
நாடு கடந்த அரசு (Provisional Transitional Government) என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இலங்கைத் தீவில் ஈழம் தனியே மலரவில்லை என்றாலும் 2009ஆம் ஆண்டில் பல நாடுகளிலும் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மனம் தளராமல் “நாடுகடந்த தமீழ் ஈழம்” என்ற ஒன்றை உருவாக்கினார்கள் அதாவது தங்களுக்கு என்று ஒரு நிலப்பரப்பு நாடாக இல்லாவிட்டாலும், மனங்களில் ஒன்றுபட்டு ஒரு நாட்டை உருவாக்கி அதற்கு உருத்திரகுமாரன் என்பவர் தலைமையில் ஒரு செயல்திட்டத்தையும் வகுத்தார்கள்.
நாடும் அதன் அமைவிடமும்
ஒரு நாடு என்றதும் நமக்கு நினைக்குவருவது அந்த நாடு இருக்கும் இடம் அல்லது நிலப்பரப்புதான். அதன் பின்புதான் அந்த நாட்டின் தலைவர் மற்றும் மக்கள் எல்லாம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், நாடு என்பது வெறும் நிலப்பரப்பல்ல. இன்னும் சொல்லப்போனால், அதன் அமைவிடத்தை நாடென்று சொல்வதைவிட, அதன் மக்களையும், அவர்கள் கொண்டிருக்கும் அந்த இணைப்பையும், பழங்காலங்களில் என்றால் அதன் அரசர்களும்தான் ஒரு நாடாகக் கருதப்படவேண்டும். காரணம் அவர் இருக்கும் நிலப்பரப்புகூட மாறலாம், ஆனால் அங்குள்ள மனிதர்கள் மாறுவதில்லை. ஏதோ ஒரு இடத்திற்குச் சென்றாலும் மனதால் தன் நாட்டை மாற்றுவதென்பது இயலாது. ஒருநாட்டின் குடிமகன் இன்னொரு நாட்டின் குடிமகனாகக் கூட மாறிக்கொள்ளலாம். ஆனால், ஒரு மனிதன் தான் எங்கு பிறக்கிறானோ, அவன் மனதளவில் அந்த நாட்டினனாகத் தான் மரணமடையும் வரை இருக்க முடியும். வேறுநாட்டினனாக இருக்கவேண்டுமென்றால் அகதியாகவோ, குடியுரிமைபெற்ற வேறுநாட்டினனனாகவோதான் இருக்க இயலும். பெருமைக்கு வேண்டுமானால் ஒரு வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவன் தன்னை அந்த நாட்டைச்சேர்ந்தவனாகக் காட்டிக்கொண்டாலும், அந்த நாட்டைனருக்கு அவன் அன்னியன்தான். அமெரிக்க மண்ணிலேயே பிறந்திருந்தாலும், சட்டப்படி அவன் அமெரிக்கப் பிரஜை ஆனாலும், அவன் இந்தியனானால், இந்தியனே! இதை மாற்றும் வித்தை நம்மிடமில்லை.
இதயங்களில் இருக்கும் நாடு
எனவே, நாடு என்பது நிலப்பரப்பு அற்றது, மாறாக அது நம் எண்ணங்களோடு இணைந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதாவது, ஒரு நிலம் இல்லாமலேயே அரசாங்கங்கள் இருக்கலாம். வெறும் நிலம் மட்டும் ஒரு நாடாக இருக்கமுடியாது. இதை உலகம் சரியாக அங்கீகரிக்காவிட்டாலும், இதுதான் உண்மை. வரலாற்றில் பல நேரங்களில் இதுபோன்ற சூழல் வந்திருக்கிறது. யூதர்களூக்கென்று ஒரு நிலப்பரப்பு இல்லாவிட்டாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவர்கள் தங்களை யூத நாட்டைச் சேர்ந்தவராகக் தங்கள் இதயத்தில் தங்கள் நாட்டைச் சுமந்து கொண்டிருந்ததால்தான் தங்களுக்கென்று ஒரு நிலப்பரப்பையும் 1948ல் சொந்தமாக்கிக் கொண்டனர். இல்லையென்றால் சிதறியவர் சிதறியபடியே போயிருப்பர்.
ஆனால், இவ்வுலகில் நிலப்பரப்பு இல்லாமல் ஒருநாட்டை நிர்வகிப்பதும், ஒருங்கே தங்கி வாழ்வதும் கடினமாதலால்தான் ஒரு நிலத்தை தங்களுக்கென்று சொந்தமாக்க முயல்கிறோம். இதனால்தான், கடவுளும் தான் தெரிந்துகொண்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கென நிலப்பரப்பை யோசுவாமூலம் ஏற்படுத்தித்தந்தார். இப்படி உருவாகும் நாட்டின் எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கும். தங்கள் மக்கள் வசிக்கும் பகுதி அனைத்தும் தங்களுக்கே, அதில் உள்ள வளங்களும் எமக்கே என்ற நிலைப்பாடுதான் எல்லைகள் கரடுமுரடாக அமைக்கப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம். ஒரு நாட்டின் நிலப்பரப்பு சதுரமாகவோ, வட்டமாகவோ இல்லாமல் இருப்பதற்கு, இதுவும் கூட ஒரு காரணம். இதைக் கவனித்திருக்கிறீர்களா?.
தேவனுடைய நாடு
கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து இரத்தம் சிந்தி, மனுக்குலத்துக்கென்று பாவமன்னிப்பை அருள மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தநாளில், தன் அரசு இவ்வுலகத்துக்குறிதல்ல என்று காட்டினார். தான் நிலைநாட்ட வந்த இராஜியம் அல்லது நாடு, இந்த பூமியில் ஒரு நிலப்பரப்பைச் சார்ந்ததல்ல; மாறாகத், தன்னால் தரப்படும் “பாவமன்னிப்பாகிய பாஸ்போர்ட்டை”ப் பெற்ற யாவரும் கிறிஸ்து ஸ்தாபித்த நாடாகிய “தேவனுடைய இராஜ்ஜியத்தின்” குடிகளாக மாறுகிறார்கள் என்றார். இயேசு தங்கள் நிலப்பரப்பை தங்களுக்காக மீட்டுத்தரும் மேசியா என்று முதலாம் நுற்றாண்டு யூதர்கள் நம்பினர். அதனால்தான் அவரை ஒரு ‘லோக்கல் இராஜாவாக’ இருந்து தங்களுக்கு ரோம அரசிடம் இருந்து விடுதலை பெற்றுத் தந்துவிடுவார் என்று நினைத்தனர். ஆனால், கிறிஸ்துவோ தன் நாடு, இந்த பூமிக்காக-இந்த மண்ணுக்காக, அதாவது, தன்னால் உருவாக்கப்பட்ட ஒரு சிறு நிலப்பரப்புக்கான இராஜாவாக இருக்க வரவில்லை. அவரது இராஜ்ஜியம் நிலம் கடந்தது; பூமிக்கு அப்பாற்பட்டது. அதன் எல்லை அளவிடமுடியாதது. எனென்றால் அது ஆவிக்குரியது. அவர் நமக்களிக்கும் விடுதலையும் ஆவிக்குரியது.
இது உயிர்தெழுந்த கிறிஸ்துவால் நமக்காக உருவாக்கப்பட்ட ஒரு நாடு. இதில் குடியுரிமை பெற கட்டணம் ஏதும் இல்லாவிடினும், நுழைவுச் சீட்டுபெற்று நுழைவது எளிதானதன்று. இதன் மக்களாகக் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்க வேண்டும். மட்டுமல்லாமல், அநேக உபத்திரவங்களின் வழியாய் மட்டுமே இந்த ‘தேவனுடைய இராஜியத்தில்’ பிரவேசிக்கமுடியும் என்று பவுலும், பர்னபாவும் (அப்போஸ்தலர் 14:22) மற்ற சீஷர்களுக்கு விளக்கியதை வாசிக்கிறோம். இயேசுவும் அவருடைய இராஜியத்தில் இணையவேண்டியதன் அவசியத்தை பலமுறை விளக்கினார். பவுலும் இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விவரமாய் விளக்கினார் என்றும் காண்கிறோம் (அப்போஸ்தலர் 28:23)
இந்த தேவனுடைய இராஜியத்தில், அல்லது இந்த ஆவிக்குரிய நாட்டில் என்னெவெல்லாம் உண்டு?
- ஒரு நாட்டுக்குத் தேவையான எல்லாமே உண்டு. இராஜா உண்டு, நீதிபதி உண்டு. கிறிஸ்துவே அதன் இராஜா- நீதிபதி.
- அங்கே குழந்தைகள், பெரியவர்கள் என்ற பிரஜைகளாகிய நாமும் உண்டு.
- சட்டங்கள் உண்டு, வேதமே சட்டம்.
- நாட்டை வலுப்படுத்தும் வேலை உண்டு. சுவிசேஷப்பணியே அவ்வேலை.
- யுத்தங்கள் உண்டு. ஆவிக்குறிய போராட்டங்களே யுத்தங்கள்.
இந்த நாட்டுக்குள் சிலர் நுழைவது கடினம் (லூக்கா 18:25 ), சிலர் நுழைந்தாலும் வெளியே தள்ளப்படக் கூடும் (லூக்கா 13:28 ). ஆனால், அனைவருமே முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள் (மத்தேயு 6:33) என்று இயேசு வற்புறுத்தினார். அதாவது, முதலாவது ஆவிக்குறிய வாழ்வை நாடவேண்டும் என்றும், உலகக்கவலைகளை ஒதுக்கிவிட்டு அவருடைய நாட்டின் குடிமகனாக, மகளாக இருப்பதை வாஞ்சிக்க வேண்டும் என்பதே இதற்கு அர்த்தம். எதைக்குடிப்போம், எதை உண்போம் என்று உலகத்தாராக இருப்பதை தேவன் கண்டிக்கிறார். இப்பொழுது தேவனுடைய இராஜியம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். அப்படியென்றால் சிந்திப்போம் – நாம் எந்த நாட்டுப் பிரஜை என்று. தேவராஜியத்தில் நம் பணி என்னவென்று.
தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக. தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். (லூக்கா 17:20,21)