருகே கிறிஸ்துவுக்காகக் கொல்லப்பட்டவர்கள். மேலும், சபையின் உண்மையான அஸ்திபாரமாகிய இயேசுக்கிறிஸ்துவின் பணியையும், அவர் அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்த மகா கட்டளையையும் அவமதிப்பதாகும். 

பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்கினார் என்று கூறுவது, பேதுரு, யோவான், யாக்கோபு போன்ற மாபெரும் அப்போஸ்தலர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாகும்.

பவுல் ஒருபோதும் தன்னை ஒரு ஸ்தாபகர் (Founder) என்று கூறிக்கொண்டதில்லை. அவர் கிறிஸ்துவால் போடப்பட்ட அஸ்திபாரத்தின்மேல் கட்டிய ஒரு “தேவ சிற்பாச்சாரி” (Master Builder) (1 கொரி 3:10). அவர் கிறிஸ்தவத்தை கண்டுபிடிக்கவில்லை; மாறாக, கிறிஸ்துவின் கிருபையால் கண்டெடுக்கப்பட்டு, அந்த மாபெரும் சுவிசேஷத்தின் ஆழங்களை நமக்காக விளக்கிச் சென்றார். மேலும் “வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான்”, தான் கிறிஸ்தவத்தைக் கட்டிக் கொண்டிருக்கவில்லை என்கிறார். 

சபை கிறிஸ்துவால் அவருடைய சீடர்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. இன்று நீங்களும் நானும் கட்டிக்கொண்டிருக்கிறோம். 

சத்தியத்தின் அஸ்திபாரமும் பவுலின் பணியும்

காலங்காலமாக, கிறிஸ்தவத்தின் சத்தியத்தை நிராகரிக்கவும், அதை விவாதத்திற்கு உட்படுத்தவும் மனித ஞானம் பல வழிகளில் முயன்றிருக்கிறது. அவர்களின் உண்மையான பிரச்சனை பவுலோ, பேதுருவோ அல்ல; அது கிறிஸ்துவே.!

வேதாகமத்தின் சரித்திரத் தகவல்களை அறிந்துகொள்ள மனித அறிவு போதுமானது. ஆனால், அந்தச் சரித்திரத்தின் பின்னால் இருக்கும் ஆவிக்குரிய சத்தியத்தையும், இரட்சிப்பின் இரகசியத்தையும் புரிந்துகொள்ள, அதைவிட மேலான ஞானம், அதாவது பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசை தேவைப்படுகிறது.

ஏனெனில், நாம் கிறிஸ்தவத்தின் மூலம் பெற்றது, சரித்திரப் புத்தகங்களில் படிப்பது போன்ற, ‘உண்மையா, பொய்யா’ என்று விவாதித்துப் புறக்கணிக்கக்கூடிய வெறும் வரலாற்றுத் தகவல்கள் அல்ல. மாறாக, அது நமக்குள்ளே இரட்சிப்பை உண்டுபண்ணின ஜீவனுள்ள சத்தியம்.

மனிதகுலத்தின் ஆணிவேர்ப் பிரச்சனை என்பது ‘பாவம்’ என்பதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்? அந்தப் பாவத்திற்கு, கிறிஸ்து சிலுவையில் ஏற்படுத்தித் தந்த தீர்வைத் தவிர, மேலான, நிறைவான வேறு எந்தத் தீர்வையாவது சரித்திரம் கண்டிருக்கிறதா?

பவுலின் விளக்கங்கள் அனைத்தும் இந்த அஸ்திபாரத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கின்றன. அவர் பாவத்தின் கொடுமையையும், கிருபையின் மகத்துவத்தையும், சிலுவையின் நீதியையும் விளக்கும்போது, அவர் ஒரு புதிய மதத்தை உருவாக்கவில்லை; ஏற்கனவே கிறிஸ்து நிறைவேற்றியதை விளக்குகிறார். அங்கே கூட்டக் குறைக்க ஏதுமில்லை. அப்படி இருந்திருந்தால் அப்போஸ்தலர்களும், பிற்காலங்களில் வந்த ஏராளமான வேத ஆராய்ச்சியாளர்களும் சபைப் பெரியவர்களும் பவுலின் எழுத்துக்களை வேதத்தில் வைத்திருக்கவே மாட்டார்கள். அன்றிலிருந்து இன்றுவரை வேதாகமத்தை ஆய்ந்து அறிய விரும்பும் எவரும் (நீங்களும் நானும் உட்பட) பவுல் சொன்னவைகளில் ஏதேனும் நெருடலைக் கண்டுபிடித்ததில்லை. 

நாம் பவுலின் நிருபங்களை ஏற்றுக்கொள்வது, பவுலுக்காக அல்ல; அவர் நமக்கு அறிமுகம் செய்து, ஆழமாக விளக்கிய கிறிஸ்துவுக்காகவே. அதேபோல் பவுலைப் புறக்கணிக்கிறவர்களும் உண்மையில் புறக்கணிப்பது கிறிஸ்துவதைத்தான். 

கிறிஸ்து, பவுலால் விளக்கப்படுவதற்கு முன்பே கிறிஸ்தவத்தின் மையமாகவும், சபையின் அஸ்திபாரமாகவும் இருந்தார். அப்படிப்பட்ட ஆழமான சத்தியங்களை, நியாயப்பிரமாணத்தில் தேர்ந்த ஒருவரைக் கொண்டு விளக்குவது தேவனுடைய அநாதித் திட்டமாக இருந்தது. ஒருவேளை பவுல் அதை விளக்காவிட்டால்கூட, பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும், மற்ற அப்போஸ்தலர்கள் மூலமாகவும் அந்தச் சத்தியத்தை சபை என்றாகிலும் கண்டுகொண்டிருக்கும். இன்று வேதாகமத்தின்  எழுத்துக்கள் எல்லாம் கிறிஸ்தவமாக உயிர்ப்புடன் இருக்கக்காரணம் கிறிஸ்துவுக்குள் புது உயிராக்கப்பட்ட நம்மில் அந்த வார்த்தைகள் வாழ்வதும், அதன் மையமான தேவனும் நம்மோடே வாழ்வதும்தான் காரணம்.

ஏனெனில், கிறிஸ்தவத்தின் மையம் பவுல் அல்ல, கிறிஸ்துவே.

பென்னி அலெக்ஸாண்டர், அக்டோபர் 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *