
பூமியில் கிறிஸ்து இருந்த காலங்களில் சீஷர்களால் விளங்கிக்கொள்ள அப்போது இயலாது என்பதாலேயே பலவற்றை அவர்களிடம் சொல்லவில்லை என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். ஒருமுறை ‘இப்போது சொன்னால் தாங்கமாட்டீர்கள்’ என்றேகூடச் சொல்லிவிட்டார். அவை என்ன என்று சீடர்களும் கேட்டாற்போல் தெரியவில்லை. இங்கு போதித்தவர் கிறிஸ்து! அவரைவிட மேலான போதகர் இருக்க வாய்ப்பில்லை. இருந்த போதிலும் அப்போது அவர்கள் பிற்காலங்களில் அவர்களாகவே கற்றுக்கொள்ள வேண்டிய காலத்திற்கென, பலவற்றை அவர் விட்டுவிட்டே சென்றார்.
அப்போது போதித்தவற்றில்கூட புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் இயலாத சில விஷயங்கள் இருக்கவே செய்தன. உதாரணமாக இரத்தம், அப்பம் என்கிற போதனையைச் சொன்னபோதே இது கடின உபதேசம், யார் ஏற்பார்கள் என்று பலர் ஒதுங்கிய சம்பவமும்கூட ஒருமுறை நடந்து. அதனால், அவர் அவசரப்பட்டு எல்லாவற்றையும் அவர்கள் மனதில் இறக்கிவைக்க முயலவில்லை. ஏனென்றால் அவர்களுக்குச் சில விஷயங்கள் சொல்லித்தரப்படவேண்டிய காலசூழல்கள் அமையவேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்: சரியான நேரத்தில் எல்லாம் அவரால் நியமிக்கப்பட்டவர்களால் உபதேசங்களாகப் போதிக்கப்படும். அதன்பின், அவற்றுக்கு ஆதாரமாக இறைவார்த்தைகள் எல்லாம் ஒரே வேதாகமமாகத் தொகுக்கப்பட்டு அளிக்கப்படும் என்று அவர் அறிவார். அப்படி, அன்று சீடர்களிடம் அவர் சொல்லித்தராத அநேகங்காரியங்கள் என்னவாக இருந்திருக்கும்? அவை இன்றும் தாங்க இயலாத இரகசியங்களாகத்தான் இருக்கின்றனவா? முறையான வேத ஆராய்ச்சிதான் நமக்கு இதைத் தெரிந்துகொள்ள உதவும்.
ஆதாமுக்கு தன் சாயலை வைத்ததன் மூலம் முழுமையாக வெளிப்பட்ட தேவன் வீழ்ச்சிக்குப் பின் தன்னைப் பங்கு பங்காகவும் வகைவகையாகவும்தான் வெளிப்படுத்தினார். (எபிரேயர் 1:1). ஆபிரகாமிடம் புறஜாதிகளைக் குறித்த திட்டங்களையெல்லாம் சொல்லவில்லை. ஆனால் குறிப்புகளாகக் கோடிட்டுக்காட்டினார். பழைய ஏற்பாட்டுப் பக்தர்களுக்கு இயேசுக் கிறிஸ்துவைத் தெரியாது. அதாவது கிறிஸ்து என்கிற பெயரில் அவர் வெளிப்படவில்லை. அதுபோல் பாவத்தில் இருந்து மனுக்குலம் முழுமைக்குமான திட்டம் ஒன்று கடவுளிடம் உண்டு என்பதை புரிந்துகொண்டவர்கள் குறைவு. கிறிஸ்துவின் நிழலாகச் சிலகாரியங்கள் சில தீர்க்கதரிசிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது மீட்பின் திட்டங்களும் முழுமையாக தெரியாது. அதன்பின் சீடர்களிடமும்கூடத் தன் திட்டங்களைக் குறிப்பாகத்தான் வெளிப்படுத்தினார். பலி, தேவாலயம், ஆசாரியத்துவம் என்பவைகள் எல்லாம் தங்களின் தற்காலிக நன்மைக்காக அளிக்கப்பட்ட சில தற்காலிக முறைமைகளே என்று அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
அவர் வந்த பின்னரும் சிலுவை ஏன் என்று சீடர் உட்பட அவரைச் சார்ந்திருந்த எவருக்கும் புரிந்திருக்கவில்லை. அவரே நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதல் என்பதையெல்லாம் இயேசு தன் சீடர்களிடம் துவக்கத்திலேயே விளக்கிவிடவில்லை. அவருடன் இருந்தவர்கள் எல்லாம் யூதர்களாகவும் யூதப் பாரம்பரியத்தை அனுசரிப்பவர்களாகவும் இருந்தத்தால், அவர் பலியாகும் வரை அதன் அந்த பலியின் உலககளாவிய வல்லமை அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன்பின் சபையைக் குறித்த தன் திட்டங்கள் அவர் பரம் ஏறும் வரை எவருக்கும் வெளிப்பட்டிருக்கவில்லை.
கிறிஸ்து தன்னை வெளிப்படுத்திப் போதித்தது – அவர் உயிர்தெழுந்ததில் இருந்து பரமேறும்வரையான அந்த இடைப்பட்ட சில நாட்கள்தான். ஆனால், அந்தச் சில வார காலங்களிலும் யூதர் அல்லாதவருக்கும் இயேசுக்கிறிஸ்துவே நற்செய்தி என்கிற சத்தியத்தை அவர்கள் விளங்கிக்கொள்ளும் வண்ணம் சிறிது சிறிதாகத்தான் அவர் போதிக்கவேண்டி இருந்தது. எம்மாவூர் வழியில் சீடர்களுக்குப் போதித்தது, தான் உயிர்தெழுந்தபின் சீடர்களுக்குத் தன்னை வெளிப்படுத்திப் போதித்தது என்று வகை வகையாக வெளிப்பட்ட போதனைகளெல்லாம், சீஷர்களை முற்றிலுமாக மாற்றிவிட்டது எனலாம். அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட போதனைகள் எல்லாம் ஆச்சரியமான விதத்தில் அவர்களுக்கு போதிக்கப்பட்டது அதன்பின்னர்தான்.
தாவீது பேசிய தேவ கிருபையும் சத்தியமும் எப்படி கிறிஸ்துவாக – அவரில் வெளிப்பட்டன, பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களை மேசியாவாக அவர் எப்படி நிறைவேற்றினர் என்கிற ஆழமெல்லாம் புரிந்தபின் அவர்கள் கொண்ட விசுவாசத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. தங்களை மாய்க்க ஒப்புக்கொடுத்ததெல்லாம் அந்தத் தெளிவான புரிந்துகொள்ளுதல் ஏற்பட்டபின்தான். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கப்பட்டவையே போதனைகள். அப்படிச் செய்ததால்தான் அவை ‘தாங்கிக்கொள்ளும்வண்ணம் வெளிப்பட்டன’. இதில் கிறிஸ்து ஒருநாளும் ஒரு வார்த்தைகூடப் பேசாத சத்தியங்களும் அடக்கம். அவை என்ன, என்பதும் அவை நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாக எப்படி அமைகின்றன என்பது பற்றி அடுத்த பகுதியில். விரைவில்.