
“ஒரே திசையில் நீண்ட கீழ்ப்படிதல்” (A Long Obedience in the Same Direction) எனும் சொற்றொடர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரபலமான ஜெர்மன் தத்துவஞானி ஃபிரெட்ரிக் நீட்சேவால் முன்வைக்கப்பட்ட ஒன்று. இதை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியான கீழ்படிதல் என்றும் சொல்லாம். அதைக்குறித்து முதன்முதலில் அவரது “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” (Beyond Good and Evil) எனும் நூலில் எழுதியிருந்தார். நீட்சே, சடங்கு மதங்களின் மீதும் பாரம்பரிய ஒழுக்கவியலின் மீதும் விமர்சனங்களை முன்வைத்தவர். ஒரு தனிமனிதன் தனது வாழ்விற்குத் தானே அர்த்தத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும், விடாமுயற்சியுடனும், அதே திசையிலுமான தொடர்ச்சியான உழைப்பினாலேயே மகத்தான காரியங்கள் சாத்தியம் என்றும் அவர் நம்பினார். அவரது பார்வையில், இது மனித விருப்பத்தின் வலிமையையும், சொந்த ஒழுக்கத்தின் மூலம் அடையப்படும் மேம்பாட்டையும் குறித்தது. இது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு நேர் எதிரானது.
நீட்சே கடவுள் மறுப்பாளர். God is dead – என்று அவர் சொன்னது அப்போது மிகவும் பிரபலமாகவும் இருந்தது. மனிதன் தன் சொந்த பலத்தினாலும் தொடர்ச்சியான முயற்சிகளினாலும் மட்டுமே மேன்மையைப் பெற முடியும் என்பத்தான், தன் A Long Obedience in the Same Direction என்ற ஒரு வாக்கியம் மூலம் விளக்க முயற்சித்தார். ஆனால், கிறிஸ்தவ விசுவாசமோ, இரட்சிப்பு கிருபையினால் மட்டுமே என்றும், தேவனுடைய வல்லமையாலும் வழிநடத்துதலினாலும் மட்டுமே உண்மையான மேன்மை சாத்தியம் என்றும் உறுதியாகப் போதிக்கிறது.
பொதுவாக உலகில் இருந்து வரும் சிந்தனைகள் பாதிச் சரியாக இருக்கும். நீட்சே சொன்னதிலும் இப்படிப் ‘பாதிச் சரி’ உண்டு!. அதையும் முயற்சிப்பதும், அதைத் தொடர்ச்சியாகத் தவறாமல் செய்வதும் அவசியம். இவ்வாழ்வில் சில விஷயங்கள் சரியாக நடக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், அதற்கு அது அவசியம். ஆனால், ஒரு மனிதவாழ்வு வெறும் உலக வாழ்வாக முடிந்துவிடுவதில்லை. நமக்கு ஆத்தும வாழ்வு ஒன்று உண்டு. நித்திய வாழ்வு உண்டு. எனவே இந்த, “ஒரே திசையில் தொடர்ந்து கீழ்ப்படிதல்” என்பது கிறிஸ்தவருக்கு இன்னும் ஆழமானது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பின்னால் ஒரு வாழ்நாள் முழுவதும் உறுதியோடும், நிலைத்தன்மையோடும் நடப்பதுதான் இன்னும் விசேஷமான கிறிஸ்தவ பார்வை.
இது ஒரே ஒருமுறை எடுக்கும் முடிவோ அல்லது தற்காலிகமான உணர்ச்சிப்பூர்வ எழுச்சியோ அன்று. மாறாக, கிருபையினால் இரட்சிக்கப்பட்ட நாம், தேவனுடைய வார்த்தைக்கு அனுதினமும் நம்மை ஒப்புக்கொடுத்து, அவரது பரிசுத்த சித்தத்திற்கு இணங்க, மனந்திரும்புதல், ஜெபம், வேத தியானம், ஆராதனை மற்றும் சக மனிதருக்குச் செய்யும் நன்மைகள் என்று தொடர்ந்த கிறிஸ்தவ ஒழுக்கங்களில் நிலைத்திருக்கும் வாழ்க்கை முறை. இது ஆவியானவர் நம்மை கிறிஸ்துவைப்போல் மாற்றும் நீண்டகாலப் பயணமாகும். இவை அனைத்தும் வெளிப்புறமாகச் சுயமுயற்சியாகத் தோன்றினாலும், உண்மையில் நம்முள் நடக்கும் தெய்வீகக் கிரியைகள்.
இந்த Long Obedience in the Same Direction என்கிற சொற்றொடரைப் பிரபலமாக்கியது போதகர் யூஜின் பீட்டர்சன். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க வேதாகம அறிஞரும், “த மெசேஜ்” (The Message) வேதாகம மொழிபெயர்ப்பின் ஆசிரியருமான இவர் ஒரு நூலை இந்தத் தலைப்பில் எழுதியிருக்கிறார் – “ஒரே திசையில் நீண்ட கீழ்ப்படிதல்: உடனடி சமூகத்தில் சீடத்துவம்” (A Long Obedience in the Same Direction: Discipleship in an Instant Society)!.
இதில், இன்றைய உடனடி பலனை நாடும் சமூகத்தில், உண்மையான கிறிஸ்தவ சீடத்துவம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். தலைப்பில் யூஜின் பீட்டர்சன் “Instant Society” (உடனடிச் சமூகம்) எனக் குறிப்பிடுவது, நவீன உலகில் நிலவும் உடனடித் திருப்திக்கான தீவிர நாட்டத்தையும், அதற்கான எதிர்பார்ப்புகளையும் குறிக்கிறது. இன்று நமக்கு எல்லாம் உடனடியாக நடந்துவிட வேண்டும். துரிய உணவுகள் போல அப்போதே கிடைத்துவிட வேண்டும். ஆனால், இரட்சிப்பு இந்த ‘உடனடி’ வகையில் வராது. அது நாள்தோறும் நடக்கும் பொறுமையான பயிற்சி.
கிறிஸ்தவ வாழ்க்கையில் நிலைத்த கீழ்ப்படிதல் அவசியம். ஏனெனில், இதுவே ஆவிக்குரிய முதிர்ச்சியுடன் கிறிஸ்துவின் சாயலுக்குள் நாம் வளருவதற்கு அடிப்படையாகும். இவ்வுலகின் இச்சைகளுக்கும் சோதனைகளுக்கும் மத்தியிலும், தேவனுடைய நோக்கத்தை நோக்கி நாம் நிலைத்திருக்க இது அவசியம்.
நாம் இதனை எப்படிச் செயல்படுத்துவது?
- கிருபையைச் சார்ந்து வாழ்தல்: இது நமது சொந்தப் பலத்தினால் அல்ல, மாறாக தேவனுடைய கிருபையினாலும், நம்மைப் பலப்படுத்தும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலினாலும் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்தல்.
- அனுதினமும் கிறிஸ்துவின் பின்செல்லுதல்: வேதவாசிப்பு, தியானம், ஜெபம் மற்றும் தனிப்பட்ட ஆராதனை மூலம் தேவனுடன் நெருங்கிய உறவைப் பேணுதல்.
- சரீரமாகிய சபையில் இணைந்து மற்றும் சேவை: நம்முடன் இருக்கும் மற்ற விசுவாசிகளுடன் இணைந்து ஆவியின் வரங்களைப் பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் சேவை செய்து, தேவனுடைய இராஜ்யத்திற்காகப் பங்காற்றுதல்.
- மனந்திரும்புதல் மற்றும் ஒப்புரவு: நாள்தோறும் நமது பாவங்களை அறிந்து, மனந்திரும்பி, தேவனுடைய மன்னிப்பைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளுதல்.
இப்பாதையில் சவால்கள் நிறைந்திருக்கலாம். ஆயினும், தேவனுடைய மாறாத கிருபையைச் சார்ந்து, அதே திசையில் நாம் கீழ்ப்படிதலுடன் நிலைத்திருக்கும்போது, கிறிஸ்துவுக்குள் நாம் பெறும் வாழ்வு பெருகி, தேவனுடைய மகிமை நமது வாழ்க்கையில் வெளிப்படும்.
Benny Alexander