
ரொம்பநாளாக அதிகம் தியானிக்காமல் விட்டுவைத்திருந்த விஷயம். பழைய மொந்தையில் புதிய கள்ளு என்று நம்மூரில் சொல்லும் ஒரு விஷயத்தை அருள்நாதரும் அந்தக்காலத்திலேயே அந்த ஊர் மக்களுக்கேற்பச் சொல்லி இருக்கிறார்.
“புதுத் திராட்சரசத்தைப் பழைய துருத்திகளில் வார்த்து வைக்கிறதில்லை; வார்த்து வைத்தால், துருத்திகள் வெடித்துப்போகும், ரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்; புதுத் திராட்சரசத்தைப் புதிய துருத்திகளில் வார்த்து வைக்கிறார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.”
மத்தேயு 9:17-ல் அருள்நாதர் முன்வைக்கும் தர்க்கம் வெறும் தோல்துருத்தி – திராட்சரசத்தைப் பற்றியதல்ல; கிறிஸ்தவனின் ஆவிக்குரிய வாழ்வின் ஒரு அடிப்படை மாற்றம் குறித்த ஒரு எச்சரிக்கை.
பழைய சட்டங்களைச் சுற்றி வேலி போட்டு வைத்தி பிரமாணங்களை இன்னும் கடினப்படுத்தி வைத்திருந்த பரிசேயருக்கு கிருபையைப் புரிய வைப்பது கடினமே. கிருபை என்னும் அந்தப் புது ரசம் பழைய சட்டநாதர்களுக்கு ஒவ்வாததாகக் காணப்பட்டது. கிருபையால்தான் ஆதிமுதல் மனித வாழ்வு நடக்கிறது என்றாலும், கிருபையாக வெளிப்பட்ட கிறிஸ்துவும் அவரது உபதேசங்களும் பழைய எண்ணங்களுக்குள் ஊறிக்கிடந்தவர்களுக்கு ஆகாத ஒன்றாக இருந்தது.
பலி செலுத்த ஆலயம் இல்லை என்று வருந்திக்கொண்டிருந்தவர்களுக்கு, இதோ இவர்தான் அடிக்கப்பட்ட/அடிக்கப்படப்போகிற தேவ ஆட்டுக்குட்டி என்கிற உபதேசமெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
சட்டத்தின் எல்லை vs கிருபையின் விரிவு
பழைய துருத்திகள் என்பவை காலப்போக்கில் இறுகிப்போன ஆட்டுத்தோலினால் ஆனவை. அவற்றுக்கு விரிவடையும் தன்மை கிடையாது. ஆனால், புதிய திராட்சரசம் என்பது நொதித்தல் முறையில் (Fermentation) தொடர்ந்து விரிவடைந்து கொண்டே இருக்கும் ஒரு ஜீவனுள்ள ஆற்றல்.
பரிசேய மார்க்கம் என்பது ஒருவகையான ‘பாதுகாக்கப்பட்ட கட்டமைப்பு’. அங்கே சட்டங்கள் தான் பிரதானம், மனிதர்கள் அல்ல. ஆனால் கிறிஸ்து வெளிக்காட்டிய கிருபையோ உயிரோட்டமான ஒரு செயல்பாடு – வெறும் கருத்து அல்ல. அது சட்டங்களின் எல்லைகளைத் தாண்டி, மனித இருதயத்தைப் புதுப்பிக்க வல்லது. காய்ந்துபோன பழைய துருத்தியால் அந்த ஆவிக்குரிய அழுத்தத்தைத் தாங்க முடியாது. சுவிசேஷம் என்பது பழைய மதச் சடங்குகளுக்குச் செய்யப்படும் ஒரு சிறு ‘திருத்தம்’ (Patchwork) அல்ல; அது ஒரு புதிய சிருஷ்டிப்பு.
ஒரு நவீனப் பார்வை
இதை இன்றைய மொழியில் சொல்வதானால், ஒரு பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Old OS) கொண்ட கணினியில், மிக நவீனமான மற்றும் அதிகத் திறன் கொண்ட ஒரு மென்பொருளை (Modern High-end Software) நிறுவ முயல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பழைய கணினியின் வன்பொருள் (Hardware), புதிய மென்பொருளின் வேகத்தையோ அல்லது தேவையையோ தாங்கும் திறன் கொண்டிருக்காது. மென்பொருளை இயக்க முயலும்போது கணினி முடங்கிவிடும் (Crash).
புதிய மென்பொருள் சரியாகச் செயல்பட வேண்டுமானால், அதற்குப் புதிய கணினி தேவை. அதுபோலவே, கிறிஸ்துவின் நற்செய்தி நம் வாழ்வில் கிரியை செய்ய வேண்டுமானால், நம்முடைய பழைய சிந்தனைகளும் மதச் சடங்குகளும் நீக்கப்பட்டு, நாம் ஆவியிலே புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கு நாம் அல்ல, கிருபை முன்னிற்கவேண்டும்.
இரண்டும் பத்திரப்பட்டிருக்க…
‘நாமாக எதையாவது செய்து கடவுளைக் குஷிப்படுத்திவிடலாம்” என்று பழைய துருத்தியோடு ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அந்தப் புது ரசத்தை (கிருபையை) ஒரு சுமையாகவோ அல்லது ஆபத்தாகவோதான் பார்ப்பார்கள். ஆனால், கிறிஸ்து நமக்குள் உருவாக்கும் புதிய இருதயம் அந்தத் தெய்வீக ரசத்தை ஏந்தும் பக்குவம் கொண்டது.
“புதுத் திராட்சரசத்தைப் புதிய துருத்திகளில் வார்த்து வைக்கிறார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்” என்றால், ஒரு புதிய மனிதனால் மட்டுமே கிருபையின் முழுமையைச் சுமந்து செல்ல முடியும். அப்போதுதான் அந்த ரசம் சிந்திப்போகாமல் நம்மைச் செழுமைப்படுத்தும்.
Benny Alexander, Feb 2026