
குறிப்பு: கட்டுரையின் நோக்கம், ஏற்கனவே திரித்துவத்தை ஆராய்ந்து அறிந்தவர்களுக்கு இன்னும் ஒரு கோணத்தில் சிந்திக்க ஒரு சிறு உதவியாக இருப்பது மட்டுமே. கொஞ்சம் கவனத்துடன் வாசித்தால் சில புதுப் பரிமாணங்களில் நீங்களும் அவரைக் குறித்துச் சிந்திக்கலாம்!
கிறிஸ்தவத்தில் திரும்பத் திரும்பப் போதிக்கப்படுவதும் விசுவாசிக்கப்படுவதுமான உபதேசம் திரித்துவம் அல்லது திரியேகத்துவம். இறைவன் மூவராக இருக்கும் ஒருவர் என்பதே திரித்துவம். இப்படிச் சொல்வதைப் புரிந்துகொள்வதில் நிச்சயம் சிரமம் இருக்கும். ஆனால், அது இயல்பானது. காரணம் எந்த நேரத்திலும் மனிதராக இருக்கும் நாம் – ஒருவர் மட்டுமே! நம்மில் எவராலும் மூன்று நபர்களாக ஒரே சமயத்தில் இருக்க இயலாது. ஒரே தாய்க்குப் பிறந்து உருவத்தில் மூன்று பேர்கள் இருந்தாலும், சிந்தை ஒன்றாக இருக்காது. அதனால், மூன்றுபேராக இருப்பவர்கள் ஒருவராக இருக்கும் உபதேசத்தை முழுவதுமாக விளங்கிக்கொள்வது கடினம்தான்.
இருந்தாலும், வேதத்தில் தேவன் மூவரான ஏகராக இருப்பதை நாம பல வசனங்கள் மூலம் “போதுமான” அளவு விளக்க முடியும். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இறையியலாளர்கள் – தேவ தாசர்கள் – இதை விளக்கி இருக்கிறார்கள். பல வகைகளில். ஆனால் இதைத்தான் சரியான விளக்கம் என்று அவர்களும் சொல்லிவிடுவதில்லை. முதலாம் நூற்றாண்டிலேயே சபை பெரியவர்கள் இதை புரிந்துகொண்டவர்களாக விளக்கினர். குறிப்பாக டெர்ட்டுலியன். இவர் இதற்கான அடிப்படையை முதலாவதாக விளக்கினார் என்கிறார்கள். அதன்பின் வேதத்தை சுமார் 200 ஆண்டுகள் ஆராய்ந்ததன் பேரில் கி.பி. 325ம் ஆண்டு நிசேயா சங்கத்தில் திரித்துவம் விளக்கப்பட்டு, ஏற்கப்பட்டு விசுவாச அறிக்கையிலும் அறிவிக்கப்பட்டது. இறைவனது தன்மையை அவர் வெளிப்படுத்தி இருக்கும் வண்ணம், முடிந்தவரை சிறப்பாக விளக்குவது மட்டுமே சபைப் பெரியவர்களின் நேர்மையான எண்ணம்.
அவர் எப்படி இப்படி?
இந்தக் கட்டுரையும் அப்படி ஒரு சிறு விளக்க முயற்சியே. இதுவும் முற்றிலும் விளக்கிவிடப் போவதில்லை. ஆனாலும் சிந்திப்பதற்காக!.
மூவர் – பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் இருப்பவர்கள்! தனித்தனியாக செயல்படுபவர்கள். இன்று நேற்றல்ல, எப்போதுமே. இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். அதாவது நித்தியமான கடந்த காலத்திலும், இப்போதும், இனி நித்தியமான எதிர்காலத்திலும்.
ஆனால் இதுவரையும், இப்போதும் அவர்கள் ஒரே சிந்தையுடன் செயல்படுபவர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், வேறு வேறு செயல்பாடுகளைக் கொண்டிருந்தாலும் 100% ஒருவருக்கு ஒருவர் ஒத்துபோகிறவர்கள். இதுவரையும், இனியும் ஒருபோதும் ஒருவரது எண்ணமோ, செயல்பாடோ மற்றவரது எண்ணத்தோடும் செயலோடும முரண்படுவதில்லை. எதுவும் பிசகுவதில்லை. மாறுபாடு சற்றேனும் இல்லை.
தனித்தனிச் சிந்தை; தனித்தனி செயல்பாடு. ஆனால், 100% எண்ண ஒற்றுமையுடன்! இதைத்தான் ஒருமனப்பாடு என்பதாக நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறோம். ஒருவர் மற்ற இருவரது சிந்தையை முற்றும் அறிவார். அங்கீகரிப்பார்!
ஒருவர் மற்றவரை அவர் இருக்கும் வண்ணம் ஏற்றுக்கொள்கிறார். அதாவது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாவனவர் என்கிற வரிசையை அல்லது படிநிலையை ஏற்றுக்கொள்கிறார்கள். பிதாவின் விருப்பம் குமாரன் மரிப்பது என்றால் அதைக் குமாரன் 100% ஏற்று நடத்துகிறார். குமாரனின் விருப்பம் இனி பரிசுத்த ஆவியானவர் சகல சத்தியங்களையும் போதித்து நம்மை நடத்தவேண்டும் என்றால் அதை அப்படியே செய்கிறார் பரிசுத்த ஆவியானவர்.
பலியாகப் பிதா அனுப்புகிறார் என்றால் குமாரன் முற்றும் கீழ்படிகிறார். பரிசுத்த ஆவியானவர் அதற்கு உதவுகிறார். குமாரன் அரசாளுவார் என்றால் பிதாவும் ஆவியானவரும் அதை ஆமோதிக்கிறார்கள். குமாரன் உயிர்தெழுதலுக்குப் பின் ஆவியானவர்தான் மீட்கப்பட்டவர்களுக்குத் துணையாளர் என்றால் அதற்கு பிதாவும் குமாரனும் இசைகிறார்கள். இப்படிச் சொல்ல ஏராளமாக உண்டு.
முற்றும் ஒருமனப்பாடுடைய இந்த ஏக சிந்தைதான் மூவரான அவர்களை ஏகராக, அதாவது “ஒருவராக” இருக்கச் செய்கிறது. தேவன் அதனால் ஒருவரே. மூவர் அல்ல! “மூன்று நபராகச் செயப்பட முடிகிற ஒருவர்!”.
இது ஒரு விளக்கம். எல்லாமும் அல்ல. எல்லாம் இனி புரிந்து விட்டது என்றும் அல்ல. காரணம் குறையுள்ள மனிதர்கள் நாம். இந்த விளக்கத்தில் குறை இருந்தால், அது குறைவுள்ள சிந்தையில் இருந்து நம் சிந்தனைக்கு மேலானவரைக் குறித்து விளக்க முற்படுவதில் இருக்கும் குறையே இது.
மேலும், நாம் எவருடனும் முற்றும் 100% ஒருமனப்பாடு கொண்டவர்கள் அல்ல. ஒரு சில விஷயத்தில் அப்படி இருந்தாலும், எல்லா நேரங்களிலும், எல்லா விஷயங்களிலும் ஒருமனதாய் இருப்பதில்லை. காரணம் நாம் வேறுபட்ட நபர்கள்; வேறுபட்ட எண்ணம் உடையவர்கள். எனவே மூன்று தனித்த சிந்தை உடையவர்கள் முற்றிலும் ஒருமனதோடு செயல்படுவதை நாம் புரிந்துகொள்வது கடினமே.
எதனால் இப்படி?
ஆனால், தேவன் ஏன் மூவரான ஒருவராக இருக்க வேண்டும்? அதிலும் ஒருவராக இருக்கவேண்டும்? தேவன் சர்வ அதிகாரம் மிக்கவர். அதாவது அவருக்கு எல்லா அதிகாரமும் உண்டு. ஆனாலும், அவரிடம் எதேச்சதிகாரம் இல்லை. அதாவது சுயநலம் மிக்க ஆளுமை இல்லை. இதை அவர்கள் மூவராக இருந்து வெளிப்படுத்துகின்றனர். இங்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். மிக முக்கியமாகக் கற்றுக்கொள்ளவேண்டியது சபையாகிய சரீரத்தில் சகோதர ஐக்கியம். மற்றவர்களுடன் ஒருமனப்பாடு.
இப்படி இல்லையென்றால் எப்படி?
இது ஒருபுறம் இருக்க, பலர் கேட்கும் கேள்வி வேதம் ஏன் திரியேகம் என்கிற வார்த்தையையோ மூவரான ஏகர் என்கிற இறைத்தன்மையையோ சொல்லவில்லை என்பது. இந்தக் கேள்வி கேட்பவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். (இப்படி ஒரு வார்த்தை இல்லை என்பது வெறும் தட்டையான வாதம். ஆழங்களுக்குள் செல்ல விரும்பாமல் ஸ்பூன் ஃபீடிங் விரும்புவோர் புத்திசாலித்தனமாக நினைத்துக்கொண்டு முன்வைக்கும் வாதம். இவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான்: வேதத்தில் இன்று நாம் பயன்படுத்தும் பல வார்த்தைகள் கிடையாது. அந்தக் காலத்தில் இன்றிருக்கும் பல சொல்லாடல்கள் இல்லை!)
வேதாகமம் ஒட்டுமொத்தமாக ஒரு நபரிடம் அருளப்படவில்லை. கடவுள் சொல்லச் சொல்ல அருகில் அமர்ந்த ஒரு நபரால் புத்தகமாக எழுதப்பட்டதல்ல. தனிப்பட்ட மனிதர்களால் தனிப்பட்ட அவர்கள் அனுபத்துடன் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. ஆனால் அவைகள் எவையும் தொடர்பு இல்லாமல் இல்லை. எல்லாம் சிறப்பான பல இணைப்புகளுடன் கூடியது.
ஆக வேதம் பல புத்தகங்களின் இணைப்பு. பல்வேறு சூழ்நிலைகளில் நுற்றுக்கணக்கான ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டது. சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பலருக்கு தேவன் பல வழிகளில் வெளிப்பட்டிருக்கிறார். தன்னை அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணமும், அறிந்துகொள்ள ஏற்ற வகையிலும் அந்தக் காலச் சூழலுக்கு ஏற்றார்போலும் வெளிப்பட்டார். உதாரணமாக, திரித்துவத்தின் இரண்டாம் நபரான இயேசு என்கிற ஒரு பெயர் அவர் பூமிக்கும் வரும் வரை உள்ள பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களில் இல்லை. ஆனால், அவர் மூலம் உலகம் உண்டாக்கப்பட்டது என்கிற எளிமையான புதிய ஏற்பாட்டுச் சத்தியம், அவர் ஆதிமுதல் இருப்பவர் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பிதா இருக்கிறார் என்பது புதிய ஏற்பாட்டு சீடர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததினால்தான் இயேசுவிடம் பிதாவைக் காட்டச் சொல்லிக் கேட்டார்கள். நானே அவர் என்று அவர் சொன்னதன் அர்த்தம் எங்கள் சிந்தை ஒன்றே. பிதாவைக் காண்பதால் நீங்கள் என்ன அறிந்துகொள்ள முடியுமோ அதை நானே உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன் என்பதே இதன் அர்த்தம். இன்றோ, தேவன் மூன்று ஆள்த்துவம் கொண்டவராக வெளிப்பட்டது ஒட்டுமொத்த வேதாகமத்தையும் கிடைக்கப்பெற்ற நாம் அற்புதமாகக் அறிந்துகொண்ட சிலாக்கியமான சத்தியம். இது நாம் சந்தோஷமாய் அனுபவிக்க வேண்டிய ஒன்று!
பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் வெளிப்பட்டவர். சிலருக்கு அவர் முழுமையாக வெளிப்படவில்லை. ஒரு சிலர் பூமியில் வந்த காலத்தில் கிறிஸ்துவாக மனித சரீரத்தில் அவரைக் கண்ணாரக் கண்டார்கள். அதன் பின், சபை ஆவியானவரை அனுபவித்துக் கண்டுகொண்டது. பிதாவை நாம் காண்பது குமாரன் வழியாகத்தான். இன்று குமாரனுக்கு ஏற்றபடி நம்மை நடத்துவது கிறிஸ்துவுக்குப் பின் நமக்குள் நம்முள் வாசம் செய்யும்படி அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவர்தான். இதை மறுதலித்தால் வரும் குழப்பங்கள்தான் ஏராளம். பல வேத வசனங்களை தப்புத்தப்பாகப் புரிந்து உபதேசக் குழப்பங்களுல் விழுந்துபோக நேரிடும். பல வேத வசனங்களை இணைத்துக்கிடைக்கும் இந்த அற்புதமான வெளிப்பாட்டைப் பிள்ளைகளாக அனுபவிக்க வேண்டிய நாம், விரக்தியில் கிடக்கும் அளவுக்குப் பல வசனங்களைப் புறந்தள்ளவோ தவறாகக் கருதவோ நேரிடும்.
பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் கிறிஸ்துவினால் வரும் இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள். அவரை இயேசு என்கிற நாமத்தில் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றபோதிலும் தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். அதேபோல், புது உடன்படிக்கையின் பின்னர் கிறிஸ்துவைக் கண்டு அவரது இரட்சிப்பு கிடைக்கப்பெற்றவுடன் தான் ஒட்டுமொத்த வேதாகமத்தையும் பக்தர்கள் கருத்தாய் ஆராய்ந்து தேவனது திரியேகத்தையும் அறிந்து கொண்டார்கள். ஒட்டுமொத்த வேதாகமத்தையும் அதன்பின் இணைத்துக் கிடைக்கபெற்ற நாம் இன்று அவரை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம். திரித்துவத்தைக் குறித்த நம்முடைய புரிதல் சுயமானதாக இல்லை. 100% வேதத்துக்குள் இருந்து கிடைக்கப்பெற்ற அறிவு இது. அவரை அறிகிற அறிவில் வளரத் துடிப்போருக்காக வேதம் தன்னுள் வைத்திருக்கும் சத்தியம் இது!
தேவனை நாம் அவர் வெளிப்படுத்தும் வண்ணமெல்லாம் புரிந்துகொள்வது மிகவும் அவசியம். அவரை அறிகிற அறிவில் வளர இந்த ஒரு வாழ்நாள் காலம் போதுமானதாக இருக்கப்போவதில்லை. ஆனால், இந்த ஒரு வாழ்நாட்காலத்துக்குப் போதுமானதை எல்லாம் அவர் வெளிப்படுத்தி இருக்கிறபடியால், அவரை அறிவது நம் ஏக்கமாகவும் தாகமாகவும் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களாக நாம் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே தான் இருக்கபோகிறார். நாம் அவர் உறவில் வளர்ந்து பெருகி மகிழ்ந்துகொண்டேதான் இருக்கப்போகிறோம். இனி எப்போதும்.
பினகுறிப்பு: திரித்துவம் கள்ள உபதேசம் என்று சொல்பவர்களுக்கு ஒட்டு மொத்த வேதத்தையும் விளக்கிப் போதிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கெல்லைக்குள் இல்லை. எனவே பின்னூட்டங்களில் “அதெப்படி.. இதெப்படி” என்றால், பதில் கிடைக்காது.
- Benny Alexander