
நம்முடைய மனம் (வாக்குறுதி, பேச்சு) மாறுவதற்கும் தேவன் தன் மனதை மாற்றிக்கொண்டார் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. (அல்லது சம்பந்தமே இல்லை). நிச்சயம், நம்மைப்போல ஒன்றைச் செய்ய நினைத்து, தன் திட்டதில் ஏதோ குறையைப் பாதிவழியில் கண்டுபிடித்ததால் மாற்றிக்கொண்டார் என்று ஐயப்பட வழியே இல்லை. காரணம், அப்படி இருந்தால் அவர் இறைவன் அல்ல. அப்படி அவர் முடிவுகளை மாற்றிக்கொண்டேயிருப்பாரானால், நம்மைபோல அவரும் குழப்பமானவராகத்தான் இருப்பார் என்று கருதவே வாய்ப்புண்டு. மாறாக நாம் அவரை விசுவாசிக்கக் காரணமே, அவர் என்றும் மாறாதவர் என்பதால்தான்.
குறைவுள்ள நாம் எடுக்கும் நம்முடைய முடிவுகள் மற்றும் திட்டங்களை நாம் மாற்றிக்கொள்வதற்கும் , சர்வ ஞானியின் பரிபூரணமான முடிவுகளை அவர்தானே மாற்றுவதாக நாம் வேதத்தில் வாசிப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இந்தப்புரிதலுக்குப் பதிலாக, நம்முடைய அளவுகோலுக்கும், முக்காலத்துக்கும் தேவனாகிய கர்த்தருடைய அளவுகோலுக்கும் வித்தியாசம் இல்லை என்று நினைத்தால், அவருடைய எல்லாக் குணாதியங்களையும் அதே அளவுகோலில் பார்க்கும் அபாயத்துக்குள் செல்ல நேரிடும். அதாவது, தேவனைப் பற்றிய நம் எல்லா அறிவும் சரியானதல்ல என்பதாகிவிடும்.
அப்படியானால் சில இடங்களில் தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்வதாக வாசிப்பது? உதாரணமாக, சோதோம் கொமோராவைக் குறித்து ஆபிரகாம் தேவனை வேண்டிக்கொள்ளும்போது தேவன் தன் முடிவை மாற்றுவேன் என்கிறார். (ஆதியாகமம் 18:20-32). அதேபோல் நினிவேயை அழிப்பேன் என்றவர் அழிக்காமல் விட்டது? இவை எல்லாவற்றிலும் தேவன் தன் முடிவுகளை மாற்றிக்கொள்வதாக இருந்தாலும், அவை அனைத்திலுமே மனிதர்களின் மனம்மாறுதலை தேவன் மதிக்கிறார் என்று காண்கிறோம். ஆகவே, மனிதனுடைய விருப்பங்கள் மாறும்போது அதற்கேற்றார்போல் தன் திட்டங்களையும் அமைக்கிறார் என்றுதான் பொருள். அவற்றையும் அவர் முன்யோசனையாகத்தான் செய்கிறார். திடீரென்று அவருக்கே அவர் ‘சர்ப்ரைஸ்’ கொடுத்துக் கொள்வதில்லை.
தேவன் தன் முன்னறிவின்படி சில நிலைகளை தீர்மானித்து வைத்திருக்கிறார். உதாரணமாக ஆபிரகாம் வேண்டிக்கொண்டால், மக்கள் காக்கப்படுவார்கள் என்று. நாம் ஜெபித்தால் நடக்கவென்று சிலகாரியங்களை வைத்திருக்கிறார். தன் மக்களுடைய ஜெபத்தின் அடிப்படையில்தான் சில காரியங்களை நிகழ்த்தவேண்டும் என்பது அவரது திட்டம் என்றால், அதை நாம் ஏன் என்று கேட்க இயலாது. தன் பிள்ளைகள் கேட்காமல் தருவதில்லை, கேட்டால் தந்துவிடுவேன் என்பது அவர் திட்டமாக இருந்தால் அதற்காக அவர் தன் மனதை மாற்றிக்கொள்கிறார் என்று பொருளல்ல. மேலும், வாக்குத்தத்தங்கள் எல்லாம், கிறிஸ்துவுக்குள் ஆம் என்று ஆமென் என்றும் இருப்பவைதான். ஆனால், அவை நம் வாழ்வில் செயல்படுவதற்கோ, அல்ல என்று செயல்படாமல் இருப்பதற்கோ தேவன் காரணம் இல்லை. அவர் வாக்குத்தத்தம் தந்தார். ஆனால், அவரே பிற்பாடு தன் மனதை மாற்றிக்கொண்டதால், அந் வாக்குத்தத்தம் என்வாழ்வில் நிறைவேறவில்லை என்று எவரும் சொல்ல இயலாது. என்கட்டளைகளுக்குச் செவிகொடுத்தால் இதையல்லாம் செய்வேன். இல்லாவிட்டால் மற்றபல வந்து சேரும் என்று சொல்லும் இடங்களில் எல்லாம், தேவனிடத்தில் எந்த மனமாற்றமோ, திட்டங்களில் மாறுபாடுகளோ இல்லை. நாம்தான் மாறுகின்ற சூழல், நம் விருப்பங்கள், உணர்வுகள், குணங்கள் சார்ந்து முடிவுகளை மாற்றிக்கொள்பவர்கள். தேவன் அப்படிப்பட்ட மாறுதல்கள் அடிப்படையில் தன் முடிவுகளை மாற்றுவதில்லை. குறிப்பாக அவரது குணாதிசயங்கள் எதுவும் மாறுவதில்லை..
மேலும், இந்த வேதபகுதிகளை வாசிக்கும்போது தேவன் வெளிப்படுத்தி இருக்கும் அவரது மற்ற குணாதிசயங்களின் அடைப்படையில்தான் அவற்றை தியானிக்கவேண்டும். தேவன் நல்லவர், வாக்கு மாறாதவர், நீதி செய்கிறவர் என்பதெல்லாம், அவரது முடிவுகள் மாறுவதற்கு அடிப்படையாக இருக்கின்றனவே அல்லாமல், முரண்பாடானவையாக இருப்பதில்லை. இதற்கும் மேலாக, குயவன் தனக்கு விருப்பமானதைக் களிமண்ணில் செய்ய நினைத்தால், களிமண்ணுக்கு அதைக் கேட்கும் அதிகாரம் ஏது? அது நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவரது அதிகாரத்துக்குள் தலையிட நாம் யார்? என்றாலும், தேவன் அன்புள்ளவர் ஆகையால் அவர் ஒருவேளை தன் முடிவுகளை மாற்றிக்கொண்டாலும் அவை நன்மைக்கனவையே அல்லாமல் தீமைக்கானவை அல்ல. நினிவேயை அழிக்க அவரால் முடியும் என்றபோதும், அம்மக்களின் மனம்திரும்புதலை விரும்பும் அன்பின் தேவன் அவர் என்பதால் அவர் செயல்கள் எல்லாம் நீதியானவையே.