
ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலை இன்னொரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய நிலையுடன் ஒப்பிடப்பட்டு அளவிடப்படுவதில்லை. மாறாக ‘இன்றைய நீங்கள்’ நேற்றைய நீங்களைவிட எப்படி வித்தியாசப்படுகிறீர்கள் என்பதில்தான் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இயலும்.
இந்த மதிப்பீடும்கூட இன்று கிறிஸ்துவுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நேற்று எப்படி ‘அவருக்குள்’ இருந்தீர்கள்? என்று அவரை அடிப்படையாகக் கொண்டதுதான்!.
2025ல் எப்படி கிறிஸ்துவுடனான உங்கள் உறவு எப்படி?, என்பதை உங்கள் 2024டன் எப்படி இருந்தீர்கள்; அல்லது இன்னும் கொஞ்சம் போய், தேவ உறவுக்குள் வரும்முன் இரட்சிப்பை அடையாத காலங்களில் எப்படி இருந்தீர்கள் என்று உங்களால் ஒப்பீடு செய்து அளவிடமுடிந்தால் மட்டுமே, அது ஆரோக்கியமானதாக இருக்கும்.
நம்முள் நடக்கும் மாற்றங்கள் வெளியே தெரியாமல் போக வாய்ப்பில்லை. ஜீவதண்ணீர் புறப்பட்டோடும் அளவுக்கு மாற்றம் தெரிந்தே ஆகும். நாம் தேங்கிக்கிடப்பவர்கள் அல்ல. ஆனாலும், சிலரது வாழ்க்கையைப் பார்த்தால் சந்தேகங்கள் வருவது இயல்பே. எனவே, எப்படி நம் ‘ஆவிக்குரிய வண்டி’ கிறிஸ்துவுக்குள் நேற்றும் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது என்கிற சுயபரிசோதனை முறையான ஒப்பீடுகளுடன் அவர்களுக்கு அவசியம் தேவை. ஆனால் பெரும்பாலும் மற்றவர்களோடு ஒப்பீடு நடத்திக் கொண்டிருப்பதால் அது திருப்திக்குள்ளோ, ஏமாற்றத்துக்குள்ளோ தள்ளிவிடுகிறது.
ஒருவரது நிலை அரசல் புரசலாகக் கொஞ்சம் வெளியே நமக்குத் தெரிந்தாலும், அவரது உள்ளார்ந்த நிலையை தேவனே அறிவார். அதைவைத்துக்கொண்டு தோற்றத்தின்படியான தீர்ப்புகளுள் இறங்கிவிடாமல் இருப்பது அவசியம். அதேபோல், நம்முடைய நிலையையும் தேவன் மட்டுமே அறிவார் என்பதால், நம்முடைய ஒப்பீடுகள் அர்த்தமுடையதாகவும் வளர்ச்சிக்குரியதாகவும் இருக்க நம்மை இறைக்ண் கொண்டு பார்க்க இறைஉதவி தேவை.
அப்படி, அவர்களைப் பார்க்கிலும் நாம் விசேஷித்தவர்கள் என்கிற வஞ்சனைக்குள் அகப்படாமல் செய்யப்படும் அளவீடுகள் மட்டுமே அர்த்தமுள்ளதாகவும் மிகவும் உதவிகரமானதாகவும் இருக்கும்.
– பென்னி அலெக்ஸாண்டர்