நாம் ஏன் சிலுவை சுமக்க வேண்டும்?

சிலுவை சுமத்தல்

சிலுவை என்றால் ‘டக்’கென்று நம் மனதில் வருவது இயேசு சுமந்தது சென்ற சிலுவை மரம். சர்ச்களின் மேல், ஆல்டர்களில் இருப்பது, கழுத்துகளில் தொங்கி அலங்கரிப்பது இப்படி. பொதுவாக துயரத்தின் சின்னம். கிறிஸ்தவர்களுக்கு கல்வாரியை அடுத்த நொடி கண்முன் நிறுத்தும். அவர் சுமந்த தடுமாறிச் சென்றது ‘இயேசு’ வாழ்க்கைப் படங்களில் பார்த்தவர்களுக்கு இன்னும் சித்திரமாக மனதில் தோன்றும்.

இயேசு சிலுவை சுமந்தார், ஆனால், அவர் அப்படிச் சுமக்கும் முன்பே இருவேறு இடங்களில் தம் சீஷர்களையும் ‘அவர்களது’ சிலுவையைச் சுமக்கச் சொன்னார்.  தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல என்றும் (மத்தேயு 10) ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்றும் பளிச்சென்று சொல்லிவிட்டார் (மத்தேயு 16). இதையே மாற்குவும் லூக்காவும்கூட தவறாமல் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கூற்றுகளை, ஒருமுறைக்கு இருமுறை தியானித்தால் தொடக்கத்தில் ஒரு தயக்கம் மனதைக் கப்பிக் கொள்வது உறுதி. அதென்ன நம் சிலுவை? தனிப்பட்ட முறையில் அவரவர் சுமக்கவேண்டிய அவரவர் சிலுவை? தன் சிலுவை என்று நம்முடைய சிலுவையாக எதை அல்லது எவற்றைச் சொல்கிறார் இயேசு என்று தியானித்தால், இந்தத் தயக்கம் மாறி கொஞ்சம் கொஞ்சமாக சமாதானத்துக்குள் நுழையலாம். 

தேவனை மட்டுமே மையமாகக் கொண்ட உறவு மற்றும் அந்த உறவால் அவர் விருப்பம் மட்டுமே செய்யப்படவேண்டும் என்கிற ஆவல் இந்த இரண்டுமே,  நம் மீது அவரது சீஷர்கள் என்கிற முறையில் நமக்குத் தரப்படும் சிலுவையாக இயேசுவானவர் குறிப்பிடுகிறார். ஒருவர் தவறாமல், புது சிருஷ்டியாக்கப்பட்டவர்கள் அனைவருக்குமே இந்தச் சிலுவை உண்டு. ஆனால், சிலுவை என்னதான் ஒரு புனிதச் சின்னமாகவும், மரியாதைக்குறியதாகப் பார்க்கப்பட்டாலும், அது நம் தோளில் வைத்துச் சுமக்கப்படவேண்டும் என்னும்போது அது அதிர்ச்சிக்குறியதாக மாறிவிடுகிறது. ஆனால், அது தேவை இல்லை. 

தேவன் நாம் மகிழ்ந்திருக்க இந்த உலகில் தந்திருப்பவர்கள் தான் நம் உறவுகள். ஆனால், அவர்களைவிட தேவனை நேசித்தல் என்பதே சிலுவையை நேசித்தல் – சுமத்தல். எல்லா உறவுகளையும் விட இறைஉறவே எனக்கு முக்கியம் என்று இயேசுவின் பின்னால் செல்பவர்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டு நடக்கும்  பாரம் இந்தச் சிலுவை தான்.  ஆனால், அப்படித் தன்னை முக்கியப்படுத்தி மற்றவற்றை அல்லது மற்றவர்களை அதற்கு அடுத்ததாக மட்டுமே வைத்திருக்க விரும்பாதவர்கள் தோளில் இந்தச் சிலுவை இருக்கப் போவதில்லை. இயேசு குறிப்பிடும் இந்தச் சிலுவை நம் உறவின் மையப்புள்ளியாக அவரைக் கொண்டுவருகிறது. முன்பு நம்மையோ, நமக்குப் பிடித்தமானவர்களையோ மையமாகக் கொண்டிருந்த போக்கு முற்றும் மாறி இன்று அவர் நம் மையமாக மாறுகிறார். இது எளிதல்ல, என்றாலும், அது அவருக்கும் தெரியும் என்பது நமக்கு இருக்கும் ஆறுதல்.  இந்தச், சிலுவையை விரும்பாதவர்களாக இருப்பின், தேவனுக்குப் பாத்திரராக, அதாவது அவருக்கானவர்களாக – இன்னும் சரியாகச் சொன்னால் அவர் பயன்படுத்துபவர்களாக இருக்க முடியாது. கிறிஸ்தவராக இருக்கலாம், ஆனால், தேவனால் பயன்படுத்தப்படும் பாத்திரங்களாக இருக்க இயலாது. காரணம் இயேசு சொன்னார், “தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல”. (மத்தேயு 10:38).

இரண்டாவதாக ஒன்றையும் இயேசு தன்னைப் பின் தொடர்பவர்களுக்கான சிலுவை என்கிறார். அது,  தேவ சித்தம் மட்டுமே செய்யவேண்டும் என்கிற ஆவல். இதுவும் சிலுவைதான். காரணம் அவரது சித்தம் மட்டுமே செய்யவேண்டும் என்பதும் லேசானதல்ல.  ‘என் ஐடியாக்கள் இறைவிருப்பத்திற்கு முன் ஒன்றுமே இல்லை’, என்பது நான் சுமக்கும் சிலுவை. தன்னை மையமாகக் கொண்ட மனிதனுக்கு இது பிரச்சனையே. இயேசுவோ, தான் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னபோது, அது பேதுருவுக்கு சரியான ஒரு ஐடியாவாகத் தெரியவில்லை. இயேசு இப்படியெல்லாம் மரிப்பது என்பது பேதுருவுக்கு மிகவும் கசப்பான யோசனையாகத் தெரிந்திருக்க வேண்டும். (மத்தேயு 16:22) ஆனால், அது தேவனுடைய விருப்பம் அல்ல என்பதையும், இயேசுவே விரும்பி ஏற்கும் பரமதிட்டம் என்பதையும் பேதுரு அறியவில்லை. 

ஆனால் இயேசுவோ, பேதுருவுடனும், தன் எல்லா சீஷர்களிடமும் “ ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (மத்தேயு 16:24). இங்கே, தன்னைத்தான் வெறுத்து என்றால் நம்மை நாமே கீறிக்கொள்வதல்ல, அல்லது முற்றும் துறந்த முனிவராகிவிடுவதல்ல. அதைவிட மேலான அர்த்தம் கொண்டது: என் விருப்பங்களை எல்லாம் ஏறக்கட்டிவிட்டு, அவர் விருப்பம் அறிந்து செயல்படத்துவங்குவது என்பதே தன்னைத் தான் வெறுத்தல்.

ஆனால், சிலுவை சுமத்தல் என்றால் பயம் அல்லது தயக்கம் உடனடியாக ஏற்படுவது இயற்கையே. ஏனென்றால், சிலுவை என்றவுடன் ஞாபத்துக்கு வருவது கிறிஸ்துவின் பாடு மரணமே. அல்லது, நாம் தனியாக சுமந்துகொண்டு ஒரு கடின வாழ்வு வாழப்போகிறோமோ என்கிற பயம். மாறாக, ‘கிருபை’ என்ற ஒன்றை, நன்றாக உணர்ந்துகொண்டால் இந்தப் பயம் அவசியமற்றது என்பதை அறிந்துகொள்ளலாம். நாம் இன்று சிலுவையில் அடிபடத்தேவையில்லை, கடைசிச் சொட்டு இரத்தம் வரை சிந்தி சிலுவையில் அவமானப்பட்டுச் சாகவும் வேண்டியதில்லை. காரணம், நமக்குப் பதில் அவர் அடிபட்டதுமல்லாமல், நம் மரணத்தையும் அவர் தம்மோடு இணைத்துக் கொண்டார். அதாவது நாமும் அவருடன் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறோம். இதைத்தான் கலாத்திருக்குப் பவுல் எழுதும்போது குறிப்பிடுகிறார்: கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். (2:20). அவர் பிழைத்தார், அதனால்தான் இன்று நாமும் கொல்கொதா ஏறாமலேயே பிழைத்திருக்கிறோம். எனவே, இன்று நாம் சுமக்கும் சிலுவை – அவர் சிலுவையைப் போன்றே நமக்கு நிந்தையையும் அவமானத்தையும் நம் சூழலுக்கு ஏற்ப உலகத்திடம் ஒருவேளை இருந்து கொண்டுவரக்கூடும், அவரைப்போன்ற மரணம் நமக்கு இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. நாம் கிருபையால் தாங்கப்படுபவர்கள். அவரால் நடத்தப்படுபவர்கள். 

கிருபையால் இரட்சிக்கப்பட்ட நாம், அதே கிருபையால்தான் அவர் உறவை மையப்படுத்தவும் செய்கிறோம். அதே கிருபையால்தான், அவர் சித்தம் செய்யவும் ஏற்கிறோம். அதாவது, சிலுவையை சுமந்துகொண்டு அவர்பின் செல்வதே அவரது கிருபையால்தான். நமது சிலுவையை அவர் சிலுவை சுமந்தவாரே சுமந்து செல்வதற்கு அவர் அழைத்தாலும், நம்மைத் தனியே சுமந்து தவிக்க அவர் விடுவதில்லை. சிலுவையில் வெற்றி சிறந்தவரே, நம்மையும் தன் வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்கிறார். ஆக, அவரை மையப்படுத்த உதவும் கிருபை மற்ற உறவுகளைச் சரியாகக் கட்டமைக்கவும் உதவுகிறது. அவரது விருப்பங்களைச் செய்ய உதவும் அவர்கிருபை சரியான விருப்பங்களைத் தருகிறது. அவர் விரும்பாத மற்றவரை அடையாளம் காட்டி அவற்றைச் செய்வதில் இருந்தும் தப்பிக்க உதவுகிறது. ஆக, சிலுவையைச் சுமப்பது மிகவும் அனுகூலமானதும், இனிமையானதும், முறையானதும் ஆகும். அதுவே கிறிஸ்தவ வாழ்க்கைக்குச் சரியானது. அதனால்தான், அவருக்குப் பாத்திரர்கள் ஆகிறோம் நாம். அதாவது, அவர் விரும்பும் தகுதி அவரால் நமக்குள் வருகிறது. முன்பு வேண்டாத பாவத்தைச் சுமந்தனாம் இன்று விரும்பிச் சிலுவை சுமக்கிறோம். முன்னதன் பாதை நித்திய ஆக்கினை, பின்னதின் பாதை நித்தியப் பெருவாழ்வு. எனவே, நம் சிலுவை சுமப்பது நமக்குப் உகந்ததே. இதில் தயக்கத்திற்கு இடமில்லை. சிலுவையின் வெற்றி நமதே!

பென்னி அலெக்ஸாண்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *