
எத்தனை புத்தகங்களையும் படியுங்கள். ஆனால், வாழ்வது வேதத்தின்படி இருக்கட்டும் என்றார் போதகர் சார்ல்ஸ் ஸ்பர்ஜன்.
புத்தகம் வாசிப்பவர்களுக்கு முன் இருக்கும் சவால், வாசிக்கிறேன் பேர்வழி என்று வேதவாசிப்பைக் குறைத்துவிடக்கூடும் எனபதுதான். இது அபாயமான சவால். புத்தகம் வாசிக்காமல் நான் வேதம் மட்டுமே வாசிப்பேன் என்று சொல்பவர்கள் வைக்கும் நியாயமான கருத்தும் இந்த அபாயத்தைக் கருதிதான். ஆனால், புத்தகம் வாசிப்பவர்கள் எந்தச் சாக்குப் போக்கும் சொல்ல இயலாதபடி அவற்றை எதற்காக வாசிக்கிறோம் என்கிற தெளிவிருந்தால் இந்த அபாயத்தை சுலபமாக தவிர்த்துவிடலாம். அதாவது, எதைச் செய்தாலும் தேவ நாமம் நம் வாழ்வில் மகிமைப்படவேண்டும் என்கிற ‘சட்டம்’ வாசிப்பவருக்குள் தெளிவாக இருக்கவேண்டும். இதைப் பின்பற்ற விரும்புவோருக்கு மட்டுமே புத்தகவாசிப்பு ஒரு முதலீடு. மற்றவருக்குப் புத்தகங்கள் பிரச்சனையே. உண்மையில் புத்தகம் வாசிப்பு உங்கள் வேதவாசிப்பு நேரத்தைக் கைவைக்கிறது என்றால், வாசிப்பின் அர்த்தம் விளங்கவில்லை என்றுதான் அர்த்தம்.
புத்தக வாசிப்பதும் வேத வாசிப்பதும் ஒன்றல்ல என்றாலும், இரண்டும் ஒன்றாகப் பயணிக்க முடியும். இரண்டுக்குமே நாம் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து இருந்தால். சமநிலை செய்துகொள்வதும், சரியானவற்றை வாசிப்பதும், வாசிப்பதை வேதத்தோடு இணைத்துப் பார்க்கவும், வேதத்தை தியானிக்கும்போது வாசித்தவைகளைக் கொண்டு இன்னும் சிந்தனைகளை அதிகப்படுத்தவும் நிச்சயம் இயலும்.
ஆனால், நான் கண்டவரை சிந்திக்க சோம்பற்படுபவர்களால் புத்தகங்களை மட்டுமல்ல, வேதத்தையும் சரியாக வாசித்துவிட இயலாது. நீங்கள் புத்தகங்கள் வாசிக்க சோம்பேறித்தனம் ஒரு காரணமாக இருக்க இயலாது. புத்தகங்கள் – அது வேதமாக இருந்தாலும் சரி, வேதம் சார்ந்த புத்தகங்களாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி சிந்திக்க, எண்ணக்களை முறைப்படுத்த நம்மை நிறைக்கவேண்டும். நிறைக்கும்!
ஆக, எதற்கும் தேவனைச் சார்ந்திருப்பவர்களுக்கு வாசிப்பு அலாதியானதாகவும், முறையானதாகவும், வளர்ந்து பெருகுவதாகவும் இருக்கும். கிறிஸ்தவர்கள் வாசித்தே தீரவேண்டியவர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். காரணம், வேதமே எழுதிக் கொடுக்கப்பட்ட புத்தகம்தான். அதை வாசிப்பவர்கள்தான் வளர்கிறார்கள். வேதத்தைமட்டுமே வாசிக்கிறேன் மற்றது வீண் என்று சிலர் சொல்வது வெறும் கூற்று. காரணம் வெளியில் இருந்து எந்தச் சிந்தனையும் வருவதில்லை, 100% பரிசுத்த ஆவியானவர் மட்டுமே எனக்கு வேதத்தை விளக்குகிறார் என்று யாரும் சொல்ல இயலாது. குறைந்தபட்சம், சபைகூடுகைகளில் ஒரு போதகர் பேசுவதையாவது கேட்டுக்கொண்டுதானே ஆக வேண்டும். மேலும், வேதத்தைத் தவிர வேறு எதையும் வாசிப்பது கூடாது என்பவர்கள், மறந்தும் வாயைத் திறந்து போதனைகளில் இறங்கிவிடக்கூடாது. காரணம், ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு வேதபண்டியருக்கு பரிசுத்த ஆவியானவர் விளக்கியதை வாசிக்க மறுப்பவர்கள், அவர்களும் வாய்திறந்து எதையும் விளக்குவது முறையல்ல.. அல்லவா?
அப்படியானால், வாசிப்பது எப்படி? அதுவும் வேதவாசிப்புக்குச் சிறிதும் பங்கம் வராமல் வாசிப்பது? – கர்த்தருக்குச் சித்தமானால் அதுகுறித்து மற்றொரு கட்டுரையில். மற்றொரு சமயம்.