நான் யார்?

கிறிஸ்தவ அடையாளம்

வேலைக்கான இண்டர்வியூ சென்றிருக்கிறீர்களா? அங்கு கேட்கப்படும் முக்கியமான கேள்வி – ‘உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்’ என்பார்கள். அதுவரை யோசிக்கவில்லை என்றால் திகிரென்று கூட இருக்கும். “நா…நா.. வந்து, என் பேரு..” என்று நாக்குக் குழறுவதில் இருந்து, இல்லாத பொல்லாத விஷயங்களைக்கூட நம்மைப் பற்றி என்று சொல்லக்கூடிய இடம் இண்டர்வியூக்கள். 

நம்முடைய அடையாளங்கள் பொதுவாக நம்மைப் பற்றிய அபிப்பிராயங்கள் மேல்தான் கட்டப்படுகின்றன. நம்மைப் பற்றி நாம் அறிந்திருப்பதற்கும், அடுத்தவர் அறிந்திருப்பதற்குமே கூடப் பல முரண்கள் இருக்கும் என்பதால் நம்முடைய அடையாளம் என்பது நமக்கே பிடிபடுவதில்லை. மனிதர்கள் சிக்கலானவர்கள் என்பதால் வரும் பிரச்சனை இது. எவ்வளவுதான் விதவிதமாக விற்பனை ஆனாலும், “உன்னை நீ அறி” என்று முழங்கும் சுயமுனேற்றப்புத்தகங்கள் எல்லாம் நம்மை அப்படி எளிதாக அறியவிடுவதில்லை. 

‘மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்’ என்கிற பயத்தில் நம்முடைய சுய அடையாளத்தை இழக்கிறோம். மேலும் தங்களைக் குறித்த சரியான அடையாளத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்கிற பயம் வேறு சேர்ந்து கொள்கிறது. இதற்காகத்தான் ஃபேஸ்புக்கில்கூட போலி ஐடிக்களை உருவாக்குகின்றனர். அதன்பின் தாங்கள் செய்வது எளிதாகிவிடும். யாரை வேண்டுமானாலும் திட்டலாம், சாடலாம் என்பதற்கான சுதந்திரமாக அவர்கள் கருதுவது அந்த வசதியான அடையாள மறைப்பின் பின்னால்தான். ஆனால், அவர்களால் உண்மையில் ஒளிய இயலாது. காரணம் அவர்களுக்கு அவர்கள் யார் என்பது ஓரளவுக்குத் தெரியும் என்பதால் இந்த அடையாள மறைப்பும் உதவுவதில்லை. உள்ளே குத்தும்! ஒருமாதிரி சிக்கலான நிலை இது.

இப்படி இருக்க, நமக்கு –  அதாவது கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிக்கு – இந்த அடையாளப் பிரச்சனை இருக்கவேண்டிய அவசியமில்லை. அதற்கு – “தேவன் நம்மை எப்படிப்பார்க்கிறார் என்பதுதான் நம்முடைய மெய்யான அடையாளம்” என்றார் மறைந்த  போதகர் டேவிட் போவ்லிஸன். 

உலகத்தில் நமக்கு பல அடையாளங்கள் உண்டு. ஏழை, பணக்காரன், முதலாளி, ரிசர்வ்ட் டைப், மாணவன், சுகவீனமானர், இன்ன சாதிக்காரன், ஊர்க்காரன், வேதபண்டிதன், கோபக்காரன், உதார்பேர்வழி, சபை அங்கத்தினன், பிசி மெம்பர் என்று ஏதோ சிலபலவற்றின் அடிப்படையில் இருக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளமும் இருக்கலாம். ஆனால், கிறிஸ்தவன் தன் மெய்யான அடையாளத்தைக் கிறிஸ்துவோடுதான் காண முடியும்.

“தேவன் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்? அவர் என்னை எப்படிப் பார்க்கிறார்” என்றும், அதன் விளைவாக “என்னை எப்படி நடத்துகிறார், எப்படி நம் அடையாளத்தை உருவாக்குகிறார்” என்றும் அறியத்துவங்கினால் குழப்பமான, சிக்கலான இந்த வாழ்வு இலகுவாகும். அதை விடுத்து, “நா யார் தெரியுமா?” என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அலைவதோ, “நானெல்லா யாருங்க…சும்மா” என்று சுயபச்சாதாபத்தில் திரிவதோ நமக்கு உபயோகப்படாது.

தேவன் தம்முடைய ஜனங்களைத் தெரிந்துகொள்வதன் விளைவாக தாமே அவர்களுக்கு அடையாளமாகிவிடுகிறார். வேதத்தில் பல இடங்களில் பலருடை வாழ்க்கையில் அவர்கள் அடையாளம் என்ன என்பதை அறிந்தவர்கள் மட்டுமே வெற்றிபெற்றவர்களாகவும், தேவனுடைய சுதந்திரத்தில் பங்காளிகளாகவும் மாறி இருக்கின்றனர். இதுதான் அவரோடு சிலுவையில் நம்மை அடையாளம் காண்பதுவரை முதிர்ச்சியுள்ளவர்களாக மாற்றுகிறது.

நம்முடைய விசுவாசத்தில் விருத்தி என்பதும் நம்முடைய அடையாளத்தை அறிவதால்தான் கிடைக்கிறது, எனவே, அதை அறிந்திருப்பது மிகவும் முக்கியமானது. சுமுகமான ஆவிக்குரிய வாழ்விற்கும் அதன்பின் சரியான உலக் கண்ணோட்டத்தைப் பெறுவதற்கும்கூட தொலைத்த நம்முடைய அடையாளத்தை சரியாக அறிந்துகொள்வதுதான் வழி!  நம்முடைய அடையாளம் என்பது கிறிஸ்துவின் அச்சடையாளம்! அது எப்படி நமக்குள் வருகிறது என்பதைக் கற்றுக்கொள்வதில்தான் அந்த அடையாளத்தை மீண்டும் நாம் வெளிக்காட்டவும் சரியான வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *